அரசியல் சட்டம் எரிப்பு-1957 - அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/arasiyal-sattam-erippu-1957
 
அணிந்துரை

வைக்கம் போராட்டம்!

சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்!

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்!

கோயில் நுழைவுப் போராட்டம்!

வகுப்புரிமைப் போராட்டம்!

வடவர் ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்!

குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம்!

பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம்!

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்!

பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம்!

தேசியக்கொடி எரிப்புப் போராட்டம்!

ராமன் பட எரிப்புப் போராட்டம்!

காந்தி படம் எரிப்புப் போராட்டம்!

காந்தி பொம்மை உடைப்புப் போராட்டம்!

தமிழ்நாடு நீங்கிய தேசப் படம் எரிப்புப் போராட்டம்!

கம்பராமாயணம் எரிப்புப் போராட்டம்!

கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டம்!

என்று தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து தமிழர்களின் சமூக அரசியல் விடுதலைக்காகப் போராடி மறைந்தவர் பெரியார்.

போராட்டம் - பிரச்சாரம், பிரச்சாரம் - போராட்டம் என்பதுதான் பெரியாரின் இயக்கமாக இருந்துள்ளது.

பெரியார் நடத்திய போராட்டங்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்ற போராட்டங்கள் பற்றிய முழுமையான செய்திகள் இல்லை.

பெரியார் என்ன காரணங்களுக்காக, எந்தக் காலகட்டத்தில் இந்தப் போராட்டங்களை நடத்தினார். இப்போராட்டங்களால் என்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நூல்கள் இருக்கின்றதா? என்று தேடினால் இல்லை என்றே தெரிகிறது.

பெரியார் நடத்திய போராட்டங்களின் செய்திகள் அடங்கிய வரலாற்று நூல்கள் மட்டுமல்ல. பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாறும் - பெரியார் இயக்கத்தின் வரலாறும் கூட இதுவரை வெளிவரவில்லை என்பது தெரிகிறது. இது வேதனைக் குரியது.

பெரியாரின் இலட்சியமே சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான். சாதியை ஒழிப்பதற்காகச் சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் கொளுத்த வேண்டும் என்ற வரலாற்று நாயகர் பெரியாரின் ஆணையை ஏற்று விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பல்லாயிரக்கணக்கான பெரியார் தொண்டர்கள் அரசியல் சட்டத்தை எரித்துச் சாம்பலாக்கினார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எரிப்பது என்ற போராட்டம் இந்தியாவில் - தமிழ்நாட்டில் பெரியாரால், பெரியாரின் தொண்டர்களால்தான் முதன்முதலில் நடத்தப்பட்டது.

அதுபோலவே, சாதியை ஒழிப்பதற்காக இந்தியாவிலேயே பல்லாயிரக்கணக்கான மக்களால் முதன் முதலில் நடத்தப்பட்ட போராட்டம் - பெரியாரின் இயக்கம் நடத்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் மட்டும்தான்.

இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தோழர்கள் கலந்து கொண்ட போதும் - 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இதில், முதியோர், நிறைமாதக் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் பெண்கள், சிறுவர் - சிறுமியர் அடங்குவர். இவர்கள் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு தமிழ்நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

சிறைக்கொடுமை காரணமாக சிறைக்குள் அய்ந்து தோழர் களும், விடுதலையான சில நாட்களுக்குள் பதிமூன்று தோழர்களும் மாண்டு போயினர் என்கிற இந்தத் தியாக வரலாறு - இந்திய நாட்டில் நடைபெற்ற எந்தப் போராட்டத் தியாகங்களுக்கும் குறைவானது அல்ல.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் மாண்டுபோன தோழர் இடையாற்றுமங்கலம் நாகமுத்து அவர்களின் இல்லத்திற்கு ஆறுதல் கூற மணியம்மையார் அவர்கள் சென்றிருந்த பொழுது, மாண்டுபோன தோழரின் துணைவியார் கூறினார். "என் கணவர் இறந்து போனதைப் பற்றிக் கவலைப்படவில்லை! சாதியை ஒழிக்க வேண்டும் என்கிற உயரிய இலட்சியத்திற்குத்தானே இறந்து போனார்! தலைவரிடம் கூறுங்கள்! அடுத்த கிளர்ச்சியை நடத்தச் சொல்லுங்கள்! அந்தக் கிளர்ச்சிக்கு என் மகனை அனுப்பி வைக்கிறேன்! நானும் இருக்கிறேன்! வருகிறேன்'' என்று கூறினார் அந்த வீரத்தாய்.

இப்படிப்பட்ட செய்திகளை புறநானூற்றில் படித்திருக் கிறோம். அப்படிப்பட்ட வீரத்தாய்மார்கள் பெரியாரின் இயக்கத் திலும் இருந்தார்கள் - இருக்கிறார்கள் என்பது வரலாறு.

தன்மீதும், தன் இனத்தின் மீதும் சுமத்தப்பட்ட இழிவைப் போக்கிட சோதனைகளையும், வேதனைகளையும் சுமந்த தியாக சீலர்களின் வரலாறு இது!

சிறைக்கொடுமையின் உச்சத்திலும் சிதையாமல் தனது இனத்தின் சுயமரியாதை காத்திட சுடர் முகம் காட்டிய தோழர்களின் வரலாறு இது!

உறவுகள் மடிந்தபோதும், உற்ற தோழர்கள் களப்பலியான போதும் சாதி ஒழிப்பில் உறுதி கொண்டு கடைசிவரை கலங்காமல் இருந்த உள்ளங்களின் உணர்ச்சிப் பிரளயம் இது!

இந்த வரலாற்று ஆவணத்தொகுப்பு மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் அல்ல! கற்பனைக் கதைகள் அல்ல!

தந்தை பெரியாரும் அவரது தோழர்களும் சாதி ஒழிப்பிற்காக அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் நடத்திக் காட்டிய போராட்ட வரலாற்றுச் சுவடின் பதிவே இது!

இப்படிப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களை - வரலாற்று இருட்டடிப்பிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இன்றைய சமுதாயத்திற்கு அடையாளம் காட்டப்பட வேண்டியது நமது கடமையாகக் கருதுகிறோம்.

சட்ட எரிப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்த தஞ்சை மாநாடு தொடங்கி - போராட்டத்திற்குக் கழகத் தோழர்கள் தயாராகி - நடத்தி - சிறை சென்று - சித்ரவதைப்பட்டு - சிறையில் மாண்டு - மீண்டு வந்ததுவரை நடந்த நிகழ்வுகளை எல்லாம் ஆவணமாகத் தொகுத்துத் தந்திருக்கிறோம்.

வீரஞ்செறிந்த இப்போராட்டத்தைப் பற்றியும், அதில் ஈடுபட்ட தொண்டர்களைப் பற்றியும் உணர்ச்சியோடும், மிகுந்த எழுச்சியோடும் தன் எழுத்தின் மூலம் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார், என்றென்றும் பெரியாரின் தொண்டரான அண்ணன் திருச்சி செல்வேந்திரன் அவர்கள்.

அதுபோலவே, 1957-ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தொகுத்து வழங்கியிருப்பது 60 ஆண்டுகளுக்கு முந்தைய சட்ட எரிப்பு போராட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது.

சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு இரத்தமும் சதையு மாய் வாழ்ந்து வரும் சட்ட எரிப்பு போர் வீரர்கள் பலரின் புகைப்படங்களை இத்தொகுப்பில் வெளியிட்டுள்ளோம். அதுபோலவே சாதி ஒழிப்புப் போராளிகளின் நினைவுகளையும் பதிவு செய்திருக்கிறோம்.

மறைக்கப்பட்ட பெரியாரையும், பெரியார் தொண்டர்களின் போராட்ட வரலாற்றையும் வரலாற்று ஆவணமாக வெளிவர முயற்சி மேற்கொண்ட கழகத் தோழர்கள் கா.கருமலையப்பன், ந.பிரகாசு, இரா.மனோகரன் ஆகியோரின் பணி பாராட்டுக்குரியவை.

கழகத் தோழர்களும் பெரியார் தொண்டர்களும் குறிப்பாக, தமிழர்களும் அறிந்து கொள்ளவேண்டிய அரிய வரலாற்றை வெளியிடுவதில் மகிழ்கிறோம்.

 

கு.இராமகிருட்டிணன்

கழகப் பொதுச்செயலாளர்

தந்தை பெரியார் திராவிடர் கழகம்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog