சமூகநீதி - முன்னுரை-2
எழுத்தாளன் நன் நூல்களைத் தானே வெளியிடக் கூடாது. இதற்கு நாங்களே எடுத்துக்காட்டு. சமூக நீதியின் முதற் பதிப்பு வெளிவந்த கொஞ்ச நாள்களிலேயே இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். இடையில் பிற ஆய்வுகளில் ஈடுபட வேண்டியிருந்ததால் இரண்டாம் பதிப்பு தள்ளிப் போனது. இரண்டாம் பதிப்பு வெளி வந்தவுடன் மூன்றாம் பதிப்பிற்கான சூழல் ஏற்பட்டது. ஆயினும் பல்வேறு காரணங்களால் இரண்டாம் முயற்சியும் தள்ளிப் போனது. இடையில் பலரும் இந்நூலைக் கேட்டு மடல் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொண்ட போதுதான் மூன்றாம் பதிப்பின் தேவை கருதி அம்முயற்சியில் இறங்கினோம்.
குமுக வரலாற்றையும் இடஒதுக்கீட்டு வரலாற்றையும் இணைத்து இந்நூலை உருவாக்கும் வகையில் எழுதியிருந்த வரைவுருவின் அடிப்படை மாறாமல் இந்நூலை எழுதத் துணை நின்றவர் மேனாள் நடுவண் அமைச்சர் முரசொலி மாறன் அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய அஞ்சல் வழிக் கல்லூரிக்கான பாடங்களை எழுதி அவரிடமே நேரில் சந்தித்துக் கொடுப்பேன். அப்படி ஒருமுறை சந்தித்தபோது சமூகநீதியைப் போலவே இந்தி எதிர்ப்பு வரலாறும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அப்பாடப் பகுதி வெளிவராமல் இருந்ததால், எங்களை எழுதுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு நான், சமூகநீதி பற்றிய பாடங்கள் உங்களிடம் ஒரு எதிர்பார்ப்பினை உருவாக்கிவிட்டன. அதனால் இதை எழுதி முடிப்பதில் முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. முதல் பிரிவு மாணவர்களுக்கான பயிற்சி முடிந்து அடுத்து மாணவர்களைச் சேர்க்கும் போது இந்தி எதிர்ப்பு வரலாற்றை எழுதுவோம் எனக் கூறினேன். பின்னர் அவரே இந்தி எதிர்ப்பு வரலாற்றை எழுதத் தொடங்கினார். மிகுந்த கருத்துச் செறிவுடன் அமைந்த அந்த வரலாறு முதல் பாடத்தோடு நின்றுவிட்டது. அத்துடன் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவந்த அந்த அஞ்சல் வழிக் கல்லூரியும் செயல்படாமல் இருப்பது மாபெரும் இழப்பாகும்.
இன எதிரிகளின் போர் உத்திகள் மாறிக் கொண்டே வருகின்றன. இச்சூழலில் இன இழிவைத் துடைக்க வந்த இயக்கங்களும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டாக வேண்டும். இஃதோர் வரலாற்றுக் கட்டாயம். தலைமையும் தொண்டர்களும் எப்படி இருக்க வேண்டும்? ஒளவையார் பாடுவார்; அதியனின் வீரர்கள் மிகவும் இளையவர்களாம். ஆனாலும் அடிக்கின்ற கோலுக்கு அஞ்சாது சீறிப் பாயும் அரவைப் போல எதிரிகளைத் தாக்கி அழிக்க வல்லவர்களாம். அப்படிப்பட்டவர்களின் தலைவனாகிய அதியன் எப்படிப் பட்டவன்? பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள முரசுகளில் காற்று மோதுவதால் அதிர்வு ஏற்படுமே! அந்த அதிர்வைக் கேட்ட மாத்திரத்திலேயே எதிரிகளின் பகை முரசோ எனப் போருக்கு ஆர்த்தெழும் இயல்பினனாம். இதோ பாடல்.
எறிகோ லஞ்சா அரவி னன்ன
சிறுவன் மள்ளரு முளரே அதாஅன்று
பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அதுபோ ரென்னு மென்னையு முளனே
(புறம் 89:5-9)
அந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள இந்நூல் பயன்படும் என நம்புகின்றோம். இந்நூலைப் பதிப்பிக்க முன்வந்த தம்பி தி. சிற்றரசுக்கும், திராவிட இயக்க ஆய்வாளர் திரு. க. திருநாவுக்கரசுக்கும், மெய்ப்புத் திருத்தம் செய்து உதவிய பேராசிரியர் க. நாராயணசாமி அவர்கட்கும் எம் நன்றி! முதல் இரு பதிப்புகளையும் வரவேற்றதைப் போலவே இப்பதிப்பையும் அறிஞருலகு வரவேற்கும் என நம்புகிறோம்.
இடம்: திருச்சிராப்பள்ளி க. நெடுஞ்செழியன்
நாள்: 11.10.2007 இரா. சக்குபாய்