பெரியார் நாராயண குரு விவேகானந்தர் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/periyarin-thathuvam
முன்னுரை

முப்பத்தாறு ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராக வரலாற்றை விளக்கும் பணியில் இருந்தேன். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் வரலாற்று நீரோட்டங்களை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்வதிலும், விளக்குவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். நான் வகுப்பறையில் கற்றுக் கொண்டதை விட, வேறு பல பரிமாணங்கள் வரலாற்றுக்கு இருப்பதையும் கற்றுக் கொடுக்கும் போது தெளிந்து கொண்டேன். வரலாறு பெரும்பாலும் ஆதிக்க சக்திகளால், ஆதிக்க சக்திகளை நியாயப்படுத்தவும், பெருமைப்படுத்தவும்தான் உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் புரிந்து கொண்டேன். ஆளுகின்றவர்களை மய்யப்படுத்துவதை விட்டுவிட்டு, ஆளப்படுபவர்களை மய்யப்படுத்தி வரலாறு திருத்தி அமைக்கப்பட வேண்டியுள்ளது. இது இந்திய வரலாற்றுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஆதிக்க சக்திகளுக்கும் அவர்களால் வஞ்சிக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வந்த ஆளப்பட்ட மக்களுக்கும் இடையேயான போராட்டங்கள் பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றன. மதம் - மரபு - தத்துவம் - பண்பாடு - அரசியல் - பொருளாதாரம் எனப் பற்பல வடிவங்களில் இப்போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. சமூக அநீதிக்கு எதிரான போர்க்குரல்களை ஆரிய அமைப்பிலேயே கேட்க முடிகிறது புத்தர் முதலான சிரமணர்கள், அவர்களைச் சார்ந்து உருவான இயக்கங்கள், திரிபுகளுக்கும் இருட்டடிப்புகளுக்கும் உள்ளாயின. ஆயிரம் ஆண்டுக்காலம் நீடித்த புத்த இந்தியா, இந்திய வரலாற்று ஏடுகளில் இடம் பெறவில்லை. என்றுமே இருந்திராத இந்து' இந்தியாவின் பொற்காலமாகத் திரிக்கப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றியலுக்கு 203 ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல் இந்திய வரலாற்றுப் புத்தகமான ஜேம்ஸ்மில் அவர்களின் மூன்று பாகங்களைக் கொண்ட பிரிட்டிஷ் இந்திய வரலாறு 1817-ல் வெளியிடப்பட்டது. பிராமணிய, இசுலாமியத் தரவுகளை வைத்துப் புனையப்பட்ட வரலாறு அது. அதற்குப் பிறகு இந்திய மேற்குடிகளாலும் இந்திய வரலாறுகள் எழுதப்பட்டன. அவை அனைத்தும் பெருமிதம் தேடும் வரலாறுகளாக, ஆண்டவர்களின்' வரலாறுகளாகவே எழுதப்பட்டன. பிராமணியம் - வைதீகம்தான் இந்திய நாகரிகத்தின் ஆணிவேர் என்பதான மாயையை அவை உருவாக்கின. வேத நாகரிகத்தின் விரிவாக்கமும், நீட்சியுமே இந்திய வரலாறு என்ற மாயத் தோற்றத்தையும் அவை உருவாக்கின. புத்த - இந்தியா-திராவிட இந்தியா - பார்ப்பனிய மறுப்பு இந்தியா ஆகியவை அவற்றில் இடம் பெறவில்லை.

வர்ணசிரமச்சாதிக் கட்டமைப்பில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றியலிலும் புத்த - திராவிட - சூத்திர -ஆதி சூத்திரர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக புறக்கணிக்கப் பட்டவர்களாகவுமே தொடர்கிறார்கள். உண்மை வரலாறு, முழுமையான வரலாறும் கிடைப்பதற்கு வரலாற்றின் மறுபக்கத்தை நுணுகி ஆராய வேண்டும். தரப்பட்டுள்ள வரலாற்றுக் குறிப்புகளைத் தளைகளிடப்படாத விமர்சனங்களுக்கு உள்ளாக்க வேண்டும். நிலவின் மறுபக்கத்தைப் போன்று என்றுமே மறைக்கப்பட்டுள்ள உண்மைகளைக் கண்டறிய வேண்டும். வரலாற்றின் சமூகப் பரிமாணங்களையும் கண்டறிய வேண்டும்.

இந்த நிலையில்தான் சமூக நீதி - சமூக மாற்றங்களில் மிகப் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திய சிந்தனையாளர்கள் குறித்த விமர்சனங்கள் தேவைப்படுகின்றன. பிராமனியத்திற்குப் புத்தாக்கம் தேடும் சிந்தனையாளர்கள் தேசியமயமாக்கப்படுகின்றனர். பிராமணியத்தை மறுக்கும் சிந்தனையாளர்களோ வட்டாரமயமாக்கப்படுகின்றனர். பிராமணியத்தை மய்யப்படுத்திய வரலாறுகளால், வரலாற்றாளர்களால் உருவாக்கப்பட்ட விபரீதம் இது. சமூக நீதிக்கான வரலாற்றியலில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனை இது. விவேகானந்தர் எப்படி ஒரு தேசியச் சிந்தனையாளராக முடியும்? பெரியார், நாராயண குரு போன்றோரை எப்படி வட்டாரச் சிந்தனையாளர்களாகத் திரிக்க முடியும்?

இதனையொட்டித்தான் பலவேறு கட்டங்களில், நான் எழுப்பிய விவாதங்களை, வரலாற்றின் மறுபக்கத் தேடுதல்களைக் கட்டுரைகளாக வந்தவற்றில் ஆறு கட்டுரைகளைத் தொகுத்து வாசகர்களின் அறிவார்ந்த விவாதங்களுக்காகத் தந்துள்ளேன். இந்நூலை வெளிக் கொண்டு வருவதற்கு என்னைப் பெரிதும் ஊக்குவித்த தோழர் சுப.வீ. அவர்களுக்கும், கருஞ்சட்டைப் பதிப்பகத்திற்கும், எனக்கு உறுதுணையாக இருந்து வரும் மாணவச் செல்வங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அ.கருணானந்தன்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog