டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆங்கிலத்தில் எழுதிய அவருடைய சுய சரிதையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் இத்தருணத்தில் அவரைப் பற்றிக் குறிப்பிடத்தக்க சில செய்திகளை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விருப்பமே இப்பகுதி எனலாம்.
இந்தச் சுயசரிதையின் சிறப்பைச் சொற்களால் விளக்குவதைவிட மெளன மாய் அவரவர் மனப்பாங்கிற்கு ஏற்ப அது அமையட்டும் என்பது என் ஆத்மார்த்த மான முடிவாகும்.
நூலை மொழிபெயர்த்துத் தந்த பேராசிரியர் ராஜலட்சுமி அவர்களை இத் தருணத்தில் நினைவுகூராமல் இருக்க இயலவில்லை . அது என் கடமையும் கூட.
இனி டாக்டர் ரெட்டியைப் பற்றி...
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி வாய்ப்புக் குறைந்த ஒரு சமூகத்திலிருந்து வந்தவர். பெண்கள் திருமணம் செய்து கொள்ளவே பிறந்தவர்கள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலகட்டம் அது. டாக்டர் ரெட்டியின் தளர்வுறாத ஆற்றலும் துணிச்சலும் அவர் வழியில் குறுக்கிட்ட எண்ணற்ற தடைகளை எதிர்கொண்டு 1912 இல் இந்தியாவில் முதல் பெண் மருத்துவராகவும் 1927இல் சட்டசபையில் தலைமை வகித்த முதல் பெண்ணாகவும் வரலாற்றில் இடம் பெற உதவின.
அவர் சட்டசபை உறுப்பினராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் கல்வி யாளராகவும் விளங்கியவர். சமுதாய அடிநிலை மக்களின் உயர்வுக்குப் பெரிதும் உழைத்தவர். நேர்மையற்ற அநீதியான தேவதாசி முறையை நீக்கியதும், ஒழுக்க மற்ற போக்கைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை உருவாக்கியதும், குழந்தைகளைக் கொடுமைக்கு ஆட்படுத்தும் வழக்கத்தைத் தடுத்ததும், பெண்களின் திருமண வயதை உயர்த்தியதும் மற்றும் பலவும் அவர் தந்த கொடையாகும்.
இந்திய நாட்டுத் துணைத் தலைவர் திரு. ஆர். வெங்கடராமன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் நூற்றாண்டு விழாவின்போது அவருடைய சிலையைத் திறந்துவைக்கும் சமயத்தில் ''இந்தியப் பெண்கள் மீது காலம் சுமத்திய தடைகளைத் தகர்த்தவர்'' என்று அவரைக் குறிப்பிட்டார். தன் வாழ்நாள் முழுவதும் பல பெரும் முயற்சிகளை மேற்கொண்டு சாதனைகள் பலவற்றைத் தொலைநோக்குப் பார்வையோடு பின்வரும் தலைமுறையினருக்காக அவர் சாதித்துள்ளார்.
சட்டசபை உறுப்பினராகவும் பெண்களை ஆற்றல் மிக்கவர்களாக ஆக்கும் ஆர்வலராகவும் இருந்த டாக்டர் ரெட்டி, சட்டம், சட்டமியற்றுதல் ஆகியவற்றின் மூலம் அங்கீகாரம் மட்டுமே பெறலாம் என்றும், அவற்றைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டியது பெண்களைப் பொறுத்தே அமையும் என்றும் நம்பி னார். இந்தக் காலத்துப் பெண்களிடம் கூட இல்லாத அல்லது அவர்களிடம் குறைந்த அளவே காணப்படும் தன்னம்பிக்கை அவரிடம் மிகுந்திருந்ததை இது காட்டுகிறது.
அவர் நினைவாக இன்றும் உயிர்த்துடிப்புடன் இயங்கிவரும் அவ்வை இல்ல மும், பள்ளிகளும் ஆதரவு அற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சாதி, மத எல்லைகளைக் கடந்து 1930இல் அவர் உருவாக்கிய முதல் இல்லமாகும்.
அவ்வை இல்லம் உருவானதே ஆர்வமூட்டும் ஒரு கதையாகும். தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பின் மூன்று இளம் பெண்கள் 1930 ஆம் ஆண்டு ஒரு மாலை நேரத்தில் டாக்டர் ரெட்டியின் வீட்டிற்கு வந்தார்கள். எந்த விடுதியும் உறவினரும் அவர்களை ஏற்றுக்கொள்ள இசையாத்தால் பாதுகாப்பின் பொருட்டு அவர்கள் ரெட்டியின் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது இரவு 9 மணியிருக்கும். புகலிடமும் பாதுகாப்பும் வேண்டி இயல்பான வாழ்க்கையை வாழ விரும்பிய அப்பெண்கள் அவரை நாடி வந்தனர்.
உடனடியாகச் செயல்பட வேண்டிய அவசரம் தேவைப்பட்ட நேரம் அது. டாக்டர் ரெட்டி இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டதோடு முழு ஈடுபாட்டுடன் பெண்களுக்காகச் செயல்பட்டார். அவ்வை இல்லம் அவருடைய சொந்த வீட்டி லேயே உருவானது. அந்தப் பெண்களில் ஒருவர் மருத்துவராகவும், மற்றொருவர் ஆசிரியராகவும், இன்னொருவர் செவிலியாகவும் உருவானார்கள்.
டாக்டர் ரெட்டியின் மற்றொரு கொடை, சென்னை புற்றுநோய் நிறுவனத் தைத் தோற்றுவித்தது. இந்திய மகளிர் சங்கம் என்ற பெண்களின் தன்னார்வக் குழு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் தலைமையில் புற்றுநோய் நிறுவனத்தை ஏற்படுத்தியது. இப்பணியில் அவர் பொதுமக்களின் புறக்கணிப்பையும் அரசின் அக்கறையின்மையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழக அரசை அவர் அணுகியபோது அப்போதைய அமைச்சராக இருந்தவர் 'எதற்காகப் புற்றுநோய்க்கு ஒரு மருத்துவ நிலையம்? மக்கள் புற்றுநோயால் இறக்கத்தான் செய்வர்' என்றார்.
டாக்டர் ரெட்டிக்கு எந்தச் சவாலையும் எதிர்கொண்டு வெல்வது கடினமாக இருந்ததில்லை. அன்று 12 படுக்கைகள், 2 மருத்துவர்கள், ஒரு செவிலியோடு தொடங்கப்பட்டது, இன்று விரிவடைந்த ஒரு புற்றுநோய் மையமாக வளர்ந்து 450 படுக்கைகள், ஓர் ஆய்வுப் பிரிவு, புற்றுநோய் அறிவியல் கல்லூரி, புற்றுநோய் தடுப்புப் பிரிவு ஆகியவற்றோடு விளங்குகிறது. இது தேசிய, அனைத்துலக மைய மாக உயர்ந்துள்ளதோடு பல வகைகளில் முதன்மை இடத்தையும் பெற்றுத் திகழ்கிறது.
டாக்டர் ரெட்டி 1968இல் மறைந்த போது அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி வானொலியில் டாக்டர் ரெட்டியும் டாக்டர் சரோஜினி நாயுடுவும் இல்லாமற்போயிருந்தால் நாம் இன்று இத்தகைய உயர்பதவிகளில் அமர்ந்திருக்க இயலாது' எனப் பாராட்டினார்.
கீழ்வரும் மிகச் சிறந்த அஞ்சலியைத் திருவனந்தபுரம் பல்கலைக்கழக மகளிர் சங்கம் செலுத்தியது.
''திருவனந்தபுரம் பல்கலைக்கழக மகளிர் சங்கம், பத்மபூஷண் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டியின் மறைவிற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. சமூக அரசியல் தளங்களில் இந்திய மகளிரின் உயர்வுக்குப் போராடிய முதல் பெண்ணாகிய அவருக்கு எங்கள் மகளிர் சங்கம் தன் அஞ்சலியைச் செலுத்துகிறது. இந்தியப் பெண்களின் ஓட்டுரிமைக்காகப் போராடி வென்றதைப் பாராட்டிப் பதிவு செய்யவும் விரும்புகிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்திய மகளிர் சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறார். முழுமையான ஈடுபாட்டுடனும் நேர்மையுடனும் தன்னுடைய நாட்டின் சகமனிதர்களுக்கு அவர் செய்த சேவைக்கும் முழுமையான சிறந்த வாழ்க்கையை வாழ வாய்ப்பளித்த இறைவனுக்கும் நன்றி கூறுகிறோம். அவ ருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.''
டாக்டர் ரெட்டி 1968 ஜூலை 22ஆம் நாள் மறைந்தபோது உலகம் அந்த உன்னதமான பெண்மணிக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்து மரியாதை செலுத்தியது.
அறியாமையும் நலிவும் நிறைந்த மரபில் பிறந்து, சூழ்ந்திருக்கும் இருளைப் போக்கி, கடலிலிருந்து புறப்படும் சூரியன் போலத் தோன்றி, உதவியற்ற பெண்களின் ஆத்மாவுக்கும் உடலுக்கும் அவர் ஒளியூட்டினார்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி!
டாக்டர் வி.சாந்தா
தலைவர்
புற்றுநோய் நிறுவனம்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: