பாரதிதாசன் திருக்குறள் உரை - நன்றி

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/bharathidasan-thirukkural-uarai
நன்றி

கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் 1977-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 2-ஆம் நாள் சென்னையில் வள்ளுவர் மன்றத்தின் சார்பாகக் கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, "வள்ளுவர் நூலுக்குப் புராணச் சார்பு இல்லாமல் உரை எழுதத் தமிழறிஞர்கள் முன்வர வேண்டும். திருக்குறளுக்குப் பாரதிதாசன் உரையெழுதியதைப் பரப்ப வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். - (தினத்தந்தி. வேலூர் பதிப்பு 3.9.74)

வள்ளுவர் கோட்டம் கண்ட அவருடைய வேண்டுகோள் இன்று பாரதிதாசன் திருக்குறள் உரை நூல் வடிவம் பெறுவதன் மூலம் நிறைவேறுகிறது.

நூல் வடிவில் வராத பாரதிதாசன் படைப்புக்களில் ஒன்றான திருக்குறள் உரையைத் தமிழ் உலகிற்கு அளிப்பதில் மகிழ்கின்றேன்.

இதனை வெளியிட்ட பாரிநிலைய உரிமையார் பெரியவர் செல்லப்பனார் அய்யா அவர்களுக்கும், அச்சுப்பிழையின்றி நூல் வெளிவர வேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்திய தமிழர் நெஞ்சங்களில் நின்று நிலைத்து வாழும் தன்மானத்தமிழ்ப் பேராசிரியப் பெருந்தகைகள் சாலை இளந்திரையன், சாலினி ஆகியோருக்கும் என் நன்றி என்றும் உரித்தாகுக.

தேனிகண்ட தீந்தமிழ் நாவலர்; அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் அண்ணா எனும் பல்கலைக்கழகத்திலும் பயின்ற சான்றோர்; வாய்மை நெறி பிறழா நேர்மையர்: ரயிலிலும் ஜெயிலிலும் இளமையின் பெரும் பகுதியைச் செலவிட்ட தியாகச் சுடர்; 'தம்பி வா! தலைமை ஏற்க வா!' என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பெருமைப்படுத்தப் பட்டவர்; பாரதிதாசன் பாடல்களைப் பட்டிதொட்டியெல்லாம் பரப்பியவர்; குறளுரை கண்டவர்; மாண்புமிகு நிதியமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். அப் பெருந்தகைக்கும், நூல் உருவாக்கத்திற்குத் துணை புரிந்த திருமிகு சி. சுப்பிரமணியத்திற்கும் என் உளம் கனிந்த நன்றி.

தோழமையுடன்,

ச.சு.இளங்கோ

Back to blog