திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள் - அணிந்துரை
மனிதனின் எண்ணத்தின் தெளிந்த முதல் வடிவம் பேச்சு, சொல், மொழி. எண்ணங்களின் தொடர்ச்சியால் உருவாகும் கருத்தின் வடிவமே இலக்கியம். இலக்கியம் கதையாக, பாட்டாக, கவிதையாக, நாடகமாக வடிவம் பெறும்.
அவற்றுள் தொன்னாள் முதல் மக்களின் வாய் மொழியாகவே வடிவம் கொண்டு வளர்ந்து பரவியது கதையே. பாட்டனோ பாட்டியோ பேரக் குழந்தைகட்குச் சொல்லும் முறையில் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வழங்கி வருவது கதை. அவற்றுள் பல காட்டு விலங்குகள், பறவைகள், மரங்கள், ஆறுகள் முதலானவை ஒன்றுடன் ஒன்று பேசுவதாகக் கற்பித்து, ஒன்றை ஒன்று ஏமாற்றியது, வென்றது, விரட்டியது போன்று முடிவு கூறிக் குழந்தை மனம் களிக்கச் செய்யும் இயல்பின. இவ்வகையான கதைகளே பஞ்சதந்திரக் கதைகளாக வழங்குகின்றன.
பேய், பூதம், பிசாசு, இராக்கதன் போன்ற கற்பனைகளை வைத்து வழங்கிய கதைகளும் பல மகாபாரதத்தில் இடம் பெற்றன இப்படிப்பட்ட கதைகள் பல. இவையேயன்றி, தெய்வங்களின் பெயரால் செவிவழிக் கதைகளாகப் பேசப்பட்டவையே பின்னர் புராணங்களாக வளர்ந்தன. அவை மக்களின் பக்தியுணர்வை வளர்த்து, மதவழி நம்பிக்கைகளை நாட்டவே துணையாயின.
பல கதைகள் குழந்தைகளை அச்சுறுத்தவும், வயது வந்தவர்களின் மூடநம்பிக்கையை நிலைப்படுத்தவுமே பயன்பட்டன. வேறுபல கதைகள் சமுதாயத்தில் நிலவிய பிறவி ஏற்றத் தாழ்வையும், சாதிமுறையையும், செல்வர் - வறியர் என்னும் வேற்றுமையையும், அவரவரும் தம் முற்பிறவியில் செய்த பாவ - புண்ணியங்களின் விளைவு, தலைவிதி என்று ஏற்று நம்பிக் கிடக்கவும் ஏதுவாயின. கதை கேட்கும் விருப்பம் மக்கள் இயல்பாதலின் புராணங்களையும், இதிகாசங்களையும் திருக்கோயில்களில் கதைப்பாட்டாகச் (காலட்சேபம்) சொல்லும் முறை ஆயிரத்து ஐநூறு ஆண்டுகட்கு முன்னர் பல்லவர் ஆட்சிக் காலத்தில் வளரலாயிற்று. இது போன்ற கதைகள் கிரேக்கப் புராணங்களிலும், மேல்நாட்டாரின் தொன்மைக் கதைகளிலும் உண்டென்றாலும், மேல் நாடு எய்திய அறிவியல் சிந்தனை - மதக் கொள்கை மறுப்புணர்வு ஆகியவற்றால் அவை பக்தியோடு, கண்மூடித்தனமாக நம்பப்படுவதில்லை.
நம்முடைய நாட்டிலும் இருநூறு ஆண்டுகட்கு முன்னர் மேல்நாட்டு முறைக்கல்வி பரவத் தொடங்கியதன் விளைவாக வரலாற்றுச் செய்திகள் கதை வடிவம் பெற்றன. தறுகண்மையுடன் போரிட்ட வீரர்கள், ஏழைகளின் பசித்துயர் போக்கப் பொருள் தேடக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், நல்ல தங்காள் போன்று கொடுந் துயரத்திற்கு ஆளான மகளிர் பற்றியெல்லாம் கற்பனையுடன் கலந்து கதை கூறும் பழக்கமும் உருவாயிற்று. பெண்களிடையே விடுகதை போடுவதும், விடுவிப்பதும் ஒருவகையில் கற்பிக்கப்பட்ட புனைந்துரையில் உண்மையைக் கண்டறியத் தூண்டுதல்களாக நிலவின.
மேல் நாட்டில் அச்சுக்கலை வளர்ந்த நிலையில், ஒரு எழுத்தாளன் தான் கண்டுணர்ந்த ஒரு சமுதாய நிகழ்ச்சியையோ - கற்பிக்கக்கூடிய ஒரு சூழலையோ கதையாக வரையும் வழக்கம் வளரலாயிற்று. அதன் பயனாகவே சமுதாய வாழ்வில் உள்ள கேடுகளையும் அநீதிகளையும் மக்களிடம் சுட்டிக் காட்டி ஒழிக்க விரும்பியவர்கள் அதற்கேற்ற களனும் கருவும் அமைத்துக் கதைகளை வடிக்கலாயினர்.
புத்தகங்கள் வெளியிடும் வாய்ப்பு வளர்ந்ததும், கிழமை ஏடுகளும் நாளிதழ்களும் பெருகியதும் கதைகள், குறிப்பாகச் சிறுகதைகள் ஆயிரக்கணக்கில் தோன்றத் துணையாயின. அந்த வகையிலேயே நம்முடைய நாட்டிலும் பலமொழிகளிலும் கதைகள் உருக் கொண்டன.
புதினம் - நாடகம் - கவிதை - காவியம் - சிறுகதை முதலான இலக்கியம் எதுவாயினும் மக்களின் மனப்போக்கைத் தழுவியோ, அன்றி அதன் ஆசிரியரின் சமுதாயப் பார்வையைத் தழுவியோதான் அமையலாகும். அந்த வகையில் பல கதைகள் சமுதாய வாழ்வில் நிலவிய பழைமைப் பிடிப்பை விவரிப்பதாகவே அமைந்திருந்தன. மக்களிடம் நிலவிய மூடநம்பிக்கை, சாதி வேற்றுமை, பெண்ணடிமை நிலை, முதலாளித்துவச் சுரண்டல் ஆகியவற்றை உலக இயல்பென ஏற்றுக் கொண்டதாகவே இருந்தன.
தமிழ் மொழியில் பாரதியார் கவிதைகளால் ஏற்பட்ட மறுமலர்ச்சிச் சிந்தனையினால் ஒவ்வோரளவிலும் வகையிலும் மூடநம்பிக்கைகளையும் குருட்டுப் பழக்க வழக்கங்களையும் சாடும் எழுத்தாளர்கள் சிலர் தோன்றினர். அவர்களுள் குறிப்பிடத்தக்க முன்னோடிகள், அக்கிரகாரத்து அதிசயப் பிறவி' என்று அறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட வ.ரா. (வ. ராமசாமி) அவர்களும், 'சிறுகதைக் கலையைப் போர்க்கருவியாகக் கொண்டு சமுதாயக் கொடும் பேய்களை எதிர்த்தவர்' என்று டாக்டர் மு.வ. அவர்களால் குறிப்பிடப்பட்ட புதுமைப்பித்தன் அவர்களும் ஆவர். அதுகாறும் நிலவிய எழுத்தாளர் கைக்கொண்ட முறையை மாற்றிச் சுதந்திரமான சிந்தனையைக் கதைகளில் பரவவிட்ட புரட்சி எழுத்தாளர் புதுமைப்பித்தன். அவரது கதைகள் இடம் பெற்றதால் புகழ்பெற்ற 'மணிக்கொடி' ஏட்டின் எழுத்தாளர்கள் பலர், புதுமைப்பித்தனை வழிகாட்டியாகக் கொண்டு கதைகள் புனைந்தனர். ஆனால் அவை படிப்பவர்தம் சிந்தனைக்கு விருந்தாயினவேயன்றி மக்களை மனமாற்றம் அடையச் செய்யும் ஓர் இயக்கமாக வல்லமை பெற்றதாகவில்லை.
ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகப் பிறந்த நீதிக்கட்சியின் சமூக நீதி இலட்சியத்திலும், இழிபிறவி என வீழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையை அவர்களுக்கு உணர்த்த முற்பட்ட பகுத்தறிவு இயக்கக் குறிக்கோளிலும் உறுதி கொண்டு, அந்தக் கொள்கைகட்கு மாறான மத மூட நம்பிக்கைகளை வளர்க்கும் வைதிக வல்லாண்மையை ஒழிப்பது மூலமே, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று தெளிந்த திராவிட இயக்கத்தாரே, தமது எழுத்துப்பணி கலைப்பணியாவும், இந்தக் கொள்கை பரப்பவே பயன்பட வேண்டும் என்னும் வேட்கையுடன் எழுதத் தலைப்பட்டனர்.
அவர்கள் எழுதிய கலைப்படைப்புகள் எவ்வகையின தாயினும், அவை இந்தக் கொள்கையும் குறிக்கோளும் கொண்டவையாய் அமைந்தன. அப்படிப்பட்ட குறிக்கோளுடன் சமுதாய மாற்றத்தை உருவாக்க விரும்பித் தீட்டப்பட்ட கதைகள் பலப்பல.
அப்படிப்பட்ட சமுதாய மாற்றத்தை நாடியே, திராவிட - ஆரிய இனவழியில் பிறந்த முற்றிலும் முரண்பட்ட நெறிகளை விளக்கிடுவாராயினர். சமத்துவம் சகோதரத்துவம், சுதந்திரம் ஆகிய மானிட உரிமைகள் தழைத்திட ஏதுவான கொள்கைக் கோட்பாடுடையது திராவிடச் சமுதாயப் பண்பாட்டு நெறி என்பதை உணர்த்தவே ஆரியத்தைப் பிரித்துக் காட்ட வேண்டிய தேவை தொடர்ந்தது. அந்தக் குறிக்கோளுடன் தமது இலக்கியப் படைப்புகள் அனைத்தையும் வடிவாக்கிய பேரறிஞர் அண்ணாவும், புரட்சிக் கவிஞரும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும் பெருமைக்குரிய வழிகாட்டிகள் எனலாம்.
புரட்சிக் கவிஞரின் புரட்சிக்கவி' முதலான சிறுகதைகள் பல கவிதை வடிவம் பெற்றதால் சிறுகதை' யாகக் கொள்ளப்பட வில்லை. அறிஞர் அண்ணா இயற்றிய சிறுகதைகள் பல. ஒவ்வொன்றும் ஒருவகைச் சூழலைச் சித்தரிப்பது அண்ணாவின் நடை நலத்தால் கதைக்காட்சி கண்முன்னே தோன்றி, உள்ளத்தைக் கிளறும் வலிமை உடையதாகும். ஏழையின் குடும்ப வாழ்வின் மனமகிழ்ச்சி அவனது ஆண்டையால் எப்படி யெல்லாம் பறிக்கப்படுகிறது என்பதை அவரது செவ்வாழை' கதையினில் காணலாம். அந்த ஏழையின் தவிப்பை உணர்த்திட அவர் நடையே புலம்பும்.
கலைஞர் கருணாநிதி எழுதியுள்ள கதைகள் பலவும் நிகழ்ச்சிச் சித்திரங்களாக அமைந்து, அவற்றைப் படிப்பவர்தம் உள்ளத்தைக் கரைத்து, நீதியை உணரச் செய்திடும் திறத்தன.
அந்த வரிசையில் இடம்பெறும் புகழ்பெற்ற திராவிடர் இயக்க எழுத்தாளர்களே - இந்தத் தொகுப்புக் கதைகளை வரைந்த ஆசிரியர்களான
- திரு. இராம. அரங்கண்ணல்.
- திரு. ஏ.வி.பி.ஆசைத்தம்பி.
- திரு. இளமைப்பித்தன்.
- திரு. இரா. இளஞ்சேரன்.
- திரு.கே.ஜி. இராதாமணாளன்.
- திரு. தில்லை. மறைமுதல்வன்.
- சிறுகதை மன்னர். எஸ்.எஸ். தென்னரசு.
- தத்துவமேதை டி.கே.சீனிவாசன்.
- திரு. முரசொலி மாறன்.
- திரு. ப. புகழேந்தி
முதலானோர், அவர்தம் எழுத்தாற்றல், கதைபுனையும் திறன், கதைக்கருவைத் தேடும் முறை, கதை மாந்தரும் களனும் அமைத்திடும் முறை, கதை மாந்தர்தம் உரையாடல் மூலம் தமது கொள்கையை இடம் பெறச் செய்யும் மதிநுட்பம் ஆகியவை அவரவர் உளப்பாங்கை ஒட்டியதாய் அமைந்ததால் வேறுபடும் தோற்றங்கள் தரினும், தமிழ்ச் சமுதாய மறுமலர்ச்சிக்கு ஏதுவாகும் திறத்தால் குறிக்கோளில் ஒன்றியனவே.
அத்தகு சிறப்புடையஆசிரியர்கள் இயற்றிய சிறுகதைகளைத் தேர்ந்து எடுத்து இந்தக் கதைத் தொகுப்புகளை வெளியிடும் ஆசிரியர் ப. புகழேந்தி அவர்களே புகழ்பெற்ற எழுத்தாளர். திராவிட இயக்க உணர்வுகளில் ஊறித் திளைத்தவர். உறுதி பூண்டவர். அவரால் தொகுக்கப்பட்ட இந்தத் தொகுப்புகள் தமிழ்மக்களின் வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.
திராவிட இளைஞர்கள் இந்தக் கதைகளைப் படித்துச் சமுதாயச் சீர்திருத்தத்தின் தேவையை உணர வேண்டும் என்பது என் விழைவு.
தொகுக்கப்பட்டுள்ள கதைகள் எவையும் படிப்பவர் பொழுது போக்கத் துணையாகும் வெறுங்கதைகளல்ல; திராவிடத்தின் மறுமலர்ச்சிக்கு வழிகோலும் சிந்தனையை வளர்க்கும் சித்திரங்கள்! திராவிடத்தின் விடியலுக்கு முன்னர் எழும் சேவலின் அகவல்!
டிசம்பர் 1997 (க. அன்பழகன்)