திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் - நெஞ்சோடு நெஞ்சம்
'தமிழாலயம்' இதழில் நான் எழுதிய 'திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்' என்னும் கட்டுரைத் தொடர், நூல்வடிவம் பெற்று உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்திய ஆட்சிப்பணியில் பீடுநடை போட்ட பெருமகன் திரு.கா.திரவியம் அவர்கள் எழுதிய 'தேசியம் வளர்த்த தமிழ் என்னும் நூலின் தாக்கமே, இந்நூல் உருவாகக் காரணமாய் அமைந்தது எனலாம்.
தற்காலத் தமிழ்மொழி இலக்கிய வளர்ச்சியில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு மகத்தானது என்பதை யாரும் மறுக்க இயலாது.
தேசிய இயக்கம் வளர்த்த தமிழை விட, திராவிட இயக்கம் வளர்த்த தமிழை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட இயலாது. அந்த அளவுக்கு தமிழ்மொழி வளர்ச்சியில் திராவிட இயக்கம் தனது சிறப்பான பங்கினை வழங்கியுள்ளது. அதனை வெளிப்படுத்திக் காட்டுவதே இந்நூலின் நோக்கமாகும்.
திராவிட இயக்கம் தொடர்பான பல நூல்களை வெளியிட்டுள்ள பாரி நிலையம்' இந்நூலினையும் வெளியிட முன்வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பதிப்புலக முன்னோடி பாரி செல்லப்பனாரின் அருமை மகன் செ. அமர்ஜோதி இந்நூலை அழகிய முறையில் வெளியிட்டுள்ள பாங்கு பாராட்டத்தக்கது. அன்னாருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
நூல் ஆக்கப்பணியில் முழுமுயற்சியுடன் ஈடுபட்டு உழைத்த பதிப்புச் செம்மல் முல்லை முத்தையா அவர்களின் அன்பு மகன் திரு. மு.பழநியப்பன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.
பல்வேறு பணிகளுக்கிடையே 'அணிந்துரை அளித்தருளிய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணியார் அவர்களுக்கு என்றென்றும் நன்றியுடையேன்.
இம்முயற்சியில் எனக்கு மென்மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து ஊக்குவிக்குமாறு தமிழ்கூறு நல்லுலகை அன்புரிமையுடன் வேண்டுகிறேன்.
சென்னை - 40 மு.பி. பாலசுப்பிரமணியன்
15.3.2019