புனா ஒப்பந்தம் புதைக்கப்பட்ட உண்மைகள் - வெளியீட்டுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/punaa-oppantham-puthaikkapatta-unmaigal 
நூல்வெளியீட்டு விழா (25-10-15) சென்னை.
வெளியீட்டுரை:

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கும் நூலாசிரியர்திரு.முருகு, இராசாங்கம் அவர்களே, திறனாய்வு செய்து அமர்ந்திருக்கும் திரு.சக்திவேல் அவர்களே, விழாவை சிறப்பிக்க வந்திருக்கும் திரு, குமரியனந்தன் அவர்களே, மற்றும் சிறப்பு விருந்தினர்களே எல்லோருக்கும் என்னுடைய வணக்கம், இன்றைக்கு இங்கு ஒரு முப்பெரும் விழா.

இன்று வெளியிடப்பட்டிருக்கும் புத்தகத்தில் "புனா ஒப்பந்தம் - புதைக்கப்பட்ட உண்மைகள்" நூலில் மிக அழகாக சில விஷயங்களை வெளிப்படுத்துகிறார், நூலாசிரியர்.

புனா ஒப்பந்தம் என்ற தலைப்பில் அந்த ஒப்பந்தத்தின் வரலாற்றினை மட்டும் நமக்கு தரவில்லை, நூலாசிரியர் ஒப்பந்தத்தின் சாராம்சங்களை ஒரு பக்கத்தில் முடித்துவிட்டார். ஆனால் இப்புத்தகத்தில் அடங்கியிருப்பது ஒரு சரித்திரம். அதாவது புனா ஒப்பந்தத்தின் சரித்திரம். அந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர்களின் மனப்போக்கு, ஒப்பந்தத்தில் பங்கு பெற்றவர் யார், யார்? எதற்காகப் பாடுபட்டார்கள்? என்பதை மறைவின்றி சொல்லும் புத்தகம். ஏன் மறைவின்றி என்று சொன்னேன் என்றால் ஏராளமான புதைக்கப்பட்ட உண்மைகளை வெளிப் படுத்தியிருக்கிறார், இப்புத்தகத்தின் நூலாசிரியர்.

திரு. சக்திவேல், அவருடைய திறனாய்வில் கூறினார். மிக அழகாக கூறினார்: மாறுபட்ட கருத்துக்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார் என்று.

மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் மாறுபட்ட கருத்துகளால் ஒருவரை ஒதுக்கிவிட்டு, ஒருவர் மேலே வரவேண்டும் என்பது சரியாக இருக்காது என்ற முறையில் நம் நூலாசிரியர் அவர்கள் இந்நூலின் மூலம் மிக அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார். திறனாய்வு வழியில் திரு.சக்திவேல் அவர்கள் இப்புத்தகத்தில் என்ன இருக்கிறது என்றும், நூலாசிரியர் இக்கட்டான சூழ்நிலைகளை எப்படித் தன் திறமையைக் காட்டி சமாளித்துள்ளார் என்பதனையும் எடுத்துக் காட்டினார். நூலைப் பற்றிப் பேச எனக்கு அவர் ஒன்றும் வைக்கவில்லை. இருந்தாலும் ஒரு சில வார்த்தைகள் சொல்லி நூலாசிரியரின் மனவலிமையையும், தைரியத்தையும் பாராட்ட விழைகிறேன்.

சுருக்கமாகச் சொன்னால் புனா ஒப்பந்தத்தின் போது மகாத்மா காந்தி அவர்கள் எவ்வாறு, எதற்காகப் பாடுபட்டார் என்றும், இருப்பினும் அவரை எப்படி ஒரு சாரார் குறை சொன்னார்கள் என்பதனையும், உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல் எடுத்துக் காட்டியுள்ளார். பிறரை குறை சொன்னால் தான் தனக்குப் புகழ் வரும் என்று நினைத்து சிலர் செயல்படலாம். ஆனால் உண்மையை மறைத்து, உண்மைக்கு முரணாகச் செயல்படுவது நியாயமல்ல. இருப்பினும் ஒரு சிலர் தன் சுயநலத்திற்காக அப்படிச் செயல்படுகிறார்கள், செயல்பட்டார்கள் என்பதை இந்நூல் ஆணித்தரமாக எடுத்துக்காட்டுகிறது.

ஆங்கிலேயரது பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியச் சிறுபான்மையினர் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள், அது மட்டுமல்ல சுதந்திர போராட்டமும் பல சமயங்களில் எப்படி வலுவிழந்து போனது என்பதை, மிக அழகாக விளக்கியிருக்கிறார், நூலாசிரியர். இருப்பினும் எப்படி ஒரு சில சிறுபான்மையினர் இந்த ஆங்கிலேயரின் சூழ்ச்சியினால் பயனடைந்தனர் என்பதைத் திறமையாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் கருப்பு இனத்திற்குப் பாடுபட்ட மகாத்மா, இந்திய நாட்டு மக்களுக்கு எவர் எந்த இனத்தைச் சார்ந்திருந்தாலும் எதிராகச் செயல்படுவார், மாட்டார் என்பதோடு நிறுத்தாமல் அவர் மீது ஒரு சில சிறுபான்மையினர் எப்படி அவதூறுகளைச் சுமத்தினர், அதுவும் உண்மைக்குப் புறம்பாக என்பதையும் மிகமிக ஆழமாக புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்துவர்களையும், முகமதியர்களையும் பின்பற்றி, தீண்டத்தகாதவர்கள் என்று குறைபட்டுக் கொள்பவர்கள் தங்களுக்கும் தனித்துவம் வேண்டும் என்றும், அதற்காகத் தாங்கள் இந்துக்களே இல்லை என்று கூறும் அளவிற்கு மனத்துணிச்சல் வாய்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதையும், இப்புத்தகத்தின் வாயிலாக நாம் அறிகிறோம். கூட்டிக் கழித்தால் காந்தி நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்டாரா, அல்லது அம்பேத்கரா என்பது இப்புத்தகத்தின் வாயிலாக எழும் கேள்வியும் பதிலும். அம்பேத்கர் தீண்டத்தகாதோர் என்று சொல்லும் ஒரு பகுதியினரின் வாழ்வுக்கும் அவர்களின் ஆற்றலுக்காகவும் பாடுபட்டாரே ஒழிய, நாட்டின் சுதந்திரத்தில் அவரின் பங்கு ஒன்றும் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறது இப்புத்தகம்.

புனா ஒப்பந்தத்தில் இந்த ஒரு பகுதியினர் எப்படி தங்களுடைய சமுதாய வளர்ச்சிக்கு மட்டும் பாடுபட்டு, தங்களுக்கு உண்டான தொகுதி மேம்பாட்டினை வளப்படுத்திக்கொண்டார்கள் என்பதும் அறிய வேண்டிய ஒன்று. சக்தி வேல் அவர்கள் சொன்னார்கள்: புனா ஒப்பந்தத்தின்படி 148 சீட்டுகள் அவர்கள் பெற்றார்கள் என்று. அம்பேத்கர், ஜின்னாவுடன் எப்படி கைகோர்த்து ஆங்கில அரசுக்கு உறுதுணையாக இருந்தார், அவர் எப்படி டெல்லி சட்ட சபையில் நுழைந்தார், போன்ற விவரங்கள் சரித்திரம் படித்த நமக்குப் புதுமையாக இருக்கிறது. எப்படியெல்லாம் சரித்திரங்கள் படைக்கப்படுகின்றன, மேலும் எப்படியெல்லாம் அவை மாற்றியமைக்கப் படுகின்றன, என்ற உண்மைகளும் இந்த நூலின் வாயிலாக நாம் அறிகிறோம்.

இப்படியே எடுத்து காட்டி இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். தான் சொல்லியிருப்பது யாவும் தன் சொந்த கருத்துக்கள் அல்ல என்பதோடு தான் சொல்லியன யாவும் ஆதாரத்துடன் சொல்லப்பட்டவை என அதற்கான மேற்கோள்களை எடுத்து முன் வைத்திருக்கிறார், நூலாசிரியர். உண்மை தெரிய ஒரு புத்தகம். மற்றவர்களால் இகழப்பட்ட காந்தி உண்மையிலேயே அப்படிப்பட்ட இகழ்ச்சிக்கு உரியவர் தானா என்பதை ஆராயும் இப்புத்தகம், அம்பேத்கர் எப்படித் தன் தகுதிக்குமேல் உயர்த்தப்பட்டார் என்பதையும், ஆதாரங்களோடு எடுத்துச் சொல்லும் ஓரு புத்தகம் இது. படித்து அனுபவித்து ரசிக்க வேண்டிய ஒரு நூல்,

ஏற்கனவே சொல்லியபடி திறனாய்விலே பெரும்பாலும் புத்தகத்தைப் பற்றிச் சொல்லப்பட்டு விட்டது; ஓரளவுக்கு நானும் சொல்லிவிட்டேன். அதனால் புத்தகம் இவ்வளவுதான் என்று எண்ணி, வாங்கிப் படிக்கும் எண்ணத்தை கைவிட்டு விடாதீர்கள். தவறாமல் ஒவ்வொருவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் பல இந்நூலில் உள்ளன. நாங்களும் இப்புத்தகத்தில் உள்ள பல விஷயங்களை மறைத்துத்தான் கூறியிருக்கிறோம். ஏனெனில் புத்தகத்தில் சொல்லப்பட்ட மறைக்கப்பட்ட உண்மைகள் யாவும் எங்களால் வெளியே சொல்ல முடியாது, நேரமின்மையால். அதனால் தயவு செய்து புத்தகத்தை வாங்கிப் படியுங்கள், உங்களைத் தெளிவுப்படுத்திக் கொள்ள.

இன்று இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த விழாக்குழுவினருக்கும், நூலாசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றியைக் கூறி, அமைதியாக இருந்து கேட்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்.

மேதகு. எஸ்.ஜெகதீசன்.

உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு)

Back to blog