நாளை வெளியாகிறது ‘மாபெரும் தமிழ்க் கனவு’ முதல் பார்வை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/maaperum-thamizh-kanavu

 

 

 

 

 

தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் ஆளுமையான பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் கொண்டுவரும்  ‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகத்தின் முதல் பார்வை (‘ஃபர்ஸ்ட் லுக்’) நாளை வெளியிடப்படவிருக்கிறது.

தமிழ்ப் பேராளுமைகளைப் போற்றும் வகையில் ‘இந்து குழும’த்தின் ‘தமிழ் திசை’ பதிப்பகம் அடுத்தடுத்து கொண்டுவரும் புத்தகங்களின் வரிசையில் ஒரு அரிய தொகுப்பாக வெளிவரவிருக்கிறது ‘மாபெரும் தமிழ்க் கனவு’. உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவுக்கு இந்தியா தயாராகிவரும் நிலையில், தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் கற்பித்த ஆசான்களில் ஒருவரான அண்ணாவின் நூலைக் கொண்டுவருவதைப் பொருத்தமானதாகக் கருதுகிறது ‘இந்து தமிழ் திசை’.

அண்ணாவின் வாழ்க்கை வரலாறு, அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற, நாடாளுமன்ற உரைகள்; அண்ணாவின் முக்கியமான தமிழ் – ஆங்கிலச் சொற்பொழிவுகள், அவருடைய அரிய பேட்டிகள், கலந்துரையாடல்கள், கட்டுரைகள்,  புகைப்படங்கள் என்று ஒரு வரலாற்றுப் பெட்டகமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அண்ணாவுடன் பழகியோர், அவருடன் உறவாடியோரின் அனுபவப் பகிர்வுகள், நினைவலைகள் இடம்பெற்றுள்ளன. பெரியார், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அண்ணாவைப் பற்றிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன. 

அண்ணா மறைந்து ஐம்பதாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அண்ணாவின் அரசியல் இந்த அரை நூற்றாண்டாக நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் சுதந்திர இந்தியாவில் ஏற்படுத்திருக்கும் தாக்கங்களையும், சமகால சர்வதேச அரசியலில் அண்ணாவின் பொருத்தப்பாட்டையும் பேசும் முக்கியமான அறிவுஜீவிகளின் கட்டுரைகள், பேட்டிகள் இந்நூலில் வருகின்றன.

பரந்து விரிந்த தொகுப்பாக 800 பக்கங்களில் வரும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ விரைவில் வெளியாகிறது. அதற்கான முன்னோட்டமாக நூலின் அட்டைப் படம் நாளை வெளியிடப்படுகிறது. அண்ணா பங்களித்த அரசியல் துறை, கலைத் துறை, அறிவுத் துறையின் முக்கியமான ஆளுமைகள் இதை வெளியிடுகின்றனர். கூடவே நூலின் முன்பதிவும் தொடங்குகிறது; அதன் விவரங்களும் நாளை வெளியாகும்.

 

நன்றி: தமிழ் இந்து

Back to blog