Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

இது யாருடைய வகுப்பறை?

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/ithu-yaarudaiya-vagupparai
 
முன்னுரை

ஒரு என்சைக்ளோபீடியா போல...

'இது யாருடைய வகுப்பறை' படித்து முடித்ததும் நெடுநாள் கனவொன்று பலித்தது போல் மனம் நிரம்பியிருந்தது.

கல்வி பற்றித் தமிழில் எழுதுவோரும், வாசிப்போரும் கூடி வருகின்றனர். பெரும்பாலான எழுத்துகள் மேடையேறிப் பேசுகின்றன. மேடைச் சத்தம் தேவைதான். இல்லாவிட்டால் அரசாங்கத்தின் தூக்கம் கலையாது. ஆனால், அது மட்டும் போதாது. பள்ளிக்கூடத்தின் கேட்டைத் திறந்து உள்ளே நுழையும் எழுத்துகள் தேவை. உள்ளே நுழைந்து வகுப்பறைக்குள் எட்டிப் பார்க்க வேண்டும். அங்கு நிலவும் ஆசிரியர் மாணவர் உறவு, அதில் கிளம்பும் அன்றாடச் சிக்கல், கற்றல் நடைபெறும் விதம், கற்கும் குழந்தைகளின் உளவியல், பாடப் புத்தகங்களின் பாரம் இவை குறித்தெல்லாம் பேசும் பேச்சும் எழுதும் எழுத்தும் வேண்டும்.

'இது யாருடைய வகுப்பறை' அந்த வழியில்.... ஒரு மலர்ச்சி. ஒரு மைல் கல். முதல் பள்ளி அமைப்பான லீசியத்தில் தொடங்குகிறது நூலின் பயணம். லீசியத்தில் தொடங்கி செயல்வழிக் கற்றல் 4 முக்கியத்துவம் பெற்று, கல்வி உரிமையும் குழந்தை உரிமையும் அழுத்தம் பெற்று பிரகாசத்தின் அறிகுறிகள் தென்பட்டு வரும் இன்றைய நம் வகுப்பறை வரை நடந்து வருகிறது. சோர்வும் சலிப்புமற்ற பயணம். வழி நெடுகக் கல்வியாளர்கள்! கல்வி விவாதங்கள்! உரிமைப் போராட்டங்கள்! இது ஒரு முழுமையான முயற்சி. தமிழில் முதல் முயற்சி. முதல் எட்டு என்றாலும் அழுத்தமான எட்டு. சிலிர்ப்பும் அதிர்வுகளும் தோன்றுவது உறுதி. தகவல்களும் அறிவாராய்ச்சிகளும் நிரம்பியுள்ள இந்நூலை ஆயாசம் இன்றி வாசிக்க முடிகிறது. அதற்கு இரு காரணங்கள். நூலின் மொழி ஒரு காரணம்; நூலின் அணுகுமுறை மற்றொரு காரணம்.

இரா. நடராசனின் விரல்களில் உள்ளது ஒரு படைப்பு மொழி. ஆசிரியர்கள் மத்தியில் ஆயிஷா ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பல சந்தர்ப்பங்களில் பார்த்தவன் நான். எதைப் பேசினாலும் ஓர் அறிவிப்பு போல உணர்ச்சியற்றும் சம்பிரதாயமாகவும் பேசக் கூடிய ஆசிரியர்கள் கூட ஆயிஷா கதையை விவரிக்கும்போது நெகிழ்ச்சியான வார்த்தைகளில் கண்கள் ஈரமாகிப் பேசும் ஆச்சர்யத்தை ஒரு தடவை இரு தடவை அல்ல பல தடவைகள் பார்த்திருக்கிறேன். ஆயிஷாவின் தாக்கம் அப்படி. நடராசனின் மொழி அப்படி. அக்கறையும் விமர்சனமும் இணைந்த அணுகுமுறை நூலின் மற்றொரு சிறப்பு. எத்தனை கோபத்திலும் பகுத்தறிவு பிறழாத அணுகுமுறையும் கூட.

ஆங்கில ஆக்கிரமிப்புக் கல்விக்கு வித்திட்ட மெக்காலே கல்விமுறையையும், நம் வகுப்பறையின் மீது ஏறி உட்கார்ந்திருக்கும் மேற்கின் கனத்தையும் விமர்சிக்கும் நடராசன், இதன் விளைவாக குருசிஷ்யன் என்ற அகண்ட இடைவெளி நீங்கி வகுப்பறையில் ஆசிரியர் மாணவர் உறவு உருவானதையும், குருவின் மேதாவித்தனத்தைச் சார்ந்திருந்த கல்வி பாடப் பொருள் மையக் கல்வியாகப் பரிணாமம் பெற்றதையும் பதிவு செய்யத் தவறவில்லை . 'வகுப்பறை உலகளாவிய வகுப்பறையாக' மாறியதை நடராசனின் வார்த்தைகளில் வாசிப்பது புத்துணர்வு தரும் அனுபவம்.

அது மட்டுமல்ல. "இக்கல்விமுறை மெக்காலேவாதிகளால் முன்னெடுத்து வரப்பட்டதுதான் என்றாலும், அது இல்லாமல் போயிருந்தால் சமூகத்தின் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படைக் கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்திருக்கும்" என்று யதார்த்தத்தைச் சொல்வதும் மறுக்க முடியாத உண்மை.

கல்வித் திட்டத்தில் ஆயிரம் பிரச்சினை. ஆனால் குற்றம் சொல்ல அகப்பட்டவர் ஆசிரியர் மட்டுமே. மனிதர்களை உருவாக்குவதில் அப்பாவி ஆசிரியர்கள் அளித்துள்ள பங்கை வேறு எவரும் இன்னும் அளிக்கவில்லை. எந்த நாட்டிலும் இதுதான் உண்மை.

பாரதி பாணியில் "இதை நாற்பதினாயிரம் கோயிலில் சொல்வேன்" எனச் சத்தியம் செய்து சொல்லலாம். இந்தப் புரிதல் நடராசனின் நூலில் அடிநாதமாக இருக்கிறது. "ஆசிரியர்களே தேவையில்லை ” என்று ரூசோ சொன்ன அதிரவைக்கும் வாக்கியத்தோடு நூல் தொடங்குகிறது. ஆனால், ஆசிரியர் வகுப்பறையின் பிராண வாயு என்ற இவனோவ் (Igor Ivanov) கருத்தை நோக்கி நூல் நகர்கிறது. “ஒரு பள்ளியின் கட்டட மற்றும் தளவாட வசதிகளையும், அப்பள்ளி அமைந்துள்ள சமூகப் பொருளாதாரச் சூழல்களையும் கடந்து தனிமனித ஆசிரியர் பங்களிப்பு கல்வித்தரத்தைப் பெருமளவு உயர்த்த முடியும்” என்று ஆசிரியரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஆய்வு உண்மை நூலின் அச்சாணி ஆகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாவட்டக் கல்வி அதிகாரி ஒருவர் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் பற்றி உரையாடிய கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். 'இனிமேல் பிள்ளைகளை அடிக்கக்கூடாது பாத்துக்கங்க என்று பிரம்பில்லாமல் ஆசிரியர்களை மிரட்டியபடி சட்டத்தின் ஒவ்வொரு சரத்தையும் ஆசிரியர்கள் மீது அதிகாரி திணித்ததைப் பார்த்தேன். கூட்டம் முடியும் வரை ஒரு ஆசிரியரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. செயல்வழிக் கற்றலும் இப்படித்தான் சிரித்த முகத்தோடு வந்து சேரவில்லை. 'நான் ஆணையிட்டால்' என்று பாடிக் கொண்டு வந்ததாக ஆசிரியர்கள் பலர் ஆதங்கப்படுகின்றனர்.

இந்தக் குழந்தை ஏன் கற்றுக் கொள்ளத் திணறுகிறது? இந்தக் குழந்தைக்கு ஏன் இவ்வளவு குறைவான ஆர்வம்? இந்தக் குழந்தை ஏன் படித்ததையெல்லாம் மறந்து போகிறது? பலமற்ற குழந்தைகளைத் துன்புறுத்தும் பலசாலிக் குழந்தைகளைக் கோபமுகம் காட்டாமல் வழிக்குக் கொண்டுவர முடியுமா? என ஆசிரியரின் தினசரி வாழ்வில் கேள்விகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. விடைகள் வேண்டும். விடைகளுக்குப் பதிலாக அரசாணைகள் வருகின்றன. அரசாணைகள் தீர்வும் அல்ல; மலர்ச்சிக்கு வழியும் அல்ல.

மலர்ச்சி குன்றிய ஆசிரியர்கள்! மலர்ச்சி குன்றிய வகுப்பறைகள்! ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்து மாற்றங்களை முன்வைக்கும் திட்டங்கள் தேவை ; இதயங்கள் தேவை.

அந்த இதயம் இந்த நூலில் இருக்கிறது. 'காலம் மாறிவருகிறது. நாமும் மாறவேண்டும்' என்று இதமான விமர்சனக் குரலில் நூல் ஆசிரியர்களிடம் பேசுகிறது. இதோ ஒரு சிறிய உதாரணம்: "ஒரு மாணவர் வகுப்பிற்குப் பேனா எடுத்து வரவில்லை என்பதற்காக, முழு வகுப்பும் வேடிக்கை பார்க்க அதைப் பெரிய பிரச்சனை ஆக்கிப் பாடவேளை நேரத்தைச் சபித்தலிலும் சண்டையிடுதலிலும் ஆசிரியர் கழித்த காலங்கள் முடிந்துவிட்டன. அதே ஆசிரியர் ஓரிரு கூடுதல் பேனாக்களோடு வகுப்பிற்கு முன்னேற்பாட்டோடு வந்து அவ்விதம் பேனா எடுத்து வராத மாணவருக்குப் பேனாவைக் கொடுத்து நிலமைக்கு உடனடி முற்றுப்புள்ளி வைத்துப் பாடப் பொருளைத் தொடர்வதுதான் இன்றைய காலம்" என்றெழுதுகிறார் நடராசன்.

ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்தவர்களும் அவர்கள் மாறவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதுதானே உண்மை.

அந்த உண்மையை ஆசிரியர்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். பாதையில் கிடக்கும் தண்ணீரைப் போல அலட்சியமாய்த் தாண்டிப் போய் விடக் கூடாது. கடுமையாக உழைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்நூலில் ஏழு கட்டுரைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் வித்தியாசமாகவும் கவித்துவமாகவும் இருக்கிறது.

ஆசிரியர்களே தேவையில்லை என்கிறார் ரூசோ' என்பது முதல் கட்டுரையின் தலைப்பு. கல்வியின் வரலாறு அறிய விரும்புவோர்க்கு இந்தக் கட்டுரை ஒரு பொக்கிஷம். கிரேக்கத்தின் ஆரம்பகால ஆசிரியர்களான சோபிஸ்டுகள் (Sophist) பற்றிய குறிப்பு அபூர்வமானது. தொடர்ந்து அணி வகுத்து வரும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலச் சிந்தனையாளர்களின் பெயர்கள் பங்களிப்புகள் மெல்ல மெல்ல உருவாகி வந்த நவீன கல்வியின் வரலாற்றைச் சொல்கின்றன.

மத அடிப்படைக் கல்வியில் முதன் முதலாகப் பகுத்தறிவை இணைத்த தாமஸ் அக்வினாஸ் ( Thomas Aquinas), மனிதநேயக் கல்வியாளர் எராஸ்மஸ் (Erasmus), 'கல்வியில் ஜனநாயகம் குறித்த முதல் குரல்' என நடராசன் பாராட்டும் ஸ்பினோசா (Spinoza), கல்வியில் தர்க்கங்களின் இடத்தில் அறிவியல் சோதனைகளை வலியுறுத்தி அறிவியல் மையக் கல்விக்கு வித்திட்ட பிரான்சிஸ் பேகன் (Francis Bacon), மூளையால் மட்டுமல்ல இதயத்தின் வழியும் கைகளின் மூலமும் குழந்தைகள் கற்கவேண்டும் என்று முழங்கிய பெஸ்டலோசி (Pestalozzi), குழந்தைக் கல்விக்கான கிண்டர் கார்டன் முன்மாதிரியைத் தந்த புரோபெல் (Froebel), கல்வி உளவியலுக்கு வித்திட்டவர் எனக் கருதப்படும் ஹெர்பார்ட் (Herbart)... போன்றோரின் பங்களிப்பை நடராசன் விவரிக்கையில் மறந்து போன உறவினர்களைச் சந்தித்த சந்தோஷம் உண்டாகிறது. விமர்சனமின்றி எந்தக் கல்வியாளரையும் ஏற்கவில்லை . இது நடராசனின் தனித்துவம். உதாரணமாக 17 ஆம் நூற்றாண்டின் மனிதநேயக் கல்விச் சிந்தனையாளரான கோமினியஸ் (John Amos Cominius) ஆசிரியர் பயிற்சி தோன்றுவதில் செய்துள்ள பங்களிப்பைப் பாராட்டும் நடராசன் "வெறுமனே ஆசிரியர்களுக்கு வகுப்பறைகளை அறிமுகம் செய்யும் பயிற்சியாக (கோமினியஸ்) வைத்தார். தேவைப்பட்டதோ மாணவர்களை ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்யும் பயிற்சி" என்று தன் விமர்சன முத்திரையைப் பதிக்கத்தவறவில்லை .

யாருடைய வகுப்பறை இது என்ற அடிப்படையான கேள்வியை இரண்டாவது கட்டுரை எழுப்புகிறது. கல்வியில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியவை ரூசோவின் சிந்தனைகளும், ஜான் டூயி (John Dewey)யின் சிந்தனைகளும். ரூசோ கல்வியை (Education) முன்வைக்க, ஜான் டூயி பள்ளியை (Schooling) முன்வைத்தார் என்கிறார் நடராசன். "கல்வி என்பது பரந்துபட்ட செயலாக்கம் ; பள்ளி ஒரு குறுகிய செயலாக்கம்" என இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுகிறார். பள்ளி என்ற கருத்தாக்கமே நாளுக்கு நாள் வலுப்பெற்றது. அது கல்வியை வேலைக்கான அடையாளச் சீட்டாக மாற்றிவிட்டது.

விடைகளின் பின்னாலும், மதிப்பெண்களைத் துரத்தியும் வகுப்பறையை - வைத்து விட்டது. இதுதான் நம் வகுப்பறை. இது நாம் உருவாக்கிய வகுப்பறை அல்ல; இது நமக்குக் கிடைத்த வகுப்பறை. 1813இல் கிழக்கிந்தியக் கம்பெனி கொண்டு வந்த சட்டம் (Charter Act of 1813) தொடங்கி இன்றைய நிலை வரையிலான இந்தியக் கல்வி வரலாற்றை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது. மெக்காலே வருகைக்கு முன்னரே இந்தியாவில் ஆங்கிலக் கல்வி வேட்கை வேரூன்றி விட்டதை நடராசனின் ஆய்வு உணர்த்துகிறது.

1937-இல் காங்கிரஸ் ஆட்சி செய்த மாகாணங்களின் கல்வி அமைச்சர்கள் கூடிய மாநாடு வார்தாவில் நடந்தது. 'உடல் உழைப்புடன் (சேர்ந்த நல்ல மனிதர்களை உருவாக்கும் வல்லமை பெற்ற அடிப்படைக் கல்வியை மாநாடு பரிந்துரைத்தது. அந்த லட்சியக் கல்வி இந்திய வகுப்பறைக்குள் நுழையவே இல்லை என்பது பரிதாபகரமான உண்மை . "காந்தியின் ராட்டையும் வகுப்பறையும் ஒரு துயரக்கதை" என்று நடராசன் எழுதுவது மனதை அழுத்தும் ஒற்றை வரிக் கவிதை

இந்தியக் கல்வி வரலாற்றின் திருப்புமுனைகளாகக் கருதப்படும் சார்லஸ் உட் பரிந்துரை (Wood's despatch, 1854), கோத்தாரி கமிசன் (1964) இரண்டின் மீதான அங்கீகாரத்திலும் கொஞ்சம் விமர்சனம் கலந்தே இருக்கிறது. "ஆங்கிலேய வாடை வீசும் பாடப் பொருள், தேர்வு முறை, பாடம் நடத்தும் முறை இவற்றில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவில்லை என்பது கோத்தாரி கமிசன் மீது நடராசன் வெளிப்படுத்தும் ஆதங்கம். ஆய்வாளர்களில் நடராசனைப் போல் சமாதானமாகாத கோபக்காரர்களைப் பார்ப்பது அபூர்வம். அடுத்த கட்டத்துக்குப் போக இந்த கோபம் அவசியம்.

அடுத்த இரண்டு கட்டுரைகளையும் நூலின் ஆன்மா எனச் சொல்லலாம். நாம் அதிகம் பேசிக்கொள்ளாத இது ஏதோ ஆசிரியர் பயிற்சி சம்பந்தப்பட்டது என நாம் ஒதுக்கி வைத்துள்ள குழந்தை உளவியல், கற்றல் கற்பித்தல் கோட்பாடுகள் ஆகியவை குறித்து இக்கட்டுரைகள் விவாதிக்கின்றன. குழந்தைப் பருவ உளவியல் மற்றும் கற்றல் கற்பித்தல் சிந்தனைகளின் அடிப்படையில் கல்வி நம் வகுப்பறையில் நடந்தால் மட்டுமே நமது வகுப்பறைக்குள் வெளிச்சம் வரும் என்று அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார் நடராசன். ஆசிரியர்கள் பொறுமையாகவும், ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டும் வாசிக்க வேண்டிய பகுதிகள் இவை.

மூன்றாம் இயலின் தலைப்பு 'அறிவியல் தெரியும் ராமலிங்கத்தைத் தெரியுமா? என்பது ஓர் அறிவியல் ஆசிரியர்க்கு அறிவியலும் தெரிந்திருக்க வேண்டும் அறிவியல் கற்கும் மாணவன் ராமலிங்கத்தைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டுரையின் பிழிவு.

அதற்கான தேவையும் இருக்கிறது. "காலம் மாறிவிட்டது. ஆசிரியர், பணியாள் அந்தஸ்தில் இருந்து விடுபட்டு மனிதவள மேம்பாட்டு நிபுணராக மாறி ஆண்டுகள் பல ஆகிவிட்டன" என்கிறார் நடராசன். "குழந்தையைப் புரிந்து கொள்வதே ஒரு ஆசிரியரின் அடிப்படைத் தகுதி" என்று பெருங்குரல் எடுத்து அவர் வலியுறுத்துகிறார். அப்படிச் சொல்வதற்குத் தேவை இருக்கிறது. கவனஞ் சிதறிக் கிடக்கும் ஆசிரியர்கள் காதிலும் இந்தக் கருத்து விழவேண்டுமே!

குழந்தைப் பருவம் தொடங்கி குமாரப் பருவம் (Adolescence) வரையிலான உளவியல் மாற்றங்களை விவரித்துச் செல்கிறது இக்கட்டுரை. குமாரப் பருவத்தில் நிகழும் மாற்றங்கள் முக்கியமானவை. எதிர்ப்புணர்வு தலைதூக்கும் காலம். குமாரப் பருவம் குறித்த புரிதல் இல்லாவிட்டால் இயல்பாக நடந்துகொள்ளவில்லை என்று பிள்ளைகள் மீது குற்றம் சாட்டுவோம். அந்தப் பருவத்தில் இயல்பாய் நடந்து கொண்டால்தான் பிரச்சினை! பிராய்டின் மகளான அன்னா பிராய்டு சொல்வார்: "...to be normal during the adolescent period is by itself abnormal!" 'எட்டாம் வகுப்பு வந்ததுமே மாறிட்டான் சார்!' என்று குறைப்படும் ஆசிரிய ஆசிரியைகள் வரிவிடாமல் படிக்க வேண்டிய கட்டுரை இது. 'வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது. என்பது அடுத்த கட்டுரையின் தலைப்பு. துள்ளி ஓட வேண்டிய குழந்தைகள் கை கட்டி வாய் பொத்தி நெருப்பில் வெந்து மடிந்த கும்பகோணத்துத் துயரத்தை நினைவூட்டிப் பதைக்க வைக்கும் கட்டுரை இது.

வகுப்பறை விதிகளின் குரூரத்தை இத்தனை புரிதலோடு யாரும் இதற்கு முன்னர் பேசியதில்லை . எரிக் எரிக்சன் (Erik Erikson), தாண்டைக் (Thorndike) , பாவ்லோவ் (Pavlov), ஸ்கின்ன ர் (Skinner), ஜீன் பியாஜெட் (Jean Piaget), ஹோவார்டு கார்ட்ன ர் (Howard Gardner) போன்ற புகழ் பெற்ற கல்வி உளவியலாளர் கருத்துக்களை எல்லாம் திரட்டித் தருகிறது இக் கட்டுரை. தேடல் உள்ள ஆசிரியர்களுக்கு இது அபூர்வமான வாய்ப்பு. இக் கல்வியாளர்களைக் குழந்தைகளின் நண்பர்கள் என்பேன். குழந்தைகளை நாம் கிறுக்குவதற்குக் கிடைத்த வெள்ளைத் தாள்களாகக் கருதாதவர் ஜீன் பியாஜெட். குழந்தைகளின் அறிவை மதித்தவர். குழந்தைகளோடு உரையாடும்போது உங்கள் ஒளியை மறையுங்கள் Mask your Brightness என்று சொல்வதுண்டு. அவ்வாறு மறைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான குழந்தைகளோடு உரையாடியவர் ஜீன் பியாஜெட்

எத்தனை கல்விக் கோட்பாடுகள் வந்தாலும் வகுப்பறைக்கென்று ஒரு பிடிவாதம் இருக்கிறது. பரிசுகள், தண்டனைகள் மூலம் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டப் பார்க்கும் நடத்தைக் கோட்பாட்டின் (Behaviourism) மீது எத்தனையோ விமர்சனங்கள் இருக்கின்றன பரிசும் தண்டனையும் குழந்தையின் சுயத்தையும் சுதந்திரத்தையும் சிதைக்கின்றன என்பது உட்பட. இருந்தபோதும் நம் வகுப்பறைகளில் ஆதிக்கம் செலுத்துவது நடத்தைக் கோட்பாடுதானே!

பிடிவாதம் மட்டுமல்ல தடைகளும் ஏராளம் இருக்கின்றன விதிகளின் ரூபத்தில் ஆசிரியரையும் மாணவரையும் எதிரெதிரே நிறுத்திய விதிகள்! பேசுவது குறித்த விதிகள் நகர்தல் குறித்த விதிகள் என எண்ண ற்ற விதிகள். Bel Kaufinan எழுதிய Up the Down Staircase என்ற ஆங்கில நாவல் நினைவுக்கு வருகிறது. பள்ளி விதிகளை மையப்படுத்திய நாவல். மாணவர்கள் மேலே ஏறுவதற்கு ஒரு படிக்கட்டு; இறங்குவதற்கு ஒரு படிக்கட்டு. மாறி ஏறி இறங்காமல் பார்த்துக் கொள்வது ஆசிரியர் பொறுப்பு. அதுதான் நாவலின் தலைப்பு.

"இந்த வகுப்பறை விதிகளை எல்லாம் மீறி கற்றல் கற்பித்தல் நடைபெறுவது பெரிய சவாலாக இருக்கிறது' என்கிறார் நடராசன். கல்வித்துறை கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து இது. வேரோடிக் கிடக்கும் விதிகளைப் பறித்தெடுக்காமல் ஆசிரியரிடமிருந்து அதிகாரங்களைப் பறிப்பதால் மட்டும் வகுப்பறைக்கு வசந்தம் வரப்போவதில்லை என்பதை நடராசன் உறுதிபடக் கூறுகிறார்.

ஒரு மேடையில் கட்டாய இலவசக் கல்வி உரிமை குறித்த பேச்சு மற்றொரு மேடையில் குழந்தைகளின் உரிமை குறித்த முழக்கம் ஓர் அரங்கில் தொடர் மதிப்பீடு குறித்த விளக்கம் மற்றோர் அரங்கில் பாடத்திட்டம், செயல்வழிக் கற்றல் குறித்த விளக்கம் இப்படித் துண்டு துண்டாகக் கேட்கும் அத்தனை குரல்களையும் 'உள்ளேன் டீச்சர்' என்ற ஒரு கட்டுரை இணைக்கிறது. "உள்ளேன் டீச்சர் என்ற அக் குழந்தையின் பிரவேசத்தோடு பறைசாற்றப்படுவது அதன் வருகை மட்டுமல்ல; அதன் இருப்பும் வகுப்பறையில் அதன் உரிமையும் ஆகும்" என்று அழகாகச் சொல்கிறார் நடராசன்.

தகவல்கள் நிரம்பிய கட்டுரை இது. இந்த ஒரு கட்டுரையை 'உள்ளேன் டீச்சர்' என்று தனி நூலாக்கி ஒவ்வோர் ஆசிரியர் கையிலும் கொடுத்தால் என்ன? என்று மனதுக்குள் ஓடியது. சில தகவல்கள் அதிர வைக்கின்றன. தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு கமிஷன் (NCPR) ஆண்டுதோறும் குழந்தைகள் மீதான வன்முறை குறித்த புகார்களை விசாரித்துத் தீர்ப்பு அளிக்கிறது. குவியும் புகார்கள் எவ்வளவாம்? ஆண்டுதோறும் 10 லட்சமாம்! (பெரும்பாலானவை ஆசிரியர் மீது). சில தகவல்கள் இதுவரை நாம் அதிகம் பேசாதவை. 18, 19-ஆம் நூற்றாண்டுக் குழந்தை உரிமைப்

போராளிகளான தாமஸ் ஸ்பென்ஸ் (Thomas Spence), இடல்லோ அக்லிடா, How to love a child என்ற அற்புதமான நூல் எழுதிய ஜேனஸ் கார்க்சாக் (Janus Korczak) போன்றோர் பற்றிய தகவல்கள் அத்தகையவை.

குழந்தைகளை அடையாளப்படுத்திப் பிரிக்காமல் அனைவரும் சமமாக இருந்து கற்கக் கூடிய நேர்மையான வகுப்பறையை உருவாக்க வேண்டியது ஆசிரியர் கடமை என்ற மையக்கருத்து இக்கட்டுரையில் உரத்து ஒலிக்கிறது.

ஆசிரியர் காலத்துக்கேற்றபடி மாறவேண்டும் என்ற குரல் மீண்டும் இக்கட்டுரையில் ஒலிக்கிறது. தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2005 (NCF2005) ஆவணத்தை வாசிக்க ஆர்வங்காட்டாத ஆசிரியர் மீது கோபத்தையும் இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது. இன்றைய குழந்தையும் குடும்பமும் நேற்றிருந்த குழந்தையும் குடும்பமும் அல்ல. கல்வியாளர் ஜான் ஹோல்ட்(John Holt) கருத்துப்படி இன்று குழந்தை - பெற்றோரின் சொத்து; பாசப்பொருள்; அதி செல்லப் பிராணி; வாழ்வின் நோக்கமும் அர்த்தமும்... "குழந்தையை அடிங்க! ஒதைங்க ! ஒங்க பொறுப்பு என்று ஆசிரியர்களிடம் பெற்றோர் பேசிய காலம் மலையேறிவிட்டது. குருசிஷ்ய உறவுகளும் கிழிபட்டு விட்டன. ஆசிரியரின் அணுகு முறைகளில் மனநிலைகளில் கற்பிக்கும் வழிகளில் காலத்துக்கேற்ற மாற்றம் மிக மிக அவசியம். 'அவங்க வகுப்பறை. நம்ம வகுப்பறை.' என்பது அடுத்த கட்டுரை. பிற நாட்டு வகுப்பறைகளை அலசும் இக்கட்டுரை, பின்லாந்து, கியூபா நாடுகளின் கல்விமுறையைப் பரவசத்துடன் பகிர்ந்து கொள்கிறது. கெடுபிடியும் இறுக்கமும் அற்ற வகுப்பறைகளை உருவாக்கி இன்று கல்வித்தரத்தில் முன்னுக்கு நிற்கிறது பின்லாந்து' கல்வியின் மெக்கா பின்லாந்து' என்கிறார் நடராசன். கியூபாவில் வகுப்பறை என்பது பாடப்புத்தக ஆதிக்கத்தில் சிக்கிய வகுப்பறை அல்ல. முழு மனிதனை உருவாக்கும் பட்டறை அது. ஜப்பானின் சுமையற்ற கல்வித்திட்டமும் (யுட்டோரி) வெகுவாக நம்மை ஈர்க்கிறது. யுட்டோரி திட்டம் பள்ளி நேரத்தையும் பாடப்புத்தகச் சுமையையும் கணிசமாகக் குறைத்துள்ளது.

இந்தப் பரவசங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளுகிறது 'மகிழ்ச்சியான குழந்தைகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 116வது இடம்' என்ற தகவல். 'வகுப்பறையின் சுவர்களைத் தகர்த்தெறிவோம்' என்பது நூலின் இறுதிக் கட்டுரை. வகுப்பறையின் அடிப்படையான பிரச்சினையான ஆசிரியர் மாணவர் உறவு குறித்துப் பேசும் கட்டுரை இது. 'மாணவர்களின் ஒத்துழைப்பின்மை ஆசிரியர் பலரால் சமாளிக்க முடியாத கட்டத்துக்கு வளர்ந்து வருகிறது. ஆத்திரம் அவ்வப்போது உச்சிக்கு ஏறுகிறது.

உணர்ச்சிவசப்பட்டால் நிலைமை இன்னும் சிக்கலாகும். அறிவியல் பூர்வமாக அணுக ஆசிரியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். துணைக்கு வருகின்றன ஆல்பிரட் ஆட்லர் (Alfred Adler), அன்னா பிராய்டு (Anna Freud), சாண்டர்ஸ் (Sanders) ஆகியோர் குழந்தைகள் நடத்தை குறித்து ஆராய்ந்து வெளியிட்ட கருத்துக்கள்.

'குழுவில் அங்கீகாரம் பெற தலைமைப் பண்பாய் நடத்தை மீறல் என்பது ஆய்வாளர்கள் முன்வைக்கும் காரணங்களில் ஒன்று. இது கல்லூரி வகுப்பறையில் அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று. பாடம் நடத்தும்போது குறும்பு கமெண்ட்ஸ் அடித்து மாணவர்கள் அடிக்கடி தங்களை வெளிப்படுத்தப் பார்ப்பார்கள். மாணவர்களின் வகுப்பறை அது. ஆசிரியர்களே ஆக்கிரமித்து நின்றால் நடத்தை மீறலைத் தவிர்க்க முடியாது.

தீர்வுகளையும் கட்டுரை பேசுகிறது. வாட்கின்ஸ் மற்றும் வாக்னர் (Watkins and Wagner) ஆய்வு செய்து வெளியிட்ட தீர்வுகளில் தலையாயவை இரண்டு. ஒன்று நம்பிக்கையூட்டும் ஆசிரியர் மாணவர் உறவு; மற்றொன்று சிறப்பாகப் பாடம் நடத்தும் முறை. இவை இரண்டும்தான் உரசல்களுக்குத் தீர்வு. இவை இரண்டும்தான் வகுப்பறையின் பெரிய சக்திகள்; ஆசிரியரின் இரு கண்கள். இந்த இரண்டில் ஏற்படும் பலவீனங்களைத் தொடர்ந்து சரிசெய்ய வேண்டும். செய்தால் வகுப்பறை மலர்ந்து சிரிக்கும். தேசத்தின் முகத்திலும் களை உண்டாகும்.

மாண்டசோரி, பாவ்லோ பிரையரே போன்றவர்கள் சிந்தனையாளர்கள் மட்டுமல்லர்; இயக்கவாதிகளும் கூட ஆசிரியர் மாணவர் உறவில் நிலவிய அதிகாரப் போக்கைக் கண்டித்தவர்கள். அத்தகையோர் ஐவரின் கருத்துக்களை இக்கட்டுரையில் காண்கிறோம்.

ஆண்டன் மக்கெரென்கோ (Anton Makarenko) என்ற ரஷ்யக் கல்வியாளர் "குழந்தைகளோடு விளையாடு; விளையாட்டை வழிநடத்தாதே" என்று வேண்டிக் கொள்கிறார். குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் தலையிட்டு ஒழுங்குபடுத்தத் துடிக்கும் ஆசிரியர் பெற்றோர் மனோபாவத்தில் நிறைந்து வழிவது அதிகாரம்தான்; அன்பல்ல.

ஆசிரியர் என்பவர் பாடம் நடத்திப் போகிறவர் மட்டுமல்லர். அவர் வகிக்க வேண்டிய பாத்திரங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றைப் பட்டியலிடுகிறது கட்டுரை. "காலம் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்" என்று தோழமையுடன் உரையாடி நூல் முடிகிறது. 'இது யாருடைய வகுப்பறை வாசித்து முடித்ததும், பலவிதமான எண்ணங்கள்; உணர்வுகள். ஒரு வரலாற்று நூலை வாசித்த பரவசம் ஒரு நேரம் ; ஆராய்ச்சி நூலை வாசித்த பெருமிதம் இன்னொரு நேரம் ; தகவல்கள் நிரம்பிய ஒரு என்சைக்ளோ பீடியாவைப் புரட்டிய பிரமிப்பு எந்த நேரமும்.

உண்மைதான். இது கல்வி குறித்த ஒரு என்சைக்ளோபீடியா போல் தமிழ் என்சைக்ளோபீடியா. மனித நேயச் சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், உரிமைப் போராளிகள் பலருடைய பெயர்களை இந்நூலின் வழியேதான் முதன்முதலாகத் தெரிந்து கொண்டேன் என்பதை நான் மறைக்காமல் ஒப்புக் கொள்ளவேண்டும். கல்லூரிப் பணிக்காலத்தில் என் கல்லூரி வளாகத்தில் நுழையாத பெயர்கள் இவை. பிற்பாடு அறிவொளிக்குப் போனபின் அறிவியல் இயக்க மேடைகளின் வழி சில கல்வியாளர்கள் பெயர்களைத் தெரிந்து கொண்டேன். பணி ஓய்வுக்குப் பிறகு இன்னும் சிலரைப் பற்றித் தெரிந்து கொண்டேன். ஒரு சிறப்புப் பள்ளிக்குச் சென்றபோதுதான், குறைபாடுடைய குழந்தை என்று நாம் நினைக்கக்கூடிய எந்தக் குழந்தையும் பிற குழந்தைகளைப் போலக் கற்க முடியும் என்பதை ஆய்வுகளின் மூலமும் சோதனைகளின் மூலமும் நிரூபித்துக் காட்டிய சிறப்புக் கல்வியின் ஆதார சிந்தனையாளர்களான (Founders of Special Education) இடார்ட் (Jean Itard) பற்றியும், அவருடைய மாணவரான சேகுவின் (Seguin) பற்றியும் தெரிந்து கொண்டேன். வகுப்பறையைப் புரிந்து கொள்ள வகுப்பறையை விட்டு வெளியே வந்து வாசிக்க வேண்டும். தேட வேண்டும். இது ஆசிரியர்களுக்கும் பொருந்தும்; மாணவர்களுக்கும் பொருந்தும்.

'இது யாருடைய வகுப்பறை? என்று நூல் எழுப்பும் கேள்வியிலேயே விடையும் இருக்கிறது. இது நம்முடைய வகுப்பறை அல்ல. பிறர் உருவாக்கிய வகுப்பறையை எந்தக் கேள்வியுமின்றி நாம் சுமந்து கொண்டிருக்கிறோம். தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான தங்கள் தேசத்துக்குத் தேவையான வகுப்பறையைக் கியூபா நாட்டினர் உருவாக்கி இருக்கிறார்கள். நாம் அப்படியல்ல.

இந்தியக் கல்விப் பாதையில் மாற்றம் தேவை. மேற்கத்திய அறிவும் ஆராய்ச்சியும் ஏராளம் இருக்கின்றன. ஆனால் அவை போதுமா? கற்கும் விதத்தில் ஒருசில ஒற்றுமை இருக்கலாம்.

ஆனால் பண்பாட்டு ரீதியாக ஆயிரம் வேறுபாடுகள். அறிவொளியின் போதே பார்த்திருக்கிறேன். கிராமத்தில் சிறிய சாதிக் கலவரம் நடந்தால் போதும், பள்ளிக்கூடம் பல நாட்களுக்கு மூடிக் கிடக்கும். அறிவொளி மையத்தின் ஆயுளோ அதோடு முடிந்து போகும்.

பூப்புனித விழாவில் இருந்து மீண்டு கல்விப் பாதைக்கு வந்து சகஜமாய் இணைய பெண் குழந்தை இங்கு கொஞ்ச காலத்தை இழக்க வேண்டியிருக்கிறது. இழந்து இழந்து கற்கிற பண்பாட்டுச் சூழல் இங்கு

இந்தியக் குழந்தைகளுக்கான கல்வி உளவியல் கற்றல் கோட்பாடு ஆகியவற்றை நாம் தேடிக் காண வேண்டாமா? மனிதர்களை உருவாக்கும் வகுப்பறைகளை நோக்கி நம் கவனம் மெல்லத் திரும்ப வேண்டாமா? 'எப்படியாவது வெற்றி என்ற இலக்கை நோக்கிப் பிள்ளைகளை மந்தைகளாய்த் துரத்தும் பண்பாட்டுச் சிதைவைத் தடுத்து நிறுத்த வேண்டாமா?

கேள்விகள்... ஆதங்கங்கள். வருத்தங்கள்... ஆகியவற்றுக்கான தீர்வுகள் இதயம் தோய்ந்து செய்து முடிக்கப்பட்ட நல்ல முயற்சிகளில்தான் கிடைக்கின்றன.

'இது யாருடைய வகுப்பறை?' அப்படிப்பட்ட நல்ல முயற்சி; நம்பிக்கைக்குரிய முயற்சி.

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுடன்.....
ச.மாடசாமி.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

இது யாருடைய வகுப்பறை? - உள்ளே

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு