திராவிடர் கழக வரலாறு தொகுதி 1 & 2 - திராவிடர் கழகம் பற்றி தந்தை பெரியார்
இப்போது இழிஜாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் வட்டச் சிவப்பு இருப்பது - அந்த இழிவிலிருந்து நாம் நாளா வட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.
('விடுதலை ', 16.02.1959)
எங்கள் கொள்கைக்கு விரோதிகள் இந்துமகாசபை, ராஸ்ட்ரிய சேவா சங்கம். வர்ணாஸ்ரம சங்கம், ஆகியவைகள்தான். அவைகளின் கொள்கை மக்களிடையே ஜாதி, மதவெறியை உண்டாக்குவது. மூடப்பழக்க வழக்கங்களை வளர்ப்பது, கடவுள் - புராணம் இதிகாசம் பேரால் நாட்டை ஆண்ட சமுதாயத்தின் வாழ்வை நாசம் செய்வது. சுருங்கக் கூறவேண்டுமானால் மனிதத் தன்மைக்கு மாறாக நடப்பதேயாகும்.
('விடுதலை ', 14.04.1949)
இந்தியாவிலேயே சமுதாயத் துறையில் பாடுபடக் கூடியதும், பார்ப்பானுடைய ஆதிக்கத்தை எதிர்த்து ஒழிக்கப் பாடுபடுவதும் திராவிடர் கழகம் மட்டும்தான்.
('விடுதலை ', 11.09.1961)
திராவிடர் கழக அங்கத்தினர்களும் ஆதரவாளர்களும் தங்களால் நடத்தப்படும் பத்திரிகைகள், எழுதப்படும் வியாசங்கள், புத்தகங்கள், கடிதங்கள் முதலியவற்றில் கண்டிப்பாகப் பார்ப்பனர் என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் “பிராமணன், பிராமணர்கள்” என்கின்ற வார்த்தைகள் விழாதபடி பார்த்துக் கொள்ள வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.
('குடிஅரசு', 17.04.1948)
புதிய அபிப்பிராயங்களைச் சொல்வதால் நமக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்படுமென்று பயப்பட வேண்டியதில்லை. இலாபம் அடைகின்றவன் தான் நஷ்டத்திற்குப் பயப்பட வேண்டும். நமக்கு இலாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. ஆதலால் அதைப்பற்றி யாரும் கவலைப்படாமல் விஷயம் சரியா, தப்பா என்கிற முறையில் கவலை செலுத்தி, யோசிக்க வேண்டியதே. மக்களின் கடமையென கருதுகிறேன்.
('குடிஅரசு', 31.05.1931)
நம் நாட்டைப் பொறுத்தவரை, நம் இயக்கத்தைத் தவிர மற்ற எவனும் கிளர்ச்சி என்றால் பலாத்காரத்தில் ஈடுபடுவான். நம் இயக்கம் ஒன்றில்தான் கிளர்ச்சிகளில் பலாத்காரம் இல்லாமல் பல கிளர்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன.
('விடுதலை ', 22.01.1969)
நம் திராவிடர் கழகம் மறைந்து போய்விடாது. நம் இயக்கம் நீரற்ற கட்டாந்தரையிலும் வளர்ச்சியடையக் கூடிய பனைமரம் போன்றது. அதற்கு யாரும் தண்ணீ ர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. அதுதானாகவே தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வளரும்.
('விடுதலை ', 20.2.1950)
சுயமரியாதை இயக்கம் இந்நாட்டு மக்களுக்கு முதலில் மான உணர்ச்சி ஏற்படவும் எல்லா மக்களையும் சமுகம், பொருளாதாரம் ஆகியவற்றில் சமப்படுத்தி ஒன்று சேர்க்கவும் ஏற்பட்டதாகும்.
('குடிஅரசு', 19.12.1937)