திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - சிறப்புரை
திராவிடர் இயக்கப் பார்வையில் மகாகவி பாரதியார் எப்படித் தோற்றம் அளிக்கிறார் என்பதை வாலாசா வல்லவன் இந்த நூலில் தகுந்த சான்றுகளோடு வாசிப்பாளர்களுக்குத் தெளிவாகப் புலப்படுத்துகிறார். திரு வல்லவன் அவர்கள் மிகவும் முயன்று பாடுபட்டு இந்த நூலை உருவாக்கியுள்ளார். பல நூல்களைப் படித்துச் செய்திகளை முறையாகத் திரட்டி அவற்றை வகைப்படுத்தி ஆராய்ந்து தம் ஆய்வில் வெளிப்பட்ட முடிவுகளை இந்த நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.
கவிஞர்கள் உணர்ச்சிக்கு இடமளிப்பதில் வியப்பில்லை. கவிதையில் பொதுவாக நாம் காண்பது இலக்கிய மொழிநடை; அறிவியல் மொழிநடையல்ல. உணர்ச்சிவசப்பட்டு இலக்கிய மொழியில் எழுதும்போது, பாரதியாருக்கு மட்டுமல்ல, யாருக்கும் முரண்பாடுகள் நேரக் கூடாது என்று எதிர்பார்க்கிறோம். வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்றபடி அவரைப் பலர் படம் பிடித்துக் காட்டும்போது மாறுபட்ட கோணங்களில் அவரைப் பார்த்தவர்கள் கொஞ்சம் புருவத்தை நெறிக்கிறார்கள். திரு வல்லவன் முரண்பாடுகளைக் கூர்ந்து நோக்கித் தகுந்த ஆதாரங்களோடு தெளிவு பெற்றுத் தாம் பெற்ற தெளிவை வாசிப்பாளர்க்கும் வழங்குகிறார்.
ஆரியர், திராவிடர் முதலான சொற்களை, பாரதியார் பயன்படுத்திய முறையும் புரிந்து கொண்ட முறையும் எல்லோருக்கும் உடன்பாடான முறையாக இருக்க முடியாது. வைதிக மனப்பான்மையோடு பார்த்தால் ஆரியம் சார்ந்த எதுவும் உயர்ந்ததாகத் தான் தோற்றமளிக்கும். திராவிடம் சார்ந்த எதுவும் இளப்பமாகவும் இழிவாகவுந்தான் தோன்றும். கம்யூனிஸ்டு கட்சியைப் பற்றியும் திராவிட இயக்கத்தைப் பற்றியும் நீதிக் கட்சியைப் பற்றியும் அவர் கொண்டிருந்த கருத்துகள் எப்படிப் பட்டவை என்பதும் அவை எந்த அளவுக்குச் சரியானவை என்பதும் இந்த நூலில் விருப்பு வெறுப்பற்ற நிலையில் விரிவாக ஆராயப் பட்டுள்ளது.
திரு வல்லவன் அவர்கள் பலருக்கும் தெரியாத பல புதிய செய்திகளைத் தேடித் தொகுத்து இந்த ஆய்வில் பயன்படுத்தியிருக்கிறார். பாரதியாரைப் பற்றிச் சரியான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள இத்தகைய நூல்கள் பெரிதும் தேவை.
பெரிய மனிதர்களை மையப்படுத்தி நிறைய நூல்கள் வெளிவந்திருக்கின்றன. பாரதியாரைப் பற்றியும் நிறைய நூல்கள் வெளிவந்திருக்கின்றன. துதிபாடுவதையோ வசைபாடுவதையோ நோக்கமாகக் கொள்ளாமல் சரியான புரிதலை உண்டாக்குவதற்காக எழுந்துள்ள நூல்கள் மிகவும் குறைவு என்றுதான் கருத வேண்டியுள்ளது. திரு வல்லவன் உருவாக்கியுள்ள இந்த நூல் விரும்பிப் படிக்கத் தக்க நூலாக அமைந்துள்ளது. திரு வல்லவன் இத்தகைய நல்ல நூல்களை மேலும் உருவாக்கி வழங்கத் தக்க வகையில் தமிழ் நெஞ்சங்கள் அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் என்று நம்புகிறேன்.
சென்னை - 7-10-2005