சாதியை அழித்தொழித்தல்
அம்பேத்கரின் 'சாதியை அழித்தொழித்தல்' கிட்டத்தட்ட எண்பது வருடங்கள் கடந்த, நிகழ்த்தப்படாத ஓர் உரை. முதல்முறை அதைப் படித்தபோது மங்கலான ஓர் அறையில் யாரோ உள்ளே வந்து ஜன்னல்களைத் திறந்ததுபோல உணர்ந்தேன். டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரைப் படிப்பது பெரும்பாலான இந்தியர்கள் பள்ளிகளில் கற்பிக்கப் பட்டு நம்புகின்றவற்றிற்கும், நாம் நம்முடைய தினசரி வாழ்க்கையில் பார்க்கும் எதார்த்தத்திற்குமான இடை வெளிகளை இணைக்கிறது.
என்னுடைய தந்தை ஓர் இந்து, பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர். நான் வளர்ந்து பெரியவளாகும் வரை அவரை சந்திக்கவேயில்லை. கம்யூனிஸ ஆட்சியில் கேரளத்தின் ஒரு சிறு கிராமமான அய்மனத்தில் என்னுடைய தாயுடன் ஒரு சிரியன் கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்தேன். ஆனாலும் என்னைச் சுற்றிலும் சாதியின் விரிசல்களும் பிளவுகளும் இருக்கத்தான் செய்தன. அய்மனத்தில் ஒரு தனியான 'பறையர்' சபை இருந்தது, அதில் 'பறையர்' பாதிரிகள் தீண்டத்தகாதோருக்குப் போதித்தனர். சனங்களின் பெயர்களில், ஒருவரை ஒருவர் அழைக்கும் முறைகளில், அவர்கள் பார்த்த வேலைகளில், அணிந்த உடைகளில், ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களில், பேசிய மொழியில் சாதி இருந்தது. ஆனாலும் நான் எந்த ஒரு பாடப் புத்தகத்திலும் சாதி என்ற கருத்தாக்கத்தை எதிர்கொள்ளவேயில்லை. அம்பேத்கர் வாசிப்பு நம்முடைய கல்வித் திட்டத்தில், கற்பித்தல் உலகில் இருந்த இந்த பெரும் இடைவெளி குறித்த எச்சரிக்கை மணியை அடித்தது. ஏன் இந்த இடைவெளிகள் ஏற்பட்டன என்பதையும் இந்தியச் சமூகம் ஒரு தீவிர புரட்சிகர மாறுதலுக்கு உள்ளாகும் வரை இந்த இடைவெளிகள் தொடர்ந்து அப்படியேதான் இருக்கப் போகின்றன என்பதையும் அந்த வாசிப்பு தெளிவுபடுத்தியது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.