பெரியார் நாராயண குரு விவேகானந்தர் - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/periyarin-thathuvam
பதிப்புரை

வரலாறும் ஓர் அறிவியல்தான். பல்வேறு தரவுகள், ஆவணங்கள், நேர்பார்வைகள், விவாதங்கள் மூலமே வரலாற்றுச் செய்திகள் பதிவாகின்றன, பதிவாக வேண்டும். அறிவியலைப் போலவே, வரலாற்றிலும் பல மீள் பார்வைகள் தேவைப்படுகின்றன. பெரும்பான்மையான வரலாற்றுச் செய்திகள், வென்றவர்களின் கதைகளாகத்தான் இருக்கின்றன. வெல்லப்பட்டவர்களுக்கும் வரலாறு உண்டுதானே! அவைகளும் வெளிவரும்போதுதான் வரலாறு முழுமையடையும்.

அந்த முழுமையை நோக்கியதுதான் இந்நூல் என்று கூறலாம். ஒருவரை தேசிய அளவில் உயர்த்தியும், இன்னொருவரை வட்டார அளவில் சுருக்கியும் சொல்லப்பட்டுள்ள செய்திகள் உண்மைதானா? என்பதை இந்நூல் ஆய்வு செய்கிறது. வெவ்வேறு கோணங்களில் இருந்து சொல்லப்பட்டுள்ள உண்மைகளை அலசுவதால், இந்நூலை ஓர் ஆய்வு நூல் என்றே சொல்லலாம்.

ஆறு கட்டுரைகளின் தொகுப்பாய் இந்நூலை ஆக்கித்தந்துள்ள பேராசிரியர் அ. கருணாநந்தன் சென்னை, விவேகானந்தர் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். கல்வியோடு மட்டும் நின்றுவிடாமல், ஆசிரியர் சங்கம், சமூக நிகழ்வுகள் எனப் பல தளங்களிலும் நாட்டம் செலுத்தியவர். கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின்னும், சமுதாயப் பணிகளிலிருந்து ஓய்வு பெறாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். வலையொலி (யூ டியூப்) மூலம் இவரது உரைகள் இப்போது உலகம் முழுவதும் சென்றடைந்த வண்ணமுள்ளன.

அறிவார்ந்த செய்திகளைத் தொடர்ந்து சமூகத்திற்குத் தந்துவரும் பேராசிரியர் அ. கருணாநந்தன் அவர்களின் இந்நூலை வெளியிடுவதில் கருஞ்சட்டைப் பதிப்பகம் பெருமிதம் அடைகின்றது.

- பெல் ராஜன்

இயக்குனர்

கருஞ்சட்டைப் பதிப்பகம்

Back to blog