ஆய்வுநூல்கள் பெரும்பாலும் நூலகத்திலேயே முடங்கி விடும் காலம் இது. இந்த நிலைக்கு ஆசீவகமும் ஐயனார் வரலாறும்' எனும் இந்நூலும் உள்ளாகிவிடுமோ என்ற அச்சம் எனக்கு இருந்தது. அந்த அச்சத்தை முறியடிக்கும் வகையில் இந்நூல் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப் பெற்றது எனக்கு வியப்பாக இருந்தது. குறிப்பாகத் தகவல் - தொழில்நுட்பத் துறையின் இளம் பொறியாளர்கள் தந்த வரவேற்பு குறிப்பிடத்தக்கது; நம்பிக்கை தரக்கூடியதாகவும் இருந்தது.
ஆசீவகம் பற்றிய ஆய்வு ஒரு தொடர் ஆய்வாக அமையும் என நான் எதிர்பார்க்கவில்லை. தமிழர் வாழ்வியலிலும், இலக்கிய இலக்கண உரைகளிலும் ஆசீவகம் பெற்றள்ள இடம் மகத்தானதாக உள்ளது. தமிழகப் பக்தி இயக்கங்களின் வரலாற்றில் ஆசீவகம் மையப் புள்ளியாக இருந்துள்ளது. சிவனியம் ஆசீவகத்தை அழித்தும், மாலியம் ஆசீவகத்தை அணைத்தும் வளர்ந்துள்ளன. தஞ்சைப் பெருவுடையார் கோவில் உள்ளிட்ட தமிழகச் சிவன் கோவில்கள் பெரும்பாலும் ஒரு காலத்தில் ஆசீவகர்கட்கு உரியனவாக இருந்தன என்பதையும், திருவெள்ளறை செந்தாமரைக் கண்ணன் திருக்கோவில் உள்ளிட்ட பல திருமால் கோவில்கள் ஆசீவகர்கட்கு உரியனவாக இருந்தன என்பதையும் கள ஆய்வுகள் உறுதி செய்கின்றன. சுருங்கச் சொன்னால் திருநிலை (கசலட்சுமி) க் கென்று எந்தக் கோவில்களில் எல்லாம் தனிச் சன்னதி உள்ளதோ அந்தக் கோவில்கள் எல்லாம் ஆசீவகர்கட்கு உரியனவே. ஏனெனில் திருநிலை ஆசீவகச் சமயச் சின்னமாகும்.
சங்க காலக் கற்படுக்கைகளில் மதுரை மீனாட்சிபுரம் கற்படுக்கை மிகவும் தொன்மையானது. அங்குள்ள கற்பொறிப்புகள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனால் பொறிக்கப்பட்டவை. திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் விராலிமலையை அடுத்து கோவில்பட்டி என்னும் ஊரின் மேற்கில் 1.கட்டை தொலைவில் வி.இடையப்பட்டியில் ஐயனார் கோவில் ஒன்று உள்ளது. அதில் மிகப் பெரிய சிலை ஒன்று உள்ளது. அதனைப் பாண்டியன் நெடுஞ்செழியன் சிலை என்றும் நெடுஞ்சடையன் சிலை என்றும் அழைக்கின்றனர். அம்மன்னர் பற்றிய செவி வழிச் செய்தி, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் போர்க்கால வரலாற்றை அப்படியே ஒத்துள்ளது. பல ஐயனார் கோவில்களில் பூதப் பாண்டியனுக்கும், தீப்பாய்ந்து உயிர் துறந்த அவன் மனைவி பெருங்கோப்பெண்டுக்கும் சிலைகள் உள்ளன. திருச்சி - புதுக்கோட்டைச் சாலையில் சற்றே உள்தள்ளி மண்டையூர் வனப்பகுதியில் உள்ள ஐயனார் கோவிலில் அவ்விருவருக்கும் அரசட்டார் - அரசட்டாள் எனும் பெயரில் சிலைகள் எடுத்துள்ளனர்.
இவற்றைப் போலவே கி.பி 8-ம் நூற்றாண்டுகளுக்கு உரிய சைனக் குடைவரைகள் பல ஆசீவகர்கட்கு உரியனவாக இருந்தவையே. தென் மாவட்டத்தில் உள்ள கழுகுமலை சைனச் சிற்பங்கள் சைன சமய வரலாற்றில் பெரும்புகழ் பெற்றவை. அங்கு ஐயனார் கோவில் உள்ளது. அதன் பெயர் திரு ஆனைக்கா ஐயனார் என்பதாகும்.
இவ்வாறு தமிழகத்திற்கு உரிய சமயங்களும் தமிழகத்திற்கு வந்த சமயமும் ஆசீவகத்தோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டே தம்மை வளர்த்துக் கொண்டுள்ளன. இந்தக் கள ஆய்வுகள் வழியாகப் பெறப்படும் உண்மைகள்.
ஆசீவகத்தின் பாழிகள், நிறுவனங்கள், ஏன் சமயமே சிதைக்கப்பட்டு உருமாறிய நிலையிலும், அதன் வரலாற்றுச் சுவடுகள் மட்டும் மாறாமல் உள்ளன. வழிபாட்டு முறைகள் சிறு சிறு மாற்றங்களுடன் உயிர்த்துடிப்புடன் உள்ளன'. என்பவைதான்.
இதனை மீட்டெடுக்கும் வகையில் ஆசீவகமும் ஐயனார் வரலாறும் அமைந்துள்ளது என்பதை அறியும் போது மகிழ்வாக உள்ளது. ஆசீவகம் தன் விதையுறக்கக் காலத்தை முடித்துக் கொண்டு முளைவிடத் தொடங்கி விட்டது என்பதன் அடையாளமாகவே இதற்கான வரவேற்பைக் கருதுகின்றேன்.
இந்நூல் முதற்பதிப்பைப் போலவே பெரும் வரவேற்பைப் பெறும் என நம்புகின்றேன். இந்நூல் வெளிவர ஊக்கமளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! குறிப்பாகப் பாலம் அமைப்பிற்கு.
- முனைவர் இரா. சக்குபாய்
திருச்சிராப்பள்ளி
15.06.2019
தொடர்புடைய மற்ற பதிவுகள்: