தலித்தியம்
இந்த தொகுப்புக்கு 'தலித்தியம்' என தலைப்பிடுவது தொடர்பாக எங்கள் பதிப்பகத்தில் சிறியதொரு விவாதம் நடந்தது.
சென்னை நகரின் பாழடைந்த ஒரு சந்தில் எங்கள் பதிப்பகம் இயங்குகிறது. புறாக்களை, பச்சை கிளிகளை பார்க்க முடியும். குயிலோசைகளை கேட்க முடியும். சில சமயம் கீரிப்பிள்ளை - கள் வாசலில் உலாவும், பெருச்சாளிகள் மட்டும் இல்லை. (முற்போக்கு புத்தகத் தாள்களின் வாடை பிடிக்கவில்லையோ). சென்னை நகரின் மய்யப் பகுதியில் இப்படி ஒரு இடமா என முதல் முறை பார்ப்பவர்கள் வியப்பார்கள்.
பதிப்பகத்தை மய்யமாக, இளம் படைப்பாளர்கள், ஆய்வு மாணவர்கள், செயல்பாட்டாளர்களை கொண்ட சிறிய தொரு 'விடிவெள்ளி வாசகர் வட்டம் இயங்குகிறது. பீடி, சிகரெட் துண்டுகளை, காகித சிதறல்களை சுத்தப்படுத்தாமல் இருப்பது 'உழைக்கும் வர்க்க அழகியல்' என கருதுகிற அழுக்கு மனிதர்கள். வாசகர் வட்டம் தன்னை 'ஒரு கற்றுகொள்ளும் சமூகம்' என அடையாளப்படுத்திக் கொள்கிறது.
முறையாகவும், முறைசாராமலும் வாசகர் வட்டத்தில் பல விவாதங்கள் தொடரும். அப்படியொரு முறைசாரா விவாதத்தின் அரட்டை பொருளாக இந்த தொகுப்பின் தலைப்பு மாறியது.
"தலித்தியம் என ஒன்று இருக்க முடியுமா?"
"பிராமணியம் என ஒன்று இருந்து, பரவலாக புழக்கத்தில் இருக்கும்போது தலித்தியம் ஏன் இருக்கக் கூடாது?"
''பிராமணியத்திற்கு வேதங்கள், உபநிஷதங்கள், ஆரணியகங்கள், தர்ம சூத்திரங்கள், ஸ்மிருதிகள், இதிகாச புராணங்கள் இருக்கின்றன. தலித்தியத்திற்கு என்ன இருக்கிறது?”
"கல்வி, நிலம், அனைத்து வளங்களிலிருந்தும் பல்லாயிரமாண்டுகளாய் ஒதுக்கிவைக்கப்பட்ட நிலையில் தலித்தியத்திற்கு நூல் வடிவிலான இலக்கியங்களை எதிர்பார்க்க முடியுமா?''
"பிராமணிய இலக்கியங்களில் கட்டமைத்து நிறுத்தப்பட்ட சுரண்டல் வர்க்க வர்ண பண்பாட்டுக்கு நேர்மாறானதுதான் தலித்தியம்.''
''பிராமணிய இலக்கியங்களின், வர்ணப் பண்பாட்டின் உள்ளடக்கமாக இருக்கிற அடக்குமுறை, அசமத்துவங்கள், தீண்டாமை, உழைப்புச் சுரண்டல் அனைத்திற்கும் எதிரானது தலித்தியம்.''
''தலித்தியம் உழைக்கும் வர்க்கப் பண்பாடு. ஆதி தொழிலாளிகளின் வர்க்கப் பண்பாடு."
"தலித்தியம் 'தாழ்த்தப்பட்ட', 'ஒடுக்கப்பட்ட', 'விளிம்புநிலை', 'அரிஜன' என மேலும் பலவகையில் போலி இரக்கம் காட்டுவோர் நினைப்பதை போல் கூனி குறுக வேண்டிய கருத்தியல் அல்ல.''
''அது கர்வப்பட வேண்டிய உழைக்கும் வர்க்கக் கருத்தியல்.''
''தலித்தியத்திற்கான உலக கண்ணோட்டங்கள், தத்துவ கண்ணோட்டங்கள், வர்ணப் பண்பாட்டிலிருந்து மாறுபட்ட - வையாக, தனித்துவமானவையாக இருக்கின்றன."
''அவை மக்களின் வாழ்க்கைமுறைகளில், பழக்கவழக்கங்களில் புதை படிமங்களாக புதைந்து கிடக்கின்றன."
"புதைந்திருப்பவைகளை கண்டெடுத்து கட்டமைத்து நிறுத்துவது சாத்தியமா?"
''கடினமான பணிதான் ஆனால், சாத்தியமற்றது அல்ல'.
“புதைப்பொருள் ஆய்வைபோன்றே கண்டெடுத்து கட்டமைத்து நிறுத்த வேண்டியிருக்கிறது."
"மூவாயிரம் ஆண்டுகளின் இந்திய சிந்தனை மரபில், ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து தோன்றிய முதல் அறிஞர் மாமேதை அம்பேத்கர். அவர் அந்த பணியை துவக்கிவைத்தார். புதியதாக கல்வி கற்று, அறிஞர் வர்க்கத்தில் சேர்ந்த தலித் அறிஞர்கள், தொழிலாளி வர்க்க அறிஞர்கள் அந்த பணியை தொடர வேண்டும்.''
"தலித்தியம், சாதி திரட்டுதல் இல்லையா? சாதி திரட்டுதல் வெறுப்புக்கும் சாதி மோதலுக்கும் வழி வகுக்காதா?"
"தலித்தியம், பட்டியல் சாதிகளை மட்டும் குறிப்பதல்ல. அது, பழங்குடிகளையும், நிலமற்ற விவசாயிகளையும், உழைப்பு சுரண்டலுக்காளாகிற தொழிலாளர்களையும், நூற்றாண்டுகளாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும், ஒடுக்கப்பட்டுவரும் பெண்களையும், மத சிறுபான்மையினரையும் குறிப்பிடுகிறது. தலித்தியம் என்றால் பெரும்பான்மை சமூகம்."
''தலித்தியம் அனைத்து அம்சங்களிலும் கட்டமைத்து நிறுத்தப்பட்டு, அதற்கும் தொழிலாளி வர்க்கப் பண்பாட்டிற்கும் இருக்கும் ஒற்றுமைகள் போற்றி நிறுத்தப்பட வேண்டும்.''
''சாதிகளிடையே படிநிலையை (gradation) புகுத்தி, சாதி பாகுபாட்டை, சாதி ஆதிக்கத்தை, சாதி வெறியை வளர்த்து, பராமரித்துப் பாதுகாத்து வரும் வர்ணப் பண்பாட்டிற்கு எதிராக நின்று, தலித்தியம் தொழிலாளிவர்க்க பண்பாட்டுடன் ஐக்கிய மாதல்தான் சாதி ஒழிப்பை சாத்தியப்படுத்தும் வழி."
இந்த தொகுப்பில் இடம் பெற்ற பாலகோபால் சிந்தனைகள் தலித்தியத்தை கட்டமைத்து நிறுத்த உதவக்கூடியவை. ஆகவே இந்த தொகுப்புக்கு 'தலித்தியம்' என தலைப்பிடுகிறோம்.
இந்த புத்தகத்தில் இடம் பெறாத, ஆனால் தொடர்புடைய, பாலகோபால் அவர்களின் இதர ஆங்கில கட்டுரைகளில் வெளிப்பட்ட கருத்துகளை சாராம்சமாக தொகுத்து சிறப்பானதொரு முன்னுரையை வழங்கி உதவிய, உலகம் போற்றும் ஆய்வாளர் வ.கீதா அவர்களுக்கு நன்றி. அவர், பாலகோபால் மீதான பற்றினால் இந்த தொகுப்பின் ஒவ்வொரு கட்டுரையையும் வரிவரியாகவாசித்து திருத்தங்களை செய்து செழுமைப்படுத்தியுள்ளார். சர்வதேச அளவிலான பல பணிகளுக்கு இடையே தனது மதிப்பிற்குரிய நேரத்தை செலவிட்டு செய்த இந்த உதவிக்கு நன்றி எனும் வார்த்தை போதுமானதில்லை.
பிழை திருத்தம் செய்து உதவிய தோழர். வே. பெருமாள், தோழர். சி. பஞ்சவர்ணம் அவர்களுக்கு நன்றி. வடிவமைக்க உதவிய தோழர் பிரதீப் அவர்களுக்கு நன்றி.
'பெர்ஸ்பெக்டிவ்ஸ்' அமைப்புக்கும், திரு. ஹரகோபால் அவர்களுக்கும் நன்றி.
சிந்தன் புக்ஸ்
சென்னை.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: