விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? - அணிந்துரை அல்ல ... தெளிவுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/vimarsanagalukku-aparpattavara-periyar
அணிந்துரை அல்ல ... தெளிவுரை

தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும், திராவிடர் இயக்கத்தைப் பற்றியும் விமர்சித்து ஆதாரமற்ற திரிபுவாதங்களையும், திசை திருப்பல்களையும் திட்டமிட்டு செய்து வரும் திசைமாறியவர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் மானமிகு கி.தளபதிராஜ் அவர்கள், அவ்வப்போது தக்க பதிலடியை மிகச் சிறப்பாக, நமது கழக ஏடுகளான 'விடுதலை', 'உண்மை ' போன்றவற்றில் எழுதியுள்ளார். அக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த அரிய நூல்!

ஏடுகளில் எழுதும்போது அது படித்து மறந்து போகக் கூடியவையாகவும், தேவைப்படும்போது தேடிக் கண்டு பிடிக்க முடியாத நிலையும் ஏற்படக்கூடும். அதனைத் தவிர்க்க அவற்றைப் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டு ஆவணப்படுத்துவதே அறிவார்ந்த முறையாகும்.

தந்தை பெரியார் உலகம் முழுவதும் பேசப்படும், தேவைப்படும் தத்துவஞானியாவார். அவரது ‘மண்டைச் சுரப்பை ' உலகம் பின்பற்றி வருகிறது.

எடுத்துக்காட்டாக, தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்த, எம்.ஜி.ஆர் அரசு ஆணை வெளியிட்ட போது, பெரியார் எழுத்துச் சீர்திருத்தம்' என்றே தலைப்பிடப்பட்டு, செயல் முறைக்கு இங்கு வந்ததோடு, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பயன்பாட்டிற்கும் வந்துள்ளது.

அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு மய்யம், ஆப்பிரிக்க கண்டத்தில் கானா நாட்டில் பெரியார் ஆஃப்ரிகன் பவுண்டேஷன், சிங்கப்பூரில் பெரியார் சமூக சேவை மன்றம், மலேசியாவில் (70 ஆண்டுகளாக) திராவிடர் கழகம் என்று உலக அளவில் பரவியுள்ளது.

அவர் கண்ட 'ஜாதி - மதச் சடங்குகள் அற்ற சுயமரியாதைத் திருமணம்' இங்கு சட்டமானதோடு, பற்பல நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது என்பதையும் அறிந்தே, ஆரியத்தின் பாராட்டுதலுக்கு ஆசைப்பட்டும், விளம்பர சடகோபம் தங்களுக்கு சாத்தப்படும் என்பதாலும், நம் இனத்தின் விபீடணர்களும், அனுமார்களும் ஆதாரமற்ற அவதூறுகளை வெட்டியும், ஒட்டியும், கட்டியும் கதைகளை அவிழ்த்துவிட்டுப் பார்க்கின்றனர்.

மயிரைச் சுட்டு கரியாக்க நினைக்கும் அந்த மந்த புத்தியர்களை நம்மைப் பொறுத்தவரை அலட்சியப்படுத்தினாலும், புதிய தலைமுறை இளைஞர்கள் அதற்குப் பலியாகிவிடக் கூடாது; உண்மைகள் போர்க்காலங்களில் தான் முதற்பலியாகும் என்றாலும் கூட, இந்த இனப் போர் காலத்திலும் அவை தொடருவதால் இத்தகைய மறுப்பும், தெளிவுரையும் ஆதாரப் பூர்வமாக அளிப்பது காலத்தின் கட்டாயம் ஆகிவிடுகிறது.

சிங்கத்தை சிறுநரி என்று கூறினால் அதை நம்புவோர் எப்படிப்பட்டவர்களோ, அந்த வர்க்கத்தினர் தான், பொய்யுடை பலரின் திட்டமிட்ட அவதூறுகளையும் நம்புகின்றனர். அந்த ஊதிய காற்றடைத்த பொய் பலூனை ஆதார ஊசியால் குத்தி, ஒன்றுமில்லாததாக்குகிறார் தோழர் தளபதிராஜ் அவர்கள்! பாராட்டுகிறோம்!

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல பெரியார். மாறாக வரவேற்பவர்!

தன்னையே விமர்சித்துக் கொண்டு (தனது பிறந்த நாளில்) கட்டுரை எழுதியவர். 'நான் மாறி விட்டேனா?' என்ற கட்டுரை ஒன்று போதாதா, எடுத்துக்காட்டுக்கு மின்மினிப் பூச்சிகள் மின்சார ஓட்டத்தை தடுத்து நிறுத்தி விடுமா? பேதையர்களுக்கு இது புரியாது.

இந்நூல் நிச்சயம் தூங்குகிறவர்களை எழுப்பும்! தூங்குவது போன்று நடிக்கும் பாசாங்குக்காரர்களை எழுப்பாது. அதற்கு எழுதியவர் எப்படிப் பொறுப்பாவார்?

'பெரியார் என்ற ஜீவநதி' என்றும் ஓடிக்கொண்டே இருக்கும்; அதில் குப்பைகளும், கூளங்களும் வீசி எறியப்பட்டாலும் அதனை அடித்து எங்கோ தள்ளிவிட்டு நதி ஓடிக் கொண்டிருக்கும். குப்பைக் கூளங்களால் நதியின் நீரோட்டத்தை நிறுத்தவா முடியும்?

 

09.08.2019                                                                                                                                                  - கி.வீரமணி,

சென்னை                                                                                                                                                    தலைவர்                                                                                                                                                                          திராவிடர் கழகம்

Back to blog