ஆசீவகமும் ஐயனார் வரலாறும் - ஆய்வுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/asivagamum-aiyannar-varalarum 
ஆய்வுரை

முனைவர் அ. அந்தோணி குருசு

மேனாள் தமிழாய்வுத்துறைத் தலைவர்

தூயவளனார் கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி

இன்று, அண்டத்தின் மூலத்தைத் தேடும் முனைப்பான முயற்சியில் அறிவியலும் மெய்யியலும் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் புதுயுகம் பிறந்துள்ளது. பெருவெடிப்புக் கொள்கைப்படி, முதல் மூன்று நிமிடங்களில் கோளம் வெடித்தபின் எப்படி எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் துகள்கள் உருவாயின என வினாடி நிகழ்வுகளைக் காலம் என்னும் வரலாற்றுச் சுருக்கமாக ஸ்டீபன் ஹாக்கிங் நூல் விளக்கியது. (ஜி. அழகர் ராமானுஜம், மூலத்தைத் தேடும் முதன்மை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், ப.46).

மூல அணுவைப் பிளந்து இறுதியானதுகள் 'கடவுள்துகள்' என்று ஆத்திக உலகம் பெயரிட்டது. அந்த மூலத்துகள் வெடிப்பை நிகழ்த்தியது எது? பிரபஞ்சம் ஒரு புள்ளி அளவு இருந்தபோது குவாண்டம் விசையாக இருந்தது. புள்ளி விரிந்து பிரபஞ்சம் ஆகிறபோது ஈர்ப்புவிசைக்கு உட்பட்டது. இரண்டும் இணைந்து குவாண்டம் ஈர்ப்பு விசை உருவாகியது என்று கண்டறிந்தார் ஹாகிங். மூல அணுவின் அணுக்கருவில் வெடிப்பு ஏற்படுத்தியது வெளி (space) என்று அறிவியல் நோக்கில் மெய்யியலார் கருதுகின்றனர். இவ்வாறான அணுச்சேர்க்கை களால்தான் விண்மீன், கதிரவன், பூமி, நிலவு, கோள்கள், மனித உயிர்கள், பிற உயிர்கள், உயிரினங்கள் எல்லாம் தோன்றி, அழிந்து, மறைந்து மாற்றம் நிகழ்கிறது.

இவற்றைப் பற்றிய மூலாதார மூல அணுச் சிந்தனையும், வானியல் தேடல்களும் அன்றைய தமிழ் ஆசீவகர்களிடம் இருந்துள்ளன. ஞானிகளான கணியரிடம் இருந்துள்ளன. இதற்கான அறிவியல் சார்பு மெய்யியல் அறிவு மரபு தமிழருக்குப் பலநூற்றாண்டுகளாக இருந்துள்ளது. இதனை இலக்கிய இலக்கண-வரலாற்று - நாட்டுப்புறவியல்-ஆசீவக சமயிகளிடம் இருந்துள்ள உண்மைகளையும் முதன்மை ஆதாரங்களையும் தமிழக வயல்வெளி எல்லைகளிலும், ஆற்றங்கரை புகுமுகங்களிலும், குன்றுகளிலும், மலைகளிலும், குகைகளிலும், கற்படுக்கைகளிலும், கல்வெட்டுப் பதிவுகளிலும், வேறுபல கலை வெளிப்பாடுகளிலும் ஆய்ந்து தேடித் தமிழை வளப்படுத்தியும் தமிழரை வலுப்படுத்தியும் புத்தறிவுமயமாக்குகிறது பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியனின் இந்நூல்.

461 பக்கங்களாகப் பரந்து விரிந்த நூலுக்குப் பேராசிரியர் அணிந்துரை எழுதப் பணித்தார். சிறையில் இருந்த காலத்திலும் அவரது தமிழுள்ளம் இதுவரை அவர் புதிதாகக் கண்டறிந்த ஆசீவக சமயம் பற்றியும், கண்டறிய வேண்டிய ஐயனார் வழிபாடு பற்றியுமே அவர் உடனிருந்த தமிழறிஞர் குணாவுடன் கலந்தாய்ந்து, சிந்தித்து நூலாக்கம் செய்யும் ஓயாத தேடலில் முனைப்பாகத் தொடர்ந்தது. அதன் நிறைவாக்கப் படைப்புத் திறன் மிக்க நூல் இது!

தமிழ் இலக்கியம், மெய்க்கீர்த்திகள், இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும், தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம், சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், தமிழரின் அடையாளங்கள், சங்ககாலத் தமிழர் சமயம், தமிழர் இயங்கியல் முதலிய நூல்கள் முதல் ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம் என்னும் நூல் உள்ளிட்ட படைப்புவரை பல்துறைப் பன்முகப் பரிமாண ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு முத்திரை பதித்தவர் இந்நூலாசிரியர். தமிழின அடையாள மீட்பராகிய அவர்தம் ஆய்வுத் தேட்டக்கனி இவ்அரிய நூல்.

தமிழர்தம் மறைந்த அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்தல், மறைக்கப்படுகிற உண்மைகளை வெளிக்கொண்டு வருதல், தமிழரை அடிமைப்படுத்தி, அவர்தம் பண்பாட்டைச் சிதைத்த பகைச் சக்திகளது கருத்தியல்களைக் கட்டுடைத்தல், கடுமையான களஆய்வுத் தேடல்கள் மூலம் கருது கோள்களை முன்னிறுத்திச் சோதனை செய்தல், கண்டறிந்த அரிய மெய்ம்மைகளைத் தருக்க முறைமையில் நிறுவுதல், தமிழர் அறிவு மரபின் வைப்பகங்களை அடையாளம் காட்டுதல் போன்ற தனித்துவம் மிக்க ஆராய்ச்சி இலக்குகளை வரையறுத்துக்கொண்டு செயல்பட்டு வந்துள்ளதை அவரது ஒவ்வொரு ஆய்வுப்பனுவலும் தெளிவுறுத்துவனவே.

ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்' என்னும் நூலை எழுதியபோது, எது? ஏன்? எப்படி? எங்கே? யார்? என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளது விளக்கங்களில் தொடர்ந்து நீடித்த ஐயங்கள், சிக்கல்கள், பொருத்தங்கள், புரிதல்கள் ஆகியவற்றின் அடுத்தகட்ட ஆய்வுத் தளங்களை வரையறுத்துக் கொண்டு, ஆராய்ச்சியில் வளர்ச்சியும் முன்னேற்றமும் காண்பது பேராசிரியர் க. நெடுஞ்செழியனின் தனித்துவ அணுகுமுறை.

வேதங்களை மறுத்தும், வேள்விப்பண்பாட்டை எதிர்த்தும் தத்துவப் போராட்டம் நிகழ்த்தியது சைனம்; வருணப் பண்பாட்டை எதிர்த்தும் வேதங்களை மறுத்தும் நிமிர்ந்து நின்றது பௌத்தம். தத்துவமேதை இராதாகிருட்டிணன் இந்திய தத்துவம் என்னும் தமது நூலில் இவற்றை நாத்திக மதங்கள்' என்றார். 'இந்திய தத்துவ ஞானம்' பற்றி உண்மை அறிதல் ஆய்வில் “மனிதன்படும் அல்லலும், மனிதர்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுகளுமே இந்திய ஞானிகளைத்” தத்துவஞானத் தேடலில் ஈடுபடச்செய்தன என்கிறார் கி.லஷ்மணன் (இந்திய தத்துவஞானம், சில சிறப்பியல்புகள், ப. 2) அவரது நூலில் உலகாய்தம், உலகத்தோற்றம் பஞ்சபூதங்களது சேர்க்கை, கூட்டுப்பொருள் என்னும் சைனர் மெய்யியல் கருத்தாகக் குறிப்பிடுகிறார். சைனர் நோக்கில் சீவன்-அசீவன் என உள்ள பொருள் இரண்டே. அணுவே அனைத்துக்கும் மூலாதாரம். அதுவே பரமாணு.

குணவிசேடமின்றி ஓர் அணுவை மற்றொன்றிலிருந்து பிரிப்பது எப்படி? அணுக்கள் பல என்று கொள்வதற்கு என்ன ஆதாரம்? (மேலது, ப.105) என்பன போன்ற கேள்விகளை எழுப்பிவிட்டுச் செல்வதுடன் அவரது தேடல்கள் விடப்படுகின்றன. சைனத்திலிருந்து கிளைத்த ஆசீவகம் கி.மு.6 முதல் கி.பி. 14 வரை தமிழ்மக்கள் சமயமாக எவ்வாறு போற்றப்பட்டுள்ளது? திணைமப் பண்பாட்டினரான தமிழர்கள் அறிவியல் அறிவு மரபின் மூல ஊற்றுக் கண்களைத் தம்மிடம் எவ்வாறு கொண்டிருந்தனர்? இயற்கை அறிவியலின் வேரோட்டமாக ஆசீவகம் எவ்வாறு உருவானது? சாங்கிய, யோக, உலகாய்தக் கோட்பாடுகளது தகவமைப்பாக எத்தகைய உருவாக்கம் பெற்றுள்ளது? பூரணகாயபர் என்னும் தற்செயலியக் கோட்பாட்டாளர், மற்கலி கோசாலர் என்னும் நியதிவாத அல்லது இயற்கைவிதி அல்லது ஊழியல் கோட்பாட்டாளர், பக்குடுக்கை நன்கணியார் என்னும் அன்னியோன்னிய வாதம் அல்லது ஒருமையியக் கோட்பாட்டாளர், உள்ளிட்டோர் ஆசீவக சமய நிறுவனர்கள் தம் மெய்யியல் அனுபவங்களாக வகுத்த கோட்பாடுகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்னும் வினாக்களுக்கு விரிவான பதிலிறுப்பாகிற படையல் இந்நூல்.

ஆசீவகத்தின் மூலஊற்றைக் கண்டறிந்த ஆய்வுப் பயணத்தில் இம்மெய்யியல் ஆய்வு அறிஞர் தருமானந்த கோசாம்பி, ஏ.எல். பாசாம், கோர்ன்லே, குணா முதலிய பேரறிஞர்களது ஆய்வுகளது முதன்மை ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகளை நிறுவுகிறார். சைனம், பௌத்தம் பற்றிய இலக்கிய சமய ஆய்விலும், தத்துவ ஆய்விலும் ஈடுபட்டு மெய்ம்மைகளைக் கண்டறிந்த வித்தகர்களும்கூட, வரலாறு, கல்வெட்டு, கோயிற்கலை, தொல் தமிழ் எழுத்துக்கள் போன்ற பலதுறைகளது ஆதாரங்களைக் கவனத்தில் கொண்டு முடிவுகளை எழுதினர்; இத்தகையோர் ஆசீவகம் என்னும் பெயர்க்காரணம், ஆசீவக மெய்யியலின் அடித்தளம் ஆகியன தமிழர் வாழ்வியலுடன் ஒன்று கலந்த வரலாறு எத்தகையது? ஆசீவகச் சமயக் கோட்பாடுகளும், அறநெறி நம்பிக்கைகளும், வழிபாட்டு முறைகளும், அவற்றின் வெளிப்பாடுகளாக இருந்துவந்துள்ள பதிவுகளான கல்வெட்டுகள், குகைக் கற் படுகைகள், புடைப்புச் சிற்பங்கள், ஓவியக்கலை வெளிப்பாடுகள், நேர்முகக் களஆய்வுகள் முதலியவற்றின் மூலம் கருதுகோள்களை நிறுவ முனைகின்றார் இவ்அறிஞர். ஆனால் எது முதன்மை என அறியும் அணுகு

றகளைக் கடைப்பிடிக்காத அல்லது பிறழ உணர்ந்தோரது ஆய்வு இடைவெளிகளைப் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பட்டவர்த்தனமாகச் சுட்டியுள்ளார். ஏன்?

வடநாட்டு வரலாற்று அறிஞர் நூல்கள், பாலிமொழி மொழிபெயர்ப்புகள் போன்றவற்றையே சைன - பௌத்த மெய்யியல்களுக்கான மூலமுதன்மை ஆதாரங்களாகத் தவறாக நம்பியமையே காரணம். ஆசீவகர்கள் தென்னாட்டில் மிக்க செல்வாக்குடன் வாழ்ந்தது எப்படி?... சைன, பௌத்தங்களைவிட "ஆசீவகம் தென்னகத்தில் எப்படிச் செல்வாக்குடன் திகழ்ந்திருக்க முடியும்?" என்பன போன்ற தருக்கவியல் முறைமையிலான கோணத்தில் ஆய்வை நிகழ்த்தாமையால் அறிஞர் சிலர் ஆய்வில் பிறழ உணர்தல் எனும் பிழை நேரிட்டது என்பதற்குப் பேராசிரியர் காட்டும் காரணங்களும், விவரிக்கும் விளக்கங்களும் விரிவான இவ்ஆய்வுப் படைப்பாக முகிழ்த்துள்ளது.

ஆசீவகத்தின் சொற்பொருள் என்ன? என்பதற்கான விடைகளாக நீலகேசி, பர்னோவ்ஃப், லாசென், கோர்ன்லே ஆகியோர் வரையறைகளுடன் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி மேற்கோள்களை அடுக்கிக்கூறி, மணிமேகலையின் அகச்சான்றுகளுடன் கூறி முடிக்கிறார். அவ்அறிஞர் முடிபாகக் கருதுகிற கருத்துவிளக்கம் யாது? என்னும் வினாவுக்கு விடை இல்லை. ஆனால் ஆதிசங்கரன் எழுதிய ஆசீவகத்தின் அழியாச் சின்னங்கள் என்னும் குறுநூலில், ஆசு+ஈவு+அகம் - பிழையற்ற, செம்மையான, தோல்வி ஏற்படுத்தாத, கேட்ட போதே தங்குதடையின்றி மடையுடைந்த வெள்ளமெனத் தீர்வு தருமிடம் என்பதே ஆசீவகமாகும் (ஆசீவகமும் ஐயனார் வரலாறும், ப.269) என்னும் விளக்கம் புதுமையானது; எண்ணத்தக்கது என்கிறார் நூலாசிரியர். ஆதிசங்கரன், பேராசிரியர் க. முத்துச்சாமி ஆகியோர் கருத்துக்களுடன் ஆசீவக மெய்யியல் பேரறிஞரான இப்பேராசிரியர் நிறைவுறவில்லை. சொல்லாய்வு வித்தகர் அரசேந்திரனிடம் எவ்வாறு என ஆசு + ஈவு + அகம் என்னும் சொற்பகுப்பின் நிலை பற்றிக் கலந்தாய்கிறார். "வாழ்க்கைக்கு வேண்டிய பற்றுக்கோடான உண்மைகளை வழங்கிய துறவிகள் வாழும் இடம் என்னும் கருத்தைப் புறப்பாடல் வரியான "ஆசாகு எந்தை” என்னும் தொடரில் பற்றுக்கோடு' என்னும் பொருள் பயப்பதைக் கேட்டு அறிகிறார்.”பற்றுக பற்றற்றான் பற்றினை" என்னும் வள்ளுவரது குறட்பாவை ஒப்பிட்டு நோக்கி, "பற்றற்ற துறவிகளைப் பற்றவேண்டிய தேவையை வற்புறுத்தும் காரணப்பெயர்” (மேலது, ப.271) என்று தெரிந்து தெளிகிறார். மனக்கவலையை மாற்றவும், பிறவிக்கடனை நீந்தவும் தனக்குவமை இல்லாத அறவாழியானை, தலைவனை அண்டி நிற்குமாறு உணரச் செய்வது ஆசீவகம். வாழ்வில் சுமக்க இயலாத் துன்பவேளையில் சுமைதாங்கியாகிற பற்றுக் கோடாகிறவர் சான்றோராகிய ஆசீவகத் துறவோரான சாரணர், கவுந்தி அடிகள் என்றெல்லாம் முனைப்புடன் அறிதல், புரிதல், பொருத்திக்காணல், திறனாய்தல் முறைமைகளில் ஆய்வு செய்துள்ளார்.

பாலி, பாகத மொழிகளின் பௌத்த, சைன இலக்கியங்கள் காட்டும் ஆசீவகர் - ஆசீவகக் கோட்பாடு பற்றிய இரண்டாம் நிலை ஆதாரச் செய்திகளைவிட, மணிமேகலை, நீலகேசி ஆகிய காப்பியப் பனுவல்கள் நுட்பமாகவும், திட்டமாகவும், விரிவாகவும், விளக்கமாகவும் தந்துள்ள முதனிலை ஆதாரங்களான மெய்யியல் கருத்தாக்கங்கள் அவற்றின் தமிழ்மொழி வாயிலாகவே தத்துவக் கருத்துக்களை, மெய்யியல் கலைச் சொற்களைக் கருவியாகக் கொண்டு புலப்படுத்தும் தகுதியைக் காட்டுவதை இந்நூல் மூலம் உணரமுடிகிறது. பிறர் மதம் மேற்கொண்டு பொருந்தாக் கருத்தைக் களைவதும், தனது சொந்தச் சரியான கருத்தை நிறுவுவதும் இந்நூலின் தருக்கமுறையிலான இயங்கியல் போக்காகவும் அணுகுமுறையாகவும் சிறக்கின்றன. ஆசீவகத் தமிழ் மரபின் வேர்களும் விழுதுகளும் தமிழ்மண்ணில் வைரம் பாய்ச்சியவை என்று நிறுவிக் காட்டப் பெறுகின்றன.

தமிழரை வருண-சாதிய-மனுசாத்திர சூத்திர முறைகளில் அடிமைப்படுத்தும் கொடுமைகளை எதிர்த்த வைதிக எதிர்ப்பாளர்கள் சிறிதும் விட்டுக்கொடுக்காத உறுதி” கொண்ட நெஞ்சினர் மட்டுமல்லர்; எதிர்நிலை-எதிர்ப்புநிலை மாற்றுச் சிந்தனை மெய்யியலாக்கமாக ஆசீவகத்தைக் கருத்தியல் ஆயுதமாக்கினர்; இழப்பதற்கு எதுவுமற்ற மக்களைப் பிணைத்திருக்கும் அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறியும் அறிவுப்புரட்சியைச் செய்து காட்டினர்; இவ் அடிமைத்தனப் படிநிலைகளை நியாயப்படுத்துகிற கடவுள் கோட்பாட்டை மறுப்பவர்களாகவும் இருந்தனர் என்பதற்குப் பூரணர், பக்குடுக்கையார், மற்கலி கோசலர் (அசித்கேச கம்பாளர் நரிவெரூஉத்தலையார் ஆகிய நான்கு அறிஞர்கள் குறித்த சங்க இலக்கிய மூலச்சான்றுகள் கொண்டு திறனாய்வு மூலம் நிறுவுகிற அறிஞர் க.நெடுஞ்செழியன் அந்தோனியோ கிராம்சியின் சொற்களின்படி, புத்துயிர்ப்பு ஊட்டும் அறிவராகிறார். ஒரு சமூகத்தின் மேலாதிக்கக் கருத்தியல்களை அடித்து நொறுக்கும் எதிர்க்கருத்தியல் ஆக்கத்தை முன்னிறுத்தி அடிப்படை மாற்றம் நிகழ்த்துபவரே அவ்அறிவர். (Organic intellectual)

"தமிழரின் தத்துவ அறிதல் அவர்கள் வாழ்நிலையை அதற்கான இயற்கையை அறிதலில் துவங்கியது. தமிழகத்தின் புவி வேறுபாடுகளின் மீது அமைந்த திணைவாழ்க்கை முறையில் உருவான எளிமையான தத்துவ அறிதல், அணுக் கோட்பாட்டை உருவாக்கியது. அணுக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பொருள் முதல் வாதத்தைக் கி.பி. 12-14ஆம் நூற்றாண்டு வரை பலரும் வளர்த்தனர். (தேவ பேரின்பன், தமிழர் தத்துவம், ப. 164) "எவ்வாறு?" என்னும் வினாவுக்கு விடையாக அமைந்ததே பேராசிரியர் க.நெடுஞ்செழியனின் ஆசீவகமும் ஐயனார் வரலாறும் என்னும் இந்நூல்.

ஆசீவகப் பிதாமகர்களில் ஒருவரான பக்குடுக்கையார் நோக்கில் தமிழரது அண்டவியல் கோட்பாட்டின் அறிவியல் பரிமாணத்தை இந்நூலாசிரியர் பொருத்திக் காட்டுகிறார். ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு, ஸ்டீபன் ஹாக்கிங்கின் 'கருந்துளை மாவெடிப்புச் சார்புக் கருத்தியல்' ஆகியன அண்டவியல் தோற்றம் பற்றிப் பேசுகிற பரிபாடல், மணிமேகலை ஆகியன பனுவல்களது குறிப்புகளின்படி ஊழிகள் பலவற்றின் தோற்றம் அழிவு ஒடுக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு இயற்கை இயல்புகள் இத்தகையனவே என்று சுட்டுகிறார். பக்குடுக்கையாருக்கு உரிய அணுக்கோட்பாடும், ஐம்பூதங்களுடன் இன்பமும் துன்பமுமான பொருள்கள் ஏழு என்பதும் ஆசீவகக் கோட்பாட்டு மெய்யியல் தெளிவின் முன்மொழிவுகளாகின்றன.

ஆசீவகத்தின் சின்னங்களாகக் கந்தழி, கொடிநிலை, வள்ளி பற்றி அறிவியல் ஆதாரங்களது நோக்கில் இந்நூலில் தந்துள்ள விளக்கங்கள் வியக்கவைப்பவை. அண்டவெளியின் ஒளிப்படப்பதிவுடன் கந்தழியை ஒரு நடுவப்புள்ளியில் தொடங்கி வலஞ்சுழியாக வரைந்த சுருள்வளைவான வரைவுடன் ஒப்பிடப் படுகிறது. ஊழ்வினை வட்டமாகப் பிறவிச்சுழிகளைக் கடந்து சென்று பிறப்பு முடிவுக்கு வருவதான ஆசீவக மெய்யியல் கருத்து பொருத்திக் காட்டப்படுகிறது. தமிழர் சமயம் நூலில் கா.சு.பிள்ளை கண்டறிந்து குறிப்பிடும் சிவனிய மெய்யியல் விளக்கத்திலிருந்து வேறுபட்ட, அறிவியல் நோக்கிலான விளக்கம் விவரப் படங்களுடன் இந்நூலில் தரப்பெற்றுள்ளமை நுண்மாண் நுழைபுலச் சான்றாகிறது.

அணுக்களால் ஆகிய அண்டம் விரிவுறுகிறது. அதே சமயம் ஆதி அணு அழிவதில்லை; நீயும் நானும் சாவதில்லை என்னும் தலைப்பில் நூலெழுதிய ஜெ.பெனலென், உலகில் காணப்படும் பொருள்களில் அமைந்துள்ள அணுக்கூட்டுகள் நமக்கு எங்கிருந்து கிடைத்திருக்கக்கூடும் என்பதைப் பலரும் அறிந்திட விரும்பினார்கள். இயற்கையில் காணப்படும் பொருள்கள் பிறந்தவிதம் நாடினார்கள்..... அணுக்கள் யாவும் விண் நட்சத்திரங்களிலிருந்துதான் பூமிக்கு வந்தடைந்தன எனும் உண்மையினை ஹெய்சன்பெர்க் (Heisenberg) எனும் ஜெர்மானிய (நொபெல் பரிசு) விஞ்ஞானியே உணர்த்தினார். (ஆதி அணு அழிவதில்லை, ப. 102).

உலகத் தோற்றம் என்பது கடவுளது படைப்பு எனக்கூறி மனித வருணப்படிநிலை மூலமாக மனிதப் பாகுபாடுகளை நியாயப்படுத்தும் வைதிக சமய எதிர்ப்பாகி, புறக்கணித்த தொல்காப்பிய ஐந்திரமரபு, கபிலரது எண்ணியம், ஐம்பூதக் கோட்பாட்டின் மருத்துவக் கோட்பாடான தேகவாதம், தந்திரக் கோட்பாடு முதலிய பலப்பல தமிழர் அறிவுமரபுகள் தோன்றிய முறை பற்றிய ஆய்வு விளக்கங்கள் தமிழரது தத்துவதரிசனங்களாயின. ஆசீவகத்தின் நிறுவனர்களும் தலைவர்களுமான ஐயனார்கள் வண்ணக் கோட்பாட்டின் கருமை, கருநீலம், பசுமை, செம்மை, வெண்மை ஆகிய பலநிறங்களது பிறப்புகளையும் கடந்து கழிவெண் பிறப்பாகிய பரமசுக்க நிலையை அடைந்த ஆசீவகத் துறவிகளில் ஆறுவேறு படிநிலையைக் கடந்தவர்கள் ஆவர். சமயநெறியைப் பின்பற்றியோரின் படிநிலை வளர்ச்சியே அந்நிலை என்னும் ஆதி. சங்கரனது கருத்தை மேற்கோளாட்சி மூலம் பேராசிரியர் உறுதிப்படுத்துகிறார்.

தத்துவ அறிவின் தலையாய பணிதான் யாது? “ஆய்தல், தோய்தல், தெரிதல், தெளிதல் ஆகியவற்றின் மூலம், பொருள்கள், நிகழ்ச்சிகள், மானுடவாழ்வு ஆகியவைப் பற்றித் தத்துவ விசாரணை செய்வதால் ஏற்படும் அறிவுத்தொகுதிக்குத் தத்துவ அறிவு என்று பெயர்.... அறிவுத் தொகுதிகளுக்கிடையே முரண்கள் காணப்பட்டால் அம்முரண்களுக்கு அமைதியும் விளக்கமும் தந்து எல்லா அறிவுத் தொகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு முழுமையைக் காண்பது தத்துவ அறிவின் தலையாய பணி” (க.நாராயணன், தமிழர் அறிவுக் கோட்பாடு பக்.70-71). பேராசிரியர் க. நெடுஞ்செழியனது இந்நூல் படைப்பு தலையாய அப்பணியின் பதிவேடு எனலாம்.

பௌத்தமரபு, சைன மரபு, தமிழ் மரபு ஆகிய மூன்றனுள் ஆசீவகத்தை உருவாக்கியவர் மற்கலி கோசாலர்; இவரே அறப்பெயர் சாத்தன்; இவரே ஊர்ப்புறக் காவல் தெய்வம்; இவரே வீரச்சான்றாண்மையாளர்; இவரே ஐயனார் என்பதை ஏ.எப்.ஆர். கோர்ன்லே எழுதிய ஆசீவகம் என்னும் ஆய்வுக் கட்டுரையிலிருந்து அவரது வாழ்க்கைச் சுருக்கத்தை முன்வைத்தும், அயோத்திதாசரது கருத்தை ஆதாரம் காட்டியும் நூலாசிரியர் எழுதுகிறார்; ஊழியல் சங்கத்தலைவராக மற்கலி திகழ்ந்தார். பூரணர், பக்குடுக்கையாருடன் இணைந்து ஆசீவகத்தை உருவாக்கினார். இவர்கள் வாழ்ந்த காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு என்று நிறுவுகிறார். சைன சமயத்தின் 23ஆவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர்; அவரது வழிவந்தவர் மற்கலி; இவர் கணியத்திலும் வல்லவர். பார்சுவநாதர் வழியில் மற்கலியைப் பின்பற்றியவர்கள் பின்னர் ஆசீவகம் என்னும் புதுச்சமயத்தை உருவாக்கினர். இதற்கான மெய்யியல் காரணிகளது சிந்தனை வளர்ச்சிப் போக்கு நூலில் விரிவான விளக்கம் பெறுகிறது.

அக்காலத் தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்த போர்களாலும், படையெடுப்புகளாலும், இனக்குழு மோதல்களாலும் அமைதியிழந்து, சோர்வுற்ற தமிழ்மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பும் பற்றுக்கோடுமாகத் தங்கள் சிற்றூர் எல்லைத் தெய்வமான ஐயனார்களையும், கருப்பசாமிகளையும் நம்பினார்கள். இவர்களை 18 படிகளான 18 குற்றங்களைக் கடந்தவர்கள்; யானை, குதிரை வாகனம் ஏறி அமர்ந்தோர்களாகச் சித்திரித்தனர். செண்டாயுதரான ஐயனார் போர்க்கருவிகள் பல இயக்கிய புயவலிமை மிக்கவரை மற்கலி' என்றனர். "காலந்தோறும் மக்களின் மனம்கவர்ந்த வீரர்கள் மறைந்த பின்னர், ஐயனார் கோவில்களில் கருப்புகளானார்கள். இவர்களுள் மதுரைவீரனும், காத்தவராயனும் கூட அடக்கம். இதனாலும் காவல் தெய்வமாக வணங்கப்படும் பதினெட்டாம்படிக் கருப்பு, ஆசீவகத்தோடு கொண்டுள்ள தொடர்பை உறுதி செய்யலாம்” (ஆசீவகமும் ஐயனார் வரலாறும், ப.224).

நாட்டார் வழக்காற்றியலில் சிறுதெய்வ வழிபாடு குறித்த களஆய்வு நோக்கில் ஏழுமுனிகள் என்னும் ஐயனாரின் பிள்ளைகள், மூத்தோனாகிய பொய்சொல்லா மெய் ஐயனார் இன்று மெய்யப்பன் ஆனார் போன்ற தகவல்கள் நுட்பமானவை; சுவையானவை. ஆசீவகம் கோசலத்தின் தலைநகரான சாவத்தி நகரில் தோன்றவில்லை. தமிழ்நாட்டின் திருவெள்ளறையில்தான் தோன்றியது (மேலது, ப.250) என்பன போன்ற ஆணித்தரமான முடிவுகள் வரலாறு, சமயம், மெய்யியல் ஆகிய துறைகளில் புதிய வெளிச்சம் பாய்ச்சுவனவே!

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விரிதமிழ் இயக்கம் (1982-83) நான்கு மாவட்டங்களிலும் நிகழ்த்திய 'ஊராய்வுத்திட்ட' ஆய்வின்படி திருச்சி, பெரம்பலூர் (1983-84) ஆகிய மாவட்டங்களிலும் வழிபடப்பெறும் தெய்வங்கள் பற்றிய கள ஆய்வு விவர சேகரிப்பை அட்டவணைப்படுத்தியுள்ளது. அதில் ஆண் தெய்வங்களுள் ஐயனார்தாம் (1280, 250) ஆகிய இடங்களில் மிகுதியாக வழிபடப்படுவதைக் குறிப்பிடுகிறது. அடுத்தநிலையில் கருப்பண்ணசாமியைக் குறிப்பிடலாம். (ஆறு.இராமநாதன், தமிழர் வழிபாட்டு மரபுகள், பக். 17, 18) பின்னிணைப்பில் ஐயனார், ஐயன் என்னும் அடைமொழிப் பெயர்களில் முறையே 1-53, 54-61 பெயர்கள் இடம், சூழல் இவற்றுக்கு ஏற்பப் பெயர் சூட்டுப்பட்டுள்ளன. இவைபோன்ற தொடர் ஆய்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும், ஆய்வில் ஈடுபடுவோருக்கு ஆழமான புரிதலை ஏற்படுத்தவும், பல பரிமாணங்களில் பல்துறை அணுகுமுறைகளைக் கையாளவும் பேராசிரியர் க.நெடுஞ்செழியனாரது ஐயனார் வரலாற்றுச் செய்திகள் உசாத்துணையாகின்றன; எதிர்காலவியல் ஆய்வுக்கான தேடல்களுக்கு உள்ளொளியை வழங்குகின்றன. சமூகவியலின் தந்தை அகத்தே காம்ட் குறிப்பிடுவதுபோல 'ஆவிவழிபாட்டு நம்பிக்கை' யின் எச்சங்களைக் கருப்பு வழிபாட்டில் காணவும் இடமுண்டு!

ஆசீவகமும் ஐயனார் வரலாறும் என்னும் நூல் நோக்கில் திருக்குறளின் ஆசீவகப் பொருத்தப்பாட்டினைத் தொடர்ந்து பொருத்தி ஆராய்வதற்கு இடம் உண்டு என்னும் கருதுகோளான தூண்டுதலைத் தருகிறது. சைவ - வைணவ பக்தி இயக்கங்களது எழுச்சியால் சைனமும் பௌத்தமும் கொடுந்தாக்குதல்களுக்கு உள்ளாயின. இவற்றோடு ஆசீவகமும், ஐயனார் கோவில்களும், சிற்பங்களும், ஓவியங்களும் தாக்குதல்களுக்கும் அழித்தொழிப்புகளுக்கும் இலக்காயின. ஆசீவக சமய அழிப்பின் எச்சங்களிலிருந்து களஆய்வுமூலம் உய்த்துணரவேண்டிய ஆய்வு உண்மைகள் எண்ணற்றவை உள என்று இவ்ஆய்வுநூல் உணர்த்துகிறது. சிவன் யானைத் தோலை உரித்துப் போர்த்திக்கொண்ட தொன்மக்கதைப் புனைவுகள் புராணங்களாயின. யானை, ஆசீவகக் குறியீடாக அடையாளம் காணப்பட வேண்டியதன் தேவையைப் பேராசிரியர் பல இடங்களில் விரிவாக விளக்கியுள்ளார். யானை முதலை, யானை சிங்கம் ஆகிய விலங்குகளது மோதல் குறித்த உருவகத் தொன்மங்கள், அக்காலத்துச் சமய மோதல்களின் குறியீடுகளே என்கிறார் பேராசிரியர். தமிழ்த்தென்றல் திரு.வி.க. சமணர் எண்ணாயிரவர் கழுவேற்றச் செய்தி குறித்து நைந்துருகி எழுதினார். அதுபோலவே, காபாலிகர், காளாமுகர், பாசுபதர் ஆகிய வைசப்பிரிவினர் தொடுத்த ஆசீவக மோதல் அழிப்பு ஒருபுறம்; சிவன் கோவிலை ஆசீவக அமணரிடமிருந்து மீட்கும் வரை உண்ணநோன்பு தொடங்கித் தொடர்ந்தார் (சைனத் தருமசேனராக இருந்த) அப்பர் அடிகள். சோழ மன்னனது கனவில் தோன்றிச் சிவன் ஆணையிட்டான் என்னும் காரணம் காட்டி, ஆயிரம் அமணர்களை யானைக்காலின் கீழிட்டு மிதிக்கச் செய்து மதத்தின் பெயரால் செய்யப்பட்ட இனப்படுகொலையாகப் பதிவு செய்து அப்பரது பாடலடிகளையே அகச்சான்றாதாரம் காட்டியுள்ளார் பேராசிரியர் க. நெடுஞ்செழியன். ஆட்சி அதிகாரத்தில் உள்ள பெரும்பான்மையினர் மத ஆதிக்கம், சிறுபான்மையினரை ஒடுக்கினால் மக்களாட்சி அழியும் என்னும் வரலாற்று எச்சரிக்கை இது. வரலாற்றிலிருந்து கற்கவேண்டிய பாடம் என்பதே ஆய்வுப்பயன்.

இந்திய அல்லது தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஆசீவகம் பற்றிய ஆய்வுக்கான தனிஆய்வு இருக்கை உருவாக்கப்பெறல் வேண்டும் என்னும் அறிவாராய்ச்சித் தேவையைப் பரிந்துரைகளுள் ஒன்று வலியுறுத்துகிறது. இது காலக்குறியின் கட்டாயம் என்பதை நிறுவுவதாக இந்நூலாய்வின் முழுமையை வாசிப்பவர் உய்த்துணர்வார். தமிழ் அறிவின் உற்பத்திக்கும் ஆராய்ச்சிக்கும், ஆராய்ச்சி அறிவின் புத்தறிவுக்கும் வைப்பகங்களாகத் திகழும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், செம்மொழித்தமிழ் உயராய்வு நடுவண் நிறுவனம் ஆகியனவற்றின் செயல்திட்ட முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாகப் பேராசிரியரது பரிந்துரை, செயலாக்கம் பெறுவதற்குரிய தகுதி மிகுதியும் உடையது.

ஆசீவகமும் ஐயனார் வழிபாடும் என்னும் நூல் தமிழரது சமயவரலாற்றில் புதிய திசைவழிகளைக் கண்டிருக்கிறது. தமிழரை அடிமைப்படுத்திய வைதிக-வருணப்படி நிலைகளைத் தகர்க்கிற மாற்றுக்கருத்தியலை முன்வைக்கிறது. அணுவைப் பிளந்து கடவுள் துகள்வரை கண்டறிந்த இன்றைய அணுவியத்தின் சிந்தனை மூலங்கள் அன்றைய ஆசீவகக் கணியரிடமும் இருந்துள்ளன என்று ஆதாரங்களுடன் விளக்குகிறது. அறிவறிவு, வானியல் அறிவு, மனிதர் நோயகற்றும் மருத்துவ அறிவு இவை முதலிய பன்முக அறிவாற்றல் மிக்க அறிவர்களாகவும், துன்பம் போக்கும் பற்றுக்கோடாகவும், உயிரீந்து மக்களைக் காக்கும், மறவர்களாகவும் தம்புகழ் நிறுவித்தாம்மாய்ந்த பின்னர் மக்களால் எங்கள் ஐயன், எங்கள் ஐயனார், எங்கள் கரும்பு என்று ஊர் எல்லைகளில் காக்கும் தெய்வங்களாகவும் கானச் செய்கிறது. தங்களுக்கென இழப்பதற்கு எதுவுமற்று, ஆடையும்கூடச் சுமை எனக் களைந்து, மலைமீது கற்படுகைகளில் படுத்துறங்கி மக்களை வாழவைத்த மாமனிதர்களையும் தமிழர் வாழ்வுடன் கலந்துவிட்ட வரலாறாய் வாழ்வோரையும் அவர்தம் கொள்கை உன்னதங்களையும் முனைவர் க.நெடுஞ்செழியனார் தம்மை வருத்தியன கடந்து மெய்யியல் கொடையாகத்தரும் அரிய பதிவேடு!

இந்நூலை ஒவ்வொரு இனமானத் தமிழரும் தேடிவாங்கிப் படித்தல் வேண்டும். தமிழர் அறிவியல் சார்ந்த மெய்யியல் மரபினர் என்று நெஞ்சு நிமிர்த்தி நடைபோடவேண்டும். இவ் ஆய்வுத் தேடலின் பயன்களை வரும் தலைமுறைக்கும் தொடர்ந்த ஆய்வுக்கும் விட்டுச்செல்லுதல் வேண்டும். இவ்அரிய தமிழர் அறிவியல் சார்மெய்யியல் கொடை வழங்கிய பேராசிரியர் க.நெடுஞ்செழியன், இந்நூலைப் பதிப்பித்த பேராசிரியர் சக்குபாய் இருவரையும் தமிழுலகம் வாழ்த்திப் போற்றி நூலின் பயன் துய்க்குமாக!

அ. அந்தோணி குருசு

இடம்: உறையூர், திருச்சிராப்பள்ளி.

26.08.2013

Back to blog