பிம்பச் சிறை - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/bimpa-chirai
 
முன்னுரை

எம் .ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) அவர்களின் சகாப்தத்தை நவீன கால அரசியல் புனைவாக இந்தப் புத்தகம் பகுத்து ஆய்கிறது. தமிழக அரசியலில் இதற்கு முன் எவரும் பெற்றிடாத செல்வாக்கை பெற்றிருந்த எம்.ஜி.ஆர். 'தமிழ்நாட்டு ஏழைகளின் ஈடிணையில்லாத காவல் தெய்வம்' என அவரின் ரசிகர்களால் புகழ்ந்துரைக்கப்பட்டவர். 'அரசியல் கோமாளி' என்று அவரின் எதிர்ப்பாளர்களால் வசைபாடவும்பட்டார். அவர் வாழ்நாளிலேயே ஜாம்பாவனாகத் திகழ்ந்தவர். ஏதேனும் அரசியல் அல்லது சொந்த சிக்கல்களில் எம்.ஜி.ஆர் சிக்கிக்கொண்டபோதெல்லாம் அவரின் நன்றிமிகுந்த ஆதரவாளர்கள் விருப்பத்தோடு தங்களின் உயிர்களை ஈந்தார்கள். அவரின் அரசியல் எதிரிகள் எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பின்னரும் அவரின் பெயர் பொதுமக்களிடையே உண்டாக்கும் உணர்ச்சிப்பெருக்கை கண்டு பயம் கொண்டார்கள்.

எம்.ஜி.ஆர். எனும் ஆளுமையின் தாக்கத்தில் குறிப்பிடத்தகுந்த அம்சம் அவர் வெறுமனே அரசியல் ஆளுமையாக மட்டுமல்லாமல் சினிமா நட்சத்திரமாகவும், அரசியல்வாதியாகவும் ஒரே சமயத்தில் திகழ்ந்தார் என்பதே ஆகும். எம்.ஜி.ஆரின் ஆரம்பகாலப் புகழ் திரைப்படங்களில் அவரின் வெற்றிகரமான வேடங்களைச் சார்ந்தே இருந்தது. தன்னுடைய திரையுலக வாழ்க்கையை 1936-ல் மெட்ராஸ் ஸ்டுடியோஸில் எம்.ஜி.ஆர். துவக்கினார்.

ஐம்பதுகளில் துவங்கி எம்.ஜி.ஆர். திரையில் தனக்கான மரபு மாறாத பிம்பத்தை புகழ்பெற்ற சொற்றொடர்கள் உள்ளுணர்வுகள் மூலம் கவனமாக உருவாக்கினார். கதை வடிவம், வசனங்கள், பாடல்கள் ஆகியவற்றில் தலையிட்டு அவை தன்னுடைய பிம்பத்தோடு ஒத்துப்போவதாகவும், அதை வலுப்படுத்துவதாகவும் அமைவதை அவர் உறுதி செய்து கொண்டார்.

1953-1972 வரை திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க) உறுப்பினராக எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில் தமிழ் மாநிலக்கட்சியான தி.மு.கவின் கொள்கைகளான இறையாண்மைமிக்கத் தமிழகம், நாத்திகம், பிராமண எதிர்ப்பு ஆகியவற்றைத் தன்னுடைய திரைப்படங்களில் மிதமாக நீர்த்துப் போன வடிவில் பரப்பினார். கட்சியின் முக்கியத் தலைவர்கள், கட்சிக்கொடியின் நிறங்கள் ஆகியவற்றையும் திரையில் காட்டினார். தி.மு.க அரசியல் தகவல் பரிமாற்றத்துக்கான கருவியாகச் சினிமாவை அதிகளவில் சார்ந்திருந்ததால், எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அரசியல் களத்துக்கு நகர்த்தி ஒருவித உயிரோட்டம் மிகுந்த அதிகாரப்பூர்வ தன்மையோடு அதனை அரசியல் முதலீடாகப் பயன்படுத்திக்கொள்ள அதனால் முடிந்தது. அவ்வாறு தி.மு.கவின் அரசியலில் நிழலும், நிஜமும் அடிக்கடி கலந்தது பெருமளவில் பயன்தருவதாக அமைந்திருந்தது. தேர்தலுக்குத் தேர்தல் தி.மு.கவின் செழிப்பான வாக்கு அறுவடைக்கு அது வழிவகுத்தது. ஆனால், தி.மு.கவை விட்டு 1972-ல் கட்டாயமாக எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட சூழலில் தன்னுடைய சொந்த அரசியல் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (பின்னர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எனப் பெயர் மாற்றப்பட்டது) துவக்கினார். அக்கட்சிக்கு எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள், திரை அரசியல் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட மயக்கும் மாய உலகத்தில் தங்களைத் தொலைத்த ரசிகர்கள் 1987-ல் எம்.ஜி.ஆரின் இறப்புவரை தங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்கினார்கள்.

இந்தக் கட்டுரை அடிப்படையில் சுயத் தெளிவுக்காக எழுதப்பட்டது. தமிழ்நாட்டிற்குள்ளும் வெளியும் எம்.ஜி.ஆரின் அளவிட முடியாத அரசியல் வெற்றியால் வியப்பும், வேதனையும் அடைந்த பலரில், நானும் ஒருவன். அவரின் 11 வருட ஆட்சிக்காலம் (1977-87) சந்தேகமே இல்லாமல் தமிழகத்தின் சமகால வரலாற்றின் இருண்ட காலங்களில் ஒன்றாகும். அவரின் ஆட்சிக்காலத்தில் சாராய முதலாளிகள், ரியல் எஸ்டேட் பெரும்புள்ளிகள், எங்கும் நிறைந்திருக்கும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் பெரிதும் கொழித்தார்கள். அதே சமயம் வீழ்ச்சியடையா விட்டாலும் தேங்கிப்போன பொருளாதாரம் எம்.ஜி.ஆரின் முக்கிய ஆதரவாளர்களான ஏழைகளைத் தாங்க முடியாத துயரத்துக்குள் தள்ளியது. நன்கு கொம்பு சீவிவிடப்பட்ட தமிழகக் காவல்துறை தன்னுடைய கருணையற்ற அராஜகமிக்க பண்புகளால் எம்.ஜி.ஆரின் அப்பட்டமான ஆசிகளோடு அடித்தட்டு மக்களான தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் வேலைப்பார்க்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இவர்களிடமிருந்து எழுந்த மிக மெல்லிய எதிர்ப்பைக் கூடக் கடுமையாக அடக்கியது. திராவிட இயக்கத்தின் முற்போக்கான ஆரம்பக் காலத்தில் நடைபெற்ற அயராத போராட்டங்களால் அடித்தட்டு மக்கள் பெற்ற கலாசாரப் பயன்கள் பெருமளவில் சீரழிந்து போவதும் இவர் ஆட்சியில் நடந்தேறின. ஆரம்பகாலப் பகுத்தறிவின் இடத்தில் மத மீட்பு கோலோச்சியது.

இத்தனை குறைகளுக்குப் பின்னரும் எம்.ஜி.ஆரும் அவரின் கட்சியும் அடித்தட்டு மக்களிடம் மகத்தான ஆதரவைப் பெற்றிருந்தார்கள். 1987-ல் நிகழ்ந்த எம்.ஜி.ஆரின் மரணம் மட்டுமே தமிழக அரசியலின் மையத்தை விட்டு அவரை நீக்கி, அதன் மூலம் அவரின் அரசியல் எதிரிகளுக்கு மறு வாழ்வு பெற்றுத்தந்தது. மரணமும் அவரை முழுமையாக மறக்கடிக்கவில்லை எனலாம். எம்.ஜி.ஆரின் முன்னாள் அரசியல் எதிரிகள் அவரின் அழியாப் புகழால் அவரின் நினைவிடங்களைத் திறந்து வைத்து எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கத் தீவிரமாக முனைந்தார்கள். எம்.ஜி.ஆர். எப்படி இப்படியொரு பெரும் வெற்றியை பெற்றார்? இந்த ஆய்வு இந்தச் சிக்கலான தமிழக அரசியல் களத்தை புரிய வைக்க முயற்சி செய்கிறது.

இன்னொரு மட்டத்தில், இந்த ஆய்வு இந்திய அடித்தட்டு வர்க்கத்தின் கடந்த கால, நிகழ்கால அரசியல் குறித்து நிலவும் அறிவுப்பூர்வ வெற்றிடத்தைப் பற்றிய கவலையைக் கருத்தில் கொண்டது. இதைப்பற்றி இன்னும் விரிவாகக் கூறுகிறேன். இந்திய அடித்தட்டு வர்க்கங்களின் அரசியல் குறித்து வளர்ந்து வரும் ஆக்கங்களில் பல்வேறு வகையான எதிர்ப்புகள் வெவ்வேறு வகையான எதிர்ப்பு இயக்கங்கள், அதிகார மையங்களுக்கு எதிரான உரையாடல்களின் பலவகைப்பாடுகள் ஆகியவை குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்து உள்ளன. விவசாயிகள், நிலவுடைமை போராட்டங்கள் குறித்துத் தேசாய் தொகுத்த இரண்டு தொகுதிகள் (1979, 1986) மற்றும் குஹாவின் அடித்தட்டு மக்கள் ஆய்வுகளின் ஆறு தொகுதிகளும் (1982, 1983) இந்த முக்கியத்துவம் மிகுந்த சாதனைக்கு உகந்த எடுத்துக்காட்டாகத் திகழும். எதிர்ப்பை ஆய்வு செய்வது என்பது எப்படி ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்க்கிறார்கள், உரிமை கோருகிறார்கள், ஆட்சியாளர்களின் அதிகாரம், தலைமை ஆகியவற்றைக் குலைக்கிறார்கள் என்பதையும், எப்படித் தங்களுக்கான இடத்தை எதிர்ப்பு அரசியலின் மூலம் பெறுகிறார்கள் என்பதையும் ஆய்வு செய்வதாகும்.

தலைமைப் பீடங்களுக்கு எதிரான அடித்தட்டு வர்க்கத்தின் செயல்திட்டங்களைப் படித்து அதன் மூலம் முக்கியமான அரசியல் பாடங்களைக் கற்றுக்கொள்வது முக்கியம் என்பதில் ஐயமில்லை. எனினும், அதே சமயம் அதைவிட முக்கியமாக இப்படிப்பட்ட எதிர்ப்புச் செயல்திட்டங்கள் மிகவும் குறைவான ஒன்றாகவும், அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டுமே காணக்கிடைக்கின்றன என்பதைக் கவனிப்பதும் அவசியமாகும். வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், அடித்தட்டு மக்கள் ஆளும் மேட்டிமைவாதிகளின் ஆதிக்கத்துக்கு அடிபணிந்து போகிறார்கள் என்பதே மிகப்பெரிய நிதர்சனமாக உள்ளது (இதை நேரடியாகவும், மறைமுகமாகவும் பணிவிணக்கம் காட்டுவதன் மூலமும், ஆள்பவர்களின் மதிப்புகளை முன்மாதிரியாகக் கொள்வதன் மூலமும் செய்கிறார்கள்). முக்கியத்துவம் வாய்ந்த, அதே சமயம் பரவலாகக் கிடக்கும் இந்த அடித்தட்டு அரசியலின் பண்புக்கூறு தற்கால அறிஞர்களின் கவனத்தை அரிதிலும் அரிதாகவே ஈர்த்துள்ளது. என்னுடைய பார்வையில், சமகாலத் தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர். என்ற சகாப்தம் (phenomenon) என்பது ஆளும் மேட்டிமைவாதிகள் எப்படித் தாங்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களிடம் இருந்து அதற்கான ஒத்துழைப்பை பெறுகிறார்கள் என்ற ஒப்பீட்டளவில் கண்டுகொள்ளப்படாத பார்வையைக் குறித்து அதிமுக்கிய எடுத்துக்கூறாக இருக்கும். ஆகவே, அறிவுப்புலத்திலும் எம்.ஜி.ஆர். என்ற சகாப்தம் குறிப்பிட்ட இடத்தைப் பெறுகிறது.

தலைமை அரசியல் செல்வாக்குப் பற்றிப் பேசும் பொழுது, எம்.ஜி.ஆர் மற்றும் அவரது அரசியல் பற்றிய ஆக்கங்கள் தமிழில் பெருமளவில் புத்தகங்கள், சிற்றேடுகள், வாழ்க்கை வரலாறுகள், செய்திக்கட்டுரைகள் என்று முக்கியமாக தமிழில் வெளிவந்த வண்ணம் இருந்தாலும் இவை பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் செல்வாக்கின் ஈர்ப்பினால் தள்ளாடும் தன்மை கொண்டவையாக உள்ளன. இவை எல்லாம் பொதுவாக எம்.ஜி.ஆரை முகஸ்துதி செய்பவையாகவே உள்ளன. தரவுகளுக்குக் கொஞ்சமும் மதிப்புத் தராமல் புகழ் புராணத்தை வரலாறு எனச் சுற்றித் திரிக்கின்றன. முரண்சு வையாக, எம்.ஜி.ஆர் தாக்கம் பற்றி விமர்சனப் பார்வையோடு எழும் ஒவ்வொரு மறுவாசிப்பும் (இந்த நூல் உட்பட) இந்தப் புகழ் புராணத்தைத் தொட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. (தமிழகத்தின் படித்த ஏழைகளிடம் இந்தக் கதைகளே பெருமளவில் சென்று சேர்ந்திருக்கின்றன) அதே சமயம் இந்தப் புகழ் புராணங்களின் எல்லைகளைக் கடக்க வேண்டிய பொறுப்பும் இந்த மறுவாசிப்புக்கு உள்ளது. உண்மையில் எம்.ஜி.ஆர். எப்படிப் பொது மக்களிடம் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்பதைக் காட்ட இந்த மாதிரியான எழுத்துக்களை மிக முக்கியமான தரவாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளேன்.

இறுதியாக இந்தப் புத்தகத்தின் அமைப்பை பற்றிச் சில வார்த்தைகள். எம்.ஜி.ஆர். தாக்கத்தை உருவாக்கிய நிகழ்வுகள் பற்றிய காலவரிசையிலான வர்ணனையில் இந்நூல் ஈடுபடவில்லை. அதற்குப் பதிலாகப் பலதரப்பட்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய பண்புக்கூறுகளை விவரித்து அவற்றை ஒன்று சேர்த்து கோர்வையான வர்ணனையின் மூலம் அவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை இந்நூல் நிறுவும். ஏன் எம்.ஜி.ஆர். தாக்கம் தீவிரமான தேடலுக்கு உரிய ஒன்றாக உள்ளது என்பது பற்றிய முக்கியக்கூறுகளைக் காட்டுகிறது எம்.ஜி.ஆரின் திரை பிம்பத்தின் வெவ்வேறு கூறுகள் குறித்து விவரமாக அலசுகிறது, அது ஏன் பொதுமக்களால் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அவர்களோடு பிணைந்தது அல்லது தமிழகத்தின் கலாசார மரபோடு அது எவ்வாறு தொடர்புடையது என்பன குறித்துப் பேசுகிறது. மேலும் முன்னோக்கி பயணித்து எப்படி இந்தத் திரை பிம்பத்தை எம்.ஜி.ஆரின் புனையப்பட்ட வாழ்க்கை வரலாறுகளின் மூலம் அரசியல் களத்துக்கு வெற்றிகரமாகக் கொண்டு சேர்க்க முடிந்தது என்பது குறித்தும் பகுத்து ஆய்கிறது. இந்தப் புனையப்பட்ட வாழ்க்கை வரலாறுகள் அவரின் திரை பிம்பத்தோடு முழுக்கப் பொருந்தும் வகையில் இரண்டுக்கும் வேறுபாடு காணமுடியாத வகையில் கவனமாக உருவாக்கப்பட்டன. இறுதியாக, இந்நூல் அடித்தட்டு மக்களின் பொருளியல் பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் எம்.ஜி.ஆர் தாக்கத்தின் எழுச்சிக்கு இடையே உள்ள உறவை கண்டறிகிறது. தரவுகளின் துல்லியத்தன்மை, தகுநய நடையின் ஒழுங்கு தவிர்த்து இந்தப் பதிப்பில் கடந்த பதிப்பில் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தப் பதிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சில படங்கள் புதியவை. 

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog