கடவுள் சந்தை - புத்தகத்தின் அமைப்பு

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/kadavul-santhai
புத்தகத்தின் அமைப்பு

இந்தப் புத்தகம், உலகமயமாக்கம், மதச்சார்பின்மை என்னும் இரண்டு பெரிய கருத்துகளில் தொடங்கி நிறைவுறுகிறது. இந்த இரண்டிற்கும் இடையில் வைக்கப்பட்ட மூன்று இயல்களின் உள்ளடக்கங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன:

இதன் தொடக்க இயலுக்கு இந்தியாவும் உலகப் பொருளா தாரமும்: மிகச் சுருக்கமான ஓர் அறிமுகம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவைப் பாதிக்கின்ற வகையில் உலக மயமாக்கம் என்ற நிகழ்வுக்கு ஒரு விரிவான முன்னுரை அளிக்கிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் பொருளாதார வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி, பிறகு அது சந்தைச் சீர்திருத்தங்களுக்கும் உலகச் சந்தைகளோடு இணைப்புறுதல்களுக்கும் திரும்பிய வழியைச் சொல்லுகிறது. புதிய பொருளாதாரத்தின்கீழ் மேலும் மோசமாகி வருகின்ற தீவிர சமூக - பொருளாதாரச் சமமின்மைகள் மீது இது சிறப்பு கவனம் செலுத்துகிறது. கல்விச் சந்தைக்குள் மத நிறுவனங்கள் நுழையப் புதிய வாய்ப்புகளை உயர்கல்வியைத் தனியார்மயப்படுத்தியமை திறந்து விட்டுள்ளது. அது பற்றிய ஓரளவு போதுமான விவரங்களையும் தருகிறது. மீதிப் புத்தகத் திற்குக் களம் அமைப்பதாக இந்த இயல் அமைந்துள்ளது.

இயல் 2க்குத் தலைப்பு, 'கடவுளர்களின் நெரிசல் நேரம்: உலக மயமாக்கமும் நடுத்தர வகுப்பினரின் மதத்தன்மையும். சமகால இந்தியாவில் கடவுளர்களின் நெரிசல் நேரத்தை இந்த இயல் ஆராய்கிறது. ஊடக அறிக்கைகள், கருத்துக்கணிப்புகள், கல்விசார் ஆய்வுகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, இந்து நடுத்தர வகுப்பினர் எவ்விதம் மேலும் மதத்தன்மை பெற்றவர்கள் ஆகிறார்கள், முன்பு எப்போதையும் விடப் பொதுக்களம் எப்படி இந்துமயமாகிறது என்ற வழிகளை இந்த இயல் விளக்குகிறது.

இயல் 3இன் தலைப்பு 'அரசு - கோயில் - பெருவணிகக் குழுமக் கூட்டிணைவும் இந்து தேசியவாதத்தின் இழிவும்' என்பது. இந்த இயல் எழுச்சியுறும் இந்துமதத்தன்மை, இந்து தேசியவாதம் ஆகியவற்றின் நிறுவன அடிப்படைகளை நோக்குகிறது. அரசு, கோயில்கள், தனியார்துறை ஆகியவற்றிற்கிடையிலான இணைவை மூன்று பரந்த தலைப்புகளில் நோக்குகிறது: இந்து அர்ச்சகர்களின் (பூசாரிகளின்) பயிற்சி, மத அறக்கட்டளைகளால் 'நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்படுதல், மதச்சுற்றுலா. மேலும் இந்த இயல், அற்பத்தன்மை கொண்ட அல்லது சாதாரண அன்றாட இந்து தேசியவாதம் என்ற நிகழ்வையும் நோக்குகிறது. தேசத்தை வழிபடுவதும், இந்துக் கடவுளர்களையும் தேவியர்களையும் வழிபடுவதும் எவ்விதம் வேறுபாடின்றிப் போகிறது என்பதை விளக்குகிறது.

இயல் 4இன் தலைப்பு 'இந்தியா@ சூப்பர்பவர்.காம்: நாம் எப்படி நம்மை நோக்குகிறோம்' என்பதாகும். இது உலகப் பொருளா தாரத்தில் இந்தியாவின் வெற்றி எவ்விதம் மாபெரும் இந்துமனம் (சிந்தனை) என்பதற்கு உரியதாக நோக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. இந்த வெற்றி மனநிலையின் இருண்ட பகுதியை - அதாவது இந்து அல்லாத சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், குறைந்த அளவில் கிறித்துவர்கள் ஆகியோர் மீதான வெறுப்பாக இது எவ்விதம் வெளிப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. ஒற்றைக் கடவுள் மதங்களின் கடவுளை வெளிப்படையாகப் பழிப்பதும் இந்து வெற்றி மனப்பாங்கு நூல் களை வெளியிடுவதும் புதுதில்லியிலிருந்து இயங்குவதுமான வாய்ஸ் ஆஃப் இந்தியா என்ற பதிப்பகத்தின் பங்கையும் இது ஆராய்கிறது.

இயல் 5இன் தலைப்பு, 'மதச்சார்பின்மை - ஒரு மறுசிந்தனை (இந்தியாவை மனத்தில் கொண்டு)' என்பதாகும். மதச்சார்பின்மை, மதச்சார்புநிலை ஆகிய சமூகக் கோட்பாடுகளின் கண்ணாடி வழியாக இந்தியாவின் மதச்சார்பின்மை அனுபவத்தைக் காண்கிறது. கடவுள் சந்தை ஏன் இந்தியாவுக்கே தனித்தன்மை வாய்ந்த ஒரு மதச்சார்பின்மைப் பாணி மூலமாகவும், நவ தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஊடாகவும் தொடர்ச்சியாகக் கொழிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயல்கிறது.

Back to blog