Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

திராவிட இயக்கம் - நோக்கம் தாக்கம் தேக்கம் - அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
 
 
அணிந்துரை

 

க.திருநாவுக்கரசு

 

திராவிட இயக்க ஆய்வாளர் பத்திரிகையாளர் எழுத்தாளர்

 

திராவிடப் பேரியக்கம் நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டு இருக்கின்ற நேரம் இது. இந்நேரத்தில் கோவி.லெனின் எழுதியுள்ள 'திராவிடர் இயக்கம் நோக்கம், தாக்கம், தேக்கம்' எனும் நூல் வெளியிடப்படுவது மிகப் பொருத்தமான ஒன்றாகும். கோவி.லெனின் ஒரு விமர்சனப் பார்வையோடு, தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடைபெறுகின்ற ஓர் உரையாடல் பாணியில் இந்நூலை எழுதியிருப்பது இந்நூலின் பெருஞ்சிறப்புகளுள் ஒன்றாகும்.

 

திராவிடப் பேரியக்கம் வரலாற்றின் மேலெழுந்த வாரியான போக்குகளுக்கு அது ஒரு நூறாண்டு நிறைவு பெறுகிற இயக்கமாக இருந்தாலும் அதன் கருத்தியல் போராட்டம் என்பது சங்க காலத்திலேயே தொடங்கி விட்டது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பகிரங்கமாக வெளிப்பட்டு 20-ஆம் நூற்றாண்டின் முதல் பத்தில் சிறு அமைப்பாக தோன்றிவிட்டது. சில ஆண்டு களுக்குப் பிறகு ஒரு கட்சியாக வளர்ந்து அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றியது. ஒரு கருத்தியல், அமைப்பாக ஆகிறபோது பல்வேறுவித விவாதங்கள் நடைபெற்று பிளவுகள்' உருவாக வாய்ப்பு உண்டு. அது கருத்தியல் போராட்டமாகவும் தனிமனித பேரார்வம் காரணமாகவும் நிகழக்கூடும். அப்படிப்பட்ட பிளவுகள் கிளை பரப்பி, பரப்பி இன்று நூறாண்டு நிரம்பிய பெருமரமாக திராவிடப் பேரியக்கம் வளர்ச்சியடைந் திருக்கிறது.

 

இப்பேரியக்கத்தின் உள்ளீடாகத் திராவிடர் கழகங்கள் இருக்கின்றன. திராவிட இயக்க அரசியல் கட்சிகள் இருக்கின்றன. தேர்தலில் நிற்காமல் வெளியிலிருந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகங்களையும், தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., மறுமலர்ச்சி தி.மு.க. ஆகிய கட்சிகளையும் இந்நூலாசிரியர் நன்றாகப் பகுத்துக் கொண்டு உரையாடல்களின் மூலமாக வினா - விடையாக, கொள்கைகள் முதல் சாதனைகள் வரை அலசிக் காட்டியிருக்கும் நேர்த்தி பாராட்டத்தக்கதாகும். இப்போதும் மறுமலர்ச்சி தி.மு.க.வையாவது குறைந்தபட்ச நடவடிக்கைகளின் வழி திராவிடக் கட்சி என்று ஏற்றுக்கொள்ள முடியும். அ.இ.அ.தி.மு.க.வை எம்மைப் பொறுத்தவரை திராவிட இயக்க அரசியல் கட்சி என்று ஏற்றுக்கொள்வதில்லை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகின்றோம்.

 

புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். மீது எமக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. அவர் கட்சியில் பெருந் தலைவர்கள் எல்லாம் சென்றிருக்கலாம், இருந்திருக்கலாம். அவையெல்லாம் தன்னலத்திற்காகவும், அவர்களின் அரசியல் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவும்தான்.

 

ஆனாலும் இந்நூலாசிரியர் இப்பார்வைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அவர்களுடைய ஆட்சிக் காலத்தையும் திராவிட பேரியக்கத்தின் பெயரிலேயே எழுதியிருப்பது அவர் குற்றமல்ல. அ.இ.அ.தி.மு.க. என்பது திராவிடப் பேரியக்கத்தின் ஒரு காட்சிப் பிழை. அதாவது இடமாறு தோற்றப் பிழை. ஆகையால்தான் இந்நூலாசிரியர் எழுதியிருக்கிறார் என்று கருதுகிறேன். இந்நூல் நீதிக்கட்சிக் காலத்தில் தொடங்கி தற்கால திராவிட இயக்கக் கட்சிகள் வரை 'நுதல் பொருளாகக் கொண்டு ஆசிரியர் எழுதியிருப்பது மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஓர் இயக்கத்தின் நூறாண்டு கால வரலாற்றைச் சுருக்கிச் சொல்கிற உத்தி ஆசிரியருக்கு கைவந்த கலை போலும்.

 

'ஒரு மரத்தின் பெருமை என்பது அதன் பழத்தினால் அறியப்படும்' என்று சொல்லுவார்கள். அதைப்போல திராவிடப் பேரியக்கத்தின் சாதனைகளை நூலாசிரியர் நிரம்ப எடுத்து விவரித்துக் கூறியிருக்கிறார். திராவிட இயக்கத்தின் கூறு என்பது அரசியல் மட்டுமன்று. தமிழர்களின் பழம் பெருமையோடு 'தமிழியல் வழக்கை' மீட்டெடுப்பதும் ஆகும். கலை, இலக்கியப் பண்பாட்டுப் புரட்சியைத் தொடர்ந்து செய்வதும் அரசியல் அதிகாரத் தைக் கொண்டு இவற்றையெல்லாம் நிலை நாட்டுவதும் ஆகும். திராவிட இயக்கத்தின் மீட்புப் பணியைப் பக்கம் தோறும் ஆசிரியர் பூடகமாய் இந்நூலினுள் சொல்லிச் செல்லும் பாங்கு போற்றத்தக்கதாகும். நீதிக்கட்சி காலத்திலி ருந்து தி.மு.க. காலம் வரை அ.இ.அ.தி.மு.க.வை உள் ளடக்கி இத்திராவிடக் கட்சிகளின் சாதனைகளை காய்தல் உவத்தலின்றி ஆசிரியர் விளக்கிச் சொல்லுகிறார். இது மட்டுமன்றி இக்கட்சிகளின் உள்ளும் புறமுமான பல செய்திகளைச் சுருக்கமாகக் கூறியிருப்பது ஆசிரியர் ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது.

 

தென்னிந்திய சமதர்மக் கட்சியைப் பற்றி எழுதுகிற போது ஆசிரியர், 'ஒரு நுண்ணோக்கி வழியாக ஆராயும் விஞ்ஞானியைப் போன்ற பார்வையே பெரியாரின் சமுதாயப்பார்வை' என்று குறிப்பிட்டிருப்பது அவரையும் அவரது இயக்கத்தின் கொள்கையையும் புரிந்து, அறிந்து, தெளிந்து எழுதியிருப்பது எண்ணி எண்ணி மகிழத் தக்கதாக இருக்கிறது. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரைப் பற்றி குறிப்பிடுகிறபோது, அண்ணாயிஸம் என்பதை அவர் எப்படி விளக்கினார் என்பதைச் சொல்லி 'தமிழ்நாட்டில் தனி மனிதப் பகையே அரசியல் என்கிற நிலைமை அப்போதிலிருந்தே உருவாக ஆரம்பிச்சிடிச்சி' என்று எழுதியிருப்பது மிகச் சரியான வரலாற்றுப் போக்கு, மிகையல்ல உண்மை.

 

'எம்.ஜி.ஆர். மாதிரி ஒருவர் உயர் சாதியினருக்குத் தேவைப்பட்டாரு' என்று ஆசிரியர் எழுதியிருப்பது சிறப்பாக இருக்கிறது. எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்ட போது உயர்சாதியினர் மகிழ்ச்சி எல்லையற்றதாய் இருந்தது. அந்தக் கொடுமை இப்போதும் தொடர்வதை நாம் பார்க்கிறோம். ஆகவே நூலின் ஆசிரியர் மிகச் சரியாகக் குறிப்பிட்டதை எம்மால் பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்? இப்படி நூலி னுள் இருக்கின்ற ஒவ்வொன்றையும் நாம் எடுத்துச் சொன் னால் வாசகர்களுக்குப் படிப்பதற்குச் சுவையில்லாமல் போய்விடும். இந்நூல் ஆசிரியர் திராவிடர் இயக்கம் பற்றிய வரலாற்று நூலை எழுத முற்றிலும் தகுதியுடைய ஒருவரே என்பதில் துளியும் அய்யமில்லை . ஆனால் இறுதியாக நூலிலிருந்து மற்றொரு எடுத்துக் காட்டை சொல்ல விரும்புகிறோம்.

 

"பணத்தாலேயும் வன்முறையாலேயும் ஜனநாயகத்தை வளைக்கிறதுங்கிறது முதலாளித்துவ சர்வாதிகாரம்தான். தேர்தலில் போட்ட பணத்தை வட்டியும் முதலுமா ஆட்சியில் அறுவடை செய்ய ஆரம்பிச்சதால, பலரும் கோடீஸ்வரர்களாயிட்டாங்க. பணம் வந்தா அதைப் பாதுகாக்கணுமேன்னு பயம் வரும். பயம் வந்தா பக்தி வரும். அதுதான் தி.மு.க. நிர்வாகிகளுக்கு வந்திச்சி. அவங்க குடும்பங்களில் அது எக்கச்சக்கமாயிடிச்சி. பக்தி வந்தா புத்தி போயிடும்னு பெரியார் சொன்னதுதான் நடந்திச்சி. பக்தி அதிகமானதால் பகுத்தறிவுங்கிறது கேள்விக்குறியதாவும் கேலிக் குரியதாவும் ஆயிடிச்சி.''

 

"அதே நேரத்தில், எவ்வளவுக்கெவ்வளவு தி.மு.க. விமர்சிக்கப்படுதோ, எவ்வளவு தூரம் அதன் மேலே தாக்குதல் நடத்தப்படுதோ, அதுவரைக்கும் அதைத்தான்

 

உண்மையான வலிமையான திராவிட அரசியல் இயக்கம்னு எதிர் முகாம்கள் நினைக்கிறாங்கன்னு அர்த்தம். ஒருபக்கம் இந்துத்வா சக்திகள், இன்னொரு பக்கம் அ.தி.மு.க. போன்ற நேரடி அரசியல் போட்டி யாளர்கள், மற்றொரு திசையிலிருந்து திராவிடம்தான் தமிழுக்கு எதிரின்னு சொல்றவங்க இப்படி எல்லாத் தரப்புமே தி.மு.க.வைத்தான் குறி வைக்கும். குறிப்பா, கலைஞரைத்தான் குற்றம்சாட்டுவாங்க."

 

இந்த இரண்டு நிலைமைகள் நாட்டில் தொடருகின்றன. திராவிடர் - ஆரியர் போராட்டம் என்பது உண்மைக்கும் பொய்மைக்கும் நடக்கிற நீண்ட காலப் போராட்டமாகும். வாய்மையே இறுதியில் வெல்லுமாதலால் அதற்கு நாம் விலை கொடுக்க வேண்டியதாகிறது. அதனை முதல் நிலையில் சுவைபட இந்நூல் எடுத்துரைக்கிறது. ஒரு வரலாற்று நூலை இதன் ஆசிரியர் படிப்பவருக்கு அலுப்புத் தட்டாமல் கொண்டு செல்லுகிறார். ஆசிரியர் கோவி.லெனினின் இந்தப் பெருமுயற்சியைத் தமிழுலகம் வரவேற்றுப் போற்ற வேண்டும் என்று விரும்புகின்றோம்.

 

என்னினும் மிஞ்சினோர் வளர்க! எம்மினம்
எவரினும் மேலென எழுக! நாள்தொறும்
தன்னினும் மிஞ்சினோர் சமைவ தற்கெனத்
தடம் அமைப்பவர் தம்புகழ் பாடுவேன்.
நாம்ப டைப்பன எண்ணில: யாவினும்
நம்மின் மேலவர் தாம்உரு வாவதைத்
தாம்வ ளர்வதின் மேலெனத் தாங்குவோர்
தலைவர்; அன்னவர் தம்புகழ் பாடுவேன்.

 

-வா.செ. குலோத்துங்கன்
27.12.2012
76, கற்பகம் அவென்யு இராஜா அண்ணாமலைபுரம் சென்னை - 600 028.
க. திருநாவுக்கரசு

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு