இன்றைய சூழலில் நாம் சிந்திக்கவும் சந்திக்கவும்
உங்கள் கைகளில் தவழும் இந்த நூல் நிகழ்நிலைத் தொடர்புடைய பல சிறப்புரைகளின் தொகுப்பு. இந்த உரைகள் யாவும் பட்டமளிப்பு விழாக்கள் அறக்கட்டளைத் திட்டங்கள் பல்கலைக்கழக ஆய்வரங்குகள் உயர்கல்வி நிறுவன விழாக்கள் என்று இப்படி மதிக்கத்தக்க அரங்குகளில் நிகழ்த்தப்பட்ட உரைகள்.
பொற்கோ என்று அன்போடு அழைக்கப்படும் முனைவர் பொன் கோதண்டராமன் , ஆராய்ச்சி மாணவர் நிலையில் ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வரங்கில் வழங்கி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க நாட்டுப் பேராசிரியர் எம் .பி எமெனோ போன்ற அயல்நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர் .
இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் தென் ஆப்பிரிக்காவிலும் 1970 முதல் பல்வேறு கருத்தரங்குகளிலும் கலந்துரையாடல்களிலும் பங்குபெற்றுத் தமிழ் மொழியைப் பற்றியும் தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றியும் சரியான புரிதல் ஏற்படத் தொடர்ந்து பணியாற்றுபவர் .
சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நிலையில் மற்ற இன்றியமையாத பணிகளோடு தமிழ் மேம்பாட்டுத்தளத்தையும், தொல்காப்பிய அறக்கட்டளையையும் தமிழ் மன்றத்தையும் முறையாக உருவாக்கித் தமிழுக்கு வலிமை சேர்த்திருப்பவர் ,
தமிழுக்குச் செவ்வியல் மொழி என்ற தகுதியை வழங்கி நிலைப்படுத்த முறைப்படி சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றமும் கல்வி மாமன்றமும் பேரவையும் தீர்மானம் நிறைவேற்ற 2001ஆம் ஆண்டில் வழிவகை செய்து முறைப்படி அதை நிறைவேற்றியவர் .