விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/vimarsanagalukku-aparpattavara-periyar
முன்னுரை

மனிதப் பற்றைத் தவிர வேறு எந்தப்பற்றும் எனக்கில்லை என்ற மானுடப் பற்றாளர் பெரியார், ஜாதி-மத, ஆண் பெண் ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ உலகு படைக்க விரும்பி வாழ்நாள் முழுதும் போராடிய சமூகப் போராளி!

'மண்டைச் சுரப்பை உலகு தொழும்!' என்றார் புரட்சிக் கவிஞர். பெரியாரின் கருத்துகள் இன்று பார்முழுதும் பரவிடக் காண்கிறோம். அதே வேளையில், மற்றொரு புறம் விபீஷணர்கள் பெரியார் மீதான அர்த்தமற்ற விஷமத்தனமான விமர்சனங்களை தொடர்ந்து வீசிக் கொண்டிருப்பதையும் புறந் தள்ளிவிட முடியாது. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல பெரியார். இந்நூலுக்கான அணிந்துரையில் தமிழர் தலைவர் குறிப்பிட்டுள்ளதைப்போல், விமர்சனங்களை வரவேற்றவர்.

பெரியார் மறைந்து நாற்பத்தைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. தமிழக சமூக அரசியல் களம் இன்றளவும் அவரைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது.

சிந்தனையாளர் - தத்துவ கர்த்தர் என்பதையெல்லாம் தாண்டி, பெரியார் ஒரு சமூகப் போராளி ! அவருடைய சிந்தனைகளும், கொள்கைகளும் அவரது இயங்கியலையொட்டியே எழுந்தவை. பெரியாரின் கருத்துகளை அவர் வாழ்ந்த, செயலாற்றிய காலச் சூழலோடு பொருத்தியே பார்க்க வேண்டும்.

சுயநலத்திற்கும், சுய விளம்பரத்திற்காகவும் அவரது கருத்துகள் திரிக்கப்படுவதையும், உள் நோக்கம் கற்பிக்கப்படுவதையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

“இராமசாமிப் பெரியார், உண்மையிலேயே ஒரு பெரியார் என்பதற்கும், ஒரு பெரிய சக்தி வாய்ந்தவர் என்பதற்கும் வேண்டிய ஆதாரங்கள் இருக்கின்றன” என டி.கே.சி என்றழைக்கப்பட்ட தமிழறிஞர் டி.கே.சிதம்பரநாத முதலியார் 1929ல் குறிப்பிட்டார்.

"ஓர் உண்மையான பெரியாருக்கு வேண்டிய குணங்கள் மூன்று. அவை: அவரைப்பற்றி உலகத்தார் தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டும். அவரது கொள்கைகள் எங்கும் கண்டிக்கப்பட வேண்டும். அவர் கடுமையாக வையப்படவும், சபிக்கப்படவும் வேண்டும். இத்தகைய மூன்று தன்மைகளையும் பெற்றவரே நமது பெரியார்!" என்றார்.

இந்த மூன்று தன்மைகளோடுதான் பெரியாரின் பொது வாழ்க்கையும் அமைந்தது. 'தன்னுடைய கொள்கைகள், எதிரிகள் காட்டிய எதிர்ப்புகளின் வழியாகவே மக்களைச் சென்றடைந்தது' என்றார் பெரியார். அதற்காகவே வசவுகளை அவர் வரவேற்றார். தன்னுடைய படத்தை கொள்கை எதிரிகள் செருப்பால் அடித்து எதிர்ப்பு தெரிவித்த போது கூட, குறைந்த விலையில் அதை அச்சிட்டு அனுப்பி வைப்பதாக அறிவித்தார் பெரியார்.

ஜாதி, சுயநலம், புகழுக்கு அடிமை, எளிதில் விலை போகும் உணர்வு என்ற நமது சமுதாயத்தின் பலவீனங்களை முழுமையாக உணர்ந்த அவர், புகழ்ச்சிகளை, பாராட்டுகளை நோக்கி என்றும் ஓடியதில்லை .

'மானமும் அறிவும் கொண்ட மக்களாக எனது சமுதாயத்தை மாற்றுவேன்' என்று சூளுரைத்துக் களம் புகுந்த பெரியார், அந்த இலக்கை நோக்கி சமூகத்தை அழைத்துச் செல்வதற்குத் தேவையான எந்த துணிவான முடிவுகளையும், ஆட்சிகளுக்கான ஆதரவு-எதிர்ப்புகளையும் சமரசமின்றி வெளிப்படுத்தினார். அவை முரண்பாடுகளாக எதிரிகளால் திசை திருப்பிக் காட்டப்பட்டபோதிலும், வரலாறு பெரியாரின் உண்மைத் தன்மையையும் நேர்மையையும் கல்வெட்டாக செதுக்கி வைத்திருக்கிறது.

பெரியார் காலத்தில் தொடங்கிய எதிர்ப்புகளின் கூக்குரல் இப்போதும் ஓய்ந்தபாடில்லை. தோற்றுப்போன எதிரிகள் புதிய புதிய பரிமாணங்களில் எதிர்ப்புகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். சாரம் ஏதுமற்ற அந்த அவதூறுகளை திரட்டி அதற்கான மறுப்புகளை உரிய தரவுகளோடு இந்த நூலில் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன்.

பெரியார் கொள்கை இலட்சியத்திற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, இந்த தள்ளாத வயதிலும் இளைஞரைப் போல் களத்தில் நிற்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அணிந்துரையும், ஏற்பும் இந்நூலுக்கு பெருமையும் வலிவும் சேர்த்திருப்பது கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். அதற்காக எனது வணக்கத்தையும் நன்றியையும் உரித்தாக்குகிறேன். பெரியாரைக் கொச்சைப்படுத்த முயலும் அவதூறுகளுக்கு எதிரான இந்த மறுப்பை இளைய தலைமுறை வரவேற்பதோடு ஆய்ந்து தெளிவுறும் என நம்புகிறேன்.

அன்புடன்,

கி.தளபதிராஜ்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்: 

1. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? - முன்னுரை

2. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? - பதிப்பாளர் உரை

3. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? - அணிந்துரை அல்ல ... தெளிவுரை

4. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? - பொருளடக்கம்

Back to blog