கடவுள் சந்தை - ஒரு தனிப்பட்ட குறிப்பு

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/kadavul-santhai
ஒரு தனிப்பட்ட குறிப்பு

இந்தப் புத்தகம் கடந்த சில ஆண்டுகளாக நான் மேற்கொண்ட வேறொரு மிகப் பெரிய முயற்சியினூடாக உருவான திட்ட மிடப்படாத துணைவிளைவு ஆகும். இது எதிர்பாராமல் திடீரென எழுச்சியுற்ற காரணத்தினாலும், திரண்டு வந்த நேரத்திலேயே அதற்கு அதிகப் பொருள் பொதிந்ததாக இருந்ததாலும், இந்தப் புத்தகம் என் மனத்துக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

2005இல் ஜான் டெம்பிள்டன் அறக்கொடையினரிடமிருந்து சமகால இந்தியாவில் நவீன அறிவியலுக்கும் இந்து மதத் திற்குமான தொடர்பு பற்றி ஒரு புத்தக அளவிலான ஆய்வை மேற்கொள்ள எனக்கு உதவித்தொகை கிடைத்தது. குறிப்பாக சுதந்திர இந்தியாவுக்கு அடித்தளமிட்ட தந்தையருள் ஜவஹர்லால் நேரு, பீம்ராவ் அம்பேத்கர், இன்னும் பிற மதச்சார்பற்ற மனித மையவாதிகளுக்குப் பிடித்தமான சிந்தனையாகிய அறிவியல் மனப்பாங்கின் பணியைப் பற்றி ஆராய ஆர்வமாக இருந்தேன். மெய்யாகவே, இந்தியாவின் அரசியலமைப்பில் குடிமக்களுக்கான அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக அறிவியல் மனப்பாங்கை வளர்த்துக்கொள்வது வகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நவீன அறிவியலின் கலாச்சாரத் தாக்கத்தைப் புரிந்து கொள்ள முற்படும் எவரையும் போல, நானும் ஒரு முரண்சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலை நேரிட்டது. எங்குப் பார்த்தாலும் அறிவியல் இருக்கிறது, ஆனால் எங்குமே அறிவியலின் விமரிசன மனப்பான்மை இல்லை. நடைமுறையில், இந்தியா அறிவியலில்' மூழ்கிக்கொண்டிருக்கிறது: ஆசிரமங்களிலும் தொலைக்காட்சிகளிலும் சாமியார்கள், அரசாங்க உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள்கூட, ஜோசியம் முதல் வாஸ்துவரை எல்லாவிதமான மூடநம்பிக்கை களையும் அறிவியல் என்று கருதும் கலையில் கூர்மை பெற்றுள்ளனர்.

படித்த, ஆங்கிலம் பேசுகின்ற, நகர்ப்புறப் பணக்காரரான வகுப்பினர்தான் இந்துப் போலி அறிவியலின் மிகப்பெரிய நுகர்வோராக இருக்கின்றனர். இதனால் இந்திய மக்கள் தொகையில் வளர்ந்துவரும் இந்த வகுப்பினரின் கலாச்சார, மத உலகநோக்கு பற்றி புரிந்து கொள்ள இயல்பாகவே எனக்கு ஆர்வம் எழுந்தது. இந்திய நடுத்தர வகுப்பினரின் மத நம்பிக்கை களையும் நடைமுறைகளையும் புரிந்து கொள்ள நான் செய்த முயற்சி, 'கடவுளரின் நெரிசல் நேரம்' என்று நான் குறிப்பிடும் ஓர் இயலில் வந்து முடிந்தது. அந்த இயலே இந்த நூலின் மையக்கருவாக ஆயிற்று.

நடுத்தர வகுப்பினரின் மதத்தன்மை பற்றி நான் கவனத்தைக் குவிக்கத் தொடங்கிய போதே, இந்தியப் பொருளாதாரத்தில் வளரும் உலகமயமாக்கம் பற்றி நான் நோக்க வேண்டியதும் ஆயிற்று. இந்தியா 1990களின் தொடக்கத்தில் தழுவிக்கொண்ட சந்தைச் சீர்திருத்தங்களும் வணிக தாராளமயமாக்கமும் கொண்டு வந்த ஆசைகளிலும் கனவுகளிலும் ஏற்பட்ட பெரும் தாவலைப் பற்றி முதலில் புரிந்து கொள்ளாமல், இன்றிருக்கும் நடுத்தர வகுப்பினரின் மனநிலையை அறிவது சாத்தியமில்லை.

மாறிவரும் அரசியல் பொருளாதாரப் பின்னணியில் மதத் தன்மையை நான்வைக்கத் தொடங்கியபோதே ஒவ்வொரு சான்றும் அடுத்த கண்டறிதலுக்குக் கொண்டு சென்றது, விரைவில் ஒரு முழுப்படம் உருவாகத் தொடங்கியது. தனியார்துறையிலும், பொதுத்துறையிலும் மதச்சேவைகளின் தேவை, அளிப்பு ஆகிய இரண்டையும் தாராளமயமாக்கம் எவ்வாறு அதிகரித்து உள்ளது என்பதை நான் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். அதை அறிவதன் முன்னரே, தன்னளவில் நிற்கக்கூடிய கருத்துசார் முடிவொன்றை நான் உருவாக்கியிருந்தேன்.

எனது அசல் ஆய்வுத்திட்டத்திலிருந்து விடுப்புப் பெற்றேன். இந்தப் புத்தகத்தின் ஆய்வும் எழுத்தும் டெம்பிள்டன் நிறுவனத்தின் எவ்வித நிதி உதவியுமின்றி முற்றிலும் எனக்குச் சொந்தமான நேரத்தில் செய்யப்பட்டது. இந்தப் புத்தகத்தின் இருப்புக்கும், இது தெரிவிக்கும் சிந்தனைகளுக்கும் டெம்பிள்டன் அறக்கொடை நிறுவனத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

Back to blog