புத்தரும் அவர் தம்மமும் - தமிழாக்கம் - சில தகவல்கள்
தமிழாக்கம் - சில தகவல்கள்
- பெரியார்தாசன்
1985 டிசம்பரில் ஏதோ ஒரு நாள்.
மேல் நாட்டு சுற்றுப்பயணம் முடித்து நான் சென்னை திரும்பி சில நாட்களே ஆகியிருந்தன.
அன்று விடிவதற்கு இன்னும் சிறிது நேரம் மிச்சமிருந்தது.
கடுங்குளிரில் தேநீர்க் கடை வாயிலில் நானும் எக்ஸ்ரே மாணிக்கம் அவர்களும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
வழக்கம்போல் பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிய எங்கள் உரையாடல் ஒரு கட்டத்தில் அவருடைய தி புத்தா அண்ட் ஹிஸ் தம்மா" (The Buddha and His Dhamma) பற்றிய செய்திக்குத் திரும்பியது.
பாபாசாகேப் அம்பேத்கரின் இறுதி நூலான அந்நூல் பற்றிய தனிச்சிறப்பு களை அவர் அடுக்கிக்கொண்டே போனார்.
பேராசிரியரான நான் மாணவனானேன். எக்ஸ்ரே மாணிக்கம் ஆசிரியரானார். இருவரும் தேநீர் அருந்தவும் மறந்து போனோம்.
இமைக்கவும் மறந்தவனாய் இரு காதுகளையும் கூர்மையாக்கிக்கொண்டு அவர் சொன்னவைகளை மனதில் பதித்துக்கொண்டேயிருந்தேன்.
அக்குளிர்கால அதிகாலையில் என் நெஞ்சில் வைத்த ஆர்வத்தீ கொழுந்து விட்டெரிந்தது.
அடுத்த நாள் வ.உ.சி நகர் தோழர் செல்வராஜ் அவர்களைத் தேடிச்சென்று அவரிடமிருந்த அந்நூலை (Buddhaand His Dhamma) இரவல் பெற்று வந்தேன்.
மிகுந்த ஆர்வத்தோடும் - அளவிலா ஈடுபாட்டோடும் - அதீதமான இரசனை யோடும் அந்த அற்புத நூலைப் பயின்றேன் - மகிழ்ந்தேன்.
சில நாட்களுக்குப்பின் என்னை சந்திக்க வந்த எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவரிடமும் அந்த நூலின் சில பகுதிகளின் சிறப்பை இரசனையோடு விவரித்தேன்.
அந்த அற்புத நூலின் அழகிய வசனங்களில் சிலவற்றை மேற்கோள்களாகத் தமிழில் நான் விவரித்தபோது வியந்து பாராட்டிய அவ்விருவரும் பேராசிரியர்! இந்த நூலை முழுமையாகத் தமிழாக்க முயற்சி செய்யுங்களேன்!” என்றார்கள்.
இந்நூலின் தமிழாக்கத்திற்கான விதைத் தெளிப்பு இப்படித்தான் நடந்தது. இவர்களால்தான் நடந்தது.
என் பல வேலைகளுக்கிடையில் அவ்வப்போது ஒய்வும் - உணர்வும்' ஒத்துப்போகும் போதெல்லாம் இந்நூலின் பகுதிகளைத் தமிழாக்கம் செய்து தொகுத்து வந்தேன்.
அதில் ஓரிரு அத்தியாயங்களை அரக்கோணம் தோழர் பெருமாள் உதவியுடன் சிறு வெளியீடாகவும் கொண்டுவந்தேன். பாபாசாகேப் அம்பேத் கரின் இறுதி நூலான இதன் தமிழாக்கம் பற்றிய செய்தி எனது கட்டுரை வடிவில் சாவி' வார இதழில் (19.9.90)-ல் வெளியானது.
இதைப் படித்த அறிவுவழி இதழின் இணை ஆசிரியர் தோழர் மு.ப.எழிலரசு இவ்வரிய நூலின் தமிழாக்கத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்றும், அதற்கான முன்னேற்பாடுகளை உடனே செயல்படுத்த வேண்டும் எனவும் என்னைப் பார்க்கும்போதெல்லாம் வற்புறுத்தி வந்தார்.
அவருடைய பெருமுற்சியால், புத்தரும் அவர் தம்மமும்' தமிழாக்க நூல் வெளியீட்டுக்குழு அமைக்கப்பட்டது.
என் தமிழாக்கம் அச்சாவதற்குமுன் எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவராலும் முழுமையாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்தினேன். இக்கருத்தை வெளியீட்டுக்குழு மகிழ்ச்சியுடன் ஆமோதித்தது.
இந்தச் சுமை மிகுந்த வேலையை அவர்கள் இருவரும் மனமுவந்து ஏற்றார்கள்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் மூவரும் தமிழாக்கப் பரிசீலனைக்காக பல மணி நேரங்கள் செலவழித்தோம்.
பரிசீலனை தொடங்கிய சில நாட்களிலேயே என் தமிழாக்கத்தில் நான் செய்யவேண்டிய அடிப்படை மாற்றங்கள் ஏராளமாய் இருப்பதை நான் புரிந்து கொண்டேன்.
அதுவரை, உலக சமயத் தத்துவம் பற்றிய என் ஆய்வறிவு - அதில் பவுத்தம் பற்றிய என் பொது அறிவு - ஆங்கில மொழி அறிவு - தமிழ் மொழி மற்றும் இலக்கிய அறிவு ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இப்பெருநூலைத் தமிழாக்கம் செய்திருந்த நான் இந்நூலின் தமிழாக்கத்திற்கு இவை மட்டுமே போதாது என்று புரிந்து கொண்டேன்.
பவுத்தத்தை பாபாசாகேப் அம்பேத்கரின் பார்வையில் நான் புரிந்துகொள்ள எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவரும் பெரிதும் உதவினர்.
ஒவ்வொரு பரிசீலனையின் போதும் இப்புதிய நோக்கில் புதிய தமிழாக்கம் தேவைப்பட்டது. புதுப்புது வார்த்தைகளைப் பிரசவித்தேன் நான்.
பல்வேறு பணிகளுக்கிடையில் இப்பணி செய்ய நேரிட்டதால் தமிழாக்கமும் பரிசீலனையும் மிகமிகத் தாமதமாயிற்று.
இத்தமிழாக்கத்திற்காக பாபாசாகேப் அவர்களின் மூலநூலை பயிலப்பயில நான் பவுத்தத்தில் மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தேன்.
இதற்கிடையில், எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவரின் அழைப்பின் பேரில் 1991-ல் நாக்பூர் தீக்க்ஷா ' பூமிக்குச் சென்று வந்தேன். பாபாசாகேப்போடு பவுத்தமேற்ற பெரியவர் எம்.டி.பஞ்ச்பாய் போன்றோரை சந்தித்து பவுத்த விளக்கம் பெற்றேன்.
அந்த உந்துதலின் அடிப்படையில் 1992 ஜூலையில் முறைப்படி தீக்க்ஷா பெற்று பவுத்தனாகி என் இயற்பெயரை வீ.சித்தார்த்தா எனப் பெயர் மாற்றிக் கொண்டேன்.
மீண்டும் 1992ல் நாக்பூர் சென்று இந்தோரா... பவுத்த விஹார் தலைமை பிக்கு சஹாய் அவர்களை சந்தித்து இந்நூல் குறித்த சில விளக்கங்களைப் பெற்றுவந்தேன்.
1991 அக்டோபர் தொடங்கி, ஏறத்தாழ இரண்டாண்டுகள் உருண்டோடிய பின் 1993 மே முதல் நாள்தான் என்னால் முழு தமிழாக்கத்தையும் வெளியீட்டுக் குழுவிடம் ஒப்படைக்க முடிந்தது.
இந்தியர் அனைவரையும் சமத்துவ நெறியாளராய், சமதர்மச் சிந்தனை யாளராய் ஆக்கக்கூடிய இவ்வரிய பெரிய ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பு என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப் பெரும்பேரு.
இவ்வரிய நூலின் தமிழாக்கம் என்னால் செய்யப்பட்டு எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவராலும் இரவு பகலாய் பரிசீலிக்கப்பட்டது.
எங்கள் பரிசீலனை முறை இதுதான்........
- ஆங்கில மூலத்தை ஒவ்வொரு வசனமாய் எரிமலை இரத்தினம் படிப்பார்.
--- உடனே அதற்குரிய தமிழாக்கத்தை நான் படிப்பேன்.
--- இரண்டையும் கூர்ந்து கவனிப்பார் எக்ஸ்ரே மாணிக்கம்.
--- பின்னர் கருத்து மயக்கமோ, மொழியாக்கத் தடுமாற்றமோ இல்லாமல் தமிழாக்கம் சிறப்பாயுள்ளதா என அவர்களிருவரும் மிகக் கூர்மையாய்க் கவனிப்பார்கள். செழுமைப்படுத்தப்பட வேண்டியிருப்பின் சுட்டிக் காட்டு வார்கள். விவாதம் மேற்கொள்ளப்பட்டு தேவையிருப்பின் திருத்தம் செய்வோம். சில நேரங்களில் ஒரு வசனத்தை சரிபார்க்க ஒருமணி நேரம்கூட ஆகும்.
இந்தப் பரிசீலனையில் நாங்கள் எதிர்கொண்ட பல சிக்கல்களில் ஒருசில வற்றை எடுத்துக்காட்டி இங்கே நினைவு கூர்கிறேன்.
கடவுள் இருப்பு, தேவர்கள் இருப்பு, ஆன்மா இருப்பு, சொர்க்கம், நரகம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாய் நிராகரித்தவர் புத்தர். அதே கருத்துடையவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.
இதை நன்குணர்ந்த நாங்கள் மூலநூலில் பக்கம் 4-ல் 4-2ஆம் வசனத்தில்.... the gods over the space of the sky'...... எனவரும் இடத்தைத் தமிழாக்கம் செய்வதில் பெரும் விவாதத்தை மேற்கொள்ள நேர்ந்தது.
நேரடியாக இதன் தமிழாக்கம் இதுதான்: வான் மேல் வாழும் கடவுளர்"
ஆனால் கடவுள் மறுப்பாளரான புத்தரின் தம்மவிளக்க நூலில் இது எப்படி வரும்? இங்கே கடவுள் என்பது உயர்நிலையடைந்தோரை உணர்த்துவது.
பெரும் விவாதத்திற்குப்பின் இந்த வசனத்தை இப்படி மொழிபெயர்த்தேன்:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வான்புகழ் எய்தியவர்கள்”.
புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சியைக் கூறும் இப்பகுதியை, பவுத்தத் தத்து வத்தையோ, பாபாசாகேப்பின் கருத்தையோ காயப்படுத்தாமல் திருக்குறள் உதவியோடு தமிழாக்கிவிட்ட திருப்தியில் தொடர்ந்தோம். செலவு ஒரு மணி நேரம். வரவு கடலளவு மகிழ்ச்சி.
மூலநூலில் வேறு மதங்களைக் குறிக்குமிடத்தில் (Religion) என்ற சொல் வரும். பவுத்ததைக் குறிக்கும் சில இடங்களிலும் (Religion) என்ற சொல் வரும்.
Religion வேறு Dhamma வேறு என்று விளக்க ஒரு தனி அதிகாரமே இந்நூலில் எழுதியுள்ள பாபாசாகேப்பின் கருத்துக்கு மாறாகிவிடாமல் இச்சொல்லைத் தமிழாக்கம் செய்ய விவாதித்தோம்.
எனவே வேறு மதங்களைக் குறிக்குமிடத்தில் Religion என்பதை மதமென்றும், பவுத்ததைக் குறிக்குமிடத்தில் Religion என்பதை சமயமென்றும் மொழி பெயர்த்தேன்.
Rely'- சார்ந்திரு' என்னும் சொல்லைப் பகுதியாய் கொண்ட Religion - மதம்' என்பது பவுத்தத்திற்குப் பொருந்தாது. அமைத்தல், உருவாக்கல், சமைத்தல் என்பதைப் பகுதியாகக் கொண்ட சமயம்' என்பதே பவுத்தத்திற்குப் பொருந்தும் என முடிவெடுத்தோம்.
NIBBANA' - என்ற சொல்லை நிர்வாணம்' எனத் தமிழாக்கியிருந்தேன். நிர்வாணம் வேறு நிப்பானம் வேறு என விளக்கினார் எக்ஸ்ரே மாணிக்கம். நூல் முழுவதும் நிப்பானம்' என மாற்றினேன்.
Low and Lowly - என்பதன் நேரடித் தமிழாக்கம் தாழ்ந்தவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும்' என வரும். இதைக் காரணத்தோடு மாற்றச் சொன்னார் எரிமலை இரத்தினம். எனவே உரிமை மறுக்கப்பட்டவர்களும் உதாசீனப் - படுத்தப்பட்டவர்களும்' எனத் தமிழாக்கம் செய்தோம்
இந்துமத உயிர்ப்பலி சடங்கும் ஆங்கிலத்தில் sacrifice' என்றே குறிக்கப் படுகிறது. அர்ப்ப ணித்தல் என்னும் பவுத்த நெறியும் ஆங்கிலத்தில் sacrifice' என்றே குறிக்கப்படுகிறது. முன்னதை யாகம்' என்றும் பின்னதைத் தியாகம்' என்றும் தமிழாக்கியிருந்தேன். பரிசீலனைக்குழுவின் பாராட்டு கிடைத்தது.
மூலநூலின் 190 - ஆம் பக்கத்தில் புத்தரின் கூற்றாக ஓர் அருமையான ஆங்கிலக் கவிதையை அமைத்துள்ளார் அறிஞரில் பேரறிஞர் இலக்கியச் செம்மல் - பாபாசாகேப் அம்பேத்கர்.
புத்தரின் தத்துவப்பிழிவாய் பாபாசாகேப் அம்பேத்கரால் அளிக்கப்பட்டுள்ள இவ்வாங்கிலக் கவிதையை கவிதையாகவே தமிழாக்கம் செய்தேன்.
அக்கவிதை இந்நூலின் பக்கம் 221-ல் பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் மூடநம்பிக்கை வெறி அடங்கி, சமத்துவ சமதர்ம ஆட்சிமுறை அமைய, பகுத்தறிவு மலர, உண்மை மதச்சார்பின்மை ஓங்க பவுத்தம் பரவ வேண்டும். அதற்கு பாபாசாகேப் அம்பேத்கரின் The Buddha and His Dhamma பயிலப்பட வேண்டும்.
இந்த வாய்ப்பு தமிழர்களுக்குக் கிடைத்திட வேண்டும் என்பதற்கான என் எளிய முயற்சியே இத்தமிழாக்கம்.
இவ்விதமாக என் மொழியாக்கப் பணி முற்றிலுமாய் முடிவுற்ற பின்னர், "இத்தமிழாக்கம் பாபாசாகேப் எழுதியது எழுதியவாறே - உள்ளது உள்ளபடியே - பதவுரை, பொழிப்புரை, கருத்துரை அனைத்தும் கொண்டதாய் - நடையினிமையும், மூலநூலோடு நல்லிணக்கமும் கொண்டதாய் உள்ளது" என இந்நூலைப் பரிசீலித்த எக்ஸ்ரே மாணிக்கம் - எரிமலை இரத்தினம் இருவரும் ஒப்புக்கொண்ட பின்தான் இந்நூல் அச்சுக்கு அளிக்கப்பட்டது.
இந்நூல் வெளியீட்டுக்குழு அமைக்கப்பட்ட நாளிலிருந்து ஒய்வு ஒழிச்ச லின்றி இறுதிவரை கடமை உணர்வு, பொறுமை, சகிப்புத்தன்மை என்பனவற்றின் மொத்த உருவமாய் பம்பரமாய்ச் சுழன்று இந்நூலின் பதிப்பாசிரியராய்ப் பணியாற்றிய அறிவுவழி இணையாசிரியர் தோழர் மு.ப. எழிலரசுவின் வியர்வை இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் படிந்திருக்கிறது.
எனக்கு எப்பணியிலும் ஊக்கசக்தியாய்த் திகழும் அறிவுவழி ஆசிரியர் தோழர் செஞ்சட்டை பஞ்சாட்சரம் இப்பணியிலும் எனக்களித்த ஊக்கம் பெரிது - மிகப்பெரிது.
சுருக்கமாகச் சொன்னால்.....
பவுத்தத்தில் சாமியில்லை - சடங்கு இல்லை - சாதி இல்லை - மாயம் இல்லை - மந்திரம் இல்லை - பூஜை இல்லை - பிரார்த்தனை இல்லை - எல்லாவற்றிற்கும் மேலாய் தனியுடைமைச் சுரண்டல் இல்லை - இவைகளில் எதுவொன்றி ருப்பதும் பவுத்தம் இல்லை.
பவுத்தத்தில் அன்பு உண்டு - அறிவு உண்டு - சமத்துவம் உண்டு - சமதர்மம் உண்டு - ஒழுக்கம் உண்டு - இரக்கம் உண்டு - வீரம் உண்டு - விவேகம் உண்டு - இவைகளில் எதுவொன்று இல்லாததும் பவுத்தமில்லை.
பவுத்தத்தில் உள்ளது இவைகளே - இல்லாதது இவைகளே என்று ஆதாரபூர்வமாய் விளக்க உலகப் பேரறிஞர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் படைத்தளித்த மாபெரும் நூலே புத்தரும் அவர் தம்மமும்" (The Buddha and His Dhamma).
இப்பெருநூலின் எனது தமிழாக்கமே இதோ உங்கள் கரங்களில் தவழ்கிறது.
அறிவுபூர்வ சிந்தனைக்கு முழுப்பெயர் பவுத்தம்!
நேர்மையான வாழ்வுக்கு வழிகாட்டும் நெறிக்குப் பெயர் பவுத்தம்!
சமத்துவத்திற்கு வழிநடத்தும் தத்துவத்திற்குப் பெயர் பவுத்தம்!
பரவுக பவுத்த நெறி! ஓங்குக பாபாசாகேப் புகழ்!
தோழமையுடன்,
பேராசிரியர் பெரியார்தாசன்