பாரதிதாசன் திருக்குறள் உரை - அணிந்துரை
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் செந்தமிழ் நாட்டின் இருபதாம் நூற்றாண்டின் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு பெரும் கவிஞராகத் திகழ்ந்தார் என்பது பாரோர் போற்றும் புகழ்ச்சிக்குரிய மொழியாகும்.
புதுமைக் கவிஞர் பாரதியாருக்குப்பின், மக்கள் கவிஞர் என்று போற்றப்படும் பெருமைக்குரியவராக விளங்கியவர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனே ஆவார்.
உலகில், சிலர் கவிஞர்களாகவே பிறக்கிறார்கள்; சிலர் கவிஞர்களாக ஆக்கப்படுகிறார்கள்; சிலர் கவிஞர்களாக விளம்பரப்படுத்தப்படுகிறார்கள். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் முதல்வகையைச் சேர்ந்தவர்; கவிஞராகவே பிறந்தவர்.
புரட்சிக்கவிஞர் தமது 11ஆம் வயதிலேயே கவிதை இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தார். அவர் தமிழ் இலக்கண நூல்களையும், இலக்கிய நூல்களையும் முறையாகவும், முழுமையாகவும் இலக்கண - இலக்கியப் பேராசிரியர்களிடம் கற்றுத் தேர்ந்தவர். இயற்றமிழ், இசைத் தமிழ், இயக்க (நாடக) த் தமிழ் ஆகியவை பற்றி அவர் இயற்றிய இலக்கியங்கள் அழியாச் சிறப்புடையனவாகும். அவர் இன் தமிழில் இயற்றித் தந்துள்ள கவிதைகள், காவியங்கள், கதைப்பாடல்கள், இசைப்பாடல்கள், சிறுகதைகள், பெருங்கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியத்திறனாய்வுகள், இலக்கணக் குறிப்புக்கள், நாடகங்கள், திரைப்படக் கதைகள் போன்றவை பலப்பலவாகும்.
அவர் வைதிக உள்ளம் கொண்டிருந்த இளமைப் பருவத்தில் 'கனக சுப்புரத்தினமாகத் திகழ்ந்தார்; தேசிய உள்ளம் படைத்திருந்த காளைப் பருவத்தில், 'பாரதிதாசனாக' விளங்கினார்; பகுத்தறிவு உள்ளம் செறிந்திருந்த அறிவுமுதிர்ந்த பருவத்தில், 'புரட்சி கவிஞராக' மிளிர்ந்தார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் பற்றியும், அவரது அரிய இலக்கியப் படைப்புக்கள் பற்றியும் முழுமையாக ஆய்ந்து அறிந்து சிறந்த ஆய்வு நூல்களையும், சீரிய பதிப்புக்களையும் தமிழலகத்திற்குத் தந்துள்ள பெருமைக்குரியவர், டாக்டர் ச.சு.இளங்கோ, எம்.எ., பி.எச் டி, டி.லிட்., அவர்கள் ஆவார்.
அவர் பதிப்புக்கு வராத புரட்சிக்கவிஞரின் கவிதைகள் பலவற்றைப் பதிப்புக்குக் கொண்டு வந்துள்ளார். அவர் தமிழுலகத்திற்குத் அறிமுகப்படுத்தியுள்ள அரிய பதிப்புகளில் 'வள்ளுவர் உள்ளம்' என்ற பெயர் பெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் திருக்குறள் உரை பற்றிய இச் சிறுநூலும் ஒன்றாகும்.
வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெருந்தகையாரின் உள்ளத்தை உள்ளவாறு அறிந்து, உலகியல் நடைமுறைக்கு ஒப்பவும், அறிவாராய்ச்சிக்கு ஏற்பவும், பகுத்தறிவு நெறிக்கு ஒத்த முறையிலும், உண்மை நெறி புலப்படவும் புரட்சிக்கவிஞர் அவர்கள், திருக்குறளின் முதல் 85 குறள்களுக்கு, அவ்வப்போது, 'குயில்' இதழில் எழுதிவந்த உரைகளின் தொகுப்பே இந்நூல் ஆகும்.
இந்த நூல், பல்லாண்டுக் காலமாகவே என்னைப் போன்றவர்களால் எதிர்பார்க்கப்பட்ட நூல்; விரும்பப்பட்ட நூல். இந்த அரும்பணியைச் சிறப்புறச் செய்து முடித்த டாக்டர் இளங்கோ அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன்.
புரட்சிக் கவிஞரின் திருக்குறள் 85 குறள்களோடு நின்றுவிட்டது. அவர் 1330 அருங்குறள்களுக்கும் உரை எழுதி வழங்கியருப்பாரேயானால் அதனால் பகுத்தறிவு நெறிப்பட்ட முற்போக்குத் தமிழுலகம் எவ்வளவோ எண்ணிறந்த பலன்களைப் பெற்றுப் பெரும் புகழ் அடைந்திருக்கும்.
புரட்சிக்கவிஞர் ஒவ்வொரு குறளுக்கும் திட்டவட்ட மாகவும், தெளிவாகவும், திட்பமாகவும், ஐயப்பாட்டிற்கோ - குழப்பத்திற்கோ இடமில்லாத வகையில், ஆணித்தரமாகப் பொருள் விளக்கம் தந்துள்ளார். ஒவ்வொரு குறள் பற்றியும் எழக்கூடிய - ஐயவினா, அறியும் வினா, அறியா வினா ஆகியவற்றிற்கெல்லாம் தெளிவான விடைகளை அழுத்தந்திருத்தமாகவும், அடுக்கடுக்காகவும் எடுத்து வைத்துள்ளார். ஆங்காங்கு இலக்கிய மேற்கோள்களையும், இலக்கணக் குறிப்புக்களையும், சொற்களின் அமைப்பையும், பொருட்பொலிவையும் சுட்டிக்காட்டி, வள்ளுவர் உள்ளத்தை உள்ளபடியே தெளிவுப்படுத்துகிறார்.
''வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு
உள்படு கருமத் தலைவற்கு ஒன்றும்''
என்னும் பிங்கலத்தைச் செய்யுளை மேற்கோளாக எடுத்துக்காட்டி, வள்ளுவர், வேந்தரின் உள்படு கருமத் தலைவராக இருந்து அரும்பணி ஆற்றியிருக்க வேண்டும் என்னும் கருத்தை, வலியுறுத்துகிறார்.
வள்ளுவர் எந்த ஒரு இடத்திலும் கடவுள் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்றும், "கடவுள் வாழ்த்து இடையில் ஏற்பட்ட வேலை" என்றும் புரட்சிக் கவிஞர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
"கடவுள் - கடந்தது; அறிவுக்கு எட்டாதது என்னும் அதன் பொருளையும் நோக்குக. எட்டாத ஒன்றுக்கும் பெயர் எப்படி எட்டியிருக்கும்? இவைகளைக் கருதியன்றோ வள்ளுவர் தம் நூலில் கடவுள் என்ற பெயரையே எடுத்தாளாது விட்டார்” என்று புரட்சிக்கவிஞர் விளக்கம் தந்துள்ளார்.
''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி, பகவன் முதற்றே உலகு' என்ற முதல் குறளுக்குப் பரிமேலழகர், வைதிகச் சமய உள்ளத்தோடு எழுதியுள்ள விளக்கவுரை எவ்வகையிலும் பொருந்தாது என்பதைப் புரட்சிக் கவிஞர் காரணகாரிய விளக்கங்ளோடு தெளிவுப்படுத்தியுள்ளார்.
''ஆதி - வடச்சொல் அன்று; தூய தமிழ்ச் சொல்லே. அஃது ஆதல் எனப் பொருள்படும் தொழிற்பெயர்" என்றும், "பகவன் வட சொல் அன்று; பகல் - அறிவு; ஆகுபெயர். உணர்வு என்றும், அஃது, பகவு அஃதாவது உணர்வு என்றே கொள்க", என்றும் புரட்சிக் கவிஞர் விளக்கம் தந்துள்ளார்.
'உலகு என்பது உயர்ந்தோர் மாட்டே' என்பது இலக்கணம். உயர்ந்தோர் என்போர் அறிவுத் தெளிவும். அறிவு மிகுதியும் உடையவர் ஆவர். உலகை உருவாக்க - மேம்படுத்த - வளப்படுத்த - வலிவுபடுத்த - சீர்படுத்த - செம்மைப்படுத்தப் பயன்படுவது அறிவேயாகும். அந்த அறிவைக் கொண்டுள்ள அறிவன் அல்லது பகவன், அதுவும் உலக செம்மை ஆவதற்குக் காரணமாக அமைந்த ஆதி அறிவன் அல்லது ஆதிபகவன் உலகுக்கு முதன்மையாக அமைகிறான்.
எல்லா எழுத்துக்களுக்கும் 'அ' முதன்மையாக விளங்குகிறது; அதுபோல உலகிலுள்ள எல்லாச் செம்மையான நடவடிக்கைகளுக்கும் 'ஆதி அறிவன்' அல்லது 'ஆதி பகவன்' முதன்மையாக விளங்குகிறான்.
ஆவதற்குக் காரணமாக, அறிவு அல்லது மெய்யுணர்வு விளங்குகிறது என்பதை வள்ளுவப் பெருந்தகையார் பல குறட்பாக்களின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார்.
''அறிவுடையார் ஆவது அறிவார்" - (427)
''அறிவுடையார் எல்லாம் உடையார்" (430)
''அறனறிந்து மூத்த அறிவுடையார்" - (441)
''உண்மை அறிவே மிகும்" - (373)
"மெய்ப்பொருள் காண்பது அறிவு'' - (355)
“செம்பொருள் காண்பது அறிவு' - (358)
“அறிவு அற்றங்காக்கும் கருவி" - (421)
“தீதொரீஇ, நன்றிபால் உய்ப்ப து அறிவு" - (422)
"அறிவு இன்மை இன்மையுள் இன்மை” - (841)
"இடும்பை அறிவுடையார், உள்ளத்தில் கெடும்" (622)
அறிவுக்கு எவ்வளவு முதன்மையும், வலிமையும், வளமையும், செம்மையும் உண்டு என்பதை மேற்கண்ட குறட்பாக்கள் தெள்ளிதின் விளக்கும்.
இப்படியாகப் புரட்சிக்கவிஞர் பல குறள்களுக்கும் புதுமையான, பொலிவான, பொருத்தமான, பொருள் பொதிந்த, உலகியலுக்கு ஒத்த, உண்மைக்கு ஏற்பப் பொருள் விளக்கங்களைத் தெளிவாகவும், திட்பமாகவும் கூறியுள்ளார்.
வள்ளுவரின் நெறி, உண்மை நெறி, வையத்தில் வாழ்வாங்கு வாழும் நெறி என்பதைப் புரட்சிக்கவிஞர் ஆங்காங்கு வலியுறுத்திக் காட்டுகிறார்.
புரட்சிக்கவிஞர் முதல் பத்து குறள்களுக்கும் புதுமையான விளக்கங்களைத் தந்துள்ளார், மேலும்,
"வானின் றுலகம் வழங்கி வருதலான்" - (11)
''சிறப்பொடு பூசனை செல்லாது வானம்" - (18)
"இருமை வகை தெரிந்து ஈண்டு அறம்” (23)
"அறத்தா றிது வென வேண்டா சிவிகை '' - (37)
"தெய்வந் தொழா அள் கொழுநன் தொழு தெழுவாள்"(55)
''எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்கா” - (62)
"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்" - (560)
''முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி'' - (559)
போன்ற குறள்பாக்களுக்குப் புரட்சிக் கவிஞர் தந்துள்ள பொருள் விளக்கங்கள், பெரிதும் போற்றிப் பாராட்டுவதற்குரியனவாகும்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அருஞ்சொற்கள் பலவற்றிற்குச் சிறப்பான பொருள் விளக்கம் தந்துள்ளார். அவற்றில் சில வருமாறு:
வள்ளுவன்-அரசனின் உள்படு கருமத் தலைவன்; ஆபயன் ஆன பயன், உறைகோடி -நீர்த்தேக்கங்கள் சீர்கேடு அடைதல்: அடி (தாள்) - தத்துவம்; அடிகள் - தத்துவ உணர்வு உடையவர்; செய்யுள் - செவ்விய உள்ளம்; ஆதி -ஆவதற்குக் காரணமான முதன்மை ; பகல் - அறிவு; பகவன் - அறிவன்; கடவுள் - கடந்தது; அறிவுக்கு எட்டாதது; இருள் -அறியாமை; இருவினை - நல்ல செயல் தீயசெயல் ஆகிய இருவினைகள்; எண்குணம் சிறப்பாக எண்ணுகின்ற பண்புகள், இறைவன் - இறைந்தவன்; எவ்வுயிரிலும் பரவியவன்; அதாவது அறிவு; மழை - அமிழ்து, அமிழ்தம்; இருமை-அறம் பாவம் என்ற இரண்டு, எழுபிறப்பு - ஏழுதலைமுறை.
85 குறட்பாக்களுக்குத்தான் புரட்சிக்கவிஞர் உரை விளக்கம் தந்துள்ளார் என்றாலும், ஏனைய குறட்பாக்களையெல்லாம் எந்த முறையில் அணுகிப் பொருள் கொள்ளவேண்டும் என்பதற்கு, அவரது உரைவளம் மிகவும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் திருவள்ளுவரின் உள்ளம் இதுதான் என்று படம்படித்துக் காட்டுகின்ற முறையில் உரைகண்டுள்ள குறட்பாக்களை ஒன்று திரட்டித் தந்த டாக்டர் ச.க இளங்கோ அவர்களுக்குத் தமிழ்கூறு நல்லுலகம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.
வாழ்க புரட்சிக்கவிஞரின் புகழ்!
வெல்க அவரது திருக்குறள் உரை வளம்!
சென்னை இரா. நெடுஞ்செழியன்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: