குழந்தைகளின் நூறு மொழிகள்
குழந்தைகளின் நூறு மொழிகள்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
'இனியொரு விதி செய்வோம்’ என்ற பாரதி வரியை வைத்து, கல்லூரி நாட்களில் (முதுகலை, தமிழ்) விவாதித்தது நினைவுக்கு வருகிறது. விவாதத்துக்கு எப்போதும் உயிரூட்டும் ஆருயிர் நண்பர் ஷாஜஹான் கனி, ‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்! என்றுரைத்து சமூக, பண்பாட்டு விதிகளை உடைத்த பாரதியே, தானும் ஒரு விதி செய்யத்தானே விரும்புகிறார்’ என்று வேடிக்கையாகச் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. உண்மைதான்! விதிகளை உடைக்க நினைப்போர் ஒன்று சேர்ந்து புதுப்புது விதிகளை உருவாக்கிக் கொள்வதைக் காலம் பூராவும் பார்த்துவிட்டேன். ஆசிரியராகிய நான், பெரும்பாலும் விதிகளின் உலகத்திலேயே வாழ்ந்துவிட்டேன். "கல்லூரி முதல்வர் நூலகம் வந்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யாமல், உட்கார்ந்தபடி புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தது ஏன்? ‘என்பது பணியில் சேர்ந்த புதிதில் நான் வாங்கிய மெமோ! விதிகளுக்கு மாற்று இன்னொரு விதியல்ல - விதிகளுக்கு மாற்று உரையாடல் என எனக்கு உணர்த்தியது அறிவொளி. தகவல்கள் அல்ல - மனித உறவுகளே உரையாடலின் முதல் தேவை என்பதையும் அறிவொளி எனக்குப் புரிய வைத்தது. வகுப்பறை, அறிவொளி உரையாடல்கள் சில, ‘ஆளுக்கொரு கிணறு’ என்ற பெயரில் 2010இல் நூலாக வந்தது. இரண்டு பதிப்புகளுக்குப் பின், உரையாடலைத் தொடர்ந்து கொண்டுபோக அவகாசம் வாய்க்கவில்லை. இன்று - இன்னும் சில கட்டுரைகளைச் சேர்த்து பாரதி புத்தகாலயம் ‘குழந்தைகளின் நூறு மொழிகள்’ என்ற தலைப்பில் நூலைப் புதுப்பித்திருக்கிறது. உரையாடல் தொடர்கிறது... - ச. மாடசாமி