இந்துத் தத்துவ இயல் - முன்னுரை
இந்துத் தத்துவ இயல், பவுத்தத் தத்துவ இயல், இஸ்லாமியத் தத்துவ இயல், ஐரோப்பியத் தத்துவ இயல் ஆகியவற்றை விளக்கும் வகையில் ராகுல்ஜி இந்தி மொழியில் இயற்றிய முழுமையான நூலுக்கான முன்னுரை:
லட்சக் கணக்கான ஆண்டுகளாக மனிதன் இவ்வுலகத்தில் வாழ்ந்து வருகிறான் என்றாலும், அவனுடைய அறிவு வளர்ச்சியின் பொற்காலம் கி.மு. 5000-3000 ஆண்டுக்காலமாகும். இந்தக் காலத்தில் மனிதன் விவசாயம், நீர்ப்பாசனம், சூரிய பஞ்சாங்கம் போன்ற மகத்தான விஷயங்களை, சமுதாயத்தையே ஒட்டு மொத்தமாக மாற்றிவிடக்கூடிய கண்டுபிடிப்புகளைக் கண்டு கொண்டான். இப்படிப்பட்ட மனித அறிவின் கூர்மையை நாம் மீண்டும் கி.பி. 1760-க்குப் பிறகு, புதுயுகக் கண்டுபிடிப்புக்கள் துவங்கிய காலத்தில் பார்க்கிறோம். ஆனால், தத்துவ இயலானது முதல் யுகத்தில் உருப்பெறவே இல்லை; இரண்டாம் யுகத்திலோ அது வயோதிகமாகி கிழடு தட்டிவிட்டது. அது தன் இளமைப் பருவத்தைக் கழித்து விட்டிருந்தது. வயதாகிவிட்டதால் அதற்கு மரியாதை செலுத்தப்பட்டாலும், அது ஆராய்ச்சிச் சிந்தனையான விஞ்ஞானத்தின் துணையை ஏற்றுக் கொண்டபோதுதான்; மக்கள் அதனை ஏறெடுத்துப் பார்த்தனர். ஆனால், இந்த உண்மையை டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்ற பழம் சம்பிரதாய மதப் பிரசாரகர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. ''புராதன இந்தியாவில் தத்துவ இயல் எந்த ஒரு விஞ்ஞானத்தையோ, கலையையோ பின்தொடர்ந்து செல்லாமல், எப்பொழுதுமே ஒரு தனியான இடம் பெற்றிருந்தது” என்று கூறுகிறார் அவர்.
இந்தியத் தத்துவ இயல் விஞ்ஞானத்தையோ, கலையையோ பின்தொடராமலிருந்தாலும், மதத்தின் வால் பிடித்துச் சென்றது என்பதில் சந்தேகமில்லை. மத அடிமைத்தனத்தைக் காட்டிலும், வேறென்ன அடிமைத்தனம் இருக்க முடியும்!
கி.மு. 3000-2600 ஆண்டுகள், மனித இனத்தின் அறிவார்ந்த வாழ்க்கையின் சிறந்த காலமல்ல; வீழ்ச்சிக் காலமேயாகும். இந்த நூற்றாண்டுகளில் மனிதன் மிகக் குறைந்த புதிய கண்டுபிடிப்புகளையே சாதித்தான். முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் உழைத்த மானசீகக் களைப்பிற்குப் பிறகு, 1000-700 ஆண்டுகளில் மனித மூளை பூரண ஓய்வு விரும்பியது போல் தோன்றுகிறது. இந்தக் கனவு நிலையின் உற்பத்தியே தத்துவ இயலாகும். தத்துவ இயலின் இப்படிப்பட்ட ஆரம்பம் நமது உள்ளத்தில் அதற்கு மரியாதையைத் தோற்றுவிக்கவில்லை. அதைப் பற்றியதொரு அலட்சியத் தன்மையையே உண்டாக்குகிறது. ஆனால் தத்துவ இயலின் துவக்கமே அதன் முழு வளர்ச்சியல்ல. கி.மு. 700க்குப் பிந்திய மூன்று, நான்கு நூற்றாண்டுகள் தத்துவ இயலின் பொற்காலமாகும். இந்தக் காலத்தில் தான் இந்தியாவில் உபநிஷத்துக்கள் முதல் புத்தர் வரையும், ஐரோப்பாவில் தேல் முதல் அரிஸ்டாடில் வரையிலும் தத்துவ வளர்ச்சி ஏற்பட்டது. இவ்விரு இந்திய - ஐரோப்பியத் தத்துவ இயல் பிரவாகங்களும் ஒன்றாகக் கலந்து, உலகத்தின் அனைத்துத் தத்துவ இயல்களின் பிறப்பிடமாகின்றன. அலெக்சாந்தருக்குப் பின்னர் இவ்விரு தத்துவ இயல்களின் சங்கமம் பற்றியும், அவ்விரண்டின் பிரதிநிதியாக பிளாட்டோவின் புதிய தத்துவ இயல் முன்னேறியதைப் பற்றியும் வாசகர்கள் முன்னால் படிப்பார்கள்.
தத்துவ இயலின் இப்பொற்காலம்முதலாவதும், கடைசியானதுமான கண்டுபிடிப்புகளின் யுகங்களுடன் போட்டியிட முடியாவிட்டாலும், மனித அறிவு உறக்கம் கொண்ட காலம் மட்டுமல்ல! இக்காலத்தின் தத்துவ இயல் தனியாக அமையாமல், பல்வேறு முன்னேற்றங்களின் விளைவாகும். எல்லா நாடுகளிலும் இம் முன்னேற்றம் ஒரே அளவில் இருக்க வேண்டுமென்ற விதி இல்லை. கி.மு. 600இல் எகிப்து, மெஸபடோமியா, சிந்துப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த புராதன மனிதர்கள் வானத்தைத் தொட்ட கற்பனைகளுக்குப் பிறகு, களைத்து உட்கார்ந்து விட்டிருந்தனர். ஆனால், இதே காலத்தில் புதிதாக வந்தவர்களின் கலப்பால் தோன்றிய இனத்தவரான இந்தியரும், கிரேக்கரும் தமது கற்பனைத் தாவல்களைத் துவக்கினர். தத்துவ இயலில் கிரேக்கர்கள் கி.மு. 600-300 வரை முன்னேறிக் கொண்டிருந்தனர். ஆனால், இந்துக்கள் கி.மு. 400 ஆண்டுக்கெல்லாம் களைத்து உட்கார்ந்துவிட்டனர். ஐரோப்பாவில் கி.மு. 300-லேயே இருள் சூழ்ந்து விட்டது. பின்னர் கி.பி. 1600இல் பத்தொன்பது நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய ஒளி (மறுமலர்ச்சி) ஏற்பட்டது. ஆனால், இந்த மூன்று நூற்றாண்டுகளின் நீண்ட காலத்தில் - கி.பி. 900-1200இல் தத்துவ இயலின் சுடர் பூரணமாக அணைந்து விட்டதென்று கூறமுடியாது. அக்காலத்தில் இஸ்லாமியத் தத்துவாசிரியர்களின் கரங்களில் அச்சுடர் ஒளிவிட்டுப் பிரகாசித்தது.
இந்தச் சுடரிலிருந்தே புதிய ஐரோப்பா தனது தத்துவ தீபத்தை ஏற்றிக் கொண்டது. இங்கே தத்துவ இயலின் இந்தியக் கிளை, கி.மு. 400ஆம் ஆண்டுக்குப் பிந்தைய நான்கு நூற்றாண்டுகள் வரை சாம்பலுக்குள் தீப்பொறியாக விழுந்து கிடந்தது. ஆனால், கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை - குறிப்பாகக் கடைசி மூன்று நூற்றாண்டுகளில் - அது அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறது. அக்காலத்தில் ஐரோப்பாவில் தத்துவ இயல் பின்னடைந்திருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இந்தியத் தத்துவ இயல், இஸ்லாமியத் தத்துவ இயலுக்குச் சம காலத்தியதாகவும், ஈடானதாகவுமிருந்தது. ஆனால், அதற்குப் பிறகு அது ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி விட்டது. அந்த உறக்கத்திலிருந்து இன்று வரை விழித்துக் கொள்ளவில்லை. இஸ்லாமியத் தத்துவ இயலின் வீழ்ச்சிக்குப் பின்னர் பதினாறாம் நூற்றாண்டில் மதத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிராவிட்டால், ஐரோப்பியத் தத்துவ இயலின் கதியும் இப்படித்தான் முடிந்திருக்கும். பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மதத்தை வளர்க்கும் தத்துவ இயல் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் மதத்தை வளர்க்கும் தத்துவ அறிஞர்கள் தொடர்ந்து வரிசையாகத் தோன்றிக் கொண்டே இருந்தனர். மதத்திற்குத் தத்துவ இயலை அடிமைப்படுத்தியதை அவர்கள் பெருமைக்குரிய விஷயமாக எண்ணிக் கொண்டிருந்தனர். தத்துவ இயலுக்கு விஞ்ஞானத்தையும், கலையையும் துணையாகக் கொள்வதால், உயிருள்ள இயற்கையின் - ஆராய்ச்சியின் வலுவான உதவியைப் பெற்று, அதன் ஆக்க சக்தியைப் பெருக்க முடியுமென்பதை அவர்கள் உணரவில்லை. ஆராய்ச்சியிலிருந்து சுதந்திரத்தை விரும்பும் தத்துவ இயல், அறிவு, வாழ்க்கை, இறுதியாகச் சுதந்திரத்திலிருந்தே சுதந்திரம் விரும்புகிறதென்று பொருள்.
உலகு தழுவிய தத்துவ இயல் வரிசையை ஆராய்ந்தால், அது தேசியமாக இருப்பதைவிட, சர்வதேசியமானதாக இருப்பதைக் காணலாம். ஒரு மதம் இதர நாடுகளில் உள்ள மதங்களின் கருத்துகளைத் தாராள மனத்துடன் ஏற்றுக்கொண்டதைப் போல், தத்துவ இயலும் பிற தத்துவக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில் தாராள மனப்பான்மை காட்டியிருக்கிறது. தத்துவக் கருத்துக்களுக்குப் பின்னால் பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கவில்லை என்பது தவறாகும். என்றாலும் தத்துவ இயல் மதங்களைக் காட்டிலும் ஒரு நாட்டின் தன்னலத்தை மற்ற நாடுகளின் மேல் குறைவாகவே சுமத்தியிருக்கிறது. அதனால்தான் கங்கை, ஆமூ- தஜ்லா, நாளந்தா, புகாரா, பாக்தாத், கார்தோவா ஆகியவற்றின் சுயேச்சையான அன்பு நிறை சங்கமம் தத்துவ இயல்களிடையே நிகழ்ந்ததைப் போல், விஞ்ஞானம் தவிர வேறெந்தத் துறையிலேயும் நிகழவில்லை. அவகாசமும், சாதனங்களும் இல்லாததால் சீன, ஜப்பான் தத்துவ இயல்களை என்னால் இத்தொகுப்பில் தர இயலவில்லை. அப்படியிருந்தும் தத்துவ இயலில் தேசியத்தை வலியுறுத்துபவர்கள் விஷயம் தெரியாதவர்களே என்று நிச்சயமாகக் கூறுவேன். அவர்கள் மற்றவர்களையும் அறியாமையில் ஆழ்த்தப் பார்க்கிறார்கள்.
நான் இங்கே தத்துவ இயலை உலகப் படத்தில் தலைமுறைக்குப் பின்னர் தலைமுறையாக வைத்துப் பார்க்க முயற்சி செய்துள்ளேன். இதில் நான் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளேன் என்பதைச் சொல்ல, நான் தகுதி படைத்தவனல்லன். ஆனால், தத்துவ இயலைப் புரிந்து கொள்ள இதுவே சரியான வழி என்பதில் எனக்கு ஐயமில்லை. இதுவரை எந்த இந்திய மொழியிலும் இப்படிப்பட்ட முயற்சி செய்யப்படவில்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. ஆனால் இந்த நிலை தொடர்ந்து நீடித்திருக்காதென்பதும் நிச்சயம்.
இதை எழுதுவதில் எனக்குத் துணை புரிந்த நூல்களின் பெயர்களும், அவற்றின் ஆரியர்களின் பெயர்களும் இறுதியில் அனுபந்தத்தில் தந்திருக்கிறேன். அவர்களுக்குச் சம்பிரதாய முறையில் நன்றி தெரிவித்து விடுவதால் மட்டுமே, அவர்களுக்கு நான்பட்ட கடனைத் தீர்த்து விட்டதாகாது. இந்தி மொழியில் தத்துவ இயலைப் பற்றி இப்படிப்பட்ட நூல்கள் நிறைய வர வேண்டும்; என்னுடைய இந்தத் "தத்துவ திசைகாட்டி" நூலை யாரும் நினைவில்கூட வைத்திருக்கக்கூடாது. அப்பொழுதுதான் நான் அவ்வாசிரியர்களின் கடனிலிருந்து விடுபட்டவனாவேன். ஒவ்வொரு நூலாசிரியனும் தன்னுடைய நூலைக் குறித்து இப்படிப்பட்ட கருத்தே கொண்டிருக்க வேண்டும். அழியாத புகழ் பெற வேண்டுமென்னும் விருப்பமெல்லாம் வெறும் பிரமையே தவிர, வேறல்ல.
இந்நூலை எழுதுவதற்குப் புத்தகங்களும், மற்ற விஷயங்களும் திரட்டித் தந்த பதந்த ஆனந்த கவுசல்யாயனருக்கும், பண்டித உதய நாராயண திவாரிக்கும் என் நன்றி உரித்தாகுக!
ராகுல் சாங்கிருத்யாயன்
மத்திய சிறை,
ஹஜாரிபாக் (பீகார்)
25.3. 1942