கடவுள் சந்தை - விசாரணைக்கான முறை: தகவல் மூலங்களும் விளக்க முறைகளும்
இந்த நூல் ஒரு குறித்த ஆய்வுத்திட்டத்தின் கல்வித்துறை அறிக்கை அல்ல. அதேசமயம் இது சமய விவாதத்துக்கான நூலோ, கருத்தியல் விவாத நூலோ அல்ல. பதிலாக, இந்தப் புத்தகம் அரசியல் பகுப்பாய்வையும் தத்துவச் சிந்தனையையும் பொதுக் களத்தில் கிடைக்கக்கூடிய மிகப் பலவான மூலங்களிலிருந்து மிகவும் உழைத்துச் சேகரித்த மெய்யான தகவல்களுடன் இணைக்கிறது. அடித்தளத்திலிருந்து தொடங்கி அன்றாட இந்து மதத்தன்மை பற்றிய, கிடைப்பவற்றில் மிகச் சிறந்த மெய்ம்மை களையும் புள்ளிவிவரங்களையும் ஆதரவாகக்கொண்டு, உலக மயமாக்கலையும் மதத்தின் மறுஎழுச்சியையும் பற்றிய மிகக் கூர்மையான சமூகக் கோட்பாடுகளை வாசகருக்கு அளிப்பதே இதன் நோக்கம். ஓர் உயர்ந்த உச்சாணியிலிருக்கும் இருக்கும் கல்விசார் சமூக அறிவியல்களுக்கும் குடும்பம், தெரு, உணவு விடுதி போன்று எங்கெல்லாம் கல்வித்துறை சாராத நுண்புல மிக்க வாசகர்கள் வாழ்ந்து, பணிசெய்து, படிக்கிறார்களோ அவர்களுக்கும் இடையிலுள்ள சுவர்களை உடைக்கும் முயற்சி இது. சுருக்கமாகச் சொன்னால், வாசகருக்கு ஒளியூட்டவும் அவரைச் சிந்திக்கவைக்கவும் உதவுகின்ற கண்டிப்பான நேர்மை யான ஆய்வுப் படைப்பு இது.
எந்த ஒரு சமகாலச் சமூக வரலாற்று நூலையும் போல, இந்தப் புத்தகமும் பல வேறான தகவல் மூலங்களிலிருந்து கிடைத்த புள்ளிகளை இணைக்க முயலுகிறது. வெகுசன ஊடகங்கள், கருத்துக்கணிப்புகள், ஆய்வுக்கட்டுரைகள், அரசாங்க அறிக்கைகள், சிந்தனைக்கூடங்களின் ஆய்வறிக்கைகள், கோயில்கள்/ஆசிரமங் களின் வலைத்தளங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைத்த தகவல் களைப் பயன்படுத்துகிறது. இந்தத் தகவல்கள் காட்டுவன:
புதிதாக வளம்பெற்ற நடுத்தர வகுப்பினர், அதிகத் தத்துவமான, நவ - வேதாந்த வடிவ மதத்தன்மையை விட்டு விலகி, அதிகமான சடங்கு, மூடநம்பிக்கை சார்ந்த கோயில்கள், புனித யாத்திரைகள், பிரபலமான புனிதர்கள், சாமியார்கள், பெண் சாமியார்களைமையமாகக் கொண்ட வெகுசன மத வடிவத்தைத் தழுவிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மதத்தன்மை எழுவதற் கான அறிகுறிகள் நம்மைச்சுற்றி எங்கும் உள்ளன: சிறுகோயில் களும் பிரம்மாண்டமான கோயில்களும் கட்டுவதில் காணப்படும் பெருக்கம்; அவற்றில் சில நடுத்தர வகுப்பினரின் ருசிக்குத் தீனிபோடக்கூடிய கடவுளர்களையும் தேவியர்களையும் கொண்டவை; பிற புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட 'மிகவும் பழைய' சடங்குகளைச் செய்கின்றன. புனித யாத்திரைகளில் ஈடுபடும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல் குருமார்கள், சாமியார்களின் கும்பல்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளன.
இந்த மதத்தன்மை மேலும் மேலும் வெளிப்படையாகவும் அரசியலாகவும் மாறிவருகிறது. எளிய வீட்டு விஷயங்களாக இருந்த ஹோமங்கள் (அல்லது யாகங்கள்), ஜாக்ரண்கள், கதாக்கள் ஆகியவை மேலும் மேலும் பகட்டாக, செலவு பிடிக்கின்றவையாக, வெளிப்படையாக மாறுகின்றன. மேலும், யாகம், யாத்திரை போன்ற மதச் சடங்குகள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, எய்ட்ஸைத் தடுப்பது போன்ற நல்ல காரணங் களிலிருந்து, பெரும்பான்மை இந்து உணர்வைத் திரட்ட உதவுகின்ற கெடுநோக்குள்ள 'ஷோபா' யாத்திரைகள், சமாஜ மகோற்சவங்கள் (சமுதாயத் திருவிழாக்கள் வரை) எல்லா விதமான அரசியல் காரணங்களுக்காகவும் மக்களைச் சேர்க்கும் கருவிகளாகின்றன.
இந்த மதத்தன்மையின் எழுச்சிக்குப் பெரும்பாலும் முக்கூட்டாக இணைந்து செயல்படும் அரசு, கோயில்கள், வணிகப் பகுதியினர் ஆகியவற்றின் நிறுவன ஆதரவு இருக்கிறது.
இந்தக் கடைசிப் பிரச்சினை இந்து மதத்தன்மை எழுச்சியை விளக்க வேண்டிய அவசியத்தை நமக்குத் தருகிறது. இந்தியர்கள் உள்ளார்ந்து, அடுத்த உலகைப் பற்றிச் சிந்திப்பவர்களாக உள்ளனர்; இந்துமதம் என்பது வாழ்க்கையின் பிற பகுதிகளிலிருந்து ஆன்மிக நோக்கத்தைப் பிரிக்க முடியாத ஒரு முழுமையான வாழ்க்கை வழி என்று சிலர் சொல்கின்றனர்.' நவீனத்தன்மையால் மீதி உலகம் மதத்தன்மையில் குறைவுபடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இந்தியா எப்போதுமே மதத்தன்மையோடுதான் இருக்கும்.
'உலகத்தில் நாம் இப்படித்தான் இருப்போம்' என்பது போன்ற கோட்பாடுகளை விட்டு இந்தப் புத்தகம் விலகி நிற்கும். மாறாக, மதத்தன்மை என்பது வேறெந்தக்கலாச்சார நிகழ்வையும் போன்றது என்று கருதுகிறது. அது மாறும் காலத்தோடு சேர்ந்து கூடுகிறது, குறைகிறது, மாறுகிறது. நேரு கால சோஷலிச அரசு தனியார் துறைக்கு அளித்த இடத்தை இப்போது நிரப்பிக் கொண்டிருக்கும் அரசு- கோயில் - பெருவணிகக் குழுமக் கூட்டிணைவால் இந்துமத எழுச்சியை விளக்கமுடியும் என்று இந்தப் புத்தகம் வாதிடுகிறது.
ஓர் அர்த்தத்தில், அரசு - கோயில் - தனியார்துறைப் பிணைப்பு என்பது புதிதல்ல. மதச்சார்பற்றதாகக் கருதப்படுகின்ற இந்திய அரசு பொதுக்களத்தில் இந்து மதச்சின்னங்களைக் கொண்டாடுவதில் என்றும் விலகிச் சென்றதில்லை. இதெல்லாம் இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புதல் என்ற பெயரிலேதான் நடந்தன. வணிகர்களுக்கும் வணிகக் குடும்பங்களுக்கும் பல நூற்றாண்டு களாகத் தொடரும் நீண்டதொரு வரலாறு இருக்கிறது. அவர்கள் எப்போதுமே தங்கள் தேர்வுக்குரிய கடவுளர்க்கோ குருமார் களுக்கோ சமர்ப்பிக்கப்பட்ட கோயில்களையும் மடங்களையும் ஆதரித்தே வந்திருக்கிறார்கள்.
ஆனால் அரசு, மத அமைப்பு, வணிக/பெருவணிகக் குழும மேட்டுக்குடி மக்கள் ஆகியோரை முன்பைவிட மேலும் நெருக்கமான உறவுக்குள் இப்போதைய நவ-தாராளமயப் பொருளாதார ஆட்சி கொண்டுவருகிறதென்று இந்தப் புத்தகம் வாதிடும். இந்திய அரசு தனது அரசுத்துறைக் கடமைகளிலிருந்து பின்வாங்கிச் செல்லும் சமயத்தில், பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், சுற்றுலா வசதிகள், மேலும் பிற சமூக சேவைகளை இயக்க அது தனியார்துறையுடனும் இந்து நிறுவன அமைப் புடனும் கூட்டுச்சேர்க்கையை நாடுகிறது. இதனால் பொதுச் சரக்குகளை உற்பத்தி செய்ய என்று ஒதுக்கப்பட்ட பொது நிதிகள் மேலும் மேலும் இந்துப் பாரம்பரியச் சார்பு கொண்ட தனியார் அறக்கொடை நிறுவனங்களுக்குத்திருப்பப்படுகின்றன. பதிலுக்கு, இது இந்து மதத்தை 'நவீனப்படுத்த ' உதவுகிறது: மதச்சடங்கு களில் நடுத்தர வகுப்பினரின் திருப்திப்படுத்த இயலாத பசியைத் தீர்க்கச் சேவைபுரிகின்ற, புதிதாக உருவாக்கப்பட்ட, ஆங்கிலம் பேசுகின்ற, கணினிப் பயன்பாடுள்ள பல்வேறு சாமியார்கள், ஜோசியர்கள், வாஸ்து சாஸ்திரிகள், யோகா குருநாதர்கள் போன்றவர்கள் எல்லாம் இந்த அரசு, பெருவணிகக் குழுமத் துறையினர், கோயில் ஆகியவற்றின் சேர்க்கையில் உருவான விளைபொருள்களே!