வரலாற்றுக்கு முந்திய காலங்களிலிருந்து சமகாலம் வரையிலும் இந்தியாவில் இயற்றப்பட்ட சமயம் சார்ந்த, சமயச் சார்பற்ற ஏராளமான இந்திய இலக்கியங்களில், 700 கவிதைப் பாக்களால் ஆன பகவத்கீதை போன்று மிகப் பெரிய அளவில் வேறு நூல்கள் புகழ் பெற்றதில்லை. கிறித்துவுக்குப் பிந்தைய தொடக்க நூற்றாண்டுகளில் கீதை இன்று இருக்கும் படிவத்தில் இறுதி வடிவம் பெற்றது. அவ்வாறு இறுதி வடிவம் பெற்ற சிறிது காலத்திற்குள்ளாகவே கிருஷ்ணனுக்கும் அருச்சுனனுக்கும் இடையே நடந்த உரையாடலில் பொதிந்திருந்த வாழ்க்கைத் தத்துவம், சமூகச் சீரழிவுக்கு உள்ளாகியிருந்த இந்துக்களை வெகுவாகக் கவர்ந்தது. அறிவுஜீவிகள் மட்டும் படிக்கும் நூலாகத் திகழ்ந்த கீதை காலப்போக்கில் இந்து மதத்தினர் பெரிய அளவில் புனிதமாகப் போற்றும் நூலாகத் தகுதி பெற்றது.
ஓர் இந்து பகவத் கீதையைப் படிப்பதற்கான வாய்ப்பைக் கூடப் பெறாதிருந்திருக்கலாம். அல்லது அதன் படியை கண்ணால் பார்த்திருக்கக்கூட வாய்ப்பில்லாது போயிருந்திருக்கலாம். ஆயினும் ஓர் இந்துவினுடைய கொள்கைகளும் நடைமுறைகளும் ஒழுக்க முறைகளும் கீதைக் கற்பிதங்களின் தாக்கத்திற்கு உட்பட்டவை களாகவே இருக்கும். ஏனெனில் இந்துக்களிடையே பரவியுள்ள இந்துப் பண்பாடு கீதைக் கற்பிதங்களின் மீதுதான் கட்டமைக்கப் பட்டிருக்கின்றது. ஓர் இந்துவின் தார்மீக நெறி கீதைக் கற்பிதங்களி லிருந்துதான் உயிரூட்டம் பெறுகிறது. அரவிந்த கோஷ் கூறுகிறார், "பகவத் கீதையின் போதனைகள் வெறும் தத்துவப் பயன் பாட்டுக்கு அல்லது கல்விக் கூடங்களில் கற்பிப்பதற்காக மட்டு மல்ல; அது மனிதருள் உடனடியாக உயிரோட்டமுள்ளதாகச் செயல் படுகிறது. ஒரு நாட்டையும் அதன் பண்பாட்டையும் மீட்டுரு வாக்கம் செய்வதிலும் புத்துருவாக்கமூட்டுவதிலும் கீதையின் கருத்துக்கள் ஆற்றலுடன் மாற்றியமைக்கும் காரணிகளாகச் செயல்படுகின்றன."
மக்களுக்காக எழுதப்பட்டு, மக்களால் பாராட்டப்பட்டு, மக்களுடைய தலைவிதியையே மாற்றியமைக்கும் சக்தி வாய்ந்ததாக ஒரு படைப்பிலக்கியம் இருக்க வேண்டுமானால் அது மக்களின் உள்மனத் தேவைகளுக்கு ஈடு கொடுப்பதாகவும் மேன்மையான சமூகத் தேவைகளை நிறைவு செய்வதாகவும் இருக்க வேண்டும். மக்களால் பாராட்டப்பட்ட இலக்கியம் அம்மக்களின் தேசிய வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருப்பது வழக்கம். நடை முறையில் வேதங்களையும் விஞ்சும் அளவுக்கு, இந்து மத இலக்கியங்களில் முதன்மை இடத்தைக் கீதை பெற்றது என்றால் அது இயற்றப்பட்டு வெளியிடப்பட்ட காலச் சூழலில் நிலவிய மனித இனத்தின் சிக்கலான பிரச்சினைகளையும் சமூகத்தில் நிலவி வந்த வேதனை நிறைந்த கடுந்துயரங்களையும் முன்னிலைப் படுத்தி விவாதித்திருக்க வேண்டும். இத்தனை நூற்றாண்டுகளாக இந்தக் கீதைத் தத்துவப் பெட்டகத்துக்கு மக்களின் ஆதரவு குறையாதிருக்க வேண்டுமென்றால் அந்த மக்களின் பிரச்சினை களும் துயரங்களும் தீர்வு காணப்படாமல் தொடர்ந்து இருந்திருக்க வேண்டும். அந்தத் துயரார்ந்த பிரச்சினைகளும் ஆழமான உணர்வு களும்தான் என்ன? அவற்றிற்கான தீர்வுகளைத் தருவதில் பகவத் கீதை ஏன் தோல்வியடைந்தது? இவை போன்ற முக்கியமான கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு இந்த நூல் முயற்சிக்கிறது.
உன்னதமான கோட்பாடுகளின் வெளிப்பாடு என்ற புனிதத் தன்மையைக் கீதை தனிச்சிறப்புடன் பெற்றவுடன் அதில் பொதிந்துள்ள கருத்துக்களுக்கு எண்ணற்ற விளக்கவுரைகளும் கருத்துரைகளும் எழுதப்பட்டன. அவற்றில் சில கூர்மதியும் சூழ்ச்சித் திறனும் நிறைந்தவை. கீதை இந்திய மொழிகள் அனைத் திலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதோடு, உலகிலுள்ள நாகரீகமடைந்த மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கீதைக்கு ஒரு புது மொழியாக்கமோ அல்லது ஒரு புது விளக்க உரையோ வெளிவராத ஆண்டு இல்லை எனலாம்.
பொதுவாகக் கூறப்போந்தால் இந்திய அறிஞர்களின் விளக்க உரையுடன் கூடிய கருத்துரைகள் திறனாய்வுத் தேர்ச்சியுடன் செய்யப்பட்டவை அல்ல. கீதையைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்பதே அவர்களது கருத்துரைகளில் மேலோங்கி நிற்கும் உட்கருத்து. கீதையில் காணப்படும் பொருண்மைப் பொருத்த மற்ற கருத்துக்களைப் பூசி மெழுகுவதற்காகவும் புனித கீதையின் நிறையுடைமையையும் மேன்மையையும் பொதிந்து காப்பதற் காகவும் நீண்ட விரிவுரைகளால் நீட்டித்து மழுப்புகிறார்கள்.
கீதையின் போதனையில் மிகவும் மேன்மையான தத்துவத்தைத் தரிசிப்பதாக இந்து எழுத்தாளர்கள் பெருமைப்பட்டுக் கொள் கிறார்கள். மனித ஞானத்தின் முழுமையான வெளிப்பாடு என்றும் கூறிக்கொள்கிறார்கள். வெளிநாட்டு அறிஞர்களில் கீதை யைத் திறனாய்வுத் திறனுடன் அணுகியவர்களும் உண்டு; அளவுக்கு மீறிப் புகழ்ந்தவர்களும் உண்டு. 1945 ஆம் ஆண்டு சுவாமி பிரபவானந்தாவும் கிறிஸ்டோபர் ஈஷர்வுட் என்ற ஆங்கிலேயரும் இணைந்து கீதைக்கு ஒரு ஆங்கில மொழியாக்கம் வெளியிட்டார்கள். அதற்கு முன்னுரை எழுதிய அல்டௌஸ் ஹக்ஸ்லி இவ்வாறு கூறுகிறார், " இன்று வரை இயற்றப்பட்டுள்ள, நீண்டகாலம் நிலைத் திருக்கக்கூடிய தத்துவங்களில் ஒன்றான பகவத்கீதை, தெளிவான, எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதான தத்துவத் திரட்டாக உள்ளது. எனவே அதன் நீடித்து நிற்கும் மதிப்பு இந்தியர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல. மாறாக உலக மாந்தர் அனைவருக்கும் உரித்தானது.''
ஆயினும் சில ஐரோப்பியத் திறனாய்வாளர்கள் கீதை பற்றிய விமரிசனங்களை நடுநிலை தவறாத மனப்பான்மையில் கூறியிருக் கிறார்கள். கீதையின் புனித போதனைகளுக்குப் பாராட்டு தெரிவிப்பதோடு, புனித நூல்களுக்கே உரித்தான வழுக்கள் நிறைந்ததாகவும் இருப்பது பற்றிச் சுட்டியுள்ளார்கள். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்திய சமூகத்தின்மீது பகவத் கீதை ஆற்றிய வரலாற்றுப் பாத்திரம் என்ன என்பதை முழுமையான திறனாய்வுத் திறத்துடன் நுட்பமாக ஆய்வு செய்த நூல் எதுவும் இல்லை எனலாம்.
பகவத் கீதை சிறந்த ஞானத்தையும் ஆழமான அறிவாற்றலை யும் கொண்டுள்ள செல்வக் களஞ்சியம் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. ஆன்மீக வாழ்க்கையின் மறைபொருளை அகத்தே கொண்டிருக்கிறது என்றும் பண்பட்ட தொரு சமூகத்திற்குத் தலை சிறந்த ஒழுக்க நெறிகளை ஓதுவது என்றும் விளம்பப்படுகிறது. இந்தப் புனித நூலின் போதனைகள் உலகையே உய்விக்க வந்தது என்றும், குறிப்பாக அறிவியல் முன்னேற்றமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்படுத்திய சமூக, தார்மீக நெறிப் பிரச்சினைகளில் சிக்கித் திணறும் மேலை நாட்டினரை மீட்டெடுக்க வந்தது என்றும், உற்சாகம் நிறைந்த சில இந்திய எழுத்தாளர்கள் தங்கள் கற்பனைகளைக் கலந்து எழுதினார்கள். பகவத் கீதையின் கோட் பாடுகளை முழு நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு தங்களுடைய பற்றுறுதியை வெளிப்படுத்திய பின்னரும் இந்தியர்கள் அறிவாற்றவிலும் தார்மீக நெறியிலும் ஏன் தாழ்நிலையுற்றார்கள் என்றும், சுதந்திரத்தை இழந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஏன் துன்புற்றார்கள் என்றும் துயருறும் இந்திய மனித இனத்துக்கு எடுத்துரைப்பதற்காக இந்திய ஆன்மீக அறிவுரையாளர்களோ வெளிநாட்டு அறிஞர்களோ அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
வரலாற்றின் இரண்டு கூறுகளில் அல்லது இரண்டு நிகழ்வு களில் கருத்தொற்றுமை இருக்கிறது என்று எண்ணுகிறேன். ஒன்று, கி.பி. நான்காம் நூற்றாண்டில் கீதை இந்துக்களின் புனித நூலாக ஏற்றம் பெற்றது. இரண்டு, கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன்னதாக இல்லாவிடினும் அதே காலகட்டத்தில்தான் இந்தியா இருண்ட காலத்திற்குள் மூழ்கியது. 1947 ஆம் ஆண்டு பிரிட்டி ஷாரின் ஆட்சி முடிவுக்கு வந்த பொழுது அந்த இருளிலிருந்து இந்தியா வெளியேறியிருக்கலாம். அல்லது வெளியேறாதும் இருந்திருந்திருக்கலாம்.
இந்திய சமூகம் கீதை காலத்திற்கு முன்னர் எவ்வாறிருந்தது, கீதை காலத்திற்குப் பின்னர் எவ்வாறிருந்தது என்பது பற்றி ஜவகர்லால் நேரு தெளிவாக எடுத்துரைக்கிறார். ஆனால் இரண்டை யும் தெளிவாக ஒப்பு நோக்கவில்லை. கிறித்துவுக்குப் பின்னர் வந்த முதல் ஆயிரம் ஆண்டுகளை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறார். முதல் ஐந்நூறு ஆண்டுகள் பற்றி இவ்வாறு கூறுகிறார், "அது தேசிய வாழ்க்கையின் மிகத் துடிப்பான காலம். அந்த ஆண்டுகளில் பீறிட்டுக் கிளம்பிய ஆற்றல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியது. உயர்ந்த நாகரிகமாக வளர்ச்சி பெற்றிருந்த பண்பாடு, தத்துவமாக, இலக்கியமாக, நாடகமாக, நுண்கலையாக, அறிவிய லாக, கணிதவியலாகப் பரிணமிக்கிறது. இந்தியாவின் பொருளா தாரம் முன்னேற்றப் பாதையில் சென்றது. நாட்டின் பரப்பளவு விரிந்தது. பிறநாடுகள் கூட இந்தியாவைச் சார்ந்து நிற்கின்றன." கீதைக் கோட்பாடுகள் மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்த இரண்டாவது ஐந்நூறு ஆண்டுகளில் இந்தியாவுக்கு என்ன நேர்ந்ததாம்? நேரு பதில் தருகிறார், "இவை போன்ற ஒளிக் கற்றைகள் காணப்படினும் உள்ளார்ந்த ஒரு பலவீனம் இந்தியா வைப் பீடித்தது. அப்பலவீனம் இந்தியாவின் தகுநிலையை மட்டு மல்ல, படைப்புத் திறனையும் பாதித்தது.... கி.பி. 1000 ஆம் ஆண்டு நெருங்கிக் கொண்டிருந்தது. அது இந்திய நாட்டின் மருள்மாலை யாக மங்கலாகிக் கொண்டிருந்தது. காலைப் பொழுதின் ஒளி மறைந்து கொண்டிருந்தது. உச்சிவேளையின் உன்னதமான ஒளி கடந்த காலமாகிவிட்டது.... அதிர்ச்சியில் இந்தியாவின் இதயம் உறைந்து போனது. இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வந்தது. விரைவிலேயே இந்தச் சிதைவு உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது ... அறிதலின் மீதிருந்த ஆர்வமும் சாதனை புரியவேண்டும் என்ற மன எழுச்சியும் இருந்த இடத்தை நீக்கு போக்கு அற்ற கட்டுப்பாடுகளும் வறட்டுவாதமும் எடுத்துக் கொண்டன. பார்ப்பனியமும் பௌத்தமும் சிதைவுற்றுக் கொண்டி ருந்தன. இழிவு நிறைந்த இறைவழிபாட்டு முறை வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது." மிக உயர்த்திப் பேசப்பட்ட பகவத் கீதையின் கோட்பாடுகளை வரவேற்று, வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட பின்னரும் நாடு ஏன் இந்தத் துயர நிலைக்கு ஆளாகியது? இந்தப் புதிர் விடுவிக்கப்படாதவரை இந்திய வரலாறு தெளிவற்றதாகத் தான் இருக்கும்.
வேத காலத்திலிருந்தே கருத்து முதல்வாதம்தான் அதாவது 'ஆன்மீகத் தத்துவம்' மட்டும்தான் இந்தியச் சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரே சிந்தனை மரபு என்று பெளத்தம் வீழ்ச்சி யடைந்த காலத்திற்குப் பின்னர் பார்ப்பனிய எழுத்தாளர்கள் விடாப் பிடியாகக் கூறித்திரிந்தார்கள். ஆனால் உண்மை அதற்கு நேர் மாறானது. ஏறத்தாழ கி.மு. 500 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 500 ஆம் ஆண்டு வரையிலான நீண்ட கால இடைவெளியில் பகுத்தறிவுப் பொருள்முதல்வாதம்தான் நாடு முழுவதும் நடைமுறையில் இருந்தது. பகுத்தறிவுப் பொருள்முதல்வாதத் தத்துவம் முற்போக்கு மனப்பான்மையை வளர்த்தது. பௌத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் பார்ப்பனிய மதம் உருவாக்கியிருந்த பழங்காலச் சமூகக் கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்தப் புரட்சிகர முன்னேற்றத்தைக் குறைத்துக் காட்டவும் அல்லது முற்றிலும் இருட்டடிப்புச் செய்யவும் தொடர்ந்து முயற்சிகள் செய்யப்பட்ட நிலையிலும் அவற்றின் ஆக்க முறையிலான சாதனைகள் இன்றும் இந்தியப் பண்பாட்டின் மாற்ற முடியாத பகுதிகளாக இருக்கின்றன. கீதைக் கோட்பாடுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை நுட்பமாக மதிப்பீடு செய்ய வேண்டுமானால், திட்டமிட்டே மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றின் இந்தப் பகுதி பற்றியும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே வரலாற்றில், மேன்மைமிக்க நாட்களாகத் திகழ்ந்த அந்தக் காலச் சூழலுக்கும், அறிவாற்றலுக்கும், சிறப்புமிக்க சமூக அரசியல் நடைமுறைகளுக்கும் காரணமான அந்தப் பொருள்முதல்வாதச் சிந்தனைப் படிவத்தைத் தெளிவுபடுத்தப் பெரும் முயற்சி செய்துள்ளேன்.
இந்துப் பண்பாட்டிலுள்ள கருத்து முதல்வாத மதநம்பிக்கைப் பகுதிகளை மட்டும்தான் பகவத் கீதை முன்னிலைப்படுத்துகிறது. பகவத் கீதையைத் திறனாய்வு முறையில் படிக்காதவர்கள்தான், அது பண்டைய இந்துத் தத்துவங்களின் கருத்தாண்மைக் கலவை என்று கூறுகிறார்கள். கீதை ஆசிரியருக்கு ஒத்துவராத வேறு பல சிந்தனை மரபுக் கருத்துக்களை முற்றிலும் புறக்கணித்திருக்கிறார். ஆசிரியர் கூறவிரும்பும் கருத்துக்களுக்கு எதிர்மறையான ஒரு சில கருத்துக்கள் கீதையில் காணப்பட்டாலும் அவை சிதைக்கப்பட்டுக் கூறப்படுவதோடு, ஆசிரியரின் கருத்துக்கேற்றவாறு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. எனவேதான் முற்கால இந்தியச் சிந்தனை வரலாற்றைச் சுருக்கமாக விளக்குவதற்கு முடிவு செய்தேன். அவை கீதையின் போதனைகளில் உள்ளார்ந்திருக்கும் வஞ்சகத் திட்டங் களைப் புரிந்து கொள்வதை எளிமையாக்கும்.
இந்தியக் கருத்துமுதல்வாதத் தத்துவம் முற்றிலும் புலன் கடந்த இறைநிலை பற்றிப் பேசும் தத்துவமாகத்தான் வளர்ச்சி யடைந்திருக்கிறது. நடைமுறை அறிவுக்கும் அதற்கும் மிகக் குறைவான தொடர்பே உள்ளது. எனவே சராசரி அறிவு படைத்த ஒரு நபரால் இந்தியத் தத்துவத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. எனவே கருத்து முதல்வாதச் சிந்தனை மரபுகளின் கருத்துக்களையும் சுருங்கிய வடிவில் வாசகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தந்துள்ளேன்.
பகவத் கீதையை மட்டுமே தங்களது ஒரே புனித நூலாகவும் அய்யத்திற்கிடமற்ற வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்ட இந்துக் கள், கிருஷ்ணன் கூறிய உயரிய கோட்பாடுகளைக் கடைப்பிடிக் காமல் இருந்துவிட்டார்கள் என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு சமூகத்தைச் சார்ந்த மக்கள் ஒருவனைக் கடவுளாக ஏற்றுக்கொண்ட பின்னர், அவர்கள் அவனை முன்மாதிரியாகக் கொள்ளவும் அவன் கற்பித்த கொள்கைகளின்படி தங்களது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவுமே விரும்புவார்கள். ஒருவேளை அந்தத் தலைவனின் ஆற்றலில் நம்பிக்கை இழந்து விட்டால் அவனது வழிமுறைகளைக் கடைப்பிடியாது விட்டுவிடக் கூடும். ஆனால் பகவத்கீதை, கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக இந்துக்களால் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட புனிதநூல் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்துக்களின் துயர நிலைக்குக் காரணம் கீதைக் கோட்பாடுகள் அல்ல என்றும், அந்தக் கோட்பாடுகளின்படி நடவாததுதான் காரணம் என்றும் கூறப்படுவது மடமையானது.
பகவத் கீதையை வானளாவப் புகழ்ந்து கொள்கிறார்கள். ஆனால் நடுநிலை மனப்பான்மையோடு தனிப்பட்ட முன்முடிவு களுக்கு இடமளிக்காமல் கீதையைப் படித்தால், அது ஆன்ம விடுதலைக்கான அல்லது உலகியல் வாழ்வில் முன்னேறுவதற்கான ஒரு வழிகாட்டி அல்ல என்பது தெரியவரும். உயர்தரமான சில கோட்பாடுகளை அது கூறுகிறது என்பது உண்மைதான். விழுமிய சிந்தனைகள் சிலவற்றை அது கொண்டுள்ளது என்பதை யும் மறுப்பதற்கில்லை. மன எண்ணங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான சில நல்லொழுக்கங்களையும் அது கற்பிக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மனித முன்னேற்றத்தைப் பாழ்படுத்துவதற்கும் சமூகத் தீமைகளை வளர்ப்பதற்குமே கீதையின் போதனைகள் பயன்படும். பயன்பட்டும் வருகிறது. உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப் பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், 'கிடைப்பதில் மனநிறைவு' பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது அமைதியுடன் அனைத்தை யும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்து விடவும் விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழ விடாமல் அடக்கி வைத்துக் கொள்வதற்கும் உயர் வர்க்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுவதே கீதையின் தத்துவம்.
பகவத் கீதை இயற்றப்பட்ட நாளிலிருந்தே, அது புரட்சி சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கான ஆயுதமாகப் பயன்பட்டு வருகிறது. சிதைந்து கொண்டிருந்த பௌத்தத்திற்கு மரண அடி கொடுப்பதற்காக ஒன்பதாம் நூற்றாண்டில் சங்கராச்சாரியார் பகவத் கீதையின் உதவியைத்தான் நாடினார். இருபதாம் நூற்றாண்டில் மதச் சார்பற்ற ஜனநாயக வளர்ச்சியை அழிப்பதற்காக மகாத்மா காந்தி கீதையின் போதனைகளைத்தான் பயன்படுத்தினார். சங்கரர் பௌத்த மதத்தின் மீது மறைமுகமான ஆதரவு கொண்டவர் என்று சித்தரிக்கப்பட்டது. அதேபோன்று காந்தியும் ஜனநாயக விடுதலையை நாடிய தானைத் தலைவர் என்று தம்மைக் கூறிக் கொண்டார். இருப்பினும் இதுவே உண்மை.
பகவத் கீதை கதம்பமான கருத்துக்களைக் கொண்டுள்ள ஒரு நூல். எனவே பகுத்தறிவின் துணைகொண்டு அதை ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் பகுத்தறிவுதான் அனைத்திலும் சிறந்த ஆய்வுச் சாதனம். அதுவே உச்சநீதிமன்றம் போன்று அதிகாரம் படைத்தது. கீதைத் தத்துவத்தின் செல்வாக்குக்கு இந்துக்கள் முழுமையாக ஆட்பட்ட பின்னர், அவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்விலும், இந்துக்கள் இந்துக்களோடும், இந்துக்கள் பிற மதத்தினரோடும் நடந்து கொள்ளும் முறைகள் பற்றியும் தெளிவாக ஆராய வேண்டும். எனவே வரலாற்றைப் பயனுள்ளபடி தெரிந்து கொள்வதற்காக, புனிதமாக்கப்பட்டுவிட்ட பகவத் கீதை கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக, அன்றாடமும் ஆண்டு தோறும் எவ்வாறு இந்துக்களின் மனத்தை ஆற்றலுடன் கட்டுப்படுத்தி வருகிறது என்பதையும் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துவதற் காக எவ்வாறு குறிப்பிட்ட திசையிலேயே சிந்திக்கவும் செயல் படவும் வைக்கிறது என்பதையும் பார்ப்போம்.
பார்ப்பனிய அறிவுஜீவிகள் இந்திய வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்துடன் பார்த்தார்களோ அதைத்தான் கடந்த காலங்களில் இந்திய வரலாறு என்று எழுதியும் கற்பித்தும் வந்தார்கள். வரலாறு பற்றிய பொது மனிதர்களின் கருத்துக்களை வெளியிடுவதற்கு முயற்சிகள் செய்யப்படவே இல்லை. ஏனெனில் அவற்றைப் பார்ப்பனிய எழுத்தாளர்கள் கேலிக்குள்ளாக்கிப் புறக்கணித்து வந்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டி. டபுள்யு. ரைஸ் டேவிட்ஸ் என்பார் பெளத்தம் உயர்நிலை யிலிருந்த கால வரலாற்றைச் சத்திரியப் பார்வையிலிருந்து விவரிக்க முயற்சி எடுத்தார். சிலர் அதை வரம்பு மீறிய செயல் என்று கருதுவார்கள் என்றும் அஞ்சினார். எனினும் அவரது 'பௌத்தர் காலத்து இந்தியா' என்ற நூல் செவ்வியல் இலக்கியமாகத் திகழ்கிறது. பார்ப்பனிய நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறு பட்ட முறையிலும் இந்திய வரலாற்றை விவரிக்க முடியும் என்பதை அந்நூல் எடுத்துரைத்தது.
பார்ப்பனிய நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு பொது மனித நோக்குடன், நமது கடந்தகாலம் பற்றிப் படிக்கும் வேளையில், இந்திய வரலாற்று நிகழ்வுகளும், அதன் வளர்ச்சியும், வரலாற்று நபர்களும் முற்றிலும் வேறுவிதமாகக் காட்சியளிக்கிறார்கள். சிந்தனையிலும் செயலிலும் நிகழும் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றித் தனது கருத்தை லியோ டால்ஸ்டாய் (1826 - 1910) இவ்வாறு விளக்கிக் கூறினார்: "முன்பெல்லாம் எனக்கு நல்லனவாகத் தோன்றியவை அனைத்தும் இப்பொழுது கேடானவை யாகத் தோன்றுகின்றன. கேடானவையாகத் தோன்றியவை அனைத்தும் நல்லனவாகத் தோன்றுகின்றன. ஒரு செயலை நிறை வேற்றுவதற்காக வெளியில் செல்லும் ஒரு மனிதன், பாதி வழியில் அச்செயலை நிறைவேற்றுவதற்கான தேவையில்லை என்று முடிவு செய்து வீடு திரும்பும் நிகழ்வு ஒரு மனிதனுக்கு நிகழ்வது போன்று எனக்கும் நிகழ்ந்தது. அவனுக்கு இடப்புறமாக இருந்தவை யெல்லாம் அவனுக்கு வலப்புறமாகவும் வலப்புறமாக இருந்தவை இடப்புறமாகவும் இடம் பெயர்ந்தன.... எனது வாழ்க்கையின் போக்கும் திசை மாறியது. எனது விருப்பங்களும் மாற்றம் பெற்றன. நன்மையும் தீமையும் இடம் மாறின. இந்தியாவின் கடந்த காலம் பற்றிய எனது ஆய்வை நூலாக்கும் வேளையில் நானும் அந்த ரஷிய மாமனிதரின் அனுபவத்தைத்தான் உணர்ந்தேன்.
வளர்ச்சியடைந்த பிற மொழிகளைப் போன்றே சமஸ் கிருதமும் கடினமானதொரு மொழி. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ள மதநூல்களையும் மதம் சாராத நூல்களையும் புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல. ஆனால் பகவத் கீதை எளிதான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. கீதையில் கவிதைத் திறம் நிறைந்திருக்கிறது. அதனுடைய தெளிவான இலக்கிய நடையும் சொற்களின் பயன்பாட்டிலுள்ள இசையோசையும் கீதையின் கவர்ச்சிக்கு மேலும் அழகூட்டுகிறது. மதவுணர்வு அடிப்படையில் கீதையில் காணப்படும் நற்கூறுகளை விட அதில் கையாளப்பட்டிருக்கும் மொழி நடையழகுக்காகக்கூட அது மக்களின் ஆதரவைப் பெற்றிருந்திருக்கக்கூடும். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இந்திய இயலாளரான எம். வின்டர்நிட்ஸ் கூறுகிறார், "கீதையின் கவின் பெறும் கவிதைத் திறம், எடுப்பான மொழிநடை, பளீரெனத் தெரியும் உருக்காட்சிகள், படிமங்கள், கவிதை நூல் முழுவதும் கவிந்திருக்கும் உயிர்ப்பூட்டும் அகத் தெழுச்சி ஆகியவைதான் எக்காலத்திலும் வாழ்ந்து வரும், எதையும் எளிதாக உள்ளத்தில் பதித்துக்கொள்ளும் மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆயினும் இந்தக் கவிதை நூலில் அடங்கியுள்ள பாக்களின் பொருட்செறிவில் விரிவுரையாளர்கள் தங்களது தனிப்பட்ட மனவுணர்வுகளையும் கருத்துக்களையும் திணித்திருக்கிறார்கள். அவை போன்ற விளக்க வுரைகளை எழுதியவர்கள்தான் பகவத் கீதையை மருட்டும் புதிர்கள் நிறைந்ததாகவும் எளிதில் புரிந்து கொள்ள முடியாததாக வும் செய்துவிட்டார்கள். சூழ்ச்சித் திட்டத்தோடுதான் அவ்வாறு செய்தார்கள் என்பதும் உண்மை.
துணை நூற்களின் துணையுடன் பகவத்கீதையைப் படிக்கும் மாணவர்களுக்கு அதனுடைய முக்கியமான கோட்பாடுகள் தெளிவாகத் தெரிய வருகின்றன. அத்தோடு கீதையிலுள்ள முரண்பாடுகளும், நிலை திரிதல்களும், அறிவாற்றல் நிரம்பிய ஒரு மாணவனின் கவனத்திற்குத் தப்புவதில்லை. கீதையிலுள்ள குறைகளை மூடி மறைப்பதற்காகவும் கீதை ஆசிரியர் குறையற்றவர் என்று நிலை நிறுத்துவதற்காகவும் கீதை விரிவுரையாளர்கள் கீதையிலுள்ள சொற்களுக்கும் இலக்கிய நயங்களுக்கும் மூல நூலுக்குப் பொருந்தாத, நம்பமுடியாத, மிகைப்படுத்தப்பட்ட பொருள் உரைக்கிறார்கள். சமஸ்கிருதம் செறிவுள்ள மொழி. பெரும்பாலான சமஸ்கிருதச் சொற்களுக்குப் பத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் உண்டு. அப்பொருட்கள் ஒன்றுக்கொன்று முரணானதாகவும் இருக்கும். சமஸ்கிருதத்தின் மொழிவளத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட விரிவுரையாளர்கள் கீதைக்குத் தங்களது விருப்பத்திற்கேற்பப் பொருள் விளக்கம் கூறி வந்துள்ளார் கள். எனவே கீதைக்கு எழுதப்பட்ட பொழிப்புரைகள் அனைத்தும் கீதைப் பக்தர்களின் முன்முடிவுக் கருத்துகளுக்கு இசைவான தாகவும் தாங்கள் போற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளன. இவை போன்ற புனைவுரைகள் வைதீகப் போக்கை வலுவூட்டுவதற்கும், கீதை தெய்வத்தன்மை வாய்ந்தது என்று நிலைநிறுத்துவதற்கும் மட்டுமே பயன்படும். அப்புனை வுரைகள் இந்தக் கவிதை நூலின் வரலாற்று முக்கியத்துவத்தையும் இந்திய சமூக வாழ்வில் கீதையின் பங்களிப்பையும் மதிப்பீடு செய்வதற்கு உதவிகரமாக இருப்பதில்லை.
கடந்த காலங்களில் இந்துக்களின் மனப்பான்மையையும் குணநலன்களையும் வடிவமைப்பதிலும் அதன் மூலம் இந்திய வரலாற்றில் மாற்றங்கள் நிகழ்விப்பதிலும் பகவத் கீதை மிகப் பெரிய பாத்திரம் வகித்திருக்கிறது. கீதை இயற்றப்படுவதற்குக் காரணமாக இருந்த சமூகநிலை இன்றுவரை மாற்றமின்றித் தொடரும் நிலையில், பகவத் கீதை, மக்களின் மனப்பான்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தனது பாத்திரத்தைத் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டும் மக்கள் மீது தனது செல்வாக்கைச் செலுத்திக்கொண்டும்தான் இருக்கும். கீதையைப் பாரபட்சமற்ற முறையில் ஆய்வு செய்தால், இந்திய வரலாற்றில் கீதை ஆற்றிய பங்கு பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் நாம் தெளிவாகக் கண்டுணர முடியும். கோடிக்கணக்கான இந்தியர்களின் புனித நூலாகப் புகழப்படும் கீதை அதன் தகுதிற்கேற்ப மிக உயரிய மதிப்பைப் பெற்றிருக்கிறது. ஆயினும் உண்மையை வெளிக் கொணர வேண்டியதிருப்பதால் கீதை கோடிட்டுக் காட்டும் கொள்கைகளையும் அறிவிப்புகளையும் பகுத்தறிவுடன் ஆய்வு செய்தல் வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்கையில் நமது பண்டைய பண்பாட்டு மரபுகள் உறுதியுடன் பின்பற்றப்படும். இந்த முறை யில் உண்மைகளை வெளிக் கொணர்வதுதான் இந்திய சமூகத்தின் எதிர்கால நலனுக்கு உகந்ததாக இருக்கும்.
நான் பதினான்கு வயது இளைஞனாக இருந்த காலத்தில் பகவத் கீதைக்குத் திருமதி அன்னி பெசன்ட் எழுதிய மொழியாக்கப் படி ஒன்று கிடைக்கப் பெற்றேன். கடந்த ஐம்பத்து மூன்று ஆண்டு களாக எனக்குக் கிடைத்த பல்வேறு மொழியாக்கங் களையும் விரிவுரைகளையும் கவனமாகப் படித்து வந்துள்ளேன். கீதையில் கூறப்பட்டுள்ள மத, தத்துவக் கருத்தியல்கள் பற்றி வைதீக, மிதவாத சிந்தனையுள்ள இருவகை அறிஞர் நண்பர்களிட மும் விவாதம் செய்துள்ளேன். இவை போன்ற விவாதங்கள், செய்யப்பட்ட ஆய்வுகள் ஆகியவற்றினால் எய்தப் பெற்ற தெளி வான முடிவுகள்தான் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.
இந்தியர்களும் வெளிநாட்டவர்களும் பகவத் கீதை பற்றிப் புகழ்ந்து எழுதிய நூற்றுக்கணக்கான நூல்கள் வெளி வந்துள்ளன. இந்நிலையில் கீதை பற்றி முதன் முறையாகத் திறனாய்வு முறையில் உரை செய்யப் புகுந்த எனது பெருமுயற்சியை வரம்பு மீறிய செயல் என்றுகூட சில வட்டாரங்கள் கருதக்கூடும். அது நேர்மை யற்ற குற்றச்சாட்டு என்பதோடு நிலைநிறுத்த முடியாததும் ஆகும். சுதந்திரமான நாட்டில் வாழ்ந்து வருகிறவர்கள் என்ற முறையில், பிறரை விமரிசிக்கும் திறனை வளர்த்துக்கொள்வதோடு (அதில் நாம் மிதமிஞ்சிய திறமைசாலிகளாக இருக்கிறோம்) நம்மையும், நமது அரசியல், நமது மதம், நமது பண்பாடு, நமது ஒழுகலாறுகள், நமது மரபுவழிப்பட்ட நடைமுறைகள் ஆகிய அனைத்தையும் விமரிசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதில் நாம் நல்ல வளர்ச்சி பெறவில்லை. எனவே சமூகச் செயல்பாடுகளின் பல்வேறு தளங்களிலும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியாமலும் எதிர்பார்க்கும் பலனை எட்ட முடியாமலும் இருக்கிறோம். சுயவிமரிசனம் செய்து கொள்வது என்பது உபநிடத காலத்தில் அறிவுச் சிந்தனையின் ஒரு பகுதியாக இருந்தது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் சமூக மாற்றம் நடைபெறுவதற்கு இன்றியமை யாததான அறிவுப் புரட்சி நோக்கி இந்தியாவை வழி நடத்திச் செல்வதற்காகச் சுய விமரிசனம் செய்து கொள்ளும் மனப் பான்மையை நாம் மீண்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும். சுயவிமரிசனம் என்பது முற்போக்கிற்கான திறவுகோலாகும்.
போற்றுதலுடன் பேணப்படும் நம்பிக்கைகள், பண்டைய மரபு வழிப்பட்ட நடைமுறைகள், காலத்தாற் பழமையாகிப் போன ஒழுகலாறுகள் ஆகியவற்றை விமரிசனக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்யும் வேளையில் வைதீகப் பண்டிதர்கள் மற்றும் ஆழ்ந்த மதப்பற்றுள்ளவர்களின் மனவுணர்வுகளைப் புண்படுத்துவது என்பது தவிர்க்க முடியாதது ஆகும். பதரிலிருந்து தானியமணியைப் பிரித்தெடுப்பது போன்று உண்மையைப் பிரித்தெடுப்பதே நமது நோக்கம். மாறாக யாருடைய மனதையும் புண்படுத்துவது நோக்க மல்ல. இந்தக் கடினமான பணியை நிறைவேற்றுவதில் போற்று தலுக்குரிய உபநிடதங்களிலிருந்து நான் அகத்தூண்டுதல் பெற் றேன். 'தைத்திரிய ' உபநிடதத்தில் ரிஷி கூறுகிறார், "ரீதம் வாதிஷ்யாமி; சத்யம் வாதிஷ்யாமி, தன்மம் வாதோ.'' (நான் கும் பலயைமான சூழலைபாடுகளி நேர்மையானவற்றைப் பேசுவேன்; நான் உண்மையானவற்றைப் பேசுவேன்; அவையே என்னைப் பாதுகாக்கும்). இந்திய வரலாறு என்றுமே கண்டிராத மாபெரும் பௌத்தப் புரட்சியின் முன்னோடி களாகத் தங்களை வெளிப்படுத்திக் கொண்ட மாபெரும் சிந்தனை யாளர்களின் அடிச்சுவட்டில் பயணிக்கும் நான், இந்த ஆய்வு நூலை இந்திய மக்களுக்குச் சமர்ப்பிக்கும் துணிவு பெற்றேன். இன்று இந்தியத் தேசியவாதிகள் என்றழைக்கப்படும் பார்ப்பனர்கள் கடந்த காலங்களில் அரும்பாடுபட்டு வளர்த்துவிட்ட, இன்று இந்திய மக்களின் நடைமுறையில் இருக்கும் மனப்பான்மையைவிட, ஆரோக்கியமான மனப்பான்மையை இந்திய மக்களுக்குப் புகட்டுவதற்கு இந்த நூல் பயன்படும் என்றும் கருதுகிறேன்.
குறிப்புகள்:
1. Essays on the Gita p. 543.
2. Discovery of India pp.199 - 201.
3. Confessions p. 307.
4. A History of Indian Literature Part I, p. 430.