'எல்லோரும் ஓர் குலம். ஆகவே அனைவரும் சேர்ந்து சமைக்கட்டும். இணைந்து பரிமாறட்டும். ஒரே பந்தியில் இருந்து உண்போம்' என்னும் சமத்துவக் கொள்கையைப் பொது மக்களிடையே நடைமுறைப்படுத்திக் காட்டிய வெற்றி வீரர் பெரியார் ஆவார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சமதர்ம இயக்கமாகவும் இயங்கிற்று. பகுத்தறிவுப் பணி எல்லோரையும் வாழ்விக்கும் பணியாகச் செயல்பட்டது. பகுத்தறிவு இயக்கத்தின் விளைவு சமதர்ம இயக்கம். தன்மான வாழ்விற்கு உறுதியான கடைக்கால் சமதர்ம வாழ்க்கை முறையாகும்.
எனவே பகுத்தறிவுச் சூரியனான பெரியாரைச் சமதர்ம ஞாயிறாகக் காண்பது நமது கடமை. அவர் பரப்பிய சமதர்ம ஒளியை மக்களிடம் காட்டுவது நம் பொறுப்பு.
பெரியாரின் பொதுத்தொண்டு நீண்டது. பன்முகங் கொண்டது; புரட்சிகரமானது; பயன்கருதாதது; சோர்வு அறியாதது; எதிர்நீச்சல் தன்மையது. எல்லோரும் நன்றாக வாழலாம், நல்லவராக வாழலாம் என்னும் கருத்துப் பயிரை விளைவித்த பண்ணையில் பெரியாரின் பங்கு மிகப்பெரிது; பரந்தது; ஆழமானது உயர்ந்தது.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் 1979 சூன் திங்கள் முதல் 1983, பிப்ரவரி வரை 'பெரியாரும் சமதர்மமும்' என்னும் தலைப்பில் 'அறிவுவழி' இதழில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'பெரியாரும் சமதர்மமும்' என்னும் நூலாக புதுவாழ்வுப் பதிப்பகம் மூலம் ஏற்கெனவே வெளிவந்துள்ளது. பெரியாரின் சமதர்மக் கொள்கையைப் பரப்புவதற்கும் பெரியார் ஒரு சமதர்மக்காரர் என்பதை இளந்தலைமுறையினர் அறிவதற்கும் உதவியாக இந்நூல் அமைந்துள்ளது.
திரு. நெ.து.சு. அவர்கள் பெரியாரின் பேச்சுகளை நேரில் கேட்டறிந்தவர். அவருடன் பழகியவர். அவருடைய எழுத்துகளைப் படித்தறிந்தவர். அவருடைய செயற்பாடுகளைத் தொடர்ந்து உற்றுநோக்கியவர். பெரியாரை முழுமையாக அறிந்தவர். ஆகவே அவருடைய உள்ளும் புறமும் உணர்ந்த வகையில் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார். அதுமட்டுமன்று பல வெளிநாடுகளுக்கும் குறிப்பாக சோவியத் நாட்டிற்கு ஏழு முறையும் சென்று வந்த அனுபவ வடிகாலாகவும் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. அரசுப் பணியில் கல்வித்துறை இயக்குநராக இருந்து ஆற்றிய கல்விப்பணியை நாடறியும். சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தபோது செயல்படுத்திய திட்டங்களையும் நாடறியும்.
பெரியாரின் சமகாலத்தவர் என்ற முறையிலும் அறுபதாண்டு கால அயராத உழைப்பினாலும் இந்நாட்டின் பண்பாட்டுச் சூழல்களை நன்கு அறிந்தவர் என்கிற வகையிலே சூழலை அறிந்து எழுதப்பட்டது இந்நூல். பண்பாடு - அரசியல் - சமுதாயச் சூழல்களை அனைவரும் எளிதில் புரிந்து தெரிந்து கொள்ளும் வகையில் தெளிவுற அறிந்து தெளிவுதர மொழிந்துள்ள திறம் அரிய முயற்சி.
இந்நூலைப் படிப்போர் பல்வேறு நிலையிலும் பெரியாரைப் பற்றியும் தமிழ்நாட்டின் அரசியல் சமுதாய நிலைகளையும் அறிந்து எளிய நிலையில் பின்பற்றும் வகையில் இந்நூல் எமது பதிப்பகத்தின் மூலம் இப்பொழுது மீண்டும் வெளிவந்துள்ளது. அறிவார்ந்த மானுடம் இதனைப் படித்து பயன்பெறும் என நம்புகிறோம்.
பதிப்பகத்தார்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: