மொழிப்போர்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/mozhippor


 
இந்தி, இங்கிலாந்து, இந்திரா

தமிழக மக்கள் மூன்று முக்கிய விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். மூன்றுமே ஆதிக்கத்துக்கு எதிராக நடந்தவை. இங்கிலாந்திடம் இருந்து விடுதலை வேண்டி நடந்தது சுதந்தரப் போராட்டம். இந்தியிடம் இருந்து விடுதலை வேண்டி நடந்தது மொழிப் போராட்டம். இந்திரா விடம் இருந்து விடுதலை வேண்டி நடந்தது நெருக்கடி நிலைப் போராட்டம்.

மூன்றுமே தியாகங்களால் நிரம்பிய போராட்டங்கள் என்ற போதும் மற்ற இரண்டு போராட்டங்களில் இருந்து மொழிப் போராட்டம் மட்டும் ஒரு முக்கிய விஷயத்தில் வேறுபட்டு நிற்கிறது. சுதந்தரப் போராட்டம் 1947 ஆம் ஆண்டோடு முடிந்து விட்டது. நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்துக்கு 1977ல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ஆனால், மொழிப் போராட்டம் மட்டும் இன்னமும் முற்றுப்பெறவில்லை. 1938 ஆம் ஆண்டு தொடங்கிய மொழிப்போராட்டம் ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளில் பல கட்டங்களாகத் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது.

மொழிப்போர் என்பது இந்தி மொழியைப் பேசுகின்ற வட இந்தியர்களுக்கு எதிராகத் தமிழர்கள் தொடுத்த ஆயுதப் போர் அல்ல; இந்திய அரசுக்கு எதிராக தமிழக மக்கள் தொடுத்த யுத்தம் அல்ல. தமிழர்கள் மீது இந்தி மொழியைத் திணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு வெவ்வேறு காலகட்டங் களில் எடுத்த கடுமையான நடவடிக்கைகளுக்கான எதிர்வினை களின் தொகுப்பே மொழிப்போர்!

தமிழர்கள் நடத்திய இந்த மொழிப்போர், இன்னொருவருடைய நிலத்தையோ, பொருளையோ அபகரித்துக் கொள்வதற்காக நடத்தப்பட்டது அல்ல; தம்முடைய தாய் மொழியான தமிழ் மொழியைக் காப்பாற்றும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. இந்தியின் ஆதிக்கத்தில் சிக்கித் தமிழ் சிதைந்து விடாமல் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்ட உரிமைப் போர்!

இந்தியாவில் சுமார் மூவாயிரத்து முந்நூறு மொழிகள் புழக்கத் தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவற்றில் பத்தாயிரம் அல்லது அதற்கு மேற்பட்டோர் பேசக்கூடிய மொழிகள் என்று பார்த்தால் அவை முந்நூறுக்கும் குறைவானவை. என்றாலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை யில் இடம் பெற்றுள்ள மொழிகளின் எண்ணிக்கை வெறும் பதினைந்து மட்டுமே. இந்த பதினைந்து மொழிகளைத்தான் சுமார் தொண்ணூறு சதவிகிதம் பேர் பேசுகின்றனர். எஞ்சிய மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம்.

இத்தனை மொழிகள் இருக்கும் போது இந்தியை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்ற போக்கு என்பது சுதந்தர காலத்துக்கு முன்பிருந்தே உருவாகி விட்டது. இந்தியாவின் வேறெந்த மொழியைக் காட்டிலும் இந்தி யே உயர்ந்தது. ஏனைய மொழிகள் அனைத்துமே இந்திக்குக் கீழானவையே என்ற ஆதிக்கச் சிந்தனையுடன் இந்தி பேசாத மக்களிடம் இந்தியைத் திணிக்கும் போக்கு சுதந்தரப் போராட்ட காலத்தின்போது தொடங்கி அதன் பிறகும் நீடித்துக்கொண்டிருக்கிறது. அதனை அப்போது முதலே தமிழர்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்திருக் கிறார்கள்.

பிரிட்டிஷ் இந்தியா என்பது ஒரு மொழி பேசும் தேசம் அல்ல. இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் பேசப்படும் தேசம். அந்தத் தேசத்தை பிரிட்டிஷாரிடம் இருந்து பிரித்தெடுக்க வேண்டும் என்றால் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அதற்கு மக்களை ஒன்றிணைக்கவேண்டும். அந்த ஒருங்கிணைப்புப் பணிக்காக காங்கிரஸ் பயன்படுத்திய கருவிதான் இந்தி.

இந்தியை இந்தியர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தி பிரசார சபாக்கள் உருவாகின. இந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் தீவிரமான பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டன. அந்தப் பிரசாரத்தைச் செய்தவர்களுள் முதன்மை யானவர் காந்தி. ஒருகட்டத்தில் இந்தி பேசாத மக்கள் அனை வரும் இந்தியைக் கற்று தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் காந்தி. ஆனால் அப்போதெல்லாம் எதிர்ப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. வலுவான போராட்டமாக உருவாகவில்லை.

பிரசாரம் என்பது எந்த நொடியில் திணிப்பாக மாறியதோ அப்போதே எதிர்ப்புகள் தொடங்கிவிட்டன. இந்தியைப் படித்தே தீரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டபோது போராட்டங்கள் வலுக்கத் தொடங்கின. குறிப்பாக, ராஜாஜி இந்தியைத் திணிக்க எத்தனித்த போது முதலாம் மொழிப் போராட்டம் தொடங்கியது.

கருத்து ரீதியாக, கொள்கை ரீதியாக, செயல்பாடு ரீதியாக என்று பல முனைகளில் வேறுபட்டு நின்ற தலைவர்கள் பலரை ஓரணியில் திரட்டியது மொழிப் போராட்டம். சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், பெரியார் ஈ.வெ.ரா, தா.வே. உமாமகேசுவரன், டபிள்யூ. பி. ஏ. செளந்தர பாண்டியன், சி. என். அண்ணாதுரை, கி. ஆ. பெ. விசுவநாதம் என்று பல தளங்களில் இயங்கிக்கொண்டிருந்த தலைவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், மீனாம்பாள் சிவராஜ் உள்ளிட்ட பல பெண்களும் மொழிப்போரில் கலந்து கொண்டனர்.

இந்தித் திணிப்பால் ஏற்படப்போகும் இழப்புகள், தமிழுக்கு நேரவிருக்கும் ஆபத்துகள், தமிழர்கள் சந்திக்க இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசினர். நடைப்பயணம் சென்றனர். சாலையில் இறங்கிப் போராடினர். அவர்களைக் கையாள ராஜாஜி அரசாங்கம் அடக்குமுறையை ஏவியபோது போராட்டம் அடுத்தக் கட்டத்தை அடைந்தது. களப்போராளிகள் கைது செய்யப் பட்டனர். சிறைக்குள் தாக்கப்பட்டனர். உயிர்ப்பலியும் நடந்தேறியது. மொழிப்போரில் முதலில் தனது உயிரைப் பலி கொடுத்தவர் நடராஜன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந் தவர். அவரைத் தொடர்ந்து தாலமுத்து என்பவர் மரணம் அடைந்தார். போராட்டம் வலுத்ததைத் தொடர்ந்து இந்தித் திணிப்பு கைவிடப்பட்டது. முதல் மொழிப்போர் முடிவுக்கு வந்தது.

ஆனால் வெவ்வேறு காலகட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் வெவ்வேறு விதங்களில் இந்தித் திணிப்பை அமல்படுத்திக் கொண்டே இருந்தன. நேரு, சாஸ்திரி காலம் தொடங்கி மொரார்ஜி, இந்திரா, ராஜீவ் காலத்திலும் இந்தித் திணிப்பு முயற்சிகள் தொடர்ந்தன. எப்போதெல்லாம் திணிப்பு நட வடிக்கைகள் தொடங்குகின்றனவோ அப்போதெல்லாம் தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கத் தவறியதில்லை. அடக்குமுறைகளுக்கு அடங்கியதில்லை.

முக்கியமாக, அறுபதுகளின் மத்தியில் நடந்த நான்காவது கட்ட மொழிப்போரைச் சொல்லவேண்டும். எத்தனைத் தீக்குளிப்புக ள்! எத்தனைத் தற்கொலைகள்! எத்தனை உயிர்ப்பலிகள் சின்னச்சாமி தொடங்கி ஏராளமான இளைஞர்கள் தீக்குளித்தும் நஞ்சு சாப்பிட்டும் மரணம் அடைந்தனர். காவல்துறையின் தாக்குதல் காரணமாக மரணம் அடைந்தவர்கள் அநேகம். போராட்டத்தை முன்னெடுத்து, வழிநடத்திய பல தலைவர் களும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்களின் ஏகோபித்த எதிர்ப்புகளைச் சம்பாதித்த காங் கிரஸ் அரசு அதன்பிறகு நடந்த தேர்தலில் ஆட்சியை இழந்தது. அன்று தொடங்கி இன்றுவரை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அதிகாரத்தின் நிழலைக்கூடத் தொடமுடியவில்லை .

விநோதம் என்னவென்றால் முதல் மொழிப்போருக்குக் காரணம் கர்த்தாவாக இருந்த ராஜாஜிதான் நான்காவது மொழிப்போரின் போது போராட்டக்காரர்களுக்கு உறுதுணையாக இருந்தவர். அதைப்போலவே, முதல் போராட்டத்தை வழிநடத்தியவர் களுள் ஒருவரான பெரியார், நான்காவது கட்ட மொழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. எல். கணேசன், வை. கோபால்சாமி, எஸ்.டி.சோமசுந்தரம், கா. காளிமுத்து, ம. நடராசன், சேடப்பட்டி முத்தையா, ஆலடி அருணா என்று பின்னாளில் அரசியலில் மின்னிய பலரும் கல்லூரி மாணவர் களாக இருந்த காலத்தில் நான்காம் மொழிப்போரில் ஈடு பட்டவர்கள்தாம்.

எண்பதுகளில் மத்திய அரசு இந்தித் திணிப்பைக் கொண்டுவர முயற்சி செய்தபோது திமுக நடத்திய போராட்டங்கள் அநேகம். அதைக் காட்டிலும் அதற்குக் கொடுத்த விலை அதிகம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பதினேழாவது பிரிவின் நகலைக்கொளுத்தியதற்காக க. அன்பழகன் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பத்து பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது ஆளுங்கட்சியாக இருந்தது அதிமுக. இதுவும் ஒரு விநோதம்தான். எந்தத் திராவிட இயக்கத்தால் மொழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோ அதே திராவிட இயக்கத் தில் இருந்து உருவான அதிமுக தலைமையிலான அரசு, இன் னொரு திராவிட இயக்கக் கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது.

இன்னமும்கூட இந்தித் திணிப்புப் போராட்டம் தொடர்கிறது. போராட்ட நெருப்பை அணையவிடாமல் பார்த்துக்கொள்ளும் காரியத்தைக் கவனமாகச் செய்து வருகிறது மத்திய அரசு.

கடந்த சில ஆண்டுகளாக இந்தித் திணிப்புப் பணியில் மெளனம் காட்டிவந்த மத்திய அரசு சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்பதுதான் அதன் சாரம். இந்தி பேசாத மாநிலங்களைக் குறிவைத்து அனுப்பப்பட்ட இந்தச் சுற்றறிக்கை தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. கண்டனக்கணைகள் பறந்ததைத் தொடர்ந்து அந்தச் சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்பில் மத்திய அரசு மெளனமாக இருந்தது என்று சொல்வதைக் காட்டிலும் மெளனமாகக் காய் நகர்த்தி வருகிறது என்பதுதான் சரியானதாக இருக்கும். அதற்குப் பொருத்தமான உதாரணம், அண்மையில் வெளியான கேலிப்பட சர்ச்சை!

என்.சி.இ.ஆர்.டி என்கிற மத்திய அரசின் புத்தக நிறுவனம் வெளியிட்ட பன்னிரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் தமிழகத்தில் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் பற்றிய பாடம் இடம்பெற்றிருந்தது. தமிழ் மாணவர்களை வன்முறையாளர்களாகவும் ஆங்கிலம் அறியாதவர்களாகவும் சித்திரித்து பல ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட அந்தக் கேலிச்சித்திரத்தைத் தற்போது பாடப் புத்தகங்களில் இடம் பெறச்செய்தது ஏன்? வரலாறு குறித்து வருங்காலத் தலைமுறை யினருக்குத் தவறான புரிதலை ஏற்படுத்த முயல்வது ஏன்? என்ற கேள்விகளை தமிழ் ஆர்வலர்கள் எழுப்பினர். தமிழ்நாட்டு மக்கள் நடத்திய உணர்வு ரீதியான போராட்டத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம் என்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

ஆக, இந்தித் திணிப்பு குறித்தும் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தப் போக்கு இன்று உரு வானது அல்ல. திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடப் பட்டுள்ள இன்றைய சூழலில், மொழிப் போராட்டக் களங் களைத் திரும்பிப் பார்ப்பதும் வரலாற்றை மறுவாசிப்பு செய் வதும் அவசியமாகிறது.

அன்புடன் ஆர். முத்துக்குமார்
29, மார்ச் 2013 12

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

மொழிப்போர் - களம்

Back to blog