திராவிட மானிடவியல்
இந்தியத் துணைக்கண்டத்தின் சமூக உருவாக்கமும் பண்பாட்டுப் படிமலர்ச்சியும் முன் வரலாற்றுக் காலம் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நீண்ட நெடிய அறுபடாத மரபாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த அசைவியக்கத்தினூடே கி.மு. 1200 அளவில் ஆரியர்கள் இத்துணைக் கண்டத்தில் குடியேறினர். அதன் பின்னர் இத்துணைக்கண்டத்தின் இனத் துவமானது திராவிடம், ஆரியம், முண்டா அல்லது ஆஸ்திரிய ஆரியம், திபேத்திய பர்மியம் ஆகிய நான்கு மொழிச் சமூகத்தாரை மையமிட்டுத் தொழிற்பட்டது.
இந்த நான்கு மொழிச் சமூகத்தாரின் சமூகப் பண்பாட்டு வகையினங்களே இத்துணைக்கண்டத்தில் மிக முதன்மையான வகையினங்களாக உரு வெடுத்தன. இவற்றில் திராவிடம் மிகவும் தொன்மையானது; தொடர்ந்து வருவது; இத் துணைக்கண்டம் முழுவதிலும் தொழிற்பட்டது. 'திராவிட' எனும் சொல்லாட்சியின் வரலாற்றை மிகவும் விரிவாக ஆராய்ந்த பி. எம். ஜோசப் (1989), இச்சொல் முதலில் மக்களைக் குறித்து, அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தைக் குறித்து, இறுதியாக மொழியைக் குறித்தது என்கிறார் (மேலது: 134). குமரிலபட்டர் எழுதிய தந்திர வார்த் திகா எனும் நூலில்தான் 'திராவிட முதலியன எனும் பொருளில் 'திராவிட ஆதி' எனும் தொடர் இடம்பெற்றது. கால்டுவெல் இதனைத் திராவிட தந்திரம் எனத் தவறாகப் பொருள் கொண்டார் (ச. மனோகரன் 2012: iii).
ஆய்வுப் புலத்தின் தொடக்கத்தில் 'திராவிடம்' என்பது ஒரு வரலாற்று மொழியியல் கருத்தினமாகவே அமைந்தது. திராவிட மொழிகள் தனித்துவமான 'மொழி மரபியல் பண்பு களைக் கொண்டவை என்றும், அவை மற்ற மொழிக் குடும்பங் களிலிருந்து வேறுபட்டவை என்றும் அறியப்பட்டன. மொழி சார்ந்த இத்தகைய மரபியல் கூறுகள் பண்பாட்டு ரீதியாகவும், இன ரீதியாகவும் காணப்பட்டதைப் பின்னாளில் மானிடவியலர் கள் கண்டறிந்தனர்.
இந்நூல் 'திராவிட மானிடவியல்' பற்றியது. திராவிடம் எனும் கருத்தினத்தை மொழிக்கு அப்பால் சென்று அதனைச் சமூகப் பண்பாட்டுத் தளங்களில் மையப்படுத்தி அறிய முனைகிறது. திராவிடம் என்பது மொழி சார்ந்த ஒரு கருத்தினமாகும். எனினும், பொதுச் சொல்லாடலில் அது இனம் பற்றிய வகை யினத்திற்கும் பின்னாளில் விரிவுபடுத்தப் பெற்றது. ஆதலால் இனம், சமூகம், பண்பாடு ஆகிய மூன்று தளங்களிலும் திராவிடம் எனும் கருத்தினம் பொருந்தி நின்றது.
திராவிடம் பற்றி அறியவேண்டுமானால் அது ஆரியத்தி லிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அறிவதால் எளிமை யாகப் புரிந்துகொள்ளலாம். ஆஸ்திரிய ஆசியம், திபேத்திய பர்மியம் ஆகிய இரண்டோடு திராவிடத்தை ஒப்பிட்டு அறிவதைக் காட்டிலும் ஆரியத்துடன் ஒப்பிடுவதால் மட்டுமே மிக நுட்பமாகப் புரிந்துகொள்ள முடியும். காரணம் இவ் விரண்டு வகையினரே இத்துணைக் கண்டம் முழுவதிலும் பரவி வாழ முற்பட்டனர்; நேருக்குநேர் தொழிற்பட்டனர்.
இந்தியாவில் ஆரியர்கள் குடியேறுவதற்கு முன்பு திராவிடர் கள் தென்குமரி முதல் பாகிஸ்தானின் மேற்குப் பகுதிவரை பரவியிருந்தனர். ஆரியர்கள் வடபுலத்தில் குடியமர்ந்த பின்னர் அவர்கள் மெல்ல மெல்லப் பரவி இந்தியா முழுவதிலும் குடியமர்ந்துவிட்டார்கள். மற்ற இரண்டு மொழிக் குடும்பத்தார் நடு இந்தியாவிற்குக் கீழ் விரிவுபெறவில்லை . அதனால்தான் திராவிடத்தை அறிய ஆரியத்துடன் ஒப்பிட்டு அறிவதும், ஆரியத்தை அறிய அதனைத் திராவிடத்துடன் ஒப்பிட்டு அறிவதும் நுட்பமான புரிதலுக்கு வழிவகுக்கும்.
அறிவுப் புலங்களில் 'ஆரியம்' என்பது 19 ஆம் நூற்றாண் டில் ஆங்கிலேய சமஸ்கிருத அறிஞர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று (ட்ரவுட்மன் 1997: xi) கீழைத்தேய இந்தியாவைப் பற்றி ஆங்கிலேய, ஐரோப்பிய அறிஞர்கள் உருவாக்க முயன்ற அறிவு முறையில் ஆரியம் எனும் கருத்தாக்கம் மிக முக்கிய மானதாகும். இதில் இரண்டு போக்குகள் உள்ளன. ஒன்று:
இந்தியா பற்றி ஐரோப்பியர்கள் அறிந்துகொண்டவை. மற்றொன்று: இந்தியா மீதான ஐரோப்பியவாதம். இவ்விரண்டு நிலைப்பாடுகளுக்கும் மெல்லிய வேறுபாடு உள்ளதைக் கவனிக்க வேண்டும்.
'இந்தியா பற்றி அறிந்துகொண்டவை ; இந்தியா மீதான ஐரோப்பியவாதம்' இவையிரண்டும் ஒரு மிக நீண்ட நெடிய முயற்சியாக நடந்தேறியுள்ளன. பண்டைய இந்தியா பற்றிய தொடக்கக்காலப் புரிதல் வில்லியம் ஜோன்ஸ், ஹென்றி கோல் புரூக், எச்.எச். வில்சன் போன்றவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் மூவரும் இந்தியாவில் ஆங்கில நிர்வாகத்தைக் கவனிக்க விக்டோரியா அரசால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள். இவர்களையடுத்து வந்த சார்லஸ் கிராண்ட், ஜேம்ஸ் மில் போன்றவர்களும் இந்தியா பற்றி ஒருவகையான வினோதத் தன்மையுடன் சுவாரசியமாக எடுத்துரைத்தனர் எனலாம். ஐரோப்பாவிலிருந்து வந்த மாக்ஸ் முல்லர் முன்னெடுத்த விவரிப்புகள் இன்னொரு வகையான தோற்றத்தை ஏற்படுத்தின. இவ்வகையான புரிதல்களை எல்லாம் நாம் வரையறை செய்ய வேண்டுமானால் அவை யாவும் இந்திய வெறுப்பு வாதமாக (Indophobia) அமைந்தன எனலாம் (மேலது: xii).
ஆரியம் பற்றிய புரிதல் மிக விரிவாக அறியப்பட்ட வேண்டிய ஒன்று. அது ஈரானில் 'அவஸ்தா ' (Avesta) என்பதி லிருந்தும், இந்தியாவில் வேத நூல்களிலிருந்தும் தொகுத்து அறியப்பட வேண்டும். இன்று ஆரியர் என்று சொல்லப் படுபவர்கள் சமஸ்கிருதம் அறிந்தவர்களின் வழித்தோன்றல்கள் என்பது ஒரு பொதுவான கருத்தாகும். உண்மையில் சமஸ்கிருதத்திற்கு மூலமாக இருந்த பிராகிருத மொழிச் சமூகத்தார் என்று கூறுவதே சரியான கூற்றாகும். சமஸ்கிருத மானது ஈரான் வழியாக இந்தியா வந்தடைந்தது. இந்து மதத் தின் புனித நூல்கள் இம்மொழியில் எழுதப்பட்டுள்ளன. இன்று வட இந்தியாவில் பேசப்படும் நவீன மொழிகளும், இலங்கையில் பேசப்படும் சிங்களமும், லட்சத்தீவுகளில் பேசப் படும் மஹல் மொழியும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை யாகும்.
சமஸ்கிருதமானது இந்திய ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி. இம்மொழிக் குடும்ப மொழிகளோடு அது 'இனஉறவு' கொண்டிருக்கிறது. பெர்சிய மொழிகூட இவ் வுறவுடைய ஒரு மொழியாகும். அது அரேபிய வரிவடிவத்தில் எழுதப்படும் ஒரு வகையினமாக மாறிவிட்டாலும் அரேபியத் தோடு அது நெருக்கமான இனவுறவுடையதல்ல என்பதும் கவனத்திற்குரியது.
ஆரியர் என்பது 'ஆர்யா' எனும் சமஸ்கிருதச் சொல்லி லிருந்து ஏற்பட்டதாகும். இது பண்டைய நாட்களில் சமஸ்கிருத மொழி பேசுவோர் மற்ற மொழிச் சமூகத்தாரிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகப் பயன்படுத்திய சொல்லாகும் (மேலது: Xviii). ஈரானியர்களும் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆரியர்களின் தேசம் எது என்பதைக் கூறும்போது 'ஆர்யா' என்று குறிப்பிட்டார்கள். இந்திய ஐரோப்பிய மொழிகளைப் பேசிய பண்டைய கால் மக்கள் 'ஆரியர்' என்று அழைக்கப்பட்டார்கள் என்று அறிஞர் கள் சிலர் கருதுகின்றனர். ஆரியர்கள் ஓர் ஒன்றுபட்ட இனத்தாராகவோ தூய இரத்த வழியில் வரும் மக்களினத் தாராகவோ கருதுவதைவிடச் சமயம், மொழி ஆகிய இரண்டா லும் உருவான பண்பாட்டு அடையாளத்தைக் கொண்டவர்கள் எனலாம். உடற்கூறு சார்ந்த அல்லது இன (race) அடையாளம் சார்ந்த கூறுகளை ஆரியர் எனும் சொல் கொண்டிருக்கவில்லை,
ஆரியம், திராவிடம் எனும் இரண்டையும் புலமைத் தளத்தில் நின்று ஆராய வேண்டும். மொழியியல், வரலாற்றியல், இலக்கணவியல், இலக்கியவியல், சமயவியல், தத்துவவியல் எனத் தொடர்புடைய பல்வேறு துறைகளின் ஊடாக ஆராய வேண்டியது அவசியமாகும். மானிடவியல் புலத் தின் வழியாக ஆராய்வது இன்னுமொரு கூடுதல் பார்வையைத் தரவல்லது. இதுவரை 'திராவிட மொழியியல்' எனும் ஓர் ஆய்வுப் புலம் உருவாகியுள்ளது. செக்கோஸ்லோவேகிய அறிஞர் கமில் சுவலபில் திராவிட மொழியியல் (Dravidian Linguistics, 1990) எனும் தலைப்பில் மிகச் சிறந்ததோர் ஆய்வினைச் செய்துள்ளார்.
தொன்மொழியினின்றும் கிளைத்த உறவு மொழிகளே குடும்ப மொழிகளாக அமையும். இத்தகைய மொழிகளின் கட்டுக்கோப்பைக் கொண்டதே மொழிக்குடும்பமாகும். திராவிட மொழிக் குடும்பத்தில் மட்டுமே 41 மொழிகள் உள்ளன. மொழி ரீதியில் இனங்காணப்பட்ட திராவிடம் மற்ற தளங் களிலும் இனங்காணப்படும்போதுதான் அது முழுமை பெறும். மொழி வழித் தனித்துவம் கொண்ட ஒரு சமூகமானது, மொழியை ஒரு கூறாகக் கொண்டு ஒரு பெரும் தொகுப்பாக விளங்கும் பண்பாடு எனும் தளத்திலும் எண்ணற்ற தனித்துவங் களைக் காட்டி நிற்கும். அந்த வகையில் திராவிட மானிடவியல் எனும் களத்தில் திராவிடத்தின் மற்ற கூறுகளை ஆராய வேண்டியிருக்கிறது.
இந்நூலில் உயிரியல் பண்புடைய இனம் (race) பற்றியும், பண்பாடு எனும் தளத்தில் இடம்பெறுகின்ற சமூகம், உறவு முறை, திருமணம், விழாக்கள், சமயம், தொன்மங்கள்,
பிராமணர் ஆகிய எட்டு களங்கள் பற்றியும் ஆய்வு செய்யப் பெற்றுள்ளன. இவற்றின் மூலம் திராவிடத்தின் பண்புகள், தன்மைகள், அமைப்பியல்புகள், தனித்துவங்கள், பொதுமை கள் என எண்ணற்ற கூறுகள் மானிடவியல் நோக்கில் ஆராயப் பட்டுள்ளன. இவை தவிர ஆய்வுக்குரிய களங்கள் மேலும் உள்ளன. வருங்காலத்தில் அவை பற்றியெல்லாம் ஆராய (வேண்டும். இத்தகைய ஆய்வுகள் அனைத்தும் புலமை நெறியில் நடைபெற வேண்டும். இன்று மிகவும் அரசியல்வயப் பட்டுள்ள நிலையில் ஆரியம், திராவிடம் பேசப்படுகிறது. இவற்றைத் தாண்டி புலமைநெறியில் நின்று ஆராய வேண்டி பள்ளது. அப்போதுதான் பண்பாடுகளில் உயர்வு, தாழ்வற்ற நோக்கு நிலையைக் காண முடியும்.
ஆரியம் உயர்ந்ததென்றோ, திராவிடம் தாழ்ந்ததென்றோ அல்லது திராவிடம் உயர்ந்ததென்றோ, ஆரியம் தாழ்ந்த தென்றோ மானிடவியல் பேசுவதில்லை. ஒவ்வொரு பண்பாடும் அதனளவில் சார்புடையது. அதில் அதற்கான தனித்துவங்களும் இருக்கும், உலகளாவிய சில பொதுமைகளும் இருக்கும். ஆக, இந்தியா என்ற தேசத்தைப் 'பன் மொழிகளின் பிரதேசம்' என்றும் 'பல பண்பாடுகளின் பிரதேசம்' என்றும் ஒருபுறம் அணுக வேண்டும். அதில் திராவிடம், ஆரியம் தொழிற்படும் முறைகளை மறுபுறம் ஒப்பிட்டுக் காண வேண்டும். எனினும் பண்பாடுகளுக்கிடையில் நிலவும் ஒத்திசைவான அசை வியக்கங்களும் அவற்றிற்கிடையே நிலவும் முரண்பட்ட அசைவியக்கங்களும் ஆய்வுக்குரியவையாகும்.
இந்நூலில் திராவிடம், ஆரியம் எனும் இணையென்பது ஒரு வகைமாதிரியாகவே முன்னெடுக்கப்படுகிறது. உண்மையில் இவற்றோடு ஆஸ்திரிய ஆசியம், திபேத்திய பர்மியம் ஆகிய இரண்டையும் இணைத்து ஆராய வேண்டும். இந்நான்கில் திராவிடம், ஆரியம் இணையானது மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாகவும், இவையிரண்டையும் ஒப்பிட்டு ஆராயும்போது கிடைக்கும் புரிதல் மேம்பட்டதாகவும் இருக்கும். அதனாலேயே திராவிட மானிடவியல் எனும் இந்நூலில் இவையிரண்டும் ஒப்பியல் கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டுள்ளன.
என்னுடைய நீண்ட நாள் கனவு திராவிட மானிடவியல். மானிடவியல் பயிலுங்காலம் முதல் இப்படியொரு முயற்சியைச் செய்ய வேண்டுமென எண்ணியிருந்தேன். புதுச்சேரி மொழி யியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த பேராசிரியர் இரா. கோதண்டராமன் கமில் சுவலபில்
எழுதிய திராவிட மொழியியல் எனும் நூலினை வெளியிட்டார். எமது நிறுவனத்தின் மிகச் சிறந்த நூல்களில் அதுவும் ஒன்று. இன்றைக்கும் இத்தலைப்பில் முதன்மை நூலாக உள்ளது. இந்நூலின் மூலம் வரலாற்று மொழியியலுக்கும் ஒப்பீட்டு மொழியியலுக்கும் அடிப்படையாக அமைவது வண்ணனை மொழியியல் என அறியலாம். வரலாற்று, ஒப்பீட்டு மொழியியல் ஆகிய இரண்டின் ஆய்வுக் களங்கள் குடும்ப மொழிகளை நிலைக்களனாகக் கொண்டவையாகும். திராவிட மொழிக் குடும்பத்திற்குள் உள்ள உறவு மொழிகளைக் கொண்டே தொல் வடிவத்தையும் இன்றைய உருவாக்கங்களையும் அறிய முடியும். மொழி ஊடாக மட்டுமே திராவிடத்தை முன்னெடுப்பது போதாது என்பதை அந்நூலை வாசித்து முடித்தவுடன் உணர்ந்தேன்.
ஒருவகையில் மொழியியல் துறை மானிடவியலுக்கு முன்னோடி என்று சொல்லலாம். உண்மையில் மொழியில் யலானது மானிடவியலின் நான்கு பெரிய உட் பிரிவுகளில் ஒன்றாகத் தோன்றினாலும் அது ஒரு தனித்துறையாக வளர்ந்து விட்டது. சசூரின் கோட்பாடு தொடங்கி இன்னும் சில கருத்தாக்கங்கள் மானிடவியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறே இராபர்ட் கால்டுவெல் முன்வைத்த திராவிட மொழிக் குடும்பம் எனும் கருத்தாக்கத்திற்குப் பிறகே திராவிட இனம், திராவிட உறவுமுறை எனும் கருத்தினங்கள் மானிடவியலில் பேசப்பட்டன. இன்று உலக அளவில் நோக்கும்போது திராவிட உறவுமுறை மிகவும் தனித்துவமானது என்பதை லூயி துய்மோன், ஐராவதி கார்வே, தாமஸ் ட்ரவுட்மன் போன்றோர் நிறுவியுள்ளனர்.
இந்த வரிசையில் திராவிடம் சார்ந்த ஏனைய கூறுகளை யும் ஒன்றிணைத்து, திராவிட மானிடவியல் எனும் ஒரு புதிய ஆய்வுக் களத்தை விரிவாக்க வேண்டுமென விரும்பினேன். இப்போதுதான் அது சாத்தியப்பட்டுள்ளது. இக்களத்தில் பல்வேறு ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. அயல் பார்வையில் தமிழ்ச் சமூகம் பெரிதும் கவனிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேலை அறிஞர்களின் பார்வையில் ஐரோப்பியவாதம் இழையோடுகிறது. இந்நிலையில் திராவிடம் பற்றி திராவிட ஆய்வாளர்களே ஆராய்வது தேவையாகிறது. அந்த வகையில் இந்நூல் அகப்பார்வையை மையப்படுத்தும் வகையில் கூர்மைப்பட்டிருக்கிறது.
இந்நூலினை அருட்தந்தை பிரான்சிஸ் ஜெயபதி, சே.ச. அவர்களுக்குக் காணிக்கையாக்கியுள்ளேன். இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் மானிடவியல் ஆய்வினை மேற்கொண்டவர், லண்டன் பொருளியல் பள்ளியில் கிரிஸ் ஃபுல்லருடன் (மேலாய்வு மேற்கொண்டவர். இவர் தமிழகத்தில் ஆய்வுபூர்வ மான பண்பாட்டியல் கல்விக்கெனப் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் மையத்தைத் தொடங்கினார். அம்மையத்தை இயக்கிய பின்னர் நாகர்கோவிலில் மது அடிமைகளை மீட்கும் பணி. இப்போது சென்னை லயோலா கல்லூரியின் 'லிஸ்டார்' மையத்தின் இயக்குநர் பணி. இப்பணிகள் அனைத்திற்கும் பின்னால் இருப்பது அவரது மானிடவியல் ஞானம். அருட்தந்தை அவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பலரையும், (செயற்பாடுகள் பலவற்றையும் இயக்கும் ஆற்றல் வாய்ந்தவர். அவருக்குத் திராவிட மானிடவியலைச் சமர்ப்பணமாக்கி மகிழ்கிறேன்.
இந்தத் திசையில் எனக்குள் உள்ளொளியை ஏற்படுத்தியவர் (பேரா. இரா. கோதண்டராமன் அவர்கள். அவர் முன்னெடுத்த வரலாற்று மொழியியல் சார்ந்த ஆய்வுரைகளும் எழுத்துகளும் என்னைத் திராவிடம் நோக்கி வயப்படுத்தின. திராவிட மொழி பியலுக்குப் பங்களித்துள்ள மிகச் சிறந்த அறிஞர்களில் அவரும் ஒருவர். பிரெஞ்சு மானிடவியலர் லெவிஸ்ட்ராஸ், லூயி துய்மோன் ஆகியோரின் எழுத்துகள் என்றைக்கும் என்னைச் சிந்திக்க வைத்துக்கொண்டிருப்பவையாகும்.
திராவிட மானிடவியலை ஒரு நீண்ட காலத் திட்டத்துடன் எழுதி வந்தேன். எனினும் கடந்த மூன்றாண்டுகளில்தான் இதற்கான வேகம் கூடியது. பேராசிரியர் ஆ.இரா. வேங்கடா சலபதி திராவிட உறவுமுறை குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதச் சொன்னார். அதனை அவருக்கு எழுதியனுப்பிய பின்னர்தான் இந்நூலுக்கான ஆய்வுப் பணிகள் விரைவு பெற்றன என்று சொல்ல வேண்டும்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இது பற்றிய சில வகுப்புரைகள் வழங்க முடிந்தது. என்னை 2009இல் அங்கழைத்த அப் பல்கலைக்கழகத்தின் அந்நாளைய துணை வேந்தர் சமூகவியல் பேராசிரியர் (பேராசிரியர் கணநாத் உபயசேகர அவர்களின் மாண வர்) கலாநிதி என். சண்முகலிங்கன் அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட் டிருக்கிறேன். என்னுடைய நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வுப் பேராசிரியர்களின் ஊக்கமும் கூட என்னை ஒரு வகையில் இத்திசையில் செயல்பட வைத்தது என்று சொல்ல முடிகிறது.
'தமிழர் உணவுக்குப் பின்னர் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருபவர் காலச்சுவடு கண்ணன். காலச்சுவடு மூலம் 'திராவிட மானிடவியல்' வெளியாகும் இச்சூழலில் அவருக்கு மனங்கனிந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இந்நூலின் மெய்ப்பினைக் கருத்தூன்றிப் படித்தவர் பேராசிரியர் அ.கா. பெருமாள். இன்னொரு நிலையில் இதனை வாசித்துக் கருத்துரைத்தவர் களந்தை பீர்முகம்மது. இவ்விருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இந் நூலாக்கத்தின்போது பல்வேறு கட்டங்களில் ஐயங்களை எழுப்பி அவற்றை என்னிடம் பகிர்ந்து கொண்டு, தெளிவு பெற்று நூலாக்கப் பணியைச் செய்துள்ளவர் காலச்சுவடு அகிலா; இவருக்கும் நன்றி கூறுவது என் கடமை. என் ஆய்வுப் பணிகளுக்குப் பின்புலமாய் இருப்பவர்கள் துணைவியார் ப.விஜயாவும் மகள் கார்த்தி வைஷ்ணவியும். இவர்கள் இருவருக்கும் என்றென்றும் நன்றி சொல்ல வேண்டும்.
பக்தவத்சல பாரதி
புதுச்சேரி
9 ஜூலை 2014
தொடர்புடைய மற்ற பதிவுகள்: