இந்திய மக்களின் சில பிரிவினரிடம் பவுத்தத்தின்பால் ஏற்பட்டுள்ள அக்கறையின் அளவு வளர்ச்சியுற்று வருவதற்கான அடையாளங்கள் அறியும்படியாக உள்ளன. அதனோடு இயல் பாகவே புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் பற்றிய தெளிவான முரணற்ற விபரங்களுக்கான தேவையும் வளர்ந்து வந்துள்ளது.
பவுத்தரல்லாத யாருக்கும் புத்தரின் வாழ்க்கையையும் போதனைகளையும் தெளிவுற முரணல்லாத வகையில் முழுமையாய் எடுத்துரைப்பது மிகவும் கடினமான பணியாகவே உள்ளது. நிகாயங்களை அடிப்படையாகக் கொண்டு புத்தரின் வாழ்க்கையை முரணின்றி வெளிப்படுத்துவது மட்டுமின்றி அவருடைய போதனை களின் சில பகுதிகளை வெளிப்படுத்துவதும் மிகக் கடினமான பணியாகி விடுகிறது. உண்மையில் உலகிலுள்ள சமயங்களை நிறுவியவர்கள் அனைவரிலும், பவுத்தம் நிறுவியவரின் வாழ்க்கை யையும் போதனைகளையும் வெளிப்படுத்துவது ஏற்படுத்தும் பிரச்சினைகள் குதர்க்கமாக இல்லையெனினும், முற்றிலும் குழப்ப மானதாக உள்ளது என்று கூறுவது மிகையாகாது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதும் பவுத்தத்தைப் புரிந்து கொள்ளும் பாதையைத் தெளிவுபடுத்திக் கொள்வதும் அவசியமில்லையா? பவுத்தர்களாயிருப்பவர்கள் இந்தப் பிரச்சினைகளை பொது விவாதத்திற்கேனும் எடுத்துக் கொண்டு இப்பிரச்சினைகளின் மீது என்ன தெளிவைப் பெற முடியுமென்று யோசிக்க வேண்டிய தருணமல்லவா இது?
இந்தப் பிரச்சினைகள் குறித்த விவாதத்தை எழுப்பும் நோக்கத்தில் இவற்றை நான் இங்கு முறைப்படுத்துகிறேன். முதல் பிரச்சினை புத்தரின் வாழ்க்கையின் மிக முக்கிய சம்பவமான பரிவ்ராஜம் பற்றியதாகும். புத்தர் ஏன் பரிவ்ராஜத்தை மேற்கொண்டார்? மரபு ரீதியாக அளிக்கப்படும் பதிலின்படி அவர் பரிவ்ராஜம் (துறவு) ஏற்றது ஏனென்றால், அவர் ஒர் இறந்த மனிதனையும், நோயாளியையும், முதுமையுற்றவரையும் பார்த்ததால்தான் என்பது. இந்த பதில் எடுத்த எடுப்பிலேயே அபத்தமானதாக உள்ளது. புத்தர் பரிவ்ராஜம் ஏற்றுக் கொண்டது 29 - வது வயதில். இந்த மூன்று காட்சிகளின் விளைவாக அவர் பரிவ்ராஜம் ஏற்றாரென்றால், இதற்கு முன் இந்தக் காட்சிகளை அவர் காணவில்லை என்பது எப்படிப் பொருந்தும்? இவைகள் நூற்றுக்கணக்கில் பொதுவாய் நிகழும் காட்சிகள். இவற்றை இதற்கு முன் புத்தர் காணாதிருக்கவே முடியாது. முதல் முறையாக அப்போது தான் இவற்றை புத்தர் கண்டார் என்று கூறும் மரபு ரீதியான விளக்கத்தை ஒப்புக்கொள்ளவே இயலாது; இந்த விளக்கம் ஏற்புடைய தன்று - அறிவுக்குப் பொருந்துவதன்று. ஆனால் இது இவ்வினாவிற்கு உண்மையான விடையல்ல என்றால், உண்மையான விடை யாது?
இரண்டாவது பிரச்சினை நான்கு ஆரிய உண்மைகளால் உண்டாக்கப் படுவதாகும். அவைகள் புத்தரின் உண்மையான போதனைகளின் பகுதிகளாக அமைந்துள்ளனவா? இந்த சமய மரபு முறை பவுத்தத்தின் ஆணி வேரையே அறுத்தெறிவதாக உள்ளது. வாழ்க்கை துக்கமாயின், மரணம் துக்கமாயின், மறு பிறப்பும் துக்கமாயின், பிறகு அனைத்திற்கும் ஒரு முடிவு உண்டு. உலகில் ஒரு மனிதன் இன்பத்தை அடைவதற்கு மதமோ, தத்துவமோ ஒருக்காலும் உதவாது. துக்கத்திலிருந்து தப்பிக்க வழி இல்லையாயின், பின் மதம் என்ன செய்ய முடியும்? பிறப்பிலேயே துக்கம் எப்போதும் இருக்கும் என்றால் அத்தகைய துக்கத்தினின்று மனிதன் விடுபட புத்தர் என்ன செய்ய முடியும்? பவுத்தரல்லாதார் பவுத்த போதனைகளை ஏற்றுக் கொள்வதில் மிகப் பெரும் தடையாய் இந்த நான்கு ஆரிய உண்மைகள் திகழ்கின்றன. ஏனெனில் நான்கு ஆரிய உண்மைகள் மனிதனின் நம்பிக்கையைத் தகர்ப்பனவாய் உள்ளன. இந்த நான்கு ஆரிய உண்மைகளும், புத்தரின் போதனைகளின் பகுதிகளா? அல்லது பிற்காலத்தில் துறவிகளால் உண்டாக்கி சேர்க்கப் பட்டவைகளா?
மூன்றாவது பிரச்சினை ஆன்மா, கர்மம், மறுபிறப்பு ஆகியவை பற்றிய போதனைகளோடு தொடர்புடையதாகும். புத்தர் ஆன்மாவின் இருப்பை மறுத்தார். ஆனால் அவர் கர்மம் மற்றும் மறுபிறப்பு உண்டு என உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. உடனே ஒரு கேள்வி எழுகிறது. ஆன்மா இல்லையென்றால், கர்மம் எப்படி இருக்க முடியும்? இவை திணறடிக்கும் வினாக்கள். கர்மம், மறுபிறப்பு ஆகிய சொற்களை புத்தர் எந்தப் பொருளில் பயன்படுத்தினார்? அவர் காலத்தில் பிராமணர்கள் எந்தப் பொருளில் அவற்றைப் பயன் படுத்தினார்களோ அதற்கு மாறான பொருளில் அவற்றைப் பயன் படுத்தினாரா? அப்படியாயின் என்ன பொருளில்? பிராமணர்கள் பயன்படுத்திய அதே பொருளில் அவற்றை பயன்படுத்தினாரா? அப்படியாயின் ஆன்மாவை மறுப்பதற்கும், கர்மம், மறுபிறப்பை உறுதிப்படுத்துவதற்கும் இடையில் மிக அதிகமான முரண்பாடு இல்லையா? இந்த முரண்பாடு தீர்க்கப்பட வேண்டியது அவசியம்.
நான்காவது பிரச்சினை பிக்குவோடு தொடர்புடையதாகும். பிக்குவை புத்தர் உருவாக்கியதன் நோக்கம் யாது? முழுநிறைவான மனிதனை உருவாக்குவது நோக்கமா? அல்லது தன் வாழ்க்கையை மக்களுக்குத் தொண்டாற்றுவதில் அர்ப்பணித்து, அவர்களின் நண்பராய், வழிகாட்டியாய், தத்துவவாதியாய் திகழும் ஒரு சமூக சேவகரை உருவாக்குவது அவர் நோக்கமா? இது ஒரு மிக முக்கிய வினாவாகும். பவுத்தத்தின் எதிர்காலமே இவ்வினாவைப் பொறுத் துள்ளது. ஒரு பிக்கு தன் வரையில் முழுநிறைவான மனிதராக மட்டும் இருந்து விடுவாரேயானால், பவுத்தத்தைப் பரப்புவதற்கு அவர் எவ்வகையிலும் பயன்படமாட்டார். ஏனெனில், அவர் முழுநிறைவான மனிதராயினும் தன்னலமான மனிதர் ஆவார். இதற்கு மாறாக, அவர் சமூக சேவகராக இருப்பாராயின், பவுத்தத்தின் நம்பிக்கைக்குரியவர் என்பது நிரூபணமாகும். இந்தவினாக்களுக்கான தீர்வு காண்பதில் பவுத்த போதனையின் முரணற்ற தன்மையை சார்ந்திடுவதை விட பவுத்தத்தின் எதிர்காலத்தைப் பொறுத்திடுவதே சரியாகும்.
என் வினாக்கள் வாசகர்களை விழிப்புறச் செய்து இப்பிரச்சினை களுக்கான தீர்வுகளுக்கு அவர்களது பங்களிப்பை செய்யத் தூண்டும் என்று நான் நம்புகிறேன்.
B.R.அம்பேத்கர்