ஸரமாகோ: நாவல்களின் பயணம்
மாபெரும் ஆளுமைகளான அன்டோனியோ கிராம்ஷியையும் ழான் பால் சார்த்தரையும் அவர்களுக்கேயுரிய உயிர்த்துடிப்புடன் தமிழ் வாசகர்களுடன் உறவாடச் செய்த தோழர் எஸ்.வி. ராஜதுரை, நோபல் பரிசு பெற்ற போர்த்துகேய எழுத்தாளர் ஜோஸெ ஸரமாகோவை அப்படியே அழைத்துவந்து நம்முன் நிறுத்துகிறார். 2010 வரை நம்முடன் வாழ்ந்து, தனது 88-வயதில் மறைந்த ஸரமாகோ, நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், குறிப்புகள் என எழுதிக் குவித்திருப்பவை ஏராளம். ஸரமாகோவின் சிறப்புக்கு முதன்மைக் காரணமான அவருடைய நாவல்களில் பதினேழையும் குறுநாவல் ஒன்றையும் பற்றிய எஸ்.வி. ராஜதுரையின் ஆழமான அறிமுக – விமர்சனக் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன இந்நூலில்.
ஸரமாகோவின் இலக்கியப் படைப்புகளிலுள்ள தனித்துவமான எடுத்துரைப்பு முறை, முரண்நகை நிறைந்த குரல், கட்டுத்தளையற்ற கற்பனையாற்றல், நாவல்களின் உருவகத் தன்மை ஆகிய அனைத்தையும் உள்ளவாறே உள்வாங்கி நமக்கு அற்புதமாக மடைமாற்றி விடுகிறார் எஸ்.வி.ராஜதுரை. நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஸரமாகோவின் நாவல்களையே படிக்கும் பேரனுபவத்தைத் தருபவை. ஸரமாகோ நூற்றாண்டு நேரத்தில் தமிழுக்குப் புதிய கொடை.