இந்து மதம் எங்கே போகிறது? - வாசகர்களின் அணிந்துரை
திரு.அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களின் இந்து மதம் எங்கே போகிறது' என்ற கட்டுரை வெளியிடுவதன் மூலம் 'நக்கீரன்' ஒரு நடுநிலை இதழ் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். உமது சமூக அக்கறையையும் புரிந்து கொள்ள முடிகிறது. உமது பணி நீடூழி வாழ்க. பாராட்டுக்கள்.
-வி.எஸ்.அனந்தராமன், கே.கே.நகர், சென்னை -78.
'இந்து மதம் எங்கே போகிறது. தொடர் இந்து மதத்தின் மனச்சாட்சியே விழித்துக் கொண்டு பேசியது போல் உள்ளது. நமது மதாசாரப்படி எல்லாரும் சமம்தான் என்பதை நிலைநாட்ட மதிப்புக்குரிய தாத்தாச்சாரியார் அவர்கள் செயல் பூர்வமான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்கான தகுதியும், ஆற்றலும் பெரியவருக்கு உண்டு.
- கோ.இரத்தினவேல், நெய்வேலி.
"இந்து மதம் எங்கே போகிறது' எனும் அருமையான தொடரை ஆரம்பம் முதல் வெகு சிரத்தையுடன் படித்து வருகிறேன். தற்சமயம் நான் படித்து முடித்தது 3வது அத்தியாயம்தான். நான் ஒரு இந்துவாகயிருந்தும், இந்து மதம் பற்றி அறிந்திருப்பது 'கைமண்ணளவு தான். இந்தத் தொடர் எனக்கு அறிவுறுத்துவது நான் கற்க வேண்டியது கடலளவு இருக்கிறது என்பது தான்.
- கே.எஸ்.கீழாம்பூர், லாஸ்பேட்டை,
பாண்டிச்சேரி-8.
'இந்து மதம் எங்கே போகிறது' தொடர் பிரமாதம். அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் சதம் அடித்திருப்பது அருமை. இந்த தொடர் அபூர்வமானது. இதுவரை தெரிந்திராத விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது நக்கீரனுக்கு திருஷ்டி சுத்தி போடணும். இத்தொடர் புத்தகமாக வரவேண்டும்.
- பொன்விழி, அன்னூர்.
'இந் (த) து மதம் எங்கே போகிறது' என இவ்வளவு நாட்கள் தலையை பிய்த்துக் கொண்டிருந்தேன். பெரியவர் ராமானுஜ தாத்தாச்சாரியாரின் (நூறு இதழ்கள்) எழுத்துக்களை படித்தபின் புது தெளிவும் தெம்பும் எங்கு இருந்து தான் வந்ததோ தெரியவில்லை. ஒவ்வொரு கருத்தும் வேதாந்தம் நிறைந்த அறிவுச் சுடர்கள். இந்த வயதில் கிருஷ்ணா -ராமா' என்று இருக்காமல் இவர் பாடுபட்டது மெய்சிலிர்க்க வைத்து விட்டது. நூறு இதழ்களிலும் ஓவியர் மாருதியின் தூரிகையும் சாமரம் வீசி பரவசப்படுத்தியதும் மறறுக்க முடியாதது.
- சிம்மவாஹினி, வியாசர்பாடி.
நமது இதழ் 2004 டிசம்பர் 12-15ல் இந்து மதம் எங்கே போகிறது' மிக அற்புதமாக இருக்கிறது.
சமூக கட்டமைப்பில் தாழ்த்தப்பட்ட மக்கள் கூட்டம் எப்படி வந்தது என்பது போன்ற பல நல்ல அரிய உண்மைகளை விளக்கமாக எழுதி வருகிறீர்கள். தொடரின் படைப்பாளர் திரு. அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களை பாராட்டுவதும் உற்சாகப்படுத்துவதும் நமது கடமையாகும்.
- வி.கணேசன், பழங்காநத்தம், மதுரை-3.
இந்து மதம் எங்கே போகிறது' தொடரை முற்றிலும் மாறுபட்ட ஒரு தொடராக வெளியிட்டு உள்ளீர்கள். மேலும் இதுபோன்ற தொடர்களை 'நக்கீரன்' வெளியிடும் என்று நம்புகிறோம். மேலும் பல செய்திகளை பெரியவர் மிக அருமையாக எழுதியிருந்தார். இத்தொடர்கள் முழு புத்தகமாக வெளியிட வேண்டும். மேலும் என் போன்ற வாசகர்களுக்கு நல்ல சிந்தனைகளை தூண்டவும், மூட நம்பிக்கைகளை துரத்தவும் பெரிதும் உதவும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இம்முயற்சிக்கு நக்கீரன் ஆசிரியர், ஓவியர் மற்றும் பெரியவர் தாத்தாச்சாரியார் ஆகியோரை மனமார பாராட்டுகிறேன். மீண்டும் ஒரு தொடர் வெளியிட வேண்டுகிறோம்.
100 தொடர்களையும் ஒரு முழு புத்தகமாக வெளியிடுங்கள். அப்படி வெளியிடும் போது இன்னும் பலர் படிக்கவும் உதவுவதாக அமையும். மக்கள் களத்தில் நக்கீரன் பேரும் புகழும் பெறும்.
-ஜி.ராமசாமி, கரடிவாவி, பல்லடம், கோவை.
'இந்து மதம் எங்கே போகிறது நான் இதுவரை தொடர்ந்து படித்து வருகிறேன். அவசியமான காலகட்டத்தில் அருமையான தொடராக வருவதில் மகிழ்ச்சி.
தொடரை கொஞ்சம் அதிகப்படுத்தி வெளிவரச் செய்யவும்.
- டி. கே. நேசன், மேலப்பாளையம்,
திருநெல்வேலி.
'இந்து மதம் எங்கே போகிறது என்று ஆற்றாமையுடன், அதே நேரத்தில் மிகுந்த ஆற்றலுடன் தர்க்க ரீதியாக, ஆணித்தரமாக கேள்வி கேட்கும் மரியாதைக்குரிய பெரியவர், அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரின், சிந்தனையைக் கிளறும் கட்டுரைத் தொடருக்குப் பாராட்டுக்கள். வெளியிடும் 'நக்கீரனுக்கு' வாழ்த்துக்கள். தாத்தாச்சாரியார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. அவருடைய கட்டுரைகள் தொடரட்டும்.
சமூகத்தின் பல்வேறு கூறுகள் பற்றியும், வரலாற்று ரீதியாக, இந்துமதம் - சமஸ்கிருதம் - வேதங்கள் - சாஸ்திர சம்பிரதாயங்கள் - உபநிஷத்துக்கள் - மந்திர தந்திரங்கள் - கடவுள் பக்தி - பூஜை புனஸ்காரங்கள் - சனாதன தர்ம நியாயங்கள்- மடம்- மடாதிபதிகள் பற்றி மிகுந்த அக்கறையுடன், பொறுப்புணர்ச்சியுடன் பொது ஜனங்களுக்கு புரியும்படி எளிய நடையில் மறுக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் சர்ச்சையை தொடருவது ஆதிக்க சக்திகளின், சுயநல கூட்டத்தினரின் முகமூடிகளை - கயமையை கிழித்து எறியும். அவருடைய பயனுள்ள ஆன்மீக மற்றும் இலக்கிய சேவைக்கு,
டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தலாம்.
பணமுடிப்பு கொடுத்து உற்சாகப்படுத்தலாம்.
சிலை வைத்து பெருமைப்படுத்தி சரித்திரம் படைக்கலாம்.
ஆதிக்க சக்திகளின் நிர்பந்தம், நெருக்கடியால் ஆசிரியர் கட்டுரைத் தொடரை நிறுத்தி விட்டாரா? அல்லது போலி ஆன்மீகவாதிகளின் செல்வாக்கு, அச்சுறுத்தலால் தாத்தாச்சாரியார் தமது சர்ச்சைத் தொடரை தொடர விரும்ப வில்லையா? காரணம் என்ன?
- சண்முகம், செலந்தம்பள்ளி, வெங்களாபுரம், வேலூர்
இந்து மதம் எங்கே போகிறது' எனும் தலைப்பில் தாத்தாச்சாரியார் எழுதும் தொடர் வரவேற்கத்தக்கது. ஆரம்ப காலத்தில் எதையோ எழுதுகிறார் என்றே எண்ணியிருந்தேன். அவர் சென்ற வார இதழில் திருப்பதி மலையில் அம்பட்டையர் எனும் பிரிவினர் முடி மழிப்பவர்கள் என்று எழுதியிருந்தார். என் கண்ணில்
கண்ட எனது இனத்தைப் பற்றி....
ஆரம்ப நாளில் வேட்டையாடுவதும், மலைப்பகுதியில் வாழ்ந்தோர், தேனெடுப்பதும் வேடர்குடியின் தொழிலாயிருந்தது. அவர்களில் ஒரு பிரிவு முடி மழிப்பதை (தொழிலாய்) அல்லது பகுதி நேர தொழிலாய் கொண்டிருந்தனர். அவர்களே இன்று வேட்டுவ நாவிதராவார்.
பல தெய்வங்களின் வழிபாடுகளை பற்றி தாத்தாச்சாரியார் கூறியுள்ளது வியக்கத்தக்கது. திருப்பதி வெங்கடாஜலபதி காளிதேவி. அதன் தலையில் நீண்ட ஜடை இருந்ததை நான் பார்த்தேன் என கூறியுள்ளது எனக்கு வியப்பையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
வெங்கடாஜலபதி சிலையை ஆராய்ந்து அரசு உண்மையை வெளியிட வேண்டும்.
தொல்காப்பிய காலத்திற்கு முன் இருந்த முருக வழிபாட்டு பூஜை முறை தற்போது சமஸ்கிருதத்தால் அர்ச்சிக்கப்படுகிறது.
- எஸ்.பரமேஸ்வரன், கொண்டரசம்பாளையம்,
நாமக்கல்.
நக்கீரன் பத்திரிகையின் ஆரம்ப காலத்திலிருந்தே நான் வாசகன். சிலசமயம் பொருளாதார சூழல் காரணமாக நெருக்கடி ஏற்பட்டாலும் நக்கீரன் வாங்குவதை நிறுத்தியது இல்லை. எனது துணைவியார் கூட கேட்பதுண்டு. தங்களின் பல்வேறு செய்திகள் புலனாய்வு கண்ணோட்டத்தில் இருக்கும். ஆரம்ப காலத்தில் ஏதோ பத்திரிகை விற்பனை உத்திக்காக சில செய்திகள் என நான் நினைப்பதுண்டு. ஆனால் காலங்கள் செல்ல செல்ல எந்த செய்தியும் நடுநிலைமையோடு அதிலும் சமூக கண்ணோட்டத்தோடு வருவதை நினைத்து வாசகன் என்ற முறையில் திருப்தி அடைந்திருக்கிறேன். அரசியல் தலைவர்கள் தொடர், அறிஞர் பெருமக்களின் கட்டுரை, பாலியல் தொடர் வெளிவந்தாலும், தங்களின் பத்திரிகைக்கு கம்பீரத்தை ஏற்படுத்தி தந்து இருப்பது அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதி வந்த இந்து மதம் எங்கே போகிறது' என்ற தொடர். இந்துமத தலைவர் என சொல்லிக் கொள்ளும் சங்கராச்சாரியார்கள் குற்றவாளி கூண்டில் மருட்டுகின்ற மதத்தலைவர்கள்' என்று இவர்களைப் பற்றித்தான் புரட்சி கவிஞர் பாரதிதாசன் கூறினார்.
இந்த சூழ்நிலையில் இந்து மதவாதிகளின் முகத்திரையையும், வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றின் யோக்கியதையையும் தோலுரித்துக் காட்டிய அவருக்கு என் பாராட்டுக்கள். அவரின் இந்த தொடரை சரியான சமயத்தில் வெளியிட்டு நக்கீரன் தமிழ் உணர்வாளர்களின் காவலன்' என நிருபித்து விட்டீர்கள்.
தொடரட்டும். வெல்லட்டும் தங்கள் பணி.
- குடந்தை கோவிந்தராஜன், கூடுவாஞ்சேரி,
ஸ்ரீமான் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாருக்கு நமஸ்காரம். ராமாயண தேஸமாக நான் கருதும் கென்யாவில், 'சேதாம் பே' என்னும் மலைச்சரிவில் அமைந்துள்ள 'ஓம்' கோயிலில் உங்களைப் போன்றவர்களின் ஆசி பலத்தால், சில மாதங்கள், 'சித்-அம்பே ' உபாஸகனாக 2004-ல் இருந்து வந்த அடியேனுக்கு, இந்து மதம் எங்கே போகிறது என்ற தலைப்பில் அது எவ்வாறு வளர்ந்தது என்று தாங்கள் எழுதி வருவது தற்போது என் சென்னை வாஸத்தில் ஸ்வாரஸ்யமாக இருக்கின்றன.
'பூஜை', 'தாலி' முதலிய வார்த்தைகளுக்கு தமிழே வடமொழிக்கு தகப்பன் சாமி' என்று நீங்கள் எழுதியதைப் படித்ததும், 'ஓம்' எனும் மந்திரத்தின் பொருளுக்கு 'தகப்பன் சாமி'யாக விளக்கம் தந்தது முருகன் என்பதும், அந்த 'ஓம்' வார்த்தைக்கே, வடமொழிக்கு தமிழ் தான் தகப்பன் சாமி' என்பதும் உடனே தங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டியவை யாகத் தோன்றுகின்றன.
- ஸே.தாமோதரன், அண்ணாநகர்,
சென்னை -40
நக்கீரனுக்கு எனது முதல் வணக்கம் மற்றும் நன்றி. தாங்கள் நக்கீரனில் வெளியிட்டு வந்த இந்து மதம் எங்கே போகிறது' என்ற தொடர் அடுத்த இதழில் நிறைவுறும் என எழுதியிருந்தீர்கள். என்னை போன்ற வாசகர்களுக்கு மதத்தைப் பற்றிய குழப்ப மான பல கேள்விகளுக்கு தெளிவுபடுத்தும் ஒரு சரளமாக இந்தத் தொடர் அமைந்து இருந்தது. இந்தத் தொடரை நிறைவு பெறச் செய்வதாக தாங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு இந்தத் தொடருக்கு முடிவு இல்லாத ஒரு முடிவாக என்று எண்ணத் தோன்றுகிறது.
தாங்கள் இந்தத் தொடரை வெளியிடுகையில் பல குழப்பமான கேள்விகள் மேலும் தெளிவுறும் என்று எண்ணி இருந்து எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம். இந்தத் தொடரை எழுதி வரும் ஆசிரியரின் அனுபவம் மற்றும் மதங்களை பற்றிய ஆழ்ந்த அறிவு எல்லாம் பல புதிய விளக்கங்களையும் தெளிவுபடுத்தியது மிக மிக பாராட்டுக்குரியது. எனவே என்னைப் போன்ற வாசகர்களின் சார்பில் இந்தத் தொடரை மேலும் நீட்டிக்க வேண்டுமாறு உங்களிடம் ஒரு வேண்டுகோள் முன்வைக்கிறேன் அல்லது இதற்கு ஒரு மாற்று ஏற்பாடாக அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியார் அவர்களின் முகவரியை அறிவித்தால் அவர்களோடு நாங்கள் கடிதப் போக்குவரத்து ஏற்படுத்திக் கொண்டு பல ஐயங்களை நிவர்த்தி செய்து கொள்வோம்.
-ந.அருண்பிரதாப், திருச்செங்கோடு.
தாத்தாச்சாரியாரின் இந்து மதம் எங்கே போகிறது தொடர்மூலம்... ஒன்றை தெளிவாக தெரிந்துகொண்டேன். இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்பதுதான் அது!
- அழ.சிங்காரவேல் (எ) கமல்,
திருக்கண்ணங்குடி