ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந் நாவலந் தீவை நண்ணிய ஆரியக் கூட்டத்தார் தாம் நிலத்தேவர் (பூசுரர்) என்றும், தாம் பேசுவது தேவ மொழி (தேவ பாஷை) என்றும், கூசாது பொய் கூறித் தம் வெளிர் நிறத்தானும் வெடிப்பொலிப் பேச்சானும் திரவிட அரசர்களையும் மக்களையும் மயக்கித் தம் கொலை வேள்விகளுக்குத் துணை பெற்றனர். தம் சிறு தெய்வ வழுத்துரைகளை வேதங்களாகக் கட்டமைத்துக் கொண்டனர். படிப்படியே திரவிட இனத்தவரை முற்றும் அடிமையாக்கிக் தம் வாழ்வியல் நிலைகளை வளப்படுத்திக்கொண்டனர். அரசரையும் அடிப்படுத்தும் வல்லதிகாரம் பெற்றனர்.
தமிழ்மொழியிலும், தமிழர்தம் இலக்கியம், சமயம் முதலிய கலைத்துறைகளிலும், நாகரிகம் பண்பாடு ஆகிய வாழ்வியல் துறைகளிலும் ஆளுமை பெற்று மேம்பட்ட ஆரியப் பார்ப்பனர்கள் அவற்றையெல்லாம் மறைத்துந் திரித்துந் தம்மனவாக்கிக் கொள்ளும் பொருட்டுச் செய்த வகைவரிசைகள் பலப்பல. கெடுத் தொழித்தனவும் எண்ணில.
கோயில் வழிபாடு ஆரியர்க்குரிய தன்று. ஆனால் இன்று கோயில்களெல்லாம் ஆரியக் கூடாரங்களாகக் கருதப்படுகின்றன. தமிழ்வழிபாட்டு உரிமைக்குத் தடையாக நின்று வழிமறிப்பவர்கள் அவர்களே. பிராமணன் எவனுக்கும் சமற்கிருதம் தாய்மொழியன்று. ஆனால், ஒவ்வொருவனும் - சமற்கிருதமே தன் தாய்மொழிபோல் கருதிக்கொண்டு, அதன் மேல் அளவு கடந்த பற்றுவைத்துக் கொண்டிருக்கின்றான்; அவ்வளவிற்குத் தமிழ் மொழி மேல் வெறுப்பும் கொண்டிருக்கின்றான். இஃதொன்றே ஆரியப் பார்ப்பனரின் மனப்பான்மையை வெளிப்படுத்தப் போதுமானதாகும்.
ஆரியத்தளையை அறுத்தெறிந்து விடுதலை பெறுவதே தமிழினம் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் முயற்சியில் மேற்கொள்ள வேண்டிய தலையாய பணியாகும். ஆரிய அழிம்புகளை வரலாற்றடிப்படையில் நாம் எடுத்துக் கூறும்போது அதனை ஒப்புக் கொள்கின்ற நம்மவர்கள் சிலர், பிராமணர்கள் இப்போது திருந்திவிட்டனர் என்றும், முன்னை நிலைகளையே சுட்டிக்காட்டி அவர்கள் பால் பகைமை பாராட்டக்கூடாது என்றும் 'பரந்த' மனத்தவர்போல் பேசுகின்றனர். அவர்க்ள திருந்திவிட்டனர் எனக் கருதுவது ஏமாறித்தனமே.
இற்றை நிலையிலும், இந்த நொடியிலும் கூட 'வர்ணாசிரம (அ) தர்மம்' ஓரளவு நெகிழ்ந்து விட்டமைக்கு வருந்தி யழுது கொண்டிருக்கின்றனரே யன்றி அந்நிலையை வாழ்த்தி வரவேற்கவில்லை. அதனைக் கட்டுக்குலையாமல் காப்பாற்றவும், தம் மேனிலை வாழ்வை நெகிழவிடாமல் நிலைப்படுத்திக் கொள்ளவும் மற்றையோர் தலையெடுக்க மாட்டாமல் தாழ்ந்து கிடக்கவும் ஆரியப் பார்ப்பனன் ஒவ்வொருவனும் மடிதற்று நிற்கின்றமை அவர்களுடைய நடவடிக்கைகளைக் கூர்ந்து நோக்குவார்க்குப் புலனாகும்.
திருக்குறளை மாணவர்கள் படிக்கத் தேவையில்லை என்று அறிவுரை (!) கூறிக் கொண்டும், இன்னும் தம் வருணாசிரம வரையறைகளைக் கடைபிடித்துக் கொண்டும், ஆர்.எசு.எசு. இயக்கத்தினைப் பாராட்டி வாழ்த்திக் கொண்டும் சங்கர (ஆசு) ஆரியர்கள் இன்னும் வளமாகவும் நலமாகவும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்கள்.
'ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்' என்னும் இந்நூலில் ஆட்சி - அலுவல் துறைகளிலும், தாளிகை(பத்திரிகை), வானொலி, நூற்பதிப்பு முதலிய பல்வேறு துறைகளிலும் இன்றும் நடைபெறும் ஆரிய வல்லாண்மைத்திறம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் பெயர் இடஞ் சுட்டித் தக்க சான்றுகளோடு விளக்கப்பட்டிருக்கின்றன.
தமிழின விடுதலையிலும் அதன் மேம்பாட்டு முயற்சிகளிலும் ஈடுபடும் மறவர்கட்கு இந் நூல் போர்வாளாகப் பயன்படுவதொன்றாம். தமிழ்மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்வார்களென நம்புகின்றோம்.
- புலவர் இறைக்குருவனார்