கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ் - அணிந்துரை
டாக்டர். ஜி.ராமானுஜம் எம்.டி.,
பேராசிரியர், மனநலத்துறை
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி
இனமும் மனமும்
உலகின் உயிரினங்களிலேயே உன்னதமாகப் பரிணாம வளர்ச்சியின் சிகரமாகக் கருதப்படுகிறது மனித இனம். மனித இனம் அடைந்துள்ள மேன்மைகளுக்கெல்லாம் காரணமானது மனித மனம். எல்லா உயிரினங்களும் சூழலுக்குத் தக்கவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன. ஆனால் மனித இனம் மட்டும்தான் தன்னுடைய வசதிகளுக்காகச் சூழலையே மாற்ற வல்லது.
ஆயினும் எந்த ஒரு உயிரினத்துக்கும் மேன்மைகளுக்குக் காரணமாக எது இருக்கிறதோ அதுவே தீமைகளுக்கும் காரணமாக இருப்பது பொதுவான முரண்பாடே. அதுபோன்றே மனிதனின் சிந்திக்கும் திறனே அவனுக்குப் பிரச்சனைகளையும் உருவாக்கத் தொடங்கியது. பல்வேறு வகையான கருத்தாக்கங்கள், கடவுள்கள், சடங்குகள், கலாச்சார மாறுபாடுகள் எனப் பிரிந்து கொண்டு தத்தமது கருத்தாக்கங்களே உயர்ந்தவை என்று கூக்குரலிடும் காலகட்டத்தில், மிகப் பொருத்தமாக டாக்டர். ஷாலினியின் 'கொஞ்சம் டார்வின், கொஞ்சம் டாக்கின்ஸ்' நூல் வந்திருக்கிறது.
உண்மையான பகுத்தறிவு என்பது எளிமையானது. உள்ளதை உள்ளபடி எந்தவித மனச்சாய்வும் இல்லாமல் பார்ப்பதே அது. இதைத்தான் அவர் இந்நூலில் முதன்மையாகக் கூறுகிறார். நாம் உலகை அது இருப்பதுபோல் அப்படியே பார்ப்பதில்லை . நமது மனச்சாய்வுகளுக்கும் முன்முடிவுகளுக்கும் (Bias) ஏற்ப நாம் பார்க்க விரும்புவதுபோல் உலகம் இருப்பதாகக் கற்பிக்கிறோம் என்கிறார் அவர். அப்படி முன்முடிவுகள் இல்லாமல் திறந்த நிர்வாண மனத்தோடு உலகைப் பார்க்கச் சொல்லிச் சில உண்மைகளைக் காணும் சூட்சுமத்தைப் பயிற்றுவிக்கிறார்.
பரிணாம வளர்ச்சியியலின் தந்தை எனக் கருதப்படும் சார்லஸ் டார்வினின் கூற்றுகளிலிருந்து மனித உயிரினம் என்பது இறைவன் உருவாக்கியதல்ல குரங்கினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை உலகம் அரைமனத்தோடு ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளது. உயிரினங்களின் வேறுபாடுகள் அவற்றின் பிழைப்புக்காகவே. பொருந்தி வருவதே பிழைக்கும் என்னும் கூற்றிலிருந்து தொடங்கி மரபணுக்கள் போன்றே மனித இனத்தின் பழக்கவழக்கங்கள், சடங்குகள் போன்றவையும் எப்படி அதன் பிழைப்புக்காகவும் இனவிருத்திக்காகவும் ஏற்பட்டுள்ளன என்பதை விளக்க டாக்கின்ஸின் மீம் எனப்படும் கருத்தாக்கத்தைப் பற்றிக் கூறுகிறார்.
இக்காலத்தில் மிகப்பிரபலமாக உள்ள சொல் மீம் என்பது. அது ஒரு சமூகத்தில் பரவிவரும் கருத்துக்களைக் குறிப்பது. உணவு, கலாச்சாரம், உடை, விருந்தினரை உபசரித்தல், மணமுறை எனப் பல்வேறு வேறுபாடுகள் உருவான காரணங்களின் நதிமூலத்தைச் சென்று ஆராய்ந்து மரபணுக்கள் போன்றே இக்கருத்தாக்கங்களிலும் பிழைப்புக்கும் சூழலுக்கும் பொருத்தமானதே பிழைக்கும் என, டார்வினையும் டாக்கின்ஸையும் இணைக்கும் புள்ளியை நோக்கிச் சென்று, அப்புள்ளியை வைத்து அழகான ஒரு கோலமே போட்டிருக்கிறார் டாக்டர் ஷாலினி.
அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார் போன்ற சிந்தனையாளர்களை ஆழப்படித்தவர், மனநல மருத்துவரும் கூட என்பதால் மிகவும் நேர்மையுடனும், துணிவுடனும், தெளிவுடனும் தனது சிந்தனைகளை வைக்கிறார் டாக்டர் ஷாலினி அவர்கள்.
அதுவும் இனம், மதம்,சாதி, பாலினம், உணவுப்பழக்கம், மொழி எனப் பல்வேறு விஷயங்களிலும் உயர்வுதாழ்வு பாராட்டி மாற்றுக் கருத்துகளை வன்மத்தோடு எதிர்க்கும் காலகட்டம் இது. சமூகத்தின் பன்முகத்தன்மைக்கு எதிரான சக்திகளின் குரல்கள் வலுவாக ஒலிக்கின்றன. முன்னோர்கள் என்ன முட்டாள்களா எனக் கேட்டபடியே பழமைவாதக் குப்பைகளை ஆபரணங்கள் போல் பெருமையாக அணிந்து கொள்பவர்களைப் பார்க்கிறோம். இச்சூழலில் இவ்வேறுபாடுகள், கருத்தாக்கங்களின் பின்னணி தெரிந்தால் அதனைத் தூக்கிப் பிடிக்காமல் அதனதன் பயன்மதிப்பின் அடிப்படையில் ஏற்றுக் கொள்வோம் அல்லது நிராகரிப்போம். அதுதானே பகுத்தறிவு? அந்தப் பார்வையை உருவாக்குவதற்கு இந்நூல் நிச்சயம் உதவிசெய்யும்.
அறிவியல்ரீதியான புத்தகங்களை எழுதுவது எளிதான செயல் அன்று. ரொம்பவும் கடினமான மொழியில் கூறினால் சாதாரண வாசகன் அயர்ச்சி அடைந்து விடுவான். மிகவும் எளிமைப்படுத்தினால் நிபுணர்கள் கேலி செய்வார்கள். அந்த வகையில் மிகச் சரளமான நடையில் கடினமான விஷயங்களை எளிமையாகச் சொல்லும் கலையில் வல்லவரான டாக்டர் ஷாலினி அவர்கள் இரண்டுக்கும் இடையே ஒரு அழகான சமநிலையில் பயணிக்கிறார்.
அவரது முயற்சி தமிழ்ச்சூழலில் முக்கியமானது; பாராட்டுதலுக்குரியது. மேலும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தாக்கங்களைப் பற்றி மேலதிக விவரங்களுக்காக ஆழக் கற்கத் தூண்டுவதாகவு, இது போல் நூல்கள் தமிழில் வருவதற்கு உந்துகோலாகவும் இந்நூல் இருக்கிறது.
வாழ்த்துகள்