பெரியாரைக் கேளுங்கள் - முன்னுரை
பெரியாரின் கொள்கைகள் நம் இனத்தார்க்கு மிகவும் தேவையானவை என்பதினும் இன்றியமையாதவை என்னலே மிகப் பொருத்தமானது. அக் கொள்கைகளைப் படித்தும் கேட்டும் புரிந்து கொண்டும் வாழும் வாழ்வே பெரியாரின் பெருநெறி எனப்படுகிறது. யாம் பெரியாரின் பெருநெறிபிடித் தொழுகுவதில் வழுவாமலிருக்கவே விரும்பியும் முயன்றும் வென்றும் வந்துள்ளோம். கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக யாம் அந்நெறி நின்று அதனை நன்கு துய்த்துப் பயன் மிகக் கண்டுள்ளோம். எம் குடியில் (நன்னன்குடி) இப்போது யாம், எம் வாழ்க்கைத் துணைவர் என இருவர், எம் மகளிர் இருவர், அவர்தம் துணைவரிருவர், எம் பெயரன், பெயர்த்தி என இருவர் அவர்தம் துணைவரிருவர், கவின், வினையன் என்னும் கொள்ளுப் பெயரிருவர் ஆகப் பன்னிருவர் உள்ளோம்.
நோபல் பரிசு வாங்கக் கூடியவன் என எதிர் பார்க்கப்பட்ட எம்மகன் அண்ணல் மறைந்து விட்டான். அவன் மகளாகிய மலர் எம் குடியோடு இணைந்து வாழவில்லை. இக் குறை தவிர நன்னன்குடி கவலையோ துன்பமோ இல்லாமல் மகிழ்ச்சியாகவும் பெருமையோடும் ஒற்றுமை யோடும் கூடி வாழ்கிறது. எம் குடி போல் ஒன்றுபட்டும் அறிவோடும் உவப் போடும் வாழும்குடிகள் எத்தனை இருக்கக் கூடும்? இதற்குக் காரணம் யாம் பெரியாரின் பெருநெறி பிடித் தொழுகலே. ஆகவே யாம் பெற்ற இப் பேற்றைப் பெறுக இவ் வையகம் எனும் நன்னோக்கினால் உந்தப்பட்டுள்ள யாம் அந் நன்னெறியைப் பரப்ப எண்ணினோம்.
நம் நாட்டில் மிகுதியாக விளையும் நெல்லே நம் மிகுதியான உணவுப் பொருளுமாகும். அதனை அரிசியாக்கி அவ் வரிசையைச் சமைத்து உண் கிறோம். அரிசி ஒன்றாயினும் அதனால் ஆக்கப்படும் உணவு ஒன்றன்று. அதனை நாம் சோறு, குழம்புச் சோறு, மோர்ச் சோறு, மோர்க் குழம்புச் சோறு, எலுமிச்சைச் சோறு, எள்ளுச் சோறு, புளிச் சோறு, கருவேப்பிலைச் சோறு என்பன போலவும் இட்டளி, தோசை, இடியாப்பம், உப்புமா, கொழுக் கட்டை என்பன போலவும் பற்பல வகையாக ஆக்கி உண்டும் தின்றும் மகிழ்கிறோம். அது நம் உடலுக்கும், அதனால் ஏற்படும் எல்லா நலன் களுக்கும் நல்லுதவியாக அமைந்துவிட்டது.
அவ்வாறே பெரியாரின் கொள்கைகளை யாமும் பல்வேறு வகைகளாக வகுத்துக் கொண்டு பல்வேறு வடிவங்களின் மூலம் பரப்பி வருகிறோம். அவற்றில் ஒன்றே இத் தொகை நூல் வெளியீடு. பெரியாரோடு நீங்கள் நேரில் உரையாடுவது போன்று இது உங்களுக்கு உதவும். உங்கள் அய்யம் முதலிய வற்றை யெல்லாம் அய்யா பெரியாரிடம் நேரில் கேட்டுப் பயன் கொண்டு சிறந்து நல்ல முழுமனிதராக நீங்கள் வாழ்வீர்களாக என மனமார வாழ்த்துகிறோம்.
முயல்க! முழுவிழுப்பயன் கொள்க.
மா. நன்னன்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: