அமைப்பாய்த் திரள்வோம் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக.. இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிகையாளர்
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/amaippaai-thiralvoam
மகத்தான புரட்சித்தலைவர் லெனின் கூறினார்: “தொழிலாளி வர்க்கத்துக்கு ஒற்றுமை தேவை. ஆனால் ஒன்றுபட்ட அமைப்புதான் ஒற்றுமையை உருவாக்கிச் செயல்படுத்த முடியும் ... ... தொழிலாளர்கள் ஒன்றுபடாவிட்டால் அவர்கள் எதுவுமே இல்லை; ஒன்றுபட்டால் அவர்கள்தாம் எல்லாமே".
இந்தியாவில் வர்க்கம், சாதி, மதம், பாலினம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் உழைக்கும் மக்கள் பிளவுபடுத்தப்படுகிறார்கள்; ஒடுக்கப்படு கிறார்கள். இவ்வாறு ஒடுக்கப்படுவோர் அனைவரும் ஒன்றுபட்டுப் போரிடுவதுதானே விடுதலைக்கு வழியாக இருக்க முடியும்? அவர்கள் அமைப்பாகத் திரண்டால்தானே அதைச் சாதிக்க முடியும்?
இத்தகைய உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கருத்தியல், அமைப்புக்கான கோட்பாடு, செயல்படுவதற்கான வழிகாட்டல் ஆகியவற்றுக்கான மிக முக்கியமான ஒரு பங்களிப்புதான் அருமைத் தோழர் தொல். திருமாவளவன் எழுதியுள்ள 'அமைப்பாய்த் திரள்வோம்' என்ற இந்தப் புத்தகம். (It is a very important contribution to the ideology for the liberation of the toiling people, the theory of organisation and guidance to practice).
இந்தப் புத்தகத்தில் முதலில் என்னைக் கவர்ந்த ஒரு விஷயத்தை முதலில் கூற விரும்புகிறேன்.
காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், அம்பேத்கர், பெரியார் போன்ற சிந்தனையாளர்களில் ஒருவர் பெயரைக் கூட இதில் தோழர் திருமா குறிப்பிடவில்லை ! ஆனால் இவர்கள் அனைவரின் சிந்தனைகளும் இதில் விரவிக் கிடக்கின்றன!
சில எடுத்துக்காட்டுகள்:
காரல் மார்க்ஸ் சொன்னார்: "தொழிலாளர்கள் அமைப்பாக ஒன்றுபட வேண்டும்; அறிவால் வழிகாட்டப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வெற்றி பெற முடியும்." திருமா சொல்கிறார்: "கட்டமைப்பு வலிமை மற்றும் கருத்தியல் வலிமை ஆகிய இவ்விரு வலிமையையும் கொண்ட மக்கள் திரளால் மட்டுமே, ஆளுமை மிக்க - வலிமை மிக்க ஒரு பேராற்றலாகப் பரிணமிக்க முடியும்."
எங்கெல்ஸ் சொன்னார்: "முரண்பாட்டின் மூலமாகவே வளர்ச்சி ஏற்படுகிறது. நிலையானது எதுவும் இல்லை, நிலையான மாற்றத்தைத் தவிர... அதற்கான விதிகளைத் தவிர.” திருமா சொல்கிறார்: "நேர் - எதிர் என்ற போக்குகளைக் கொண்ட பண்பு நிலையே 'முரண்' என்பதாகும். அத்தகைய முரண்களின் மோதல்களில் நிகழ்வதுதான் மாற்றம்' என்பதாகும். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்பது இயங்கியல் விதி."
லெனின் சொன்னார்: "அரசு எந்திரம் என்பது அடக்கு முறைக் கருவியே.” திருமா சொல்கிறார்: "ஆயுதம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் கலவையால் உருவான ஓர் அடக்கு முறைக் கருவிதான் அரசு என்பதாகும்”
அம்பேத்கர் சொன்னார்: "சாதி முறையை இந்து மதம் திணித்து இருக்கிறது..... சாதி முறையானது மனிதர்களைத் தனித்தனிக் குழுக்களாகப் பிளவுபடுத்துகிறது. திருமா சொல் கிறார்: "இந்தியச் சமூகக் கட்டமைப்பைப் பொருத்தவரையில் மானுடம் சிறிய சிறிய சாதிக் குழுக்களாகச் சிதறிக்கிடக்கிறது. இவற்றைக் காக்கும் பெரும்பணியை இந்து மதம்' என்னும் பெரிய நிறுவனம் நிறைவேற்றி வருகிறது."
பெரியார் சொன்னார்: "தொழிலாளர்கள் இவ்வளவு பேரையும் வர்ணாசிரம சாதி முறையில் ஒருவரை ஒருவர் இழித்துக் கூறிக் கொள்ளும்படியாகச் செய்து வைத்து, அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் நலனுக்கும் மேன்மைக்கும் முயற்சி செய்ய வழியில்லாமல் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.” திருமா கூறுகிறார்: "உழைக்கும் வர்க்கம் சாதி, மதம், இனம் என்கிற முரன்பாடுகளால் சிதறிக்கிடக்கும் மிகப் பெரும் திரள் என்பதனால், இணைந்து - பிணைந்து செயல்படுவதில் மிகவும் சிக்கல் நிறைந்ததாக அமைந்துவிடுகிறது."
இந்த சிந்தனையாளர்களை மேற்கோள் காட்ட முடியாத வகையில் பல புதிய சிந்தனைகளையும் இந்தப் புத்தகத்தில் திருமா அளிக்கிறார்.
குறிப்பாக-
தலித்தியம் என்றால் என்ன? என்பதற்கு அவர் அளித்துள்ள விளக்கம் மிகவும் முக்கியமானது. தோழர் திருமாவளவன் எழுதியுள்ள பொது விளக்கத்தைப் பகுத்தும், சுருக்கியும் இங்கே நான் தொகுத்து அளிக்கிறேன்:
தலித்தியம் என்றால் என்ன?
- தலித்தியம் என்பது ஒரு கோட்பாடு, அதாவது தத்துவம்.
- பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம். அதாவது தலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும், பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம்.
- சாதி ஒழிப்புக் கருத்தியலை முதன்மைப்படுத்துகிற தத்துவமே தலித்தியம்.
- பிறப்பால் ஒரு தலித் பாட்டாளியின் தலைமையே, முழுமையான பாட்டாளி வர்க்கத் தலைமையாக அமையும் என்பதை உணர்த்துவதே தலித்தியம்.
- அதே நேரத்தில் "பிறந்த சமூகப் பின்னணியைவிட உள்வாங்கிய தத்துவப்பின்னணியே முதன்மையானதாக இடம்பெறுகிறது” என்பதையும் உணர்த்துவதே தலித்தியம்.
- தலித்தியத் தலைமை மற்றும் தலித் நபர் தலைமை ஆகியவற்றை ஓர் அமைப்பு நிறுவுகிறபோது, விரிவடைந்த மற்றும் முழுமையடைந்த பாட்டாளி வர்க்கத் தலைமையாகவே அது பரிணமிக்கும் என்பதே தலித்தியம்.
- சாதியால், மொழியால், மதத்தால், பாலினத்தால், இன்ன பிற முரண்பாடுகளால் ஒடுக்கப்பட்டு, சிறுபான்மையினராகச் சிதறடிக்கப்பட்ட உழைக்கும் மக்களின் விடுதலைக்கான அரசியலே தலித்தியம்.
- இவைதான் தலித்தியம் என்றால் என்ன என்பதற்குத் தோழர் திருமா தரும் விளக்கம்.
தலித்தியம் மட்டுமல்ல. இந்தியாவின் இன்றைய நிலைமை என்ன? இன்றைய நிலைமையை மாற்றி, அடைய வேண்டிய இறுதி இலக்கு என்ன? இலக்கை அடைவதற்குப் பொருத்தமான அமைப்பு என்ன? இலக்கை அடைவதற்கான வழி என்ன? வழியில் பயணப்படும்போது எழும் சிக்கல்கள் என்ன? அவற்றுக்கான தீர்வு என்ன? போன்ற பல அடிப்படையான கேள்விகளுக்குத் தோழர் திருமா இந்தப் புத்தகத்தில் விளக்கம் அளிக்கிறார்.
எடுத்துக்காட்டுக்காக, அவரது விளக்கத்தின் சில பகுதிகளை மட்டும் இங்கே நான் சுருக்கி அளிக்கிறேன்:
1. இன்றைய நிலைமை :
இந்தியச் சமூகம் சாதிகளாகச் சிதறிக் கிடக்கிறது. சாதிகளைக் காக்கும் பணியை இந்து மதம் நிறைவேற்றி வருகிறது. குடும்பம், சாதி, அரசு உள்ளிட்ட அனைத்திலும் சுரண்டும் வர்க்கமும், உழைக்கும் வர்க்கமும் அடங்கியுள்ளன. சாதி, மதம், வர்க்கம் கடந்த, அனைவருக்குமான சனநாயகமோ, அதிகாரமோ அனுமதிக்கப்படுவது இல்லை ; ஒடுக்குமுறையே நிலவுகிறது.
4, தலைமைப்பாத்திரம் :
தத்துவமும், தனிநபரும் இணைந்த ஆளுமை ஆற்றலே தலைமைப் பாத்திரம் ஆகும். தத்துவம் இல்லாத ஒரு தனிநபர்த் தலைமை மட்டும் தலைமைக்கான முழுமையை அடையாது. அதேபோல ஆளுமைப் பண்புகள் நிறைந்த நபர்த் தலைமை இல்லாத தத்துவமும் தலைமைக்கான முழுமையை அடையாது. தத்துவத்தின் ஆளுமையும், தனிநபர் ஆளுமையும் சமமான வலிமையும், பங்களிப்பும் கொண்டவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் தலைமைப் பாத்திரமானது முழுமையான ஆளுமையைப் பெற்றதாக அமைகிறது.
2. மாற்றும், இறுதி இலக்கும் :
அனைவருக்கும் அதிகாரம், அனவருக்கும் சனநாயகம், அனைவருக்கும் அடிப்படைத் தேவைகள் நிறைவு, அனைவருக் கும் அடிப்படை உரிமைகள் என்கிற சமத்துவச் சமூகமே மாற்று. இதுவே இறுதி இலக்கு.
3. இலக்கை அடைவதற்கு இன்றியமையாத தேவை - அமைப்பு:
ஒரு தனி மனிதனோ, ஒரு குடும்பமோ, சமூகத்தில் எத்தகைய புரட்சிகர மாற்றத்தையும் உருவாக்க முடியாது. மக்களை ஒடுக்குகிற சாதி, மதம், அரசு ஆகிய அனைத்துமே அமைப்புகள்தாம். எனவே ஒடுக்குகிற அமைப்புகளை முறியடித்து வெல்வதற்கும் ஓர் அமைப்பு இன்றியமையாத தேவையாகும். கொள்கை சார்ந்த அரசியல் அமைப்பாய்த் திரள்வதன் மூலம்தான் புரட்சிகரமான மாற்றத்தைச் சமூகத்தில் உருவாக்க இயலும். கருத்தியல் வலிமையும், கட்டமைப்பு வலிமையும் கொண்ட மக்கள் திரளால் மட்டுமே பேராற்றலாகப் பரிணமிக்க முடியும்.
நமது கருத்தியல் அல்லது தத்துவம் என்பது தலித்தியமே.
அமைப்பின் உள்ளீடுகள் என்பவை எவை? பல்வேறு தளங்களில் அந்த அமைப்பு செய்ய வேண்டிய பணிகளுக்கான களப்பணியாளர்கள், தளபதிகள் அல்லது நிர்வாகிகள், நிர்வாகத்துக்கான சட்ட திட்டங்கள், அதிகாரப் பகிர்வு, சனநாயகம், பொருளாதாரம், நேர்மை - தூய்மை, அனைத்தையும் வழி நடத்தும் கருத்தியல் தலைமைத்துவம் இன்ன பிற ஆகும். அமைப்பை வழி நடத்தும் தலைமைப் பாத்திரம் இன்றியமையாதது.
4. தலைமைப்பாத்திரம்:
தத்துவமும், தனிநபரும் இணைந்த ஆளுமை ஆற்றலே தலைமைப் பாத்திரம் ஆகும் தத்துவம் இல்லாத ஒரு தனிநபர்த் தலைமை மட்டும் தலைமைக்கான முழுமையை அடையாது. அதேபோல ஆளுமைப் பண்புகள் நிறைந்த நபர் தலைமை இல்லாத தத்துவமும் தலைமைக்கான முழுமையை அடையாது. தத்துவத்தின் அருமையும், தனிநபர் ஆளுமையும் சமமான வலிமையும், பங்களிப்பும் கொண்டவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் தலைமைப் பாத்திரமானது முழுமையான ஆளுமையைப் பெற்றதாக அமைகிறது.
5. கூட்டுத்தலைமைத்துவம் :
கருத்தியலில் கூட்டுத்தலைமைத்துவம், நபர்களில் கூட்டுத் தலைமைத்துவம் ஆகிய இரண்டும் சேர்ந்ததே கூட்டுத் தலைமைத்துவம் ஆகும். பொருளாதாரம், சமூகம், பண்பாடு, அரசியல் ஆகியவற்றின் அடிப்படையில் உருப்பெறும் தத்துவங்களின் கலவையால் பெறும் ஆற்றலே கருத்தியல் கூட்டுத்தலைமை. தனிநபர் சார்ந்த ஒவ்வொரு தலைமையும் ஒருங்கிணைந்து செயல்படும் சூழலில் உருவாகும் தலைமைத்துவமே நபர் சார்ந்த கூட்டுத்தலைமை. இந்த இரண்டும் சேர்ந்ததே கூட்டுத் தலைமைத்துவம் ஆகும். இத்தகைய கூட்டுத் தலைமைத்துவப் பின்னணியோடு உருவாகும் தனிநபர்த் தலைமை மட்டுமே சனநாயகத் தலைமையாக இயங்கிட இயலும். கூட்டுத் தலைமைத்துவப் பின்புலம் இல்லாத தனிநபர்த் தலைமை, சர்வாதிகாரப் போக்குகளில் சிக்குவதோடு, இயக்கத்தின் போக்குகளையும் தடுமாற வைக்கும்; திசைமாற வைக்கும்.
6. கூட்டமைப்புப் பொதுநீரோட்டம் :
தேவைகளின் அடிப்படையில் பொதுவான இலக்கை எட்டுவதற்குரிய ஒருமித்த நோக்குள்ள அமைப்புகள், தேவையான தளங்களில் கூட்டுச் சேர்ந்து இயங்கும் போது கூட்டமைப்பாதல் நிகழும். தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும். அதேநேரத்தில் தனிமைப்பட்டுவிடக் கூடாது. பொதுநீரோட்டம் அல்லது மைய நீரோட்டம் என்பது அதிகாரங்களின் குவிமையமாக இயங்குவதாகும். இதனுடன் இணைந்து இயங்குவதன் மூலம் அதிகாரத் தொடர்பை அல்லது அதிகாரப்பகிர்வைப் பெற இயலும். அதாவது, அமைப்பாதலும், கூட்டமைப்பாதலும்தான் அதிகாரங்களின் குவிமையமான பொதுநீரோட்டத்துடன் இணைவதற்கும், வலுப்பெறுவதற்கும் வாய்ப்பை உருவாக்கும்.
7. இலக்கை அடையும் பாதை:
இலக்கை அடைவதற்கு உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தை வென்றிட வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த நாடாளுமன்ற சனநாயகமோ ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கானது. எனினும் வரம்புக்கு உட்பட்டு அதிகாரப்பகிர்வை அனுமதிக்கக் கூடியது. அந்த அளவில் பயன்படுத்தத்தக்கது. எனினும் இறுதி இலக்கை அடைவதற்குப் போராட்டங்களின் ஊடாகவே பயணிக்க வேண்டும்.
- இவ்வாறு அல்லது இந்தப் பொருளில் விரிவான விளக்கங்களைத் தோழர் திருமா அளித்திருக்கிறார்.
இதேபோல், அமைப்பைக் கட்டும்போதும், நடைமுறையில் செயல்படும்போதும் எழுகின்ற சிக்கல்கள் - அமைப்புக்குள்ளும், வெளியிலும் எழுகின்ற சிக்கல்கள் - எவை, அவற்றுக்கான காரணங்கள் எவை, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குச் செய்ய வேண்டியவை எவை என்பன பற்றி அவர் விவரித்திருக்கிறார். கோட்பாட்டியல், உளவியல் மற்றும் நடைமுறை சார்ந்து மிக விரிவான விளக்கங்களை, வழிகாட்டல்களை அவர் அளித்திருக்கிறார்.
உழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன் பெற வேண்டும். அந்த அளவுக்குச் சிறந்த சிந்தனைகளையும், விவாதிக்க வேண்டிய, சர்ச்சைக்குரிய சில கருத்துகளையும் கொண்டதுதான் இந்தப் புத்தகம்.
இத்தகைய அரிய புத்தகத்தை அளித்துள்ள அன்புத் தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த, வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
09.01.2018
சென்னை