ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்! - பதிப்பகத்தாரின் உரை
(முதற்பதிப்பு) குணாவின் குலவழி
திராவிடம் தமிழர்க்கு எதிரானது என்ற கருத்தும், திராவிட எதிர்ப்பும் குணா எனப்படும் எஸ். குணசீலனால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. இவை இராசகோபாலாச்சாரியாரால் தொடங்கப்பட்டு, எம். கலியாண சுந்தரத்தால் வழிமொழியப்பட்டு, ம.பொ.சி.யால் பரப்பப் பட்டு படுதோல்வி கண்ட ஒரு பரப்புரை.
குணா என்னும் குணசீலன் இராமசாமி, ம.பொ.சி.யின் வழிவந்த வாரிசு. குலக்கல்வித் திட்டத்தை கம்யூனிஸ்டுகளை விடக் கடுமையாய் திராவிடர் கழகம் எதிர்த்ததால், திராவிடர் கழகத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்று இராஜாஜி வெறி கொண்டார்.
"கம்யூனிஸ்டுகளை விட திராவிடர் கழகத்தார்கள் அபாயகரமானவர்கள். இவர்கள் பிரச்சாரம் சாதாரண மக்களைப் பற்றிக் கொள்கின்றது. இனி தமிழ்நாடு சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், எப்படியாவது திராவிடர் கழகக் கணக்கைக் கட்டி வைத்துவிட வேண்டும். இனி அவர்கள் செய்கை வரலாற்றில் இடம் பெற வேண்டுமேயல்லாமல் நாட்டில் காணும்படி விடக்கூடாது'' இது இராஜாஜி சபதம்.
இந்த இராஜாஜியின் அணுக்கத்தொண்டர் ம.பொ.சி. இராஜாஜியின் செயல் திட்டங்களை, விருப்பங்களை செயல்படுத்த அயராது பாடுபட்டவர்; ஆரியத்தின் அடிவருடி.
"தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மதத்தால் இந்துக்களாக இருப்பதால், அவர்கள் (தமிழர்கள்) தேவ மொழியான சமஸ்கிருதத்தை வெறுப்பது நிறையோ, நெறியோ ஆகாது" என்று தமிழர்களை ஆரியத்திற்கு அடிமையாக்க உழைத்தவர்; சமஸ்கிருதத்தை தேவமொழியாக ஏற்கச் சொன்னவர்.
"மார்வாடிகளின் கடைக்கு முன்னால் மறியல் செய்தால், திராவிட வியாபாரிகள் கடைகள் முன் நாம் மறியல் செய்வோம்" என்று மார்வாடிக்காக மார்தட்டியவர் ம.பொ.சி. ஆனால் இப்படிப்பட்ட ம.பொ.சி.யைத்தான் கும்பிட்டுப் போற்றுகிறார். குணா என்னும் குணசீலன்.
நீதிக்கட்சியில் தெலுங்கர்களே அதிகம் என்ற ம.பொ.சி.யின் குற்றச்சாட்டை தற்போது குணாவும் கூறிவருகிறார். ஆனால், உண்மை என்னவென்றால், 1937க்குப் பின் நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்களே அதிகம். 1938இல் தேர்வு செய்யப்பட்ட நீதிக்கட்சி பொறுப்பாளர்கள் 14 பேரில் 5 பேர் மட்டுமே தெலுங்கர்கள். 1939இல் பாசுதேவ் என்ற தெலுங்கர் விலக, கி.ஆ.பெ. விஸ்வநாதன் அவர்கள் அவர் இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அந்நிலையில் தெலுங்கர் 4 பேர் மட்டுமே. ஆனால் தமிழர்கள் 10 பேர். அன்றைக்கு ம.பொ.சி. பொய் சொன்னார். இன்றைக்குக் குணா பொய் சொல்கிறார்.
அன்றைக்கு ஆரியத்தை ஆதரித்து, திராவிடத்தை எதிர்த்தார் ம.பொ.சி. இன்றைக்கு அதேப் பணியை குணா செய்து, ஆரியத்தின் அடியாளாய் நின்று திராவிடத்தை அழிக்க முயல்கிறார். அன்றைக்கு (1950) ம.பொ.சியின் தமிழரசு கழக மாநாடுகளுக்கு கல்லக்குறிச்சி வழக்குரைஞர் தாத்தாச்சாரி போன்ற பார்ப்பனர்கள் உதவி செய்தனர். இன்றைக்கு குணாவின் நூலுக்கும், பிரச்சாரத்திற்கும் ‘தினமலர்' ஏடும், பார்ப்பனர்களும் துணை நிற்கின்றனர்.
ஆக, குணா என்னும் எஸ். குணசீலன் ம.பொ.சி.யின் குலவழி. அதாவது இராஜாஜியின் தற்கால வாரிசு. தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால் ஒன்று, திராவிடத்தை எதிர்த்தவரெல்லாம், திராவிடத்தை தேடி வந்ததே வரலாறு. திராவிடக் கட்சிகளின் கணக்கை முடிக்க முயன்ற இராஜாஜி 1967இல் திராவிடக் கட்சியை தேடிவந்து கை கோர்த்தார். திராவிடத்தை அழிப்பதே தன் ஆயுள் பணியென்று கொண்டு அயராது முயன்ற, அவதூறு வீசிய ம.பொ.சி. திராவிடக் கட்சிகளிடம் கையேந்தி பதவிப் பிச்சை பெற்றார். திராவிடத்தை இன்றைக்கு எதிர்ப்போர், நேற்றுவரை பெரியார் படத்தை பிடித்துக்கொண்டு பிரச்சாரம் செய்தவர்கள். தன்னலத்திற்காய் இன்று தடம் மாறி, தமிழினத்தின் எதிரிகளாய்ச் செயல்பட்ட ஆரியத்திற்கு துணைநிற்கின்றனர். தமிழர்களே இவர்களிடம் அதிகம் எச்சரிக்கையாய் இருங்கள். ஆம்! ஆரியரிடம் இருப்பதைவிட அதிகம் எச்சரிக்கையாய் இருங்கள்!
- பதிப்பகத்தார்