புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/homo-deus
மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை
மதிப்பிற்குரிய வாசகப் பெருமக்களுக்கு,
வணக்கம்!
“சேப்பியன்ஸ்' நூலைத் தொடர்ந்து திரு யுவால் நோவா ஹராரி எழுதிய அடுத்தப் புத்தகம் 'ஹோமோ டியஸ்'. இந்நூலின் வாயிலாக உங்களை மீண்டும் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளுகிறேன். சேப்பியன்ஸைப்போலவே இந்நூலின் மொழிபெயர்ப்பும் எனக்கு ஓர் அற்புதமான கற்றல் அனுபவமாக அமைந்தது. மிக முக்கியமாக, மனத்தை விசாலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஒரு பரந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சேப்பியன்ஸ் மற்றும் ஹோமோ டியஸ் நூல்கள் வாயிலாக நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன் என்றால் அது மிகையல்ல. சுமார் மூன்று மாதகாலக் கடும் உழைப்பிற்குப் பிறகு வெளிவந்துள்ள இந்நூலில், மனிதகுலத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன, மனிதகுலத்திற்கான அபாய அறிவிப்புகள் ஆங்காங்கே முளைத்து நம் தலையில் ஓங்கித் தட்டி நமக்கு விழிப்பூட்டுகின்றன.
இந்நூலிலும் இயற்பியல், செயற்கை நுண்ணறிவு, உயிரியல், மனிதவியல் போன்ற பல துறைகளுக்குரிய தனித்துவமான வார்த்தைகளை ஹராரி தாராளமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அச்சொற்களுக்கு மிகப் பொருத்தமான, வாசிப்பதற்கு எளிமையான தமிழ்ச் சொற்களைத் தேடிக் கண்டுபிடிப்பது உண்மையிலேயே சவாலானதாக இருந்தது. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கின்ற பொருத்தமான தமிழ் வார்த்தைகளை நான் பயன்படுத்தியுள்ள போதிலும், படிப்பதற்குக் கரடுமுரடாகவும் படிப்போரை அந்நியப்படுத்தும் விதத்திலும் இருப்பதாக நான் கருதுகின்ற வார்த்தைகளை நான் தவிர்த்துவிட்டேன் என்பதை நான் இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஓரிரு ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் புழக்கத்தில் இல்லாததால் அவற்றை நான் அப்படியே அவற்றின் ஆங்கில உச்சரிப்புடன் தமிழில் எழுதியிருக்கிறேன். இந்நூலில் இடம்பெற்றுள்ள பெயர்ச்சொற்கள் அனைத்தும் அந்தந்த மொழிகளில் (ஸ்பானிய மொழி, ஹங்கேரிய மொழி, பிரெஞ்சு, ஆங்கிலம் போன்றவை) அவற்றுக்குரிய உச்சரிப்பின்படி அப்படியே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில பெயர்ச்சொற்களின் தமிழ் உச்சரிப்பு மூலமொழியிலிருந்து வேறுபட்டு இருந்தாலும், மக்கள் அவற்றை நெடுங்காலமாக அப்படியே வாசித்துப் பழகிவிட்டதால், நான் அவற்றை அப்படியே விட்டுவிட்டேன் (எ.கா. ஆங்கிலத்தில் 'சார்ல்ஸ்' என்று உச்சரிக்கப்படுகின்ற வார்த்தை 'சார்லஸ்' என்று பரவலாக உச்சரிக்கப்படுவதால், இந்நூலிலும் அது சார்லஸ் என்றே இடம்பெற்றுள்ளது.)
ஒவ்வோர் அத்தியாயத்திலும் இடம்பெற்றுள்ள சிறப்பு வார்த்தைகளை (ஆங்கிலம் மற்றும் தமிழ்) உள்ளடக்கிய கலைச்சொல் பட்டியல் ஒன்றை இந்நூலின் முடிவில் நான் கொடுத்திருக்கிறேன். இம்முறையும் ஹராரி அவர்கள் சமீபத்தில் மும்பைக்கு வருகை தந்தபோது, என் கணவர் திரு குமாரசாமி அவர்கள் அவரை நேரில் சந்தித்து, இந்நூலில் எங்களுக்கு எழுந்த சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டது மொழிபெயர்ப்புக்குப் பேருதவியாக இருந்தது.
இந்நூலின் மொழிபெயர்ப்பில் தமிழ் தொடர்பாக எனக்கு எழுந்த ஐயங்களைக் களைந்து தக்கப் பரிந்துரைகளை வழங்கி எனக்கு வழிகாட்டிய தமிழறிஞரான பத்மஸ்ரீ அவ்வை நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மனிதகுல வரலாற்றையும் மனிதகுல எதிர்காலத்தையும் பற்றிய மேலும் சுவையான தகவல்களை உள்ளடக்கிய இந்நூல், நீங்கள் ரசித்து மகிழும் விதத்திலும் ஆழ்ந்து சிந்திக்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை மனத்தில் கொண்டு இதை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். இருப்பினும், ஏதேனும் தவறுகள் எங்கேனும் இடம்பெற்றிருந்தால், தயவு செய்து நீங்கள் அவற்றைப் பொறுத்துக் கொள்ளுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்நூல் தொடர்பான உங்களுடைய கருத்துக்களை நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால், nagalakshmi.shanmugarma gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் வருங்காலம் வளமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உண்மையுடன்,
நாகலட்சுமி சண்முகம்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: