Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

சமூகநீதி - முன்னுரை-1

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
 
முன்னுரை-1

1991 அக்டோபர் 14 ஆம் நாள். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் தேர்வாகி இருந்த நேரம். அது தொடர்பாகச் சென்னைக்குச் சென்றிருந்த போது எம் கொழுதகை நண்பரும் சென்னைப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவருமாகிய முனைவர் மா. செல்வராசன், அக்டோபர் இரண்டாம் நாள் 'உங்களையெல்லாம் அறிவாலயத்திற்கு வரச்சொல்லிக் கடிதம் எழுதி இருந்தார்களே ஏன் வரவில்லை?" என்று கேட்டார். எனக்கு வியப்பாகப் போய் விட்டது. 'எதற்காக வரச்சொன்னார்கள்' எனக் கேட்ட போது 'திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறக்கட்டளை தொடங்க இருந்த அஞ்சல்வழிக் கல்லூரிக்கான பாடங்களை வகுக்கவும் அது தொடர்பாகக் கலந்துரையாடவும் உங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்ததே' என்றார்.

அறக்கட்டளை தொடங்க இருந்த அஞ்சல்வழிக் கல்லூரிபற்றிச் செய்தித் தாள்களின் வழியாக நானும் அறிந்திருந்தேன். என்றாலும் அக்கல்லூரிக் குழுவில் எம்மையும் சேர்ந்திருப்பது பற்றி அறிந்ததும் எனக்கு இன்ப அதிர்ச்சிதான்.

அடுத்த நாள் (15.10.91) என்னை அழைத்துக் கொண்டு அறிவாலயத்திற்குச் சென்றார். அங்குக் கழகத் தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் பேராசிரியர், திரு. முரசொலி மாறன், பேராசிரியர் முனைவர் நன்னன் முதலானோர் இருந்தனர். அங்குச் சென்ற பின்னர்தான் அப்பாடத் திட்டக் குழுவில் சமூகநீதி பற்றி எழுதும் பொறுப்பை எனக்கும் என் துணைவியார்க்கும் அளித்திருக்கின்றார்கள் என்பது தெரிந்தது. என் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

சுயமரியாதைக் கொள்கையை ஏற்றிருந்த குடும்பத்தில் பிறந்ததால் வளர்ப்பிலும் அப்படியே.

பேசக்கற்றுக் கொடுக்கும் போதே பெரியாரைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தார்கள்.

இப்போது கூட நன்றாக நினைவிருக்கிறது. பிள்ளைப் பருவத்தில் கொள்ளிடத்து மணலில் விளையாடிக் கொண்டிருந்த என்னிடம் உறவினர் ஒருவர்,

'நீ என்ன கட்சி' எனக் கேட்க, நான் பெரியார் கட்சி எனப் பதில் கூற, அவர், 'இல்லை நாம் திராவிடர் கழகம்' என்று திருத்த நம்மிடம் இவர் ஏதோ தவறாகச் சொல்கிறார் என்று நான் ஓவென்று அழ, கூட இருந்த என் சிறிய தந்தையார் திரு. மு. இராசப்பா அவர்கள் பெரியார் கட்சி என்றாலும் திராவிடர் கழகம் என்றாலும் ஒன்றுதான் என்று அமைதிப்படுத்த, ஏதோ - எனக்கு எல்லாம் புரிந்து விட்ட பாவனையில் நான் அழுகையை நிறுத்திய அந்த நிகழ்ச்சி - கொள்ளிடத்து ஊற்று நீரின் இனிமையாய்...

தொடக்கப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நாள்களில் அண்ணாவின் 'திராவிட நாடு' இதழில் தம்பிக்கு வரும் கடிதங்களை என்னைப் படிக்கச் சொல்லிக் கேட்டும், படிக்க மட்டுமே தெரிந்திருந்த எனக்கு விளக்கங்களைச் சொல்லியும் தெளிவுபடுத்திய என் தந்தையார் திரு.மு.கந்தசாமி அவர்களின் ஆர்வம்......

- பத்து வயதிலேயே தி.மு.க. நடத்திய படிப்பகத்திற்குச் செல்லும் பழக்கமாய் மாற்றியது.

ஆம். சிற்றூர்களிலும் கூட தி.மு.க. கிளைகள் நடத்திய படிப்பகங்கள், எம் போன்றோரை மானமும் அறிவும் உள்ளோராய் மாற்றின. அப் படிப்பகங்கள் வீரர்களை உருவாக்கும் பாடி வீடுகளாய்ப் பணியாற்றின. ஒவ்வொரு படிப்பகத்திலும்தான் எவ்வளவு இதழ்கள். கவிஞர் கண்ணதாசன் பாடியதைப் போல,

மன்றம் மலரும் முரசொலி

கேட்கும் வாழ்த்திடும் நம்நாடு – இளம்

தென்றல் தவழ்ந்திடும் தீந்தமிழ்

பேசும் திராவிடத் திருநாடு.

அறப்போராய், போர்வாளாய் - அன்னையாய், திராவிடனாய், தென்னகத்தில் மாலைமணியாய் இனமுழக்கம் செய்த அவ்வேடுகள் பல்துறை அறிவின் ஊற்றுக்கண்கள்.

மாலை நேரங்களில் நடந்த பொதுக்கூட்டங்கள் நெஞ்சில் உணர்வையும் கருத்தில் தெளிவையும் ஊட்டின. பிற்காலத்தில் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் நாங்கள் பெற்ற பட்டங்கள் எமக்குப் பதவிகளை வழங்கினாலும், எம்மை மனிதர்களாக மாற்றியவை அந்தப் படிப்பகங்களும் பொதுக்கூட்டங்களுமே. ஆம். படிப்பு வேறு; அறிவு வேறு என்பதை உணர வைத்தது, அன்பில் தி.மு.க. கிளை நடத்திய படிப்பகம்தான்.

பள்ளிகளில் நடக்கும் கவிதை ஒப்புவிக்கும் போட்டிகள், புரட்சிக் கவிஞரின் பாடல்களும், கலைஞரின் உரைநடைக் கவிதைகளும் அரங்கேறும் மேடைகளாயின.

அதன் விளைவாய்ப் பள்ளிப் பருவத்திலேயே தேர்தல் பிரச்சாரம், சுவரொட்டிகளைச் சொந்தமாய் எழுதி ஒட்டுவது. அதனால் வம்புகளை விலைக்கு வாங்குவது…

பின்னர் குடந்தைக் கல்லூரியில் மாணவர்த் தலைவனாய் இருந்து 1965இல் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம். அதனால் பல்வேறு பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்குகள்.

மாணவர் தி.மு.க.வைத் தோழர்களுடன் சேர்ந்து தொடங்கியது. அதன் விளைவால் ஏற்பட்ட அடிதடிகள். எங்களைப் பார்க்க வந்த காரணத்தால் நகரச் செயலாளர் அன்பிற்குரிய திரு. இரா. துரை (பின்னாளில் குடந்தை நகர் மன்றத் துணைத் தலைவரானார்) அவர்கள் மீது காவல் துறை தொடுத்த பொய் வழக்கு.

சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 1968இல் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் புகாரில் ஒருநாள் கவிதைக்காக அறிஞர் அண்ணா அவர்களிடம் கவிஞர் பட்டமும் தங்கப் பதக்கமும் பெற்றது.

1973இல் தந்தை பெரியாரின் மறைவிற்குப் பின் திராவிடர் கழகத்தில் முழுநேரப் பேச்சாளர்களாய், நானும் என் துணைவியும் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சென்று ஆர்வத்தோடு அவர் கொள்கைகளைப் பரப்பியது. இளைஞர்களுக்குப் பயிற்சி முகாம்களில் நடத்திய கொள்கை வகுப்புகள்.....

என் துணைவியாருக்குப் பெரியார் பேருரையாளர் பட்டம் வழங்கிப் பாராட்டியதுடன் 1982இல் திருச்சியில் நடந்த திராவிடர் கழக மாநில மாநாட்டையும் நடத்துகின்ற பொறுப்புகளை முழுமையாக ஒப்படைத்த திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திரு. கி. வீரமணி அவர்களின் அன்பும் நம்பிக்கையும்.....

தந்தை பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் கருவூலமாகத் தொகுக்கும் பணியில் அண்ணன் திரு. ஆரோக்கியசாமி அவர்கள் உட்பட 40 தோழர்களுடன் இரவு பகல் பாராது 15,815 பக்கங்கள் எழுதி முடித்ததும், நாங்கள் எழுதியவற்றையெல்லாம் ஒரு குழந்தையைப் போல் பார்த்துப் பார்த்துப் பூரித்த புலவர் இமயவரம்பனின் அமைதியான ஆர்வப் பெருக்கும்.... பெரும்புதையலைத் தேடி எடுத்தவன் ஒவ்வொரு பொருளையும் எடுத்து எடுத்து மகிழ்வதைப் போல, ஒவ்வொரு பக்கத்திலும் பெரியாரின் முகத்தையே கண்டு வியந்த தோழர் இரத்தினகிரியின் அயரா உழைப்பும்....

இப்படி ஒவ்வொன்றாய் விழுப்புண்ணின் தழும்புகளைத் தடவும் போதெல்லாம் காட்சிகளாய் விரியும் போர்க்களத்து நினைவுகளாய்....

1991ஆம் ஆண்டு. ஆம். தமிழின உணர்வாளர்களின் சிறகுகளை முறித்த ஆண்டு. பழியோரிடமும் பாவம் ஓரிடமுமாய்ப் பரிதவிக்கவிட்ட ஆண்டு.

தேர்ந்த திறமைமிக்க மாலுமியின் தலைமையில் இயங்கிய தி.மு.க. என்னும் மாபெரும் கப்பலின் பயணத்தையே ஒத்திப் போடச் செய்த கடற் சூறாவளியில் இந்தச் சின்னஞ் சிறிய பாய்மரப் படகு மட்டும் தப்பித்து விடுமா என்ன?

சமூகநீதிக்காக முதன் முதலில் எழுதப்பெற்ற ஆய்வுச் சுருக்கம் அந்தச் சூறாவளியில் காணாமற் போய்விட்டது. பின்னர் மீண்டும் எழுதிப் பேராசிரியர் நன்னன் அவர்களிடம் காட்டிய போது அவர், திரு முரசொலி மாறன் அவர்களிடமும் கலந்து பேசி விடுங்கள் என்றார். ஆய்வுச் சுருக்கத்தைப் படித்த திரு. முரசொலி மாறன், சிறப்பாக உள்ளது. அதை அப்படியே பத்துப் பாடங்களாக விரிவாக்கி வரையறுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் சாதிகளின் தோற்றம் குறித்துக் கொஞ்சம் ஆழமாகவும் நடுவுநிலையோடும் நல்ல முடிவுகளை நிலைநாட்டுங்கள் என்றும் கூறினார்.

அவர் அவ்வாறு கூறியது எம் ஆய்வுப் பார்வையைச் சற்றுக் கூர்மையாக்கியது. சாதிகளின் தோற்றம் பற்றி வெளியான அறிஞர்களின் நூல்களை விட மிகப் பெரிய நூல் ஒன்று எங்கள் பார்வையிலிருந்து தப்பிப் போய் இருப்பதைக் கண்டோம். அம்மிகப் பெரிய நூல் தமிழ்ச் சமூகமே என்பதையும் உணர்ந்தோம். அப்போதுதான் சீனத் தலைவர் அறிஞர் மாவோ தம் தோழர்களிடம், 'மக்களிடம் செல்லுங்கள்: மக்களிடமே கற்றுக் கொள்ளுங்கள்' (Go to the people and learn from the people) என்று வலியுறுத்தியதன் நுட்பத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே சமூகநீதி பற்றிய இந்நூலில் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வும் கொஞ்சம் கூடுதலாகவே இடம் பெற்றுள்ளது. சமூகநீதி பற்றி ஆராய்கின்றபோது சமூகவியல் பற்றிய ஆய்வு இன்றியமையாத ஒன்றல்லவா?

அஞ்சல்வழிக் கல்லூரி தொடங்கி ஓரிரு பாடங்கள் வெளிவந்திருந்த நிலையில் மீண்டும் ஒருமுறை திரு. முரசொலி மாறன் அவர்களைச் சந்தித்த போது அவர் 'பாடங்கள் சிறப்பாக உள்ளன. எனினும் நடை இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்தால் நல்லது' என்று அவரிடம் சிலர் கூறியதாகவும், தம்மாலும் 'இதற்கு மேல் எளிமையாக எழுத முடியவில்லையே' என்றும் சொல்லிச் சிரித்தார். அதற்கு நான், 'இந்த இயக்கத் தொண்டர்களின் புரிந்து கொள்ளும் திறன் பற்றி நீங்கள் ஐயுற வேண்டாம். நெருக்கடி நிலை இருந்த போது கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதிய கடிதங்களின் நுட்பங்களையே புரிந்து செயல்பட்டவர்கள் இவர்கள். எனவே, நாம் இப்போது எழுதுவது போலவே எழுதலாம். அவர்களே ஒரு முறைக்கு இருமுறை படித்தால் போதும். எளிமையாக விளங்கிவிடும். அப்படித் தேவைப்பட்டால் பல்கலைக் கழகங்கள் அஞ்சல் வழிக் கல்லூரி மாணவர்கட்கு நடத்தும் தொடர்பு வகுப்புகளைப் போல நாமும் நடத்தி மாணவர்களுக்குத் தெளிவு படுத்தலாம்' என்று கூறி வந்தேன்.

இந்நிகழ்ச்சி நடந்த ஒருசில நாள்களில், எம் உறவினர் ஒருவர் தினகரன் (திருச்சிப் பதிப்பு) நாளிதழ் ஒன்றைக் கொண்டு வந்து அதில் புதிதாய்த் தொடங்கி இருந்த 'இன்று ஒரு தகவல்' என்ற பகுதியில் வெளிவந்த கட்டுரை ஒன்றைக் காட்டி இந்தக் கட்டுரை மிகவும் சிறப்பாக உள்ளது பாருங்கள் என்றார்.

வாங்கிப் படித்த எனக்குப் பெரும் வியப்பு. திராவிட மறுமலர்ச்சி மாமன்றத்திற்காக நாங்கள் எழுதி, அண்ணா அறிவாலயம் இதழில் வெளி வந்திருந்த சமூகநீதிப் பாடத்தை அப்படியே ஒரு சொல்லைக் கூட மாற்றாமல் ஒரு தோழர் தம் பெயரில் வெளியிட்டிருந்ததுதான் என் வியப்பிற்குக் காரணம். பின்னர் தினகரன் நாளிதழோடு தொடர்பு கொண்டு கேட்ட போது அக்கட்டுரை தினகரனின் அனைத்துப் பதிப்புகளிலும் வெளிவந்தது என்றும் கூறினார்கள்.

அடுத்தவர் எழுதியதைத் தம் பெயரில் வெளியிட்ட அச்செயல் கண்டிக்கத் தக்கது என்றாலும் யாம் எழுதிய பாடம் பல்லாயிரக் கணக்கானவர்களைச் சென்றடைந்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சிதான் ஏற்பட்டது. மேலும் ஒரு நாளிதழின் படிப்பாளிக்கு எளிதில் விளங்கும் செய்தி, ஓர் இயக்கத் தொண்டனுக்கு ஒன்றும் கடினமாக இருக்காது என்ற எம் நம்பிகையும் இதனால் உறுதியாயிற்று.

இவ்வாறு எம் அன்றாடப் பணிகளுக்கும் ஆய்வுப் பணிகளுக்கும் இடையே சமூகநீதிக்காகப் படிப்பதும் எழுதுவதுமாக இருந்த போதுதான் அடுத்தடுத்துப் பல துன்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் எம்மை அலைக்கழித்தபடி இருந்தன. தேள் கொட்டித் துடித்துக் கொண்டிருந்த ஒருவன் வேலால் தாக்கப்படும் போது அவன் தேள் கொட்டிய வலியை மறந்து விடுவான் அல்லவா? அதைப்போலவே வரும் துன்பம் ஒன்றைவிட ஒன்று பெரிதாக இருந்ததால், துன்பங்களே ஒன்றில் ஒன்று புதைந்து போயின. அத்துன்பத்தின் இறுதி வடிவமாக வந்தது தான் தடா என்னும் கொடும் பழி. காரணமே இல்லாமல் நான் தியாகி ஆக்கப்பட்டேன் ஐந்து திங்களுக்கும் மேலாக விசாரணைக் கைதியாகச் சென்னை நடுவண் சிறையில்…

சிறையில் நிறைய எழுதவும் படிக்கவும் முடியும். எனக்கும் முடிந்தது என்றாலும் சமூகநீதி என்னும் இவ் ஆய்வுரைக்குத் தேவையான நூல்கள் சிறையில் கிடைக்காத்தாலும் திருச்சிக்கும் சென்னைக்குமாய் அலைவதே என் துணைவியாருக்கு வேலையாய்ப் போனதாலும் எம்மால் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுத இயலாது போய்விட்டது. நம்மால் திராவிட மறுமலர்ச்சி மாமன்றத்தின் பிற பாடங்களும் உரிய நேரத்தில் வெளிவர முடியாது உள்ளதே என்ற வருத்தம் என்னைப் பேரளவில் உறுத்தியது. எனினும் தேவைப்பட்ட ஒருசில நூல்களை நண்பர்கள் கொடுத்து அனுப்பி வைத்ததால் எழுத வேண்டிய பாடங்களுக்கான குறிப்புகளைச் சிறையிலேயே எடுத்துக் கொள்ள முடிந்தது. அந்த வகையில் எமக்குப் பேருதவி புரிந்தவர்கள் எம் அருமைச் செல்வன் திரு பகத்சிங்கும் அவர்தம் தோழர்களும் ஆவர். மகள் பாவையும் அவர்தம் தோழியரும் ஆற்றிய பங்களிப்பும் மறக்க முடியாதன.

சரிந்த முந்தானையைச் சரி செய்ய விரையும் பெண்ணின் கைபோல விரைந்து வந்த எம் அருமை நண்பரும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரும் ஆகிய திரு. பொன்னிறைவன், நல்லறிவாளர்கள் என் சகலரும் பேராசிரியருமாகிய திரு. கு. இரா. இளங்கோவன், பெரியார் ஈவெரா கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் வே. இராமசாமி ஆகியோர் புயலில் சிக்கிய கப்பலைக் காக்கும் நங்கூரமாய்த் துணை நின்றார்கள்.

இந்தச் சூழலில் எம் துன்பங்களை நீக்கும் மருந்தாக இக்கட்டுரைப் பணி அமைந்தது. அடுக்கிய துன்பம் ஆயிரம் வரினும் அவற்றால் கொள்கையாளர்கள் சிதைந்து விட மாட்டார்கள் என்பதை எடுத்துக் காட்ட இந்நூலையே சான்றாக்க விரும்பினோம். இந்த எம் விருப்பத்திற்கு இசைவு நல்கிய திராவிட மறுமலர்ச்சி மாமன்றத்தின் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள், இயக்குநர் திரு. முரசொலி மாறன், இந்நூலுக்கு நல்ல அணிந்துரைகளை நல்கிய இனமானப் பேராசிரியர் திரு. க. அன்பழகனார், மறுமலர்ச்சி மாமன்றத்தின் முதல்வர் பேராசிரியர் முனைவர் மா. நன்னன் ஆகியோர் எம் நன்றிக்கு உரியவர்கள்.

நூலாக்கப்பணி தொடங்குவதற்கு முன்பாகப் பாடங்கள் அனைத்தையும் படித்துத் தேவையான திருத்தங்கங்களைச் செய்து தந்த தஞ்சைப் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் எம் அன்புக்குரிய நண்பர்களுமாகிய திரு. பெ. மருதவாணன், குப்பு வீரமணி அவர்களுடன் பேராசிரியர் முனைவர் ஆ. நாராயணசாமி, சென்னைப் பல்கலைக் கழக கிறித்துவத் தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியர் சூ. இன்னாசி, இந்நூலை அழகிய முறையில் அச்சிட்ட தாமரை எதிர்ப்பதிவு அச்சக உரிமையாளர்கள் அச்சுப் பணியில் ஓய்வின்றியும் ஆர்வத்தோடும் பங்கு கொண்ட பாவேந்தன் ஈடுபாட்டோடு தட்டச்சு செய்த அருமைச் செல்வர் முரளி, நூலின் மையக் கருத்தை தம் வண்ணத் தூரிகையில் வெளிப்படுத்திய ஓவியச் செல்வர் திரு. மருது, மெய்ப்புத் திருத்தம் செய்து உதவிய தமிழ்த்தந்தி சிவலிங்கனார் ஆகியோருக்கும் எம் நன்றி.

சமூகநீதி, இட ஒதுக்கீட்டின் வரலாற்றை மட்டும் விளக்குவது அன்று. மாறாக ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் எழுச்சியையும், எழுச்சிக்கான உள்ளடக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இன்றைய அரசியலின் மய்ய ஓட்டமாய் அமைந்து விட்ட சமூகநீதி எனும் கோட்பாடு அரசியல், சமூகவியல், வரலாற்றியல் என்னும் பல்துறைகளைக் கொண்டது. அத்துறைகள் சார்ந்த எதிர்கால ஆய்விற்கு இந்நூல் பயன்படுமானால் அது எம் உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி.

மனிதம்                                                                                                                                         க. நெடுஞ்செழியன்

திருச்சி - 21                                                                                                                                                       08.03.96

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு