மக்கள் தலைவர் அம்பேத்கர் எழுச்சியும், கிளர்ச்சியும்
அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை தனஞ்செய்கீர் உள்பட பல வரலாற்று அறிஞர்கள் எழுதி உள்ளனர். அவற்றையெல்லாம் உள்வாங்கி எளிய முறையில் சாதாரண வாசகர்களும் புரிந்து கொள்ளும் வகையில் “மக்கள் தலைவர் அம்பேத்கர் எழுச்சியும் கிளர்ச்சியும்” என்று தலைப்பிட்டு தமிழ்நாட்டு வாசகர்களுக்கு அளித்துள்ளார் நூலாசிரியர் தோழர் க.ஜெயச்சந்திரன் அவர்கள். 249 பக்கங்கள் கொண்ட இந்நூலில் தோழர் அம்பேத்கரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அவர் பட்ட அவமானங்கள், அவருடைய போராட்டங்கள், வகித்த பதவிகள், வாங்கிய பட்டங்கள் என அனைத்தையும் பதிவு செய்கிறார். தோழர் அம்பேத்கரின் நூல்களை நாம் வாசிப்பதற்கு ஒரு உந்து சக்தியாக ஒரு வழிகாட்டியாக இந்த நூல் உள்ளது. மிக நேர்த்தியான வடிவமைப்புடன் காவ்யா பதிப்பகத்தாரால் வெளியிடப் பட்டுள்ளது.
இன்றைக்குப் பட்டியலின மக்களை இந்துக்கள் என்ற அடையாளத்திற்குள் கொண்டு வந்து தங்களுக்கான அடிமை களாகவும், அடியாட்களாகவும் பயன்படுத்த நீயும் இந்துதான் என்ற முழக்கங்கள் வைக்கப்படுகின்றன. அதற்குப் பல ‘பட்டியல் சமூகத் தலைவர்கள்’ என்று சொல்லிக் கொள்ளுபவர்களும் விலை போகின்றனர். ஆனால் தோழர் அம்பேத்கர் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான நிகழ்வை நூலாசிரியர் பதிவு செய்கிறார். 1917இல் படிப்பை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு வந்த தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு அன்றைய பரோடா சமஸ்தானத்தில் வேலை கொடுக்கப்பட்டது. அப்போது அவர் அனுபவித்த வேதனைகளை நூலாசிரியர் விரிவாகப் பதிவு செய்கிறார்.