திராவிட பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
20.11.1916 அன்று சென்னையில் துவக்கப்பெற்ற தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்' என்ற பெயர் தாங்கிய "பார்ப்பனரல்லாதார் இயக்கம் தான், கல்வியிலும் உத்தியோகத்திலும் வாய்ப்பற்று வதிந்த பெரும்பான்மையான கீழ்ஜாதிகள் - "சூத்திர, பஞ்சம ஜாதிகள்” - என்ற முத்திரை குத்தப்பட்ட மக்களுக்கு புதியதோர் வழிவகை கண்ட இயக்கமாகும்.
திராவிடர் இயக்க முன்னோடியான டாக்டர் நடேசனாரும், சர்.பிட்டி. தியாகராயரும், டாக்டர் டி.எம்.நாயரும் உருவாக்கிய இந்த இயக்கம் வெகுமக்களால் அப்போது கட்சி நடத்திய நாளேட்டையே அடையாளமாகக் கொண்டு "ஜஸ்டிஸ் கட்சி” என்று அழைக்கப்பட்ட நீதிக்கட்சிக்குச் செயல்வடிவம் தந்த பெருமை வெள்ளுடை வேந்தர் தியாகராயரையே பெரிதும் சாரும்.
தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் துவங்கிய 'குடிஅரசு' வார ஏடு, 1925 இல் மே திங்களில் துவங்கப்பட்டது. அதன் முதல் இதழிலேயே, அதன் இணையாசிரியர் தங்கப் பெருமாள் பிள்ளை அவர்களால் (அவர் 'காங்கிரஸ்காரரே' ஒரு ஆழ்ந்த இரங்கல் கட்டுரை ''ஸ்ரீமான் பி.தியாகராயச் செட்டியாரின் மரணம்" என்ற தலைப்பில் {28.4.1925) மறைந்தவருக்குப் புகழ்மாலை சாத்தும் வகையில் எழுதப்பட்டது!
" அரசியல் உலகில் எமக்கும், அப்பெரியாருக்கும் உள்ள வேற்றுமை - வடதுருவம், தென்துருவம் எனின் குன்றக் கூறுதலேயாகும். எனினும் அப்பெரியாரின் அருங்குணங்களையும், அளவிலா தேச பக்தியையும் ஆற்றலையும் நாம் போற்றுகிறோம்.
ஒரு நாள் சென்னைக் கடற்கரையில் இவரது அரசியல் கொள்கைகளை வெகு தீவிரமாகக் கண்டித்துப் பேசின ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களை, மறுநாள் காலையில் சென்னைத் தெருவில் சந்தித்தபோது "ஸ்ரீமான் முதலியாரை விளித்து, ''நண்பரே! நேற்று கடற்கரையில் நீ என்னை வாய்மொழிகளால்
கண்டித்தது போதாது; இக்கழி கொண்டு என்னைப் புடைத்திருத்தல் வேண்டும்” என்று தம் கையிலிருந்த கழியை ஸ்ரீமான் முதலியாரிடம் கொடுத்தனராம்! அரசியல் கொள்கையில் தம்மிலும் வேறுபட்டவரிடம் இப்பெருந்தகையார் (தியாகராயர்) நடந்துகொண்ட பெருந்தன்மையைப் பாராட்டுகிறோம்.
சென்னை நகர பரிபாலன சபையில் நாற்பது ஆண்டுகள் அங்கத்தினராக அமர்ந்து இவர் ஆற்றிய அருந்தொண்டுகள், யாவராலும் மறக்கற்பாலதல்ல. தமது முதுமையிலும், உடல்வலி குன்றித் தளர்வெய்திய காலத்திலும், நகர மாந்தர் நலத்தையே மனதுள் கொண்டு சென்னை நகர பரிபாலன சபையின் தலைமை ஏற்று உழைத்து வந்தமையே இதற்குத் தக்க சான்றாகும்” என்று எழுதப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணா அவர்கள் (தி.மு.க. பிரிந்த பிறகு) 30.6.1950 அன்று திருவல்லிக்கேணியில் நடைபெற்ற தியாகராயரது நினைவு நாள் கூட்டத்தில் ஆற்றிய உரையில்,
''திராவிடர்" என்ற உணர்ச்சியும் "திராவிட நாடு” என்ற எண்ணமும் குறைந்து, எங்கு நோக்கினும் திராவிடர் துன்ப வாழ்வில் சிக்கிச் சிதைந்துவந்த அந்தக் காலத்தில்தான் தியாகராயர் தோன்றினார். வேதனை மிகுந்த காட்சியைக் கண்டு உள்ளம் வெதும்பினார். சீறிப் போரிட்டுச் சீர்கேட்டை ஒழிக்கச் செயலிலே இறங்கினார். அவரைப் பொறுத்தமட்டும் அவருக்கு ஒரு குறையுமில்லை. மற்ற பிரச்சாரங்களைவிட அறிவுப் பிரச்சாரம் தான் முக்கியமானது என்று தியாகராயர் எண்ணினார். அன்றே அவர் அறப்போரைத் தொடங்கினார். அந்த அறப்போர் இன்று வெற்றிபெற்றிருப்பதைக் கண்டு பெருமை அடைகிறோம். அரசியல் வாழ்விலே பலர் இடம் பெற்றிருப்பதைக் கண்டு பெருமை அடைகிறோம். அன்று தியாகராயர் மத விடயங்களிலே புகவில்லை! புரோகிதத்தை எதிர்க்கவில்லை, ஏனென்றால், முதலில் அவர், திராவிடர்களுக்குத் தன்னுணர்வையும் தன்மானத்தையும் உண்டாக்கவே விரும்பினார். மக்களுக்கு முதன் முதலிலே தன்னுணர்வை ஏற்படுத்தி மக்களைத் தட்டி எழுப்பிய பின்தான் அவர் மத விடயத்திலே புக விரும்பினார். முதன் முதலில் நம் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்குணர்ந்தே அவர் முதலிலே அப்படி ஈடுபட்டார்.
அந்த நாளிலே டாக்டர்களிலே சிறந்தவர் யார் என்றால் - டாக்டர் அரங்காச்சாரிதான் (சென்னை அரசாங்க பொது மருத்துவமனையில்
மருத்துவராகப் பணியாற்றியவர் சிறந்தவர் என்று கூறப்பட்டது. இப்பொழுது டாக்டர்களிலே சிறந்தவர் யார்? டாக்டர் குருசாமி. இதைக்கேட்டு நாம் பூரிப்படைகிறோம். அந்த நாளிலே ஆங்கிலத்தில் பேசுவதிலே யார் சிறந்தவர் என்றால், ரைட் ஆனரபிள்- சீனிவாச சாஸ்திரியார் என்று மயிலையும், திருவல்லிக்கேணியும் சொல்லிற்று. இன்று நம் திராவிடப் பெருங்குடி மக்களிலே சிறந்த பேச்சாளர் யார்? என்றால், சர்.ஏ.இராமசாமி முதலியார் என்றே யாவரும் கூறுவர். சிறந்த பொருளாதார வல்லுநர் யார்? என்று அன்று கேட்டால் யார் யாரையோ கூறுவர். இன்று நம் சர் ஆர்.கே.சண்முகம்தான் அங்ஙனம் யாவராலும் போற்றப்படுபவர். அல்லாமலும் தமிழிலே சிறந்த பாடகர் யார்? அன்று எஸ்.ஜி.கிட்டப்பா (பிரபல தமிழ்ப் பாடகி கே.பி.சுந்தராம்பாளின் கணவர் என்று கூறப்பட்டது; இப்பொழுது எம்.கே.தியாகராச பாகவதர். நகைச்சுவையிலே மன்னன் யார்? அன்று ஒரு சாமண்ணா, இன்று நம்முடைய என்.எஸ்.கிருஷ்ணன். 'இந்து' பத்திரிகையிலே எழுதப்படும் தலையங்கங்களை விட சிறந்த தலையங்கங்களை ஆங்கிலத்தில் தீட்ட நம்மிடையே டாக்டர் ஏ.கிருட்டிணசாமி இருக்கிறார்.
இன்று நம் சமுதாயம் மாறி எவ்வளவோ வளர்ச்சி பெற்றுவிட்டது. இன்று நம் திராவிடப் பெருங்குடி இவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு யார் காரணம்? நம்முடைய தியாகராயர்தான். பேச்சுத் துறையிலே, பாடல் துறையிலே, வைத்தியத் துறையிலே, பொருளாதாரத் துறையிலே மட்டுமல்ல, எந்தத் துறையிலும் திராவிடர்கள் அவர்களுடைய வல்லமையைக் காட்ட முடியும். தியாகராயருக்குப் பின் நிலைமைகள் எவ்வளவோ மாறியிருக்கின்றன. இன்னும் மாறும். கடலடியில் சென்று முத்து எடுப்பவர்கள் என்றும் திராவிட இனத்தவரே. வேண்டுமானால் நாம் எடுத்த முத்து ஓர் ஆரிய மங்கையின் காதுகளை அணி செய்யலாம். ஆனாலும் கடலிருக்கிறது. கடலுள்ள அளவும் முத்து இருக்கும். முத்து உள்ள அளவும் நாமும் இருப்போம். ஆகவே, நமக்கு எதிர் காலம் எப்போதும் உண்டு. ஆனால் ஆரியம், அறிவு வளர்ச்சியடைந்தபின் ஆரியமாக வாழாது; ஆரியமாக மதிப்புப் பெறாது” என்று கூறினார்.
முடிவில் அறிஞர் அண்ணா சொன்ன கருத்து:
"கூட்டம் கூடி நாம் பேசுவதோடு நில்லாமல் இதுபோன்ற ஆக்க வேலைகளிலும் ஈடுபட வேண்டுமென்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
தியாகராயர் வாழ்க்கைக் குறிப்புகளோடு டாக்டர் நடேச முதலியார் அவர்களின் வாழ்க்கையையும் சேகரிக்க முற்படுங்கள். நம்மை விட்டுப் பிரிந்த இவ்விரு பெரியாரின் சரித்திரங்கள் அவசியம் எழுதப்பட வேண்டும்" என்றார்!
அப்படிப்பட்ட அரும் வரலாற்றுப் பெருமைக்குரிய எழுத்துப் பணியை என்.வி.நடராசன் அவர்கள் நடத்திய 'திராவிடன்' வார ஏட்டில் பல கட்டுரைகளை 'திராவிடப் பித்தன்' என்ற புனைப்பெயரில் மானமிகு தோழர் குமாரசாமி அவர்கள் எழுதினார். பின்னர் அவற்றை மிகவும் சிரமப்பட்டு தொகுத்து இந்த நூலை உருவாக்கினார். இது தலைசிறந்த வரலாறு.
இதை முதல் பதிப்பாகக் கொண்டுவந்த பெருமை திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரையும் குறிப்பாக, அதன் மேலாண்மை இயக்குநர் அய்யா இரா.முத்துக்குமாரசாமி அவர்களையே சாரும்!
அவர்கள் மனமுவந்து - இந்த பதிப்பு உரிமையை நமக்கு அளித்த பெருந்தன்மையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
திராவிடர் சமுதாயமும் தமிழ்கூறும் நல்லுலகமும் அவர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் மிக்க நன்றி செலுத்தும் கடப்பாடு உடையவர்கள் ஆவர்.
திராவிடர் இயக்க (நீதிக்கட்சி) நூற்றாண்டில் திராவிடர் இயக்க முன்னோடிகள் - நிறுவனர்கள் - வார்த்தவர்களை இனிவரும் தலைமுறையும் அறிந்து, படித்துப் பயன்பெற்று நமது வேர்களின் பெருமையை - அருமையை - இன்றைய விழுதுகள் அறிந்துகொள்ள இந்நூல் ஒரு சிறந்த ஆவணம் ஆகும்!
படித்துப் பயன்பெறுக!
(கி.வீரமணி)
பதிப்பாசிரியர்
29.7.2016
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
திராவிட பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு) - பொருளடக்கம்