Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

இந்தியாவில் சாதிகள்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/indiyavil-sathigal
சாதி ஒழிப்பு

மகாத்மா காந்திக்கு
ஒரு பதில் இணைந்தது

"உண்மையை உண்மைதான் எனத் தெரிந்து கொள்; உண்மைக்குப் புறம்பானது உண்மையல்ல என்பதையும் தெரிந்து கொள்."

- புத்தர்

"பகுத்தறியாதவன் பிடிவாதக்காரன் பகுத்தறிய முடியாதவன் அறிவிலி பகுத்தறியத் துணியாதவன் அடிமை"

- எச். டிரூமாண்ட்

1944-ல் வெளியான மூன்றாம் பதிப்பிலிருந்து அச்சிடப்பட்டது

சாதி ஒழிப்பு

இரண்டாம் பதிப்புக்கு முன்னுரை

லாகூரில் நடக்க இருந்த ஜாத் - பட் - தோடக் மண்டலுக்காக நான் தயாரித்த இந்த உரை இந்துக்களிடையே வியக்கத்தக்க வகையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களை மனத்திலிருத்தியே தயாரித்த இந்த உரை 1500 பிரதிகள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இரண்டே மாதங்களில் தீர்ந்து விட்டது. தமிழிலும், குஜராத்தியிலும் இந்த உரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மராத்தி, இந்தி, பஞ்சாபி, மலையாளம் ஆகிய மொழிகளிலும்

மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது. ஆங்கிலப் பதிப்பிற்கான தேவை இன்னமும் குறையாமல் உள்ளது. எனவே இந்த இரண்டாம் பதிப்புக்கு அவசியமாயிற்று. சொற்பொழிவுக்காக இந்த உரை தயாரிக்கப்பட்ட போதிலும், வரலாற்றுப் பயன் கருதியும் உணர்ச்சி வேகத்திற்காகவும் அப்படியே வெளியிடப்படுகின்றது. இந்தப் பதிப்பில் இரு பிற்சேர்க்கைகளை இணைத்துள்ளேன். முதல் பிற்சேர்க்கையில் என் உரையை விமர்சனம் செய்யும் வகையில் திரு. காந்தி எழுதி 'ஹரிஜன்' இதழில் வெளிவந்த இரு கட்டுரைகளும், ஜாத் - பட் - தோடக் மண்டலின் உறுப்பினர் திரு. சாந்த் ராமுக்கு அவர் எழுதிய கடிதமும் தரப்பட்டுள்ளது. இரண்டாம் பிற்சேர்க்கையில் திரு. காந்தியின் மேற்படி கட்டுரைகளுக்கு என் கருத்துக்களைக் கட்டுரையாக்கி இணைத்துள்ளேன். திரு. காந்தியைப் போலவே வேறு பலரும் என் உரையில் தெரிவித்துள்ள கருத்துக்களைக் கடுமையாகக் கண்டித்து விமரிசனம் செய்துள்ளனர். எனினும், திரு. காந்திக்கு மட்டும் நான் பதில் அளித்துள்ளேன். இவ்வாறு நான் அவருக்குப் பதில் அளித்துள்ளதால் அவர் கூறியுள்ளவை மிக முக்கியமானவை என்று பொருளாகாது. இந்துக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாக மதிப்பதோடு அவர் வாய் திறந்தால் பிறர், தம் வாயை மூடிக் கொள்ள வேண்டும், தெருவில் போகும் நாயும் குறைக்கக் கூடாது என்ற அளவுக்கு அவருடைய சொற்கள் போற்றப்படுவதனாலேயே இதைச் செய்துள்ளேன். ஆனால் தவறிழைக்காதவர்கள் எனக் கூறிக் கொள்ளும் சமயப் பெருந்தலைவர்களையும் நேருக்கு நேராக எதிர்க்கத் துணிந்து, அவர்கள் தவறிழைக்காதவர்கள் அல்ல என்று வாதிடவல்லப் புரட்சியாளர்களாலேயே இந்த வையம் வாழ்கிறது. இந்தப் புரட்சியாளர்களுக்கு முற்போக்குச் சமுதாயம் கொடுக்க வல்ல மதிப்பைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள்; அவர்களின் நோய் பிற இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது என்பதை அவர்கள் உணரும்படிச் செய்து விட்டால் அதுவே எனக்குப் போதும்.

பி.ஆர். அம்பேத்கர்

மூன்றாம் பதிப்பின் முன்னுரை

1937-ல் வெளிவந்த இந்தக் கட்டுரையின் இரண்டாம் பதிப்பு மிக விரைவாகத் தீர்ந்து போயிற்று. அதை மீண்டும் வெளியிட வேண்டும் என்னும் தேவை மிக நீண்ட காலமாகவே இருந்துவந்தது. மே மாதம் 1917-ல் இந்தியன் ஆண்டிக்கொயரி ஆய்வு இதழில் வெளிவந்த 'இந்தியாவில் சாதிகள் - அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி' என்னும் என்னுடைய கட்டுரையோடு இணைத்து இதனை வெளியிட விரும்பினேன். எனினும் அதற்கான நேரம் இல்லாததோடு, அதைச் செய்து முடிக்கும் நிலையிலும் நான் இல்லை. எனினும் அந்த நூலை வெளியிட வேண்டுமெனப் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை அதிகரித்து வந்ததால் அந்த இரண்டாம் பதிப்பின் மறுபதிப்பு இப்போது வெளிவருகிறது.

என்னுடைய உரை மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்கின்றேன். எந்த நோக்கத்திற்காக இதனை நான் எழுதினேனோ அது நிறைவேற இப்பதிப்பு உதவுமென நம்புகின்றேன்.

பி.ஆர். அம்பேத்கர்
22, பிரிதிவிராஜ் சாலை,
புது டில்லி,
1.12.1944.

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு