இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
ஏறக்குறையப் பத்து ஆண்டுகளுக்குமுன் “காலந் தோறும் பெண்” என்ற தலைப்பில் சில கட்டுரைகளை எதினேன். அதுவே நூலாக வெளியிடப்பட்டதும் வாசகர்களிடையேயும் ஆய்வாளரிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 'காலந்தோறும் பெண்மை'என்ற ஒரு நூலையும் எழுதினேன். இப்போது இது மூன்றாவது நூல்.
பெண்ணின் சமுதாய வரலாறு கணிக்கப்பட்டிருக்கவில்லை என்றால் தவறில்லை. காலம் காலமாக மனிதகுலம் என்றால் அது ஆணைச் சார்ந்ததாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. நீதி நூல்களும், வாழ்வியல் கோட்பாடுகளும் ஒரு பெண்ணை மனிதப்பிறவி என்று ஒப்பி அவளையும் முன்னிறுத்தியே சொல்லப்பட்டிருக்கவில்லை.
ஆணுக்கு மகிழ்ச்சியும் நலமும் தரவும், வாரிசைப் பெற்று வாழ வைக்கவுமே அவளை இறைவன் படைத் திருக்கிறான் என்ற கருத்தையே காலம் காலமாக எல்லாச் சமயங்களும் மக்களை நெறிப்படுத்தி வந்திருக்கின்றன.
இந்நாள், இருபத்தொன்றாம் நூற்றாண்டை நாம் எட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், பெண் தன் இருப்புக்காகவும் உயிர் வாழ்வதற்காகவும் கருப்பையிலேயே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள். இது உண்மை. ஏன் இப்படி?
ஆண்-பெண் இருவருமே இவ்வுலகுக்கு இன்றியமை யாதவர்கள். ஒருவரின்றி மற்றவர் தனித்து வாழ முடியாது. அவ்வாறிருக்கையில் பெண்ணுக்கு மனிதப்பிறவிக்குரிய மதிப்புக்களே ஏன் அளிக்கப்பட்டிருக்கவில்லை? மண், பொன் போல், பெண்ணும் அவனுக்கு ஒரு சாதனம். உழைப்புச் சாதனம்; வாரிசு தரும் சாதனம். எட்டும் அறிவினில் ஆற்றலில் ஆணுக்கிங்கே இளைத்தவர்களில்லை என்று நிரூபணமான பின்னரும் அவள் வெறும் சாதனமாகவே கழிக்கப்படுவதற்கும். அழிக்கப்படுவதற்கும் உரியவளாகவே இருக்கிறாளே? இது ஒரு தருமமாகவே பாலிக்கப்பட கதைகள், புராணங்கள், காவியங்கள் எல்லாம், எல்லாம்...ஏன்?
இந்தக் கேள்விகளே நான் 'காலந்தோறும் பெண்' என்ற நூலுக்கான கட்டுரைகளை எழுதுவதற்குக் காரணமாக இருந்தன. தொடர்ந்து இன்னும் சிறிது கூர்மையாக ஆழ்ந்த உணர்வுடன் சில கட்டுரைகளை மேலும் எழுதத் துணிந்திருக்கிறேன்.
அற்புதத் தாய்க்குரிய ஆற்றல்களை இயற்கை அவளுக்கு அளித்திருக்கிறது. அவள் முதல்வியாகவே திகழ்ந்தாள்: போற்றப்பட்டாள். 'சக்தி-சக்தி-அவள் ஆடும் கூத்து: அண்டசராசரங்கள் கதி தவறாமல் சுழல்கிறது' என்ற தாய் வழிபாட்டில் மக்கள் ஈடுபட்டிருந்ததும் இல்லாமலில்லை.
ஆனால் காலப்போக்கில் வாழ்வுச் சாதனங்கள் பெருகிய பிறகு, ஆண் அவளை முற்றிலுமாக அடிமை கொண்டான். தாய் முதல்வி அல்ல; தந்தைதான்... என்ற கருத்தை நிலை நிறுத்த எத்தனை கதைகள், புராணங்கள்: காவியங்கள்! படைப்புக் கடவுளாகிய ஆண், தானே இரண்டாகப் பிரிந்து ஆணும் பெண்ணுமாகி முதல் பெண்ணைப் படைத்தான் என்றும், பெண்ணின் கருப்பை தேவையில்லாமலே, ஆண் கடவுளின் உந்திக்கமலத்தில் படைப்புக்கடவுள் தோற்றினார். அல்லது நெற்றிக்கண் சுடரிலிருந்து பிள்ளைகள் பிறந்தனர் என்றெல்லாம் பல கற்பனைகளில் ஆண் கடவுள்கள், மேலாண்மையை நிலை நாட்டி வருகின்றனர். இது ஏதோ, மனங்கவர் கற்பனைகள், சுவாரசியங்கள் என்று முடிந்து விடவில்லை. பெண், இன்று தன் சொந்தப் பெண் குழந்தையை வெறுத்து அதற்கு நஞ்சூட்டிக் கொல்வதின் மூலம் தன்னையே சிதைத்துக் கொள்ளும் கொடுமை இன்று இயல்பாக நிகழ்கிறது. இந்த நிலையில், நம் புராணங்கள், கதைகள், காவியங்கள், அவற்றில் மறைமுகமாகக் கூறப்பட்டிருக்கும் அறிவுக்குப் பொருந்தாத தகவல்கள், விவரங்கள் ஆகியவற்றை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற சிந்தனை எழுகிறது. அத்தகைய ஒரு தூண்டுதலின் விளைவே இந்நூல். இதில் கட்டுரைகளைத் தவிர, நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து மறைந்த இரு அபூர்வமான அரிய பெண்மணிகளைப் பற்றிய சிறு சொற்சித்திரங்களையும் உங்கள் முன் வைக்கிறேன்.
யாரையும் குறை கூறவோ, அல்லது வருத்தவோ இந்த எழுத்துக்களை நான் நிச்சயமாக உருவாக்கவில்லை. பெண் என்ற நோக்கில் கனிந்துவரும் ஆதங்கத்தின் உந்துதலில் இப்படியும் பார்க்க வேண்டும் என்று இந்நூலை உருவாக்கியுள்ளேன். இந்த நூலைக் கொண்டுவரும் தாகம் திரு. அகிலன் கண்ணன், திருமதி மீனா இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. வாசகர் இதை எப்போதும் போல் ஏற்று ஆதரிக்க வேண்டுகிறேன்.
-ராஜம் கிருஷ்ணன்