கடவுள் சந்தை - இந்தப் புத்தகம் எதைப் பற்றியது
இந்தப் புத்தகம் 'நாம்’X ‘அவர்கள்' கதையாடலுக்குச் சவால் விடுகிறது. இந்தியா அரசியல்மயமாக்கப்பட்ட, இந்துப் பெரும்பான்மைவாதத்தில் வளரும் உணர்வின் வாயிலாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் மதத்தன்மையிலிருந்து விடுப்பட்டதல்ல என்பதைக் காட்ட முனைகிறது.
எங்கு நோக்கினாலும், அரசியல்மயமாக்கப்பட்ட மதத் தன்மைதான் இன்று காணப்படுகிறது. உலகமயமாக்கல் முழு உலகையும் மேலும் மதத்தன்மை கொண்டதாக்கியிருக்கிறது. எல்லா மதங்களுமே மேலும் அரசியலாக்கப்பட்டுள்ளன. பொருளாதார நிலையில் அவை நெருக்கமாக ஒன்றிழுக்கப் படும் போது, உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் மதம் பற்றியும், நாகரிகப் பாரம்பரியம் பற்றியும் மேலும் சுய உணர்வு பெறுகின்றனர். உலகமயமாக்கல், கடவுளர்க்கு நல்லதாக உள்ளது என்று கூறலாம். ஆனால் வருத்தமான விஷயம், கடவுளர்க்குப் பதிலாகக் கடவுளரின் போர்வீரர்களுக்கும் தங்கள் மதத்தின் பெயரால் போராட்டங்களையும் வன்முறையையும் தூண்டுபவர் களுக்கும் அது நல்லதாக இருக்கிறது.
உலகத்தின் இந்தப் பொதுவான போக்கிற்கு இந்தியா விதி விலக்கல்ல.
உலகமயமாகும் போதே இந்தியாவில் மாறிக்கொண்டிருக்கும் மத (நிலக்) காட்சியை ஆராய முனைகிறது. இந்து மதத்தின் அன்றாட வெளிப்பாடுகளின் போக்குகளும் இழைநயமும் எவ்விதம் மாறுகின்றன என்பதை மட்டும் இது வருணிக்கவில்லை, உலகப் பொருளாதாரத்திலும், உலக விஷயங்களிலும் முக்கிய மான பங்காற்றும் ஒன்றாக எழுகின்ற இந்தியா அனுபவிக்கக் கூடிய பெரிய அளவிலான அரசியல், பொருளதார, நிறுவன இடப் பெயர்ச்சிகளுடன் அந்த மாறும் போக்குகளை இணைத்தும் காட்டுகிறது. எவ்விதம் நவீன இந்துக்கள் தங்கள் கடவுளர்களை தைரியமிக்க புதிய உலகத்திற்குக் கொண்டு செல்கிறார்கள், இந்து நிறுவனங்கள் நவ-தாராளமயக் கொள்கையும் (நியோ லிபரலிசம்)* உலகமயமாக்கலும் திறந்துவிட்ட புதிய வாய்ப்பு களை எவ்விதம் பயன்படுத்திக்கொள்கின்றன என்பவற்றை விளக்குவது இந்தப் புத்தகத்தின் ஒட்டுமொத்த இலட்சியம் ஆகும்.
இந்தப் புத்தகம், தனது பரந்த தூரிகைத் தீட்டுதல்களில் வரைந்து காட்டும் படம் இதுதான்:
தனது பொருளாதாரத்தில் இந்தியா தாராளமயமாகியும் உலகமயமாகியும் வரும்போது, இந்த நாடு ஒரு பிரபலவகை இந்து மதத்தின் உயரும் அலையை அனுபவிக்கின்றது. இது தொடாத சமூகப் பகுதியோ, பொதுநிறுவனமோ இல்லை. வளரத் தொடங்குகின்ற இந்து நடுத்தர வகுப்பினர் இடையே பிரபலமான மதத்தன்மையின் எழுச்சி காணப்படுகிறது. புனித யாத்திரைகளின் அதிகரிப்பு, புதிய, அதிக ஆடம்பரமான சடங்குகளின் கண்டுபிடிப்புகள் ஆகியவை இதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
நேரு காலத்தில் இந்த மதத்தன்மை மிகவும் மதச்சார்பற்று இருந்த பொது நிறுவனங்களை இடப்பெயர்ச்சி செய்கின்ற, புதிதாக வளர்ந்து வருகின்ற அரசு - கோயில் - பெருவணிகக் குழுமக் கூட்டிணைவால் மதத்தன்மை வளர்க்கப்படுகிறது. வேறு சொற்களில் கூறினால், ஒரு நவ-தாராளமயச் சந்தைப் பொருளாதாரத்தை உற்சாகப்படுத்துவதற்கெனத்தன் இடத்தில் இருத்தப்பட்ட ஓர் ஒழுங்குபடுத்தப்படா ஆட்சி, இந்தியாவின் கடவுள் சந்தையில் மதச் சேவைகளுக்கான தேவைகளையும் அளிப்புகளையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நியோ-லிபரலிசம் என்னும் ஆங்கிலச்சொல்லுக்கு நிகராக நவ- தாராளமயம் என்னும் சொல்லே இந்த மொழிபெயர்ப்பில் கையாளப்படுகிறது. நியோ, நியூ ஆகிய சொற்கள் ஆங்கிலத்தில் 'புதிய' என்னும் ஒரே பொருளைத் தர கையாளப்படுவதில்லை. நியோ பெரும்பாலும் ஒரு பழைய யோசனையை மறுபரிசீலனை செய்வதைப் பயன்படுத்தி அல்லது ஒரு இடைவெளியின் பின்னர் பழைய மாற்றத்தை தொடர அல்லது மாற்றம் அடையாமலிருக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த இடைவெளியைப் பயன்படுத்துவது முக்கியம். ஆனால் நியூ, வரலாற்று தொடர்பில்லாத முற்றிலும் புதியதைக் குறிக்கிறது. எனவே நியோ-லிபரலிசம் = நவ-தாராள மயம் - புதிய தாராளமயம் அல்ல. (ப-ர்)
புதிய அரசியல் பொருளாதாரத்தால் உதவி பெறும் ஒரு புதிய இந்துமதத்தன்மை பொதுநிலையிலும், தனிப்பட்ட நிலை யிலும் அன்றாட வாழ்க்கைக்குள் இன்னும் ஆழமாக உட்பதிக்கப் படுகிறது. அரசின் வழக்கமான நடைமுறைகளிலும் தேர்தல் அரசியலிலும் இந்துச் சடங்குகளையும் குறியீடுகளையும் பயன்படுத்துவது மிகவும் பரவலாகிவிட்ட நிலையில், அரசியல் சட்டப்படி அதிகாரபூர்வ மதம் எதுவும் அற்றதாக இருக்க வேண்டிய மதச்சார்பற்ற இந்திய அரசின் மெய்யான மதமாக இந்துமதம் ஆகிவிட்டது.
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா வெளிப்படத் தோன்றும் நிலையில், தேசியப் பெருமை, பெரும் வல்லரசாக இந்தியா உருவாகும் கனவு ஆகிய உணர்ச்சிகளுடன் இந்து மதத் தன்மை உருக்கி இணைக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வெற்றி, இந்து மதிப்புகளின் மேம்பாட்டால் நிகழ்ந்ததாகக் கற்பிக்கப்படுகிறது. தன் பழைய இந்து நாகரிகத்தால் தான் மிகப்பெரிய வல்லரசு நிலைக்குத் தகுதியுள்ளதாக இந்தியா ஆகிறது என்று பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மிகவும் பழமையான மதப் பாரம்பரியங்களும் கலாச்சாரங்களும் கஷ்டப்பட்டுப் பெற்ற இந்தியாவின் சாதனைகள் யாவும் பெரும்பான்மைச் சமூகத்தின் மதத்திற்குள்ளாக உறிஞ்சப்படுகின்றன.
அரசியல் இந்துமதத்தின் இந்தப் புதிய கலாச்சாரம், சம அளவு களில் வெற்றியுணர்வும் சகிப்பின்மையும் கொண்டது: உலகம் முழுவதும் இந்து நாகரிகத்தின் மிக உயர்ந்த சகிப்புத் தன்மையையும் அகிம்சையையும் கொண்டாட வேண்டும் என்று விரும்புகின்ற அதே நேரத்தில், அது உள்நாட்டில், மதச் சிறுபான்மையினருக்கு எதிராக சகிப்பின்மை - இன்னும் சொன்னால், வன்முறையைத்தான் சகித்துக்கொள்கிறது.
இதுதான், சுருக்கமாக, இந்தப் புத்தகம் சொல்லப்போகும் விஷயம்.
வாசகர்களுக்கு யதார்த்தத்திற்கு மாறான எதிர்பார்ப்புகள் ஏற்படலாகாது என்று உடனே இரண்டு எச்சரிக்கைகளைச் சொல்லியாக வேண்டும். நாட்டின் பெரும்பான்மை மதமான வெகுசன இந்து மதத்தின் மாறும் போக்குகள் மீது இந்தப் புத்தகம் முழுமையாகக் கவனத்தைக் குவிக்கும். இந்தியாவின் சிறுபான்மை மதங்களில் மாற்றங்கள் எங்கு, எப்போது தேவையோ அப்போது சொல்லப்பெறும். ஆனால் அவற்றில் விரிவான ஆய்வு நடத்தப்பெறாது.
மனத்தில் வைக்கவேண்டிய இரண்டாவது விஷயம், இந்தப் புத்தகம் இந்து மதத்தைப் பற்றிய தே அன்றி, இந்துத்துவம் அல்லது இந்து தேசியவாதத்திற்காக அமைப்புற்ற இயக்கங்கள் பற்றியது அல்ல. இது வருணிக்கின்ற வெகுசன பொது மதத் தன்மையின் போக்குகள் அரசியல் வட்டத்தின் மதச்சார் பற்ற - மதம் சார்ந்த, வலது-இடது பிளவுகளுக்கு ஊடாக வெட்டிச் செல்கின்றன. சங்கப் பரிவாரம் மேலும் வெளிப்படையாகவும் மிக அடிக்கடியும் மத, தேர்தல் நோக்கங்களுக்காக பெரும் பான்மைச் சமுதாயத்தின் மதக்குறியீடுகள் வாயிலாக வெளிப் படையாக இந்தியாவைப் படிமப்படுத்துகின்ற பழக்கத்தைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அவை சங்கப் பரிவாரத்திற்கு மட்மே உரிய தனித்தகைமை அல்ல.
இவை யாவற்றிற்கும் பிறகு இந்தப் புத்தகம் இந்தக் கேள்வியை முன்வைக்கிறது: காவிநிறம் பூசிய வல்லரசுக்கனவுகள் காணும் இந்த இந்தியா, இந்து அல்லாத சிறுபான்மையினருக்கு எந்த இடத்தை விட்டுவைத்திருக்கிறது? நாடு தன்னை இந்தியா @ வல்லரசு. ஓம் என்று காணத் தொடங்கும் போது, 'இதே நாட்டைத் தங்கள் வீடெனவும் கருதுகின்ற' முஸ்லிம்கள், கிறித்துவர்கள், நாத்திகர்கள், பிற இந்து அல்லாதவர்களுக்கு என்ன நிகழப் போகிறது? மதச்சார்பற்ற கலாச்சாரத்தையும் நிர்வாக முறையையும் வளர்க்காமல் நாடு வெறும் மதச்சார்பு என்ற வாக்குறுதியை மட்டுமே வைத்து எவ்விதம் நடத்தப் போகிறது?