மொழிபெயர்ப்பாளர் முன்னுரை
பாரத நாட்டின் சிறந்த சிந்தனையாளரும், இலக்கிய கர்த்தாவுமான ராகுல் சாங்கிருத்யாயன், தன் வாழ்நாள் முழுவதும் அறிவுச் செல்வத்தைத் தேடி அடைந்து, அதை மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்காக அள்ளி அள்ளித் தந்தவர். அவரது அமர இலக்கியச் சிருஷ்டியான 'வால்காவி லிருந்து கங்கை வரை படித்த எவருடைய நினைவிலிருந்தும் அகலவே அகலாது. உலகில் மனித இனம் தோன்றியதிலிருந்து இன்றைய நாள் வரை மனித வாழ்வில் நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியை, இலக்கிய ரசனையுடன் மனத்தைக் கவரும் கதைகளாக வடித்துத் தந்த ராகுல்ஜியின் திறனை என்னவென்று புகழ்ந்துரைப்பது? அவர் இயற்றிய நூற்றுக் கணக்கான நூல்களில் அவருடைய அபாரமான மேதா விலாசமும், அளவிடற்கரிய அனுபவ அறிவும், எல்லையற்ற மக்கள் நல்வாழ்வு எண்ணமும் ஒன்றோடொன்று இழைந்தோடுகின்றன.
வாழ்க்கையின் இன்ப துன்பங்களை நுகர்வதற்காக உலகின் பல நாடுகளுக்கும் சென்று, பலதரப்பட்ட அனுபவங்களைப் பெற்ற ராகுல்ஜியின் மகோன்னத வாழ்க்கை நம் எல்லாருடைய ஆவலையும் தூண்டுவதாக அமைந்துள்ளதில் வியப்பேதுமில்லை. அதிலும் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளரான ராகுல்ஜியின் வாழ்க்கை வானவில்லின் வண்ணங்களைப் பெற்று ஜொலிக்கின்றது.
வாழ்க்கையில் பிடிப்பும், நம்பிக்கையும் வளர்க்கக்கூடிய ராகுல்ஜி சுயசரிதையினை 'என்.சி.பி.எச்' நிறுவனத்தார் வெளியிடுவது மகிழ்ச்சிக் குரியதாகும்.
சித்தூர் (ஆபி.)
18-1-1974 ஏ.ஜி. எத்திராஜுலு