அறியப்படாத தமிழ்மொழி - அணிந்துரை#1
கவிப்பேரரசு வைரமுத்து
புதிய இளைஞர்களின் மொழி உணர்வு தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. தொழில்நுட்பம் பயின்ற இளைஞர்கள் மொழிநுட்பத்தோடு இயங்குகிறபோது அவர்களும் பெருமை பெறுகிறார்கள்; மொழியும் பெருமை பெறுகிறது. அந்த வகையில் நான் படித்த ஓர் அருமையான நூல், முனைவர்.கண்ணபிரான் இரவிசங்கர் எழுதிய ‘அறியப்படாத தமிழ்மொழி’.
இந்த நூலை ஒரு பொழுதுபோக்காக யாரும் படித்துவிடக் கூடாது. இது ஆய்ந்து, தோய்ந்து எழுதப்பட்ட ஒரு நூல். தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈராயிரம் ஆண்டுகளாக ஒரு குறுகிய பார்வை மட்டுமே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நூல் சற்று மாறுபட்டுச் சிந்திக்கிறது. தமிழில் சேர்ந்த பழைய கசடுளைக் களைவதற்கு இந்த நூல் முயல்கிறது.
முனைவர் கண்ணபிரான் இரவிசங்கரின் ஆழ்ந்த அறிவை நான் வியக்கிறேன்; மதிக்கிறேன். தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கியம் பார்த்து, அங்கிருந்து ‘நவீன’ இலக்கியம் வரைக்கும், ‘நவீன’ மொழி வழக்காறு வரைக்கும் அவர் ஆய்ந்தும் தோய்ந்தும் சில புதிய முடிவுகளைச் சொல்லியிருக்கிறார். சில இடங்களில் அவர் கொளுத்திப் போடுகிற நெருப்பு ‘அக்னி’யாகப் பரவுகிறது. மிகச் சரியான சிந்தனைகளை அவர் முன்வைக்கிறார். திராவிடம் என்ற சொல், சமஸ்கிருதச் சொல் அல்ல என்று நிறுவுகிறார். “அப்படியானால் திராவிடம் என்பது எந்தச் சொல்?” என்பதற்கும் அவரே விடை சொல்கிறார். திராவிடம் என்பது திசைச்சொல்லே தவிர சமஸ்கிருதச் சொல் அல்ல என்கிறார்.
சமஸ்கிருதம் தமிழில் தன்னை நிறுவப் பார்த்த போது, சில மாற்றங்களைச் செய்திருக்கிறது. தமிழர்கள் அதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று, ஆக்கப்பூர்வமாகவும் ஆணித்தரமாகவும் நிறுவுகிறார். ‘திருவரங்கம்’ என்பது தானே எங்கள் பெயர்; ஸ்ரீரங்கம் எப்படி வந்தது? ‘குரங்காடுதுறை’ தானே எங்கள் பெயர் கபிஸ்தலம் எப்படி வந்தது? ‘திருமரைக்காடு’ தானே எங்கள் பெயர்; வேதாரண்யம் எப்படி வந்தது? என்றெல்லாம் வினவுகிறார்.
இந்த நூலில் நான் பெரிதும் ரசித்த ஓர் இடம், தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று அவர் வற்புறுத்துவதைத் தான். “தமிழில் எத்தனையோ அழகான சொற்கள், பொருத்தமான சொற்கள் இருக்கிறபோது, ஏன் பொருள் தெரியாத வடமொழிப் பெயர்களை வரவேற்கிறீர்கள்?” என்று வினவுகிறார். எத்தனையோ தமிழ்ப்பெயர்கள் இருக்க, பொருள் தெரியாமல் ‘யாஷிகா’ என்று உங்கள் பெண் குழந்தைக்குப் பெயர் வைக்கிறீர்களே, ‘யாஷிகா’ என்றால் என்ன பொருள் தெரியுமா? என்று கேட்கிறார். யாசிக்கிறவள் – யாஷிகா. அதாவது ‘பிச்சைக்காரி’; அவள் தான் ‘யாஷிகா’. “இப்படிப் பொருள் தெரியாமலே ஏன் உங்கள் பிள்ளைகளைப் பிச்சைக்காரிகள் ஆக்குகிறீர்கள்?” என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
இளங்கோவுக்கும் கம்பனுக்கும் உள்ள வேறுபாடு; சங்க இலக்கியத்தின் நேர்மை, தூய்மை; தனித்தமிழ் அன்பர்கள் இந்த நாட்டில் செய்யவேண்டிய அரும்பணிகள்; எல்லாவற்றையும் இந்த ‘அறியப்படாத தமிழ்மொழி’யில் ஆய்ந்து முன்வைக்கிறார், முனைவர்.கண்ணபிரான் இரவிசங்கர். அவரை நான் பாராட்டுகிறேன்! இந்த நூல் தமிழர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் திகழவேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்தியாவை விடுத்து அமெரிக்காவில் சென்று பணியாற்றத் துணிந்த ஓர் இளைஞர், அங்கே தமிழர் மேம்பாடு குறித்தும், தமிழ்மொழி மேம்பாடு குறித்தும் உரக்கச் சிந்திக்கிறார் என்பது பெருமை தருகிறது. கண்ணபிரான் இரவிசங்கரைப் போன்ற இளைஞர்கள் எல்லா நாடுகளிலும் தமிழுக்காக இயங்க வேண்டும். தொழில்நுட்பத்தையும் தமிழையும் இணைத்தால் தான் புதிய தலைமுறை தமிழோடு பயணப்படுவதற்கு ஏதுவாகும்.
எத்தனையோ ஊடகங்களைத் தாண்டி, தமிழ் வந்திருக்கிறது. இந்தத் தொழில்நுட்ப யுகத்தின் தோள்களில் தமிழை ஏற்றி வைத்தால் அடுத்த நூற்றாண்டுக்குத் தமிழை மிக எளிதாகக் கடத்திவிட முடியும் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். ‘அறியப்படாத தமிழ்மொழி’ என்கிற இந்த நூலைப் படியுங்கள்; கண்ணபிரான் இரவிசங்கரின் பெருமைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இது ஒரு தொடக்கம் தான்; இன்னும் இதைப் போன்ற நூல்கள் நிறைய படைக்க வேண்டும் என்று கண்ணபிரான் இரவிசங்கரை நான் வாழ்த்துகிறேன்!